நியூஸ் கிளிக், தனியார் ஊடகத்தின் ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், ஊழியர்கள் மீது அக்டோர் 3 அன்று பெரிய அளவில் போலீஸ் சோதனை நடத்தப்பட்டிருப்பதானது நாடு மிக மோசமான அவசரநிலையைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படையாகவே பிரதிபலிக்கிறது. மோடி-பாஜக ஆட்சிக்கு எதிரான ஒவ்வொரு குரல்களையும் மாற்றுக் கருத்துக்களையும் அதிகாரத்திலுள்ளவர்களுக்கு எதிராக உண்மையைப் பேசுபவர்களையும் மிகக் கொடூரமாக ஒடுக்கிக் கொண்டிருக்கிறது.

அதிகாலை நேரத்தில், டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள் கொடூரமான உபா சட்டத்தின் கீழ், நியூஸ் கிளிக்கைச் சார்ந்த பாஷா சிங், அபிஷர் சர்மா, மூத்த பத்திரிகையாளர் உர்மிலேஷ், ஆசிரியர் பிரபிர் பர்கயாஷ்தா, எழுத்தாளர் கீதா ஹரிஹரன், அரசியல் விமர்சகர் அனிந்தியோ சக்ரவர்த்தி, வரலாற்று அறிஞர் சோகைல் ஹஸ்மி, பகடி எழுத்தாளர் சஞ்சை ரசோரா உள்ளிட்ட பல்வேறு மூத்த பத்திரிகையாளர்கள் வீடுகளுக்குச் சென்று சோதனை நடத்தியிருக்கிறது. சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வத் மற்றும் பத்திரிகையாளர் பரஞ்சய் குஹா தாக்குர்தா ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தியுள்ளார்கள்.

சில வாரங்களுக்கு முன்பு மஹாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே, பாஜக எதிர்ப்புச் செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்களுக்கு வன்முறையைத் தூண்டும் வகையில் மறைமுகமாக மிரட்டல் விட்ட பின்னணியில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. 

மோடி அரசு, நாட்டில் மக்களுக்கு ஆதரவான, ஜனநாயகத்திற்கான குரல்களை நெரிப்பதற்காக உபா சட்டத்தைப் பயன்படுத்துகிறது. குடியுரிமைச் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரை மிரட்டவும் நசுக்கவும் உபா சட்டத்தைப் பயன்படுத்துகிறது. பாஜக அரசும் நாடாளுமன்றத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் நியூஸ் கிளிக்கிற்கு எதிராக கொளுத்திப் போட்டதைத் தொடர்ந்து இந்த சோதனை படலம் நடந்துள்ளது.

அடிமை ஊடகங்கள் கார்ப்பரேட்டுகளுக்கும் அரசாங்கத்திற்கும் லாலி பாடிக் கொண்டிருந்தபோது, நியூஸ் கிளிக் போன்ற சுதந்திர ஊடகங்கள், வரலாற்று சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டம், சாகின்பாக் போராட்டம், தொழிலாளர் வர்க்கப் போராட்டம் போன்ற மக்கள் இயக்கங்கள், போராட்டங்கள் பற்றி செய்திகளை வெளியிடுவதில் முன்னணியில் இருந்து வருகின்றன. நாடு முழுவதும் பாஜக ஆட்சிக்கு எதிராக அதிருப்திகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், உண்மையை, மக்கள் குரல்களை முடக்கவுமே ஊடக நிறுவனங்கள் மீது இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுகின்றன.

பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது பரந்த அளவில் நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்களை நமது நாடு வரலாற்றில் இதுவரை கண்டதில்லை. கொடூர பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை வைத்துக் கொண்டு ஊடகங்களையும் ஜனநாயகக் குரல்களையும் மிரட்டும் அச்சுறுத்தும் செயல் தந்திரத்தினைக் கையாண்ட காலனிய ஆட்சியை, மோடி-பாஜக ஆட்சியும் பிரதிபலிக்கிறது.

ஜனநாயகத்திற்கு அடித்தளமான பத்திரிகை சுதந்திரத்தை அழிக்காமல் விடமாட்டோம் என்று இந்த ஆட்சி இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சிக்கு விசுவாசமான, சலுகைகளை அனுபவிக்கும் கார்ப்பரேட்டுகள்தான், பெரும்பாலான ஊடகங்களை, குறிப்பாக தொலைக் காட்சி அலைவரிசைகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளார்கள். அதன் மூலம் இயல்பாகவே மோடி அரசும் ஆர்எஸ்எஸ்ஸூம் அவற்றை தங்கள் 'அடிமை ஊடகங்களாக' மாற்றிக் கொண்டுள்ளார்கள். இன்று வெறுப்பை விதைப்பவர்கள், பொய்ச் செய்தியைப் பரப்புபவர்கள் பத்திரிகையாளர்கள் முகமூடியை அணிந்து கொண்டு மோடி அரசின் பேராதரவுடன் சுதந்திரமாகத் திரிகிறார்கள். அதேவேளை, உண்மையாக தங்கள் வேலையைச் செய்யும் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். கொலை கூட செய்யப்படுகிறார்கள்.

நியூஸ் கிளிக் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முழு ஒருமைப்பாட்டைத் தெரிவித்து இகக(மாலெ) அவர்களுடன் நிற்கிறது. நாட்டில் பத்திரிகைச் சுதந்திரத்தை வேகமாகப் பறிக்கும் வகையில், நடந்து கொண்டிருக்கும் சோதனைகள், நாட்டில் ஜனநாயகத்தை விரும்பும் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகும். மோடி-பாஜக ஆட்சியின் பாசிசம் முன்னேறிச் செல்வது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.