* புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடுக! 

* மாணவர்கள் நலன் சார்ந்த, சனாதன கொள்கைக்கு எதிரான, பகுத்தறிவு சிந்தனைகள் உள்ளடக்கிய தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை விரைவில் அமல்படுத்திடு!!

* கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும்!

*சுயநிதி கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்! *தமிழகத்தில் காலியாக உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிடுக!!!

* தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 90% தமிழகத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கிடுக!!!

உள்ளிட்ட மாணவர்-இளைஞர் கோரிக்கைகளை வலியுறுத்தி 30.8.2023 அன்று சென்னை எழும்பூரில் புரட்சிகர இளைஞர் கழகம் மற்றும் அகில இந்திய மாணவர் கழகத்தின் சார்பாக மாணவர் இளைஞர் பேரணி நடைபெற்றது. பேரணியை புரட்சிகர இளைஞர் கழக மாநில தலைவர் தோழர் சுந்தர்ராஜ், மாநில பொதுச் செயலாளர் தோழர் தனவேல், அகில இந்திய மாணவர் கழக மாநில பொறுப்பாளர் தோழர் ஜி. சுந்தர்ராஜன் தலைமை ஏற்று நடத்தினார்கள். பேரணியை சிபிஐ (எம்எல்) கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் தோழர் வீ.சங்கர் துவக்கி வைத்து உரையாற்றினார். பேரணியை வாழ்த்தி பேராசிரியர் சிவகுமார் பேசினார். பேரணியின் நிறைவில் சிபிஐ (எம்எல்) கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி, மாநில குழு உறுப்பினரும் சென்னை மாவட்டச் செயலாளருமான தோழர் சொ.இரணியப்பன் வாழ்த்தி பேசினார்கள்.

மேலும் புரட்சிகர இளைஞர் கழக, அகில இந்திய மாணவர் கழக மாநில நிர்வாகிகள், அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்க மத்தியக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் அதியமான் ஆகியோர் தலைமைச் செயலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கல்வித்துறை முதன்மைச் செயலாளர், முதலமைச்சரின் தனிச்செயலாளர், உயர் கல்வித்துறை அமைச்சரின் நேர்முக உதவியாளர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் நேர்முக உதவியாளர் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.