ஜூன் 23 பாட்னாவில் கூடிய எதிர்க்கட்சிகள் கூட்டத்தை, "என்னவாகும் எதிர்க்கட்சிகள் வியூகம்" என்று இந்து தமிழ் திசையும், "பயன் தருமா பாட்னா வியூகம்? என்று தினமணியும் ''பாட்னா கும்பல் கூட்டணியாகுமா?" என்று துக்ளக்கும். கேள்விகள் எழுப்பி செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தலைப்புகளிலிருந்தே இந்த செய்திக் கட்டுரைகளின் நோக்கத்தை புரிந்து கொள்ளலாம், ஜூன் 23, பாட்னா எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை "ஆக்கபூர்வமான வரவேற்கத்தக்க" நிகழ்வாக, இந்தியாவின் இடதுசாரி, ஜனநாயக அரசியல் சக்திகள் மதிப்பீடு செய்துள்ள போதிலும் மேற்கூறியவாறு சில பத்திரிகைகள் கேள்விகள் எழுப்புகின்றன.

பாட்னா கூட்டத்தில், திமுக ஒரு முக்கிய தலைமை சக்தியாக அடையாளப்படுத்தப்பட்டது. இந்த பின்னணியில் மோடி ஆதரவு எடுகளும் சக்திகளும் இந்த கூட்டம் பற்றி "அரசியல் கட்டுரை' என்ற போர்வையில், அந்த நிகழ்வை பின்னுக்குத் தள்ளும் முயற்சிகளில் இறங்கியுள்ளன. மாநில அளவிலான பாஜக எதிர்ப்பு சக்திகள் மீது அய்யங்களை பின்னுவது. கொள்கையற்ற சக்திகள் என சித்தரிப்பது, ஊழலில் ஒன்றுபட்டவை என்று கூறுவது ஆகிய வழிகளில் மோடி ஆட்சிக்கு எதிரான எதிரணி சாத்தியமற்ற ஒன்று என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிற முயற்சியாகும். இதன்மூலம், சென்ற மக்களவைத் தேர்தலிலும் அடுத்து வந்த சட்டப் பேரவைத்தேர்தலிலும் பாஜகஅதிமுக கூட்டணியை வலுவாக புறக்கணித்து தோற்கடித்த தமிழக மக்கள் மத்தியில் மோடி எதிர்ப்பு சக்திகள் பற்றிய அவநம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டதாகும்.

இந்த நோக்கத்துக்கு வலு சேர்க்கும் முயற்சியாக, அதிமுகவும் களத்தில் இறங்கியுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையோடு மோதிக் கொண்டிருந்த அதிமுக, பாஜகவுடனான பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டதாக அறிவித்துள்ளது. ஒற்றைக் கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, முதன்மையான திமுக எதிர்ப்பு கட்சி அதிமுகதான். பாஜக அல்ல என்பது போலவும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதையும் தெளிவு படுத்தியிருக்கிறார்கள். இதை ஒத்துக் கொள்வது போல முன்னாள் அமைச்சர் ராதாகிருஷணனும் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளதாக அறிவித்திருக்கிறார். செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென்று ஆளுநரிடம் மனு கொடுத்தது மட்டுமின்றி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தெருக்களில் ஆர்ப்பாட்டங் களையும் நடத்தியுள்ளது.

ஆளுநரின் தன்னிச்சையான முடிவான செந்தில்பாலாஜி நீக்கத்தை தமிழ்நாட்டின் பெரும்பாலான கட்சிகள் கண்டனம் செய்திருக்க, அஇஅதிமுக, பாஜக மட்டுமே வரவேற்றுள்ளன. பாசிச மோடி ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டுமென இடதுசாரிக் கட்சிகள், எதிர்க்கட்சிகள், முற்போக்கு, ஜனநாயக அமைப்புகள் ஒன்று திரண்டு வரும் வேளையில் அஇஅதிமுக தனக்குதானே குழி தோண்டிருக்கிறது.

ஊழலில் கொடிகட்டி பறந்த 'குட்கா' விஜயபாஸ்கர் சுதந்திரமாக சுற்றித்திரிகிறார். ஆனால், எதிர்க்கட்சிகளின் 20 லட்சம் கோடி ஊழலைப் பற்றி பேசும் அமித்ஷா விஜயபாஸ்கரை விட்டுவைத்திருக்கிறார். தனது அரசியல் எதிராளிகளை ஒழித்துக் கட்டும் திட்டத்துடன்தான் செந்தில் பாலாஜி மீது, எமனின் பா(சி)சக் கயிறை வீசியுள்ளனர் அமித்ஷாவும் அண்ணாமலையும் என்பதை நடந்து வரும் நிகழ்ச்சிகள் தெளிவாக்கி விட்டன. மணிப்பூர் சென்று மோடி முகத்தில் கரி பூசிய ராகுலை தடுத்து நிறுத்தியுள்ள இரட்டை இன்ஜின் ஆட்சிகள் பற்றி உள்துறை அமைச்சர் எதுவும் பேசாமல் அமித்ஷா அமைதி காக்கிறார். அவருக்கு வெற்றி பெற்ற கர்நாடகா காங்கிரஸ் ஆட்சி, தமிழ்நாட்டின் திமுக ஆட்சி, தில்லியின் ஆம் ஆத்மி ஆட்சிகளுக்கு டையூறுகள் ஏற்படுத்துவதையே முழுநேரப் பணியாக செய்து வருகிறார்கள் மோடியும் அமித்ஷாவும். கூட்டாட்சி முறைக்கு குழிபறித்துக் கொண்டிருக் கிறார்கள். அவர்களது பாசிச அரசியல் திட்டத்தின் படி மக்களை பிளவு படுத்தும் பொது சிவில் சட்டம் பற்றி மீண்டும் பேசத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையை எதிர் கொள்ளும் வகையில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பேசி வருகிறார். பாட்னா கூட்டத்தில், பாஜகவை தோற்கடிக்க என்ன உத்திகளை கையாள வேண்டுமென்று பேசி வரவேற்பையும் பெற்றிருக்கிறார். நல்லது. ஆனால், மக்களவை தேர்தலிலும் சட்டப்பேரவை தேர்தலிலும் பாஜக அதிமுக கூட்டணியை படுதோல்வி அடையச் செய்த தமிழக மக்களுக்கு திமுக ஆட்சி செய்ய வேண்டியது ஏராளமாக இருக்கிறது. மக்களின் 'உரிமைகளுக்காகவும் வாழ்வாதாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவும் விடுதலை, நீதிக்கான வேட்கை மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில் களத்தில் மக்களின் போராட்டங்களுடன் நெருக்கமான உயிரோட்டமான உறவுகளை ஏற்படுத்துவதன் மூலமே எதிர்க்கட்சி ஒற்றுமைக்கு செயல்திட்ட ஆற்றல் அளிக்க" முடியுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) அழுத்தமாக நம்புகிறது.

நிலங்கள் ஒருங்கிணைப்பு சட்டம் விவசாயிகளை அச்சமடையச் செய்திருக்கிறது. பரந்தூர் விமான நிலையம், சென்னை நகர்ப்புர ஏழைகள் அப்புறப்படுத்துதல், மிகத் தாராளமாக 'செயல்படுத்தப்படும் தனியார் மயமாக்க, தாராளமயமாக்க, உலகமயமாக்க செயல்கள் பெரும் அச்சுறுத்தலாக முன்வந்துள்ளன. 190 நாட்கள் கடந்தும் வேங்கை வயல் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை; சிறீமதி மரணத்துக்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப் படவில்லை. காவல் கொலைகள் தொடர்கின்றன. தமிழ்நாட்டில் வேறு வடிவில் தேசிய கல்விக் கொள்கை செயல்படுத்தப்படுவதாக கல்விச் சமூகத்தின் மத்தியிலிருந்து . கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பாட்னாவில், பாஜகவுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் திரண்டு இருந்தன. அதே வேளை தமிழ்நாட்டிலும் கிராமப்புர, நகர்ப்புர உழைக்கும் மக்கள் மத்தியில் அவிகிதொச, ஏஅய்சிசிடியு. இகக(மாலெ) நடத்தி வரும் மக்கள் சந்திப்பு பரப்புரை இயக்கத்தில் வரவேற்கத்தக்க ஆதரவை தெரிவித்து வருகின்றனர். கார்ப்பரேட் ஆதரவு மோடி ஆட்சியின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக கடும் சீற்றத்தை வெளிப்படுத்துகின்றனர். தேசிய ஊரக வேலைத் திட்டத்தை ஒழித்துக் கட்டும் மோடி அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராகவும் எரிவாயு விலையை 1200 ஆக உயர்த்தி மானியத்தையும் நிறுத்தியுள்ளதற்கெதிராகவும் "அனைவருக்கும் வீடு" என்ற ஏமாற்று திட்டத்தின் மீது குற்றம் சுமத்தியும் தங்கள் கடும் கோபத்தை வெளிப் படுத்திவருகின்றனர்.

மக்களின் இந்த சீற்றத்தை, மோடி ஆட்சிக் கெதிராக அரசியல் அணிதிரட்டலாக உறுதி செய்ய இகக (மாலெ) உறுதி பூண்டுள்ளது. மக்களின் அரசியல் சீற்றமே எதிரணி அரசியலுக்கு 'ஆற்றலாக" விளங்கும்; மோடி ஆட்சியை வெளியேற்றும்.