சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி காலத்தில், சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய ஆளுங்கட்சி கொள்ளையர் களைக் காப்பாற்ற, அப்பாவி பழங்குடியினர் பலிகடாக்கள் ஆக்கப்பட்ட, படுமோசமான வன்கொடுமை தாக்குதலுக்கு உள்ளான கொடூரமான சம்பவம் தான் வாச்சாத்தி வன்முறை' என்பதாகும். அது பழங்குடியினப் பெண்கள், சிறுமியர் மீது பாலியியல் கூட்டுப் பலாத்கார வன்முறையை நடத்திய வனத்துறை, காவல்துறை சார் குற்றவாளிகளின் ஆணாதிக்க வெறியாட்டத்தின் சாட்சியமும் ஆகும்.

வாச்சாத்தி வன்முறை, நீதிக்கான போராட்டம் : கடந்து வந்த பாதை :

தருமபுரி மாவட்டம், அரூர், பாப்பிரெட்டிப் பட்டி இடையே உள்ள கல்வராயன் மலைத் தொடரின் அடிவாரப் பகுதியில் கலசப்பாடி அருகில் உள்ள வாச்சாத்தி மலை கிராம பழங்குடியினர் சந்தனமரக் கடத்தலில் ஈடுபட்டதாக, 40 ஆண்டுகளுக்கு முன்னர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 1992 ஜூன் 20ம் தேதி காக்கி சட்டையில் வந்த 155 வனத் துறையினர், 108 காவல் துறையினர் மற்றும் 6 வருவாய் துறையினர் கூட்டாகச் சோதனை என்ற பெயரால், வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடினர். பெண்களின் தலைமுடியைப் பிடித்து இழுத்தும், கால்- நடைகள் மேய்த்துக் கொண்டு இருந்த பெண்களை அடித்து தரதரவென்று இழுத்தும் வந்தனர்; 90 பெண்கள் உட்பட 133 பேரை கைது செய்து, ஊர் நடுவே இருந்த ஆலமரத்தடிக்கு அழைத்து வந்தனர். அன்று மாலை, ஏரிக்கரையில் மறைத்து வைத்துள்ள சந்தனமரக் கட்டைகளை எடுத்து தருமாறு கூறி, 18 சிறுமியர் மற்றும் இளம்பெண்களை மட்டும் தனியாக அழைத்துச் சென்று, வனத் துறையினரும், காவல் துறையினரும் ஏரிக்கரையில் பாலியல் வன்கொடுமை செய்தனர். அன்று உயிருக்கு பயந்து தப்பி ஓடியவர்கள் தவிர, அங்கே சிக்கிய பிற அனைத்து வாச்சாத்தி பழங்குடியினரையும் அரூர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று தாக்கினர், அடைத்து வைத்தனர்.

பழங்குடியினர் பட்டினியால் வாட, அடுத்த நாள் வனத்துறையினர் வாச்சாத்தியில் இருந்து கொள்ளைடித்து வந்த கோழி, ஆடுகள், அரிசி போன்றவற்றை சமைத்து அவர்கள் முன்னால் சாப்பிட்டனர். அன்றிரவு பெண்கள் உள்ளிட்ட அனைவரின் கைகளிலும் விலங்குகள் போட்டு அரூர் மெயின் ரோட்டில் நடக்க வைத்து நீதிபதி முன்னால் ஆஜர்படுத்தினர். சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய அரசு அமைப்புகளின் பாதுகாவலர்கள் வன்முறையாளர்களாகவும், பெண்களை பாலியல் ரீதியாக குறிவைத்து சூறையாடும் ஆணாதிக்க திமிர்பிடித்த கயவாளி களாகவும் செயல்பட்டதும் விசாரணைகளின் இயக்கப் போக்கில் தான் அம்பலமாகின. ஆனால், இத்தகைய வன்கொடுமைகளை புரிந்த வனத்துறை, காவல்துறையினர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. அப்போதைய தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்தத் தாக்குதலை நியாயப்படுத்தினார். மற்றொருபுறம் புகார் தெரிவிக்க கூட முடியாத நிலையில் பழங் குடியினர் அச்சத்தில் ஓடிஒளிந்து கொண்டு இருந்தனர்.

சுமார் ஒரு மாதம் கழித்து, அப்போது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த, தற்போதைய சிபிஐஎம் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், அரூர் முன்னாள் எம்எல்ஏ அண்ணாமலை, தேசிய பழங்குடியின ஆணையம், மகளிர் அமைப்பினர் போன்றவர்கள் எல்லாம் நேரில் சென்று பார்த்தும், சிபிஐ(எம்) முன்னாள் மாநிலச் செயலாளர் மறைந்த தோழர் ஏ.நல்லசிவன் சட்டரீதியாக எடுத்த முயற்சிகளின் விளைவாக, உச்ச நீதிமன்றம் இச்சம்பவம் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணைக்கு 1993ல் உத்தர விட்டது. 

சிபிஐ 2 ஆண்டுகள் விசாரணை நடத்தி,1995ல் வழக்குபதிவு செய்தது. குற்றத்தில் ஈடுபட்டதாக 155 வனத் துறையினர், 108 காவல்துறையினர், 6 வருவாய் துறையினர் என 269 பேரை கைது செய்தது. இந்த வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி குமரகுரு அவர்கள் கடந்த 2011 செப்.29ல் இச்சம்பவத்தில் ஈடுபட்டு அப்போது உயிருடன் இருந்த 215 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளித்தார். இதில் 12 பேருக்கு 10 ஆண்டுகளும், 5 பேருக்கு 7 ஆண்டுகளும், மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரையும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், குற்றவாளிகள் தரப்பில் இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் அவர்கள் வாச்சாத்திக்கு நேரடியாக சென்று விசாரித்தார். பாதிக்கப்பட்ட பழங்குடியினர் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சிறப்பாக வாதிட்டனர். சுமார் 12 ஆண்டுகள் கழித்து கடந்த செப்.29 ல், உயர்நீதிமன்ற நீதிபதி சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கினார். 

தீர்ப்பில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

"மொத்தம்  18 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். 13 வயது சிறுமி, 8 மாத கர்ப்பிணியைக்கூட விட்டு வைக்காமல், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஈவு இரக்கமோ, மனிதாபிமானமோ இல்லாமல் அரக்கத்தனத்துடன் செயல்பட்டுள்ளனர்."

"சந்தனமரக் கடத்தலில் ஈடுபட்டவர்களை அரசுப் பணி நிமித்தமாகவே கைது செய்ததாக வும், அதற்குப் பழிவாங்கும் விதமாகவே பொய்யான பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ள தாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அப்பாவி இளம்பெண்களை வன்கொடுமை செய்வது அரசுப் பணி கிடையாது. சந்தன மரக் கடத்தலில் ஈடுபடும் பெரும் புள்ளிகளைக் காப்பாற்றும் நோக்கில் வனத் துறை, காவல்துறையினர் ஒட்டுமொத்த கிராமத்தையும் பலிகடா ஆக்கியுள்ளனர். 5 நாட் களாக சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களை மறுநாள் நள்ளிரவு 12 மணிக்கு ரிமாண்ட் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஒரு மாதம் கழித்தே வெளியே தெரியவந்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகே அடையாள அணிவகுப்பு நடத்தப் பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகே நீதிமன்ற விசாரணை தொடங்கியுள்ளது. சீருடை அணிந்த அரசு ஊழியர்கள்தான் குற்றம் செய்துள்ளனர் என்பதை சிபிஐ உறுதி செய்துள்ளது."

"குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது மாவட்ட அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். தவிர, பாதிக்கப்பட்ட வாச்சாத்தி பெண்களுக்கு பாதுகாப்பாக நிற்காமல், குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியர்களைக் காப்பாற்றும் நோக்கிலேயே அப்போதைய அரசும் செயல்பட்டது கண்டனத் துக்குரியது."

தர்மபுரி அமர்வு நீதிமன்றம் 215 வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய் துறை பணியாளர் களுக்கு வழங்கிய சிறைத் தண்டனைகளை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது; வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில், பாதிக்கப் பட்ட 18 பழங்குடியின பெண்களுக்கும் அரசு வேலையுடன் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றத்தை மூடி மறைத்த அப்போதைய தருமபுரி ஆட்சியர், காவல்துறை எஸ்.பி., மாவட்ட வனத் துறை அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தண்டனை அனுபவிக்க வேண்டியவர்களை சிறையில் அடைக்க கீழமை நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிமுக அரசாங்கம் குற்றவாளிகளை பாதுகாக்க இழிவாக செயல்பட்டது என்பதை தீர்ப்பின் பின்வரும் பத்திகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

"உண்மையான கடத்தல்காரர்களையும், பெரிய ஆட்களையும் பாதுகாப்பதற்காக, வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள், அப்போதைய அரசின் உதவியுடன் பெரியதொரு மேடை நாடகம் அரங்கேற்றம் செய்தார்கள், இதில் அப்பாவி பழங்குடியினர் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்...." 

உயர் நீதிமன்ற தீர்ப்பின் பத்திகளில்....

பத்தி 67ல்... சாட்சி எண் 13-ன் சாட்சி ஆதாரத்திலிருந்து, வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்தவர்களின் உதவியுடன் வெளியாட்களால் சந்தன மரங்கள் கடத்தப்படுவது தொடர்பாக அவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர் என்பது தெளிவாகிறது. முருகன், கணேசன், பொள்ளாச்சி ராமசாமி, நாமக்கல் மஸ்தான் ஆகியோர் பல்வேறு ரேஞ்ச் அலுவலர்கள் தண்டபாணி, நாகராஜன் ஆகியோர் உதவியுடன் வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த சிலரை ஈடுபடுத்தி சட்டவிரோதமாக சந்தன மரங்களை வெட்டி அகற்றி மறைக்கும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறை அதிகாரிகளின் உதவியுடன் கடத்தல் காரர்கள் மறைவான இடங்களில் இருந்து சந்தன மரங்களை எடுத்துச் செல்வது வழக்கமாகிவிட்டது.எனவே மேற்படி கிராமவாசிகளின் சாட்சியங்களில் இருந்து பெருமளவிலான சந்தன மரக் கடத்தல் நடவடிக்கைகள், அனைத்தும் வன அதிகாரிகளின் உதவியுடன் மேற்படி பெரிய ஆட்களால் செய்யப் பட்டன என்பது தெளிவாகின்றது. துரதிர்ஷ்டவசமாக இந்த அப்பாவி கிராம மக்கள் சந்தன மரக் கடத்தல் குற்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் மீது பல வழக்குகளைப் பதிவு செய்தனர். சந்தனக் கடத்தல்காரர்கள் என்று பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் மீது வனத் துறையினர் வழக்குப்பதிவு செய்தும், காட்டு வதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை.

பத்தி 72ல் கடத்தல்காரர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டதாகவும், கடத்தல்காரர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் காட்டுவதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. அனைத்து ஆதாரங்களும் அதிகாரிகளால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவி கிராம மக்கள் மட்டுமே என்பதைக் காட்டுகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகும், கிராம மக்கள் சிலர் தன்னார்வத் தொண்டு நிறுவனம் அல்லது நலச் சங்கம் மற்றும் எஸ்சி/எஸ்டி கமிஷன் உறுப்பினர்களின் உதவியுடன் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடர்ந்துள்ளனர். அதிகாரத்தில் இருந்தவர்கள் சம்பந்தப்பட்ட அப்பாவி மக்களின் குரலுக்கு செவி சாய்க்கவில்லை, அப்போதைய அரசும் கூட எந்த அக்கறையும் செலுத்தவில்லை, இது வருவாய்த் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வன அதிகாரிகள் என இந்த கடத்தலில் சம்பந்தப்பட்ட சில பங்குதாரர்களை பாதுகாக்கவே அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இத்தகைய உயர் அதிகாரிகளுடன் போட்டியிட இயலாத அப்பாவி கிராம மக்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டனர்.

பத்தி 74ல் சாட்சி எண்.7 மற்றும் 13 கடத்தலில் ஈடுபட்ட சில நபர்கள் மற்றும் கடத்தல்காரர்களுக்கு உதவிய அதிகாரிகள் அனைவரும் யார் என்று தகவல் கொடுத்துள்ளனர். அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கை எடுத்ததற்கோ, உண்மையான சந்தன மர கடத்தல்காரர்கள் சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வரப்பட்டதற்கோ எந்த ஆவணப் பதிவுகளும் இல்லை. எனவே, மேல்முறையீட்டாளர்களின் வாதத்தை ஏற்க முடியாது.

பத்தி 99ல் மேல்முறையீடு செய்த அனை வருமே சோதனை நடத்தும்போது, சோதனையின் நோக்கத்தை திசை திருப்பினர் என்பது வாய்மொழி மற்றும் ஆவண ஆதாரங்களைப் படிப்பதில் இருந்து தெளிவாகிறது. மாவட்ட ஆட்சியர், மாவட்ட வன அலுவலர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் உண்மைக் குற்றவாளிகள் யார் என்று தெரிந்திருந்தாலும், (அவர்களுக்கு மட்டுமேத் தெரிந்த காரணங்களால்) அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது சாட்சிகளின் சாட்சியங்களில் இருந்து தெளிவாகிறது. உண்மையான குற்றவாளிகளைப் பாதுகாக்க, அப்பாவி கிராம மக்கள் பலியாகின்றனர். எனவே, மேல்முறையீடு செய்தவர்கள் அனைவரும் குற்றம் செய்தார்கள் என்பதை அரசு தரப்பு நிரூபித்துள்ளது என்ற முடிவுக்கு இந்த நீதிமன்றம் வருகிறது.

பத்தி 102ல் தர்மபுரி மாவட்டத்தின் அப்போதைய ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இவ்விவகாரத்தில் சிறிதளவும் அக்கறை காட்டவில்லை. பிரச்சினையின் தீவிரம் பற்றி கவலைப்படவே இல்லை... உண்மையான கடத்தல்காரர்களையும், பெரிய ஆட்களையும் பாதுகாப்பதற்காக, வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள், அப்போதைய அரசின் உதவியுடன் பெரியதொரு மேடை நாடகம் அரங்கேற்றம் செய்தார்கள், இதில் அப்பாவி பழங்குடியினர் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்....

பத்தி 103ல் மேலும், அப்போதைய மாவட்ட ஆட்சியர், அப்போதைய காவல் கண்காணிப்பாளர் மற்றும் இறுதியாக அப்போதைய சம்பந்தப்பட்ட காலத்தில் இருந்த மாவட்ட வன அலுவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

உண்மையான குற்றவாளிகளை பாதுகாப் பதற்காக, அப்பாவி பழங்குடி மக்களை பலிகடாக்களாக்கிய, அப்போதைய தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தசதரன் ஐ.ஏ.எஸ்., மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ராமானுஜம் ஐ.பி.எஸ்., மாவட்ட வன அதிகாரி எல்.நாதன் ஐ.எப்.எஸ் ஆகியோர் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக, உரிய சட்டபூர்வமான, நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்; அவர்கள் தண்டிக்கப்படுவதன் மூலமாக, வாச்சாத்தியில் பாதிக்கப்பட்ட பழங்குடியினருக்கான நீதியை முழுமைப்படுத்திட வேண்டும்.

'பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தாக்குதல் களில், பாரபட்சமாக, அநீதியாக, குற்றமய அலட்சியத்துடன் செயல்படும் உயர் அரசு அதிகாரிகள் தண்டிக்கப்படுவார்கள்' என்ற முன் மாதிரியான நடவடிக்கைகள் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.