மார்ச் 3- பீகார் தலைநகர் பட்னாவில், இந்தியா கூட்டணி நடத்திய, லட்சக்கணக்கானோர் கலந்து கொண்ட மாபெரும் பேரணி, மக்கள் நம்பிக்கைப் பேரணி நடந்தது. ஐந்து நாட்கள் பொதுக்கூட்டங்களாக நடத்தப்பட்டது. ஆர் ஜே டி தலைவர் தேஜஸ்வி அந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டார். அடுத்த ஐந்து நாட்கள் அது வாகனப் பயணமாக மாற்றப்பட்டு, மாநிலம் முழுவதும் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரப்புரையின் நிறைவாக மாபெரும் மார்ச் 3 அன்று பட்னாவில் பேரணி நடந்தது. மாநிலம் முழுவதும் சிபிஐஎம்எல் கட்சித் தோழர்களும் மக்களும் கொடிகளோடும் பதாகைகளோடும் பெருமளவில் கலந்து கொண்டனர். அது தவிர பிப்ரவரி 11 முதல் 18 வரை சிபிஐஎம்எல் கட்சியின் பரப்புரைப் பயணமும் சுதந்திரமாக கட்சிப் பதாகையின் கீழ் நடத்தப்பட்டது.

பட்னா பேரணியிலும் எங்கு பார்த்தாலும் மாலெ (சிபிஐஎம் எல்) கட்சியின் சிவப்புக் கொடிகளும் ஆர்ஜேடியின் பச்சைக் கொடிகளுமாகக் காட்சி அளித்தன. மூன்றாம் தேதி பட்னா பேரணியையொட்டி மார்ச் 2ஆம் தேதி மோடி -நிதிஷ் பேரணியும் கூட நடந்தது. பிரதமரும் முதல்வரும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது. ஆனால், இந்தியா கூட்டணியின் பட்னா பேரணி பல லட்சம் பேர் கலந்து கொண்ட பேரணி, அதைவிட மிகப்பெரிதாகவும், மக்களின் உணர்வுப்பூர்வமான பங்கேற்பு உடையதாகவும் இருந்தது என மாநிலப் பத்திரிக்கைகள் குறிப்பிட்டன. இந்திப் பிரதேசத்தின் ஒரே கட்சி பிஜேபி தான் என்ற கொக்கரிப்புக்கு சரியான பதிலடியாக அந்தப் பேரணி அமைந்தது. நிதிஷ் குமார் மீண்டும் பிஜேபி கூட்டணியில் சேர்ந்ததால் இந்தியா கூட்டணிக்கு இழப்பேதும் இல்லை என சுட்டிக்காட்டுவதாகவும் அந்தப் பேரணி அமைந்தது.

பேரணியில் சிபிஐஎம்எல்கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் திபங்கர், ஆர்ஜேடி கட்சியின் லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி,காங்கிரசின் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, உத்தரபிரதேசம் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், சிபிஐ பொதுச்செயலாளர் தோழர் டி ராஜா, சிபிஐஎம் பொதுச்செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தோழர் திபங்கர் பேசும் போது, பிஜேபி தனது தேர்தல் சின்னத்தை தாமரைக்குப் பதிலாக புல்டோசராக மாற்றிக் கொண்டால் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்றார். பீகாரில் நடக்கும் இந்தப் பேரணி பீகாரின் தலையெழுத்தை மாற்றி எழுதும் பேரணி மட்டு மல்ல, இந்த நாட்டின் தலையெழுத்தையே மாற்றி எழுதத்தக்க பேரணி. 2024 தேர்தலில் நாட்டு மக்களே, பீகார் மக்களே வெற்றி பெறுவார்கள். பாசிசத்தை, பிஜேபியை, அதன் கூட்டாளியான அய்க்கிய ஜனதா தளத்தைத் தோற்கடிப்பார்கள் என்று அறுதியிட்டுப் பேசினார். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை மறுக்கப்படுகிறது. இளைஞர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது. ஹரியானாவிலும் உத்தரப் பிரதேசத்திலும் உள்ள தொழிலாளர்கள் காசா மீது இனப்படுகொலைப் போர் நடத்தும் இஸ்ரேலுக்கு அனுப்பப்படுகிறார்கள். பில்கிஸ் பானுவை பாலியல் வன்முறை செய்த குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்க முடியவில்லை என்றால் தோழர் மனோஜ் மன்சிலைப் போல சிறைச்சாலைகளுக்கு அனுப்புகிறார்கள். இதுதான் மோடியின், நிதிஷ் குமாரின் ஆட்சி. இது தோற்கடிக்கப்பட வேண்டும்.

இந்த நாட்டைக் காப்பது,நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பது, அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பது என்பது மாபெரும் கடமையாக நம் முன் வந்திருக்கிறது. அந்தக் கடமையை இந்தியா கூட்டணி ஏற்றுக் கொண்டிருக்கிறது. பிஜேபியை ஆட்சிக் கட்டிலிலிருந்து அகற்றியே தீருவோம் என சிபிஐஎம்எல் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் தனது உரையில் குறிப்பிட்டார்.

பொய்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைதான் மோடி. இதர கட்சிகளின் குப்பைகளை அள்ளிப்போடும் குப்பைத் தொட்டிதான் பிஜேபி மோடியின் உத்தரவாதம் என்கிறார் மோடி. நிதிஷ் குமாருக்கு மோடி உத்தரவாதம் கொடுப்பாரா என கேட்டார் தேஜஸ்வி.

ஒன்றிய அரசாட்சியிலிருந்து மோடியை,பிஜேபியை அகற்றுவோம் என லட்சக்கணக்கானோர் சூளுரைத்த பேரணி அது.