சமூகத்தின் பல அடுக்குகளில் சாதிய ஒடுக்குமுறை பல பரிமாணங்கள் கொண்டுள்ளது. அதில் ஒன்று அரசியல் களம். தொடக்கத்தில் பிராமணர்களுக்கும் பிராமணர் அல்லாதோருக்கும் இடையே இருந்த முரண்பாட்டில் உருக்கொண்ட திராவிட இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கில் இடைநிலை சாதிகளுக்கும் தலித் சாதிகளுக்கும் இடையே இருந்த முரண்பாடு முன்னுக்கு வந்தது. 1990களில் தென்மாவட்டங்களில் நிகழ்ந்த 'சாதிக் கலவரங்கள்', சமீபத்திய நிகழ்வான ஆணவக் கொலைகள் இதனை தெளிவாக வெளிக்காட்டுகின்றன. இந்தப்பின்னணியில் திராவிட அரசியல் இயக்கத்திற்குள் இடைநிலை சாதிகளுக்கும் தலித்துகளுக்கும் இடையே நிலவும் சாதிய முரண்பாட்டை, ஒடுக்குமுறையைப் பற்றிப் பேசுகிறது மாரிசெல்வராஜின் மாமன்னன் திரைப்படம். சாதி இந்துக்களின் மேலாதிக்கம் சமூகத்தையும் அதன் பல்பரிமாண வெளிப்பாடுகளையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் கொங்குப் பகுதியைக் கதைக்களமாகக் கொண்டுள்ளது மாமன்னன்.

நிகழ்வு ஒன்று: தலித் சாதியைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் ஊர்க்கோலின் கிணற்று நீரில் குதித்து, நீந்தி விளையாடி மகிழ்கின்றனர். அதனையறிந்து கோபம் கொண்ட சாதி வெறிபிடித்த இடைநிலை சாதி ஆண்கள் அந்தச் சிறுவர்கள் மீது கல் எறிந்து தாக்குகிறார்கள். அதில் மூன்று சிறுவர்கள் கொல்லப்படுகிறார்கள். தலித் சமூகத்தை சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதி மாமன்னனின் மகன் அதிவீரன் மட்டும் தாக்குதலில் தப்பிச்சென்று உயிர் பிழைக்கிறான். மாமன்னன் அப்பகுதி கட்சித் தலைவரிடம் போய் நீதி கேட்டு முறையிடுகிறார். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார். சமூக நீதிக் கட்சியில் இருக்கும் சாதியப் பாகுபாடு அச்சிறுவர்களுக்கு நியாயம் வழங்கவில்லை. "நியாயம் கேட்பதற்கும் கூட, ஒரு தகுதி வேண்டும் போல" என அழுதுபுலம்பி கொடுமையைக் கடந்து செல்கிறார். இக்காட்சியில் ஒடுக்கப்படும் சாதிச் சிறுவர்கள் கீழே கிணற்றின் அடியில் எவ்வித பாதுகாப்பும் இன்றி உள்ளபோது, அவர்களை ஒடுக்குபவர்கள் கிணற்றுக்கு மேலே ஆயுதங்களோடு அவர்களைத் தாக்குகிறார்கள். ஒடுக்குபவர்கள் ஆயுதம் வைத்துள்ளனர்; மேலே உள்ளனர். ஒடுக்கப்படுப வர்களிடம் ஆயுதம் இல்லை; கீழே உள்ளனர். சாதிய வன்மத்தின் கொடூரத்தை வெளிப்படுத்தும் வண்ணம் இதுவொரு காட்சிப் படிமமாக காட்சியாக்கப்பட்டுள்ளது.

நிகழ்வு இரண்டு: மாமன்னன் தனித் தொகுதியில் நின்று தேர்தலில் வெற்றிபெற்ற சமத்துவ சமூகநீதி மக்கள் கழகம் என்னும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர். அதே கட்சியின் மாவட்டச் செயலாளர் ரத்தினவேலு, இடைநிலை சாதியைச் சேர்ந்தவர். அவர் முன்பு மாமன்னன், நாற்காலியில் அமர்வதற்கு அனுமதியில்லை. ரத்தினவேலுவின் தந்தை காலத்திலிருந்தே அதுதான் சம்பிரதாயம். அதனை மீறுவதற்கு மாமன்னன் முயற்சிக்கவில்லை. ரத்தினவேலுவும் அனுமதிக்கவில்லை. ஆனால் காலம் மாறி விட்டது. மாமன்னன் மகன் அதிவீரனால் அதனை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. தவறுகளை எதிர்த்து நின்று வெற்றி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் அவர்; தந்தையை அமரச் சொல்கிறார். ரத்தினவேலு பதற்றமடைகிறார்; ஆத்திரம் கொள்கிறார். பலகாலமாக நிலவும் சம்பிரதாயத்தை மீற மாமன்னன் கூட யோசிக்கிறார். "உங்கப்பாவ நிக்க வச்சிருக்கது என்னோட (சாதி) அடையாளம்; உன்ன உக்காரச் சொன்னது என்னோட அரசியல்" என்கிறார் ரத்தினவேலு. அதனை மீறி வலுக்கட்டாயமாக மாமன்னனை அமரவைக்கும் அதிவீரனுக்கும் ரத்தினவேலுவுக் கும் ஏற்படும் கைகலப்பு பெரும் பகையில் முடிகிறது.

    முதல் காட்சியில் ஒடுக்குமுறையை நிகழ்த்தும், கல்லெறியும் ஊர்க்காரர்களும் ஒடுக்குமுறைக்கு ஆளாகும், இறந்துபோகும் சிறுவர்களின் குடும்பத்தினரும் கூலித் தொழி லாளர்கள். இரண்டாவது காட்சியில் ரத்தினவேலு மாவட்டச் செயலாளர். மாமன்னன் சட்டமன்ற உறுப்பினர். ஒடுக்குகிற, ஒடுக்கப்படுகிற நபர்க ளிடம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பொருளாதாரப் பின்புலம் இருக்கின்ற போதிலும், தலித்துகள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்தாலும் சாதிய ஒடுக்குமுறை அவர்கள் செல்லும் இடமெல்லாம் அவர்களை பின் தொடர்ந்து வரும் என்பதையும் சமூகத்தின் பொதுப்புத்தியில் பன்னெடுங்காலமாக புதைந்து போயிருக்கிற சாதியாதிக்க உணர்வினை, சாதிய ஒடுக்குமுறையின் வெவ்வேறு பண்புகளை, வெவ்வேறு தளங்களில் இந்த இரண்டு காட்சிகள் வெளிப்படுத்தியுள்ளன. சரி நிகர் சமமாக நாற்காலியில் அமருவதற்கும் கூட பெரும் போரையே நடத்த வேண்டியுள்ளது. அந்த வகையில் மாமன்னன் துப்பாக்கியோடும், அதிவீரன் வாளோடும் நாற்காலியில் அமர்ந்தி ருக்கும் காட்சி சமூக ஒடுக்குமுறையை இனியும் பொறுக்க முடியாது எனும் தலித் உணர்வின், திருப்பியடிக்கும் எதிர் வன்முறையின் வெளிப்பாடாகும். மாமன்னன் என பெற்றோர் அவருக்கிட்ட பெயரைச் சொல்லி அழைக்காமல் 'மண்ணு' என்று அழைப்பதிலும் கூட சாதிய வெறுப்புணர்வே வெளிப்படுகிறது. 

தமிழ் திரைப்படங்களில் நேரடியாகக் கதை சொல்லும் வழக்கமான திரை மொழிக்கு மாற்றாக, மாய உருவகங்கள், காட்சிப்படிமங்கள், பல் பரிமாண, பல் அடுக்கு கதையமைப்பு கொண்ட புதுவகை திரைமொழி உத்தியை மாரி செல்வராஜின் திரைப்படங்கள் கொண்டுள்ளன. ஒருபுறம், வாய்ப்பு கிடைக்கும் போது கடித்துக் குதறி வேட்டையாடும் வெறிகொண்ட நாய்களை வளர்க்கும் ஒடுக்குகிற சாதியை சேர்ந்தவர்; அந்த நாய்களும் கூட எஜமானனின் விருப்பத்தை புரிந்து கொண்டு செயல்படும் அடிமைகளாக இருக்கவேண்டும். மீறும் போது தண்டிக்கப்படும். மறுபுறம், சாதுவான, தாக்க வருபவற்றைக் கண்டு பயந்து, ஒடுங்கி, ஒதுங்கிப் போகும் பன்றிகளை வளர்க்கும் ஒடுக்கப்படும் சாதியைச் சேர்ந்தவர். இறக்கை முளைத்து வானில் சுதந்திரமாக பறக்கும் பன்றியின் ஓவியம் வழியாக ஒடுக்கப்பட்ட மக்கள் அடைய வேண்டிய சுதந்திரத்தை உருவகப்படுத்தியிருக் கிறது. கூரான பற்களுடன் கோரமாக இருக்கும் வேட்டை நாய்களோடு சரிசமமாக எதிர்த்து நிற்கும் வீறுகொண்ட பன்றியின் ஓவியம், ஒடுக்குமுறைக்கு அஞ்சாமல் எதிர்த்து நிற்க வேண்டுமென கற்பிக்கிறது. கிணற்று நீரில் நடத்தப்பட்ட தாக்குதலில் தப்பித்த அதிவீரனும் வேட்டை நாய்களின் தாக்குதலுக்கு தப்பிப் பிழைத்த பன்றிக் குட்டியும் ஒடுக்குமுறை இருண்மையை ஒழிக்க வந்த வெளிச்சக் கீற்றுகள்; என வழக்கமான மாரி செல்வராஜின் குறியீடுகள். 

கல்வியை லாபவெறியுடன் வணிகமாகப் பார்க்கும் தனியார் கல்வி நிறுவன முதலாளிக ளுக்கும் அனைவருக்கும் கல்வி, அதிலும் குறிப்பாக சமூக, பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு இலவசமாக கல்வி அளிக்கப்பட வேண்டும் என்ற முற்போக்கு கொள்கையாளர்களுக்கும் இடையே உள்ள முரண்பாடும் இப்படத்தின் கதையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தனியார் கல்வி நிறுவன முதலாளிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு அப்பட்டமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இடைநிலை சாதியைச் சேர்ந்தவரும் முற்போக்கு எண்ணம் கொண்ட வராகவும் உள்ள லீலா என்பவருக்கும் அதிவீரனுக்கும் இடையே மலரும் காதல், 'நாடகக்காதல்', ஆணவக் கொலைகளுக்கு மத்தியில் இடைநிலை சாதிப் பெண்ணுக்கும் தலித் ஆணுக்கும் இடையே மலரும் காதல்களின் சமூக யதார்த்தத்தை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

தலித் சமூகத்தின் தரப்பிலிருந்து கதை சொல்லும் இயக்குனர் ரஞ்சித்தின் திரைப் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தைக் கொண்டுள்ளன மாரி செல்வராஜின் கதைக் களங்கள். சென்னையின் சேரிப்பகுதியில் வாழும் தலித்துகள், புலம் பெயர்ந்த தலித்துகளின் வாழ்வினை, போராட் டங்களை ரஞ்சித்தின் கதைகள் விவரிக்கும் போது, தமிழகத்தின் சமூக அவலமான சாதிய ஒடுக்குமுறையை, மத்திய கால நிலப்பிரபுத்துவ விழுமியங்களை, சாதியத்தின் புனிதத்தன்மையை, 'ஆண்ட சாதி'ப் பெருமிதத்தை உயர்த்திப் பிடிக்கும், இடைநிலை சாதிகளுக்கும் ஒடுக்கப்படும் தலித்துகளுக்கும் இடையே உள்ள மோதலை, முரண்பாட்டை முதன்மைக் களமாக மாரி செல்வராஜின் கதைகள் பிரதிபலிக்கின்றன. அவை நிலவிக் கொண்டிருக்கும் சமூக யதார்த்தத்தை, சமூக, பொருளாதார, அரசியல் களத்தில் உள்ள இடைநிலை சாதிகளின் மேலாதிக்கத்தை கேள்விக்கு உட்படுத்துகின்றன. அதன் பின்விளைவாகவே இன்னும் பல பத்தாண்டுகளுக்கு இடைநிலை சாதிகளின் மேலாதிக்கத்தில் மாற்றம் நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் கண்ணுக்கு புலப்படாத போதும், அவர்கள் பதற்றமடைகிறார்கள். எனவே தான் சமூகப் பரப்பினுள் ‘மாமன்னன்' படம் பெரும் விவாதத்தைத் கிளப்பியுள்ளது; விமர்சனத்திற்குள்ளாகியும் இருக்கிறது.

நிகழ்வு மூன்று: கொலைவெறியுடன் செயல்படும் ரத்தினவேலுவை கட்சித் தலைமை கண்டித்து கட்சிப் பதவியை பறிக்கிறது. அவர் வேறு கட்சியில் இணைகிறார். என்னுடைய பகுதியில் எனது ஆதரவின்றி எப்படி வெற்றி பெறுகிறீர்கள் பார்க்கலாம் என சவால் விடுகிறார். அந்த கட்சித் தலைமை மாமன்னன் பக்கம் நிற்கிறது. ரத்தினவேலுவின் சதிக்கு ஆளாகிய பகுதி மக்களால் மாமன்னன் புறக்கணிக்கப் படுகிறார்; தாக்கப்படுக்கிறார். தேர்தல் பரப்புரை செய்ய முடியாதவாறு முடக்கப்படுகிறார். அதனையும் மீறி, அதிவீரன் மற்றும் அவரது பிற இடைநிலைச் சாதி நண்பர்கள் துணையுடன் செயல்பட்டு, வெற்றி பெறுகிறார் மாமன்னன். கட்சித் தலைமை அவரை பேரவைத் தலைவ ராக்கி பெருமை கொள்கிறது.

ஏதோ ஒருசில, உள்ளூர் மட்ட அளவிலான, சாதி வெறியர்கள் தான் சாதிய ஒடுக்குமுறையின் ஊற்றுக் கண்ணாக உள்ளனர் என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் மாரி செல்வராஜ். அவர்களை வீழ்த்தி விட்டால் எல்லாமே சரியாகி விடும் என்கிறார். பல மாதங்களுக்குப் பிறகும், குற்றவாளிகளை தண்டிக்காத வேங்கைவயல் போன்ற சம்பங்களில் திமுக அரசாங்கத்தின் அணுகுமுறை சாதிய ஒடுக்குமுறையை நிகழ்த்துபவர்களுக்கு அது ஆதரவானது என்பதையே நிரூபித்துள்ளது. உண்மை நிலை இப்படி இருக்கும்போது பொய் சித்திரத்தை வரைய முயற்சிக்கிறது மாமன்னன் திரைப்படம். ஆனாலும் கூட, திராவிட அரசிய லுக்குள் சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறை நிலவுகிறது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் இப்படத்தில் பன்றி வளர்ப்பவராக, தலித் சாதி இளைஞன் பாத்தி ரத்தை ஏற்று உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளதை சாதகமானதாகக் கொண்டாலும் அவர் அமைச்சராக உள்ள தமிழக அரசு, உண்மையான சாதியாதிக்கப் படுகொலைகளை திசை திருப்பும் காவல்துறையின் நடவடிக்கை களைக் கண்டு கொள்ளாமல்தான் உள்ளது என்பதுதான் நடைமுறை யதார்த்தம். மேலும் பள்ளி, கல்லூரிகளில்கூட சாதியாதிக்க உணர்வுகள் மேலோங்கி வருகின்ற இன்றையச் சூழலில் தமிழ்த் திரைப்படங்கள் இதுவரை பேசத் துணியாத ஒரு விசயத்தை கதைக்களமாக்கி சமூகத்தில் விவாதப்பொருளாக்கி இருக்கும் மாரி செல்வராஜின் 'மாமன்னன்' வரவேற்கத்தக்கது.