விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து!
தொழிலாளர் விரோத நான்கு சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெறு!
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்காதே!
நிரந்தர பணிகளில் ஒப்பந்த முறையை புகுத்தாதே!
அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூபாய் 26,000 உத்தரவாதம் செய்!
விவசாய விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதம் செய்!
கிராமப்புற வேலை உறுதி திட்டத்தைச் சீர்குலைக்காதே!
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்புத் திட்டத்தை உறுதிப்படுத்து!
அனைத்து மக்களுக்கும் கல்வி மருத்துவம் கிடைக்கச் செய்!
கார்ப்பரேட் வரியை, செல்வந்தர்களுக்கான வரியை அதிகப்படுத்து!
மத வெறியை தூண்டி மக்களை பிளவு படுத்தாதே !
என்பன உள்ளிட்ட 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மைய தொழிற்சங்கங்களும் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவும் கூட்டாக 2024 பிப்ரவரி 16 அன்று தொழிற்சாலை, துறை வாரி வேலை நிறுத்தத்துக்கும் கிராமப்புற முழு அடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தன. நாடெங்கும் நகர்புறத்திலும் கிராமப்புறத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு மறியல் செய்து கைதாகினர்.
தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு மையங்களில் ஏஐசிசிடியு, ஏஐகேஎம் மற்றும் அயர்லா அமைப்புகளைச் சார்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பல நூற்றுக்கணக்கில் மறியல் போராட்டத்திலும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். தென்காசியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்ட மறியல் போராட்டத்தில் ஏஐசிசிடியு அகில இந்தியத் தலைவர் வீ.சங்கர், மாநிலத் தலைவர் சங்கரபாண்டியன், சிபிஐ(எம் எல்) கட்சியின் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி, ஏஐசிசிடியு தென்காசி மாவட்டச் செயலாளர் வேல்முருகன் உட்பட தோழர்கள் கைது செய்யப்பட்டனர். சில நாட்களுக்கு முன்பு நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும் தொழிலாளர்கள் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்தி சிறை சென்றனர். மீண்டும் பிப்.16இல் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திலும் மாநிலம் முழுவதும் பல்வேறு மையங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். மின்சார வாரியம், போக்குவரத்து, டாஸ்மாக், கட்டுமானம், விசைத்தறி, பீடி, தூய்மைப் பணி, உயிரியல் பூங்கா, ஆட்டோ, சிறு கடை வியாபாரிகள், தொழிற்சாலைத் தொழிலாளர்கள் என அனைத்துப் பிரிவு தொழிலாளர்களும் வேலை நிறுத்தம், மறியல் போராட்டங்களில் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஏஐசிசிடியு மாநில சிறப்புத் தலைவர் இரணியப்பன் செங்கல்பட்டிலும் மாநில பொதுச் செயலாளர் ஞானதேசிகன் திருச்சியிலும் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகினர். அகில இந்திய விவசாயிகள் மகாசபை தமிழக தலைவர் சிம்சன் காரைக்குடி மறியல் போராட்டத்திலும் பொதுச் செயலாளர் சந்திரமோகன் சேலம் பனமரத்துப்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டனர். சென்னையில் நடைபெற்ற மறியலில் ஏஐசிசிடியு மாநில நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, திருநாவுக்கரசு, தர்மபுரியில் மாநிலச் செயலாளர்கள் முருகன், கோவிந்தராஜ், சேலத்தில் மாநிலச் செயலாளர் வேல்முருகன், மேட்டுப்பாளையத்தில் மாநிலத் துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், கோவையில் மாநிலச் செயலாளர் வெங்கடாசலம், திருப்பூரில் மாநிலச் செயலாளர் முத்து, கும்பகோணத்தில் மாநிலத் துணைத் தலைவர் மதியழகன், கன்னியாகுமரியில் மாநில நிர்வாகிகள் அந்தோணி முத்து, சுசிலா, கரூரில் மாநிலச் செயலாளர் பால்ராஜ், செங்கல்பட்டில் சிவா ஆகியோர் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடிப் பணியாளர்கள் பெரும் எண்ணிக்கையில் அணி திரட்டப்பட்டிருந்தனர். வேலை நிறுத்தத்திற்கு முன்பாக, பல்வேறு மக்கள் பிரிவினரை சென்றடையும் வகையில் அனைத்துத் தொழிற்சங்க முன்னணிகளும் பரவலான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து மைய தொழிற்சங்கங்கள் விவசாய சங்கங்கள் சார்பில் பிப்ரவரி 12, 13, 14 தேதிகளில் புதுச்சேரி நகரம், ஊரகப்பகுதிகளில் வேலைநிறுத்தம் கதவடைப்பு விளக்க பரப்புரை இயக்கம் நடைபெற்றது. பிப்ரவரி 16 அன்று புதுச்சேரி நகரத்திலும் பாகூரிலும் தொழிலாளர், விவசாயிகள் பங்கேற்ற மறியல் பேரணி நடை பெற்றது. மறியல் பேரணி தியாகி சுப்பையா சிலையிலிருந்து புறப்பட்டு பாஸ்போர்ட் அலுவலகம் எதிரில் மறியலில் ஈடுபட்டனர். ஏஐசிசிடியு சார்பில் அகில இந்திய துணைத் தலைவர் சோ.பாலசுப்பிரமணியன் தலைமையில் தொழிலாளர்கள் பங்கு பெற்றனர். மறியல் போராட்டத்தில் ஏஐசிசிடியு செயலாளர் புருஷோத்தமன், துணைத் தலைவர் விஜயா ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் முருகன், பொதுச் செயலாளர் அருள், மற்றும் நிர்வாகிகள் விக்டர். அந்தோணி ராஜ், ஜனார்த்தனன், முருகையன் குமார் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் தலைவர் மல்லிகா மீனாட்சி, வசந்தி, புரட்சிகர இளைஞர் கழகம் சுவாதி மார்த்தாண்டன் உள்ளிட்ட பலர் கைதாகினர்.
இந்தியாவின் நிலக்கரி சுரங்கங்கள், எக்கு ஆலைகள் எண்ணைய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், ஆஷா, அங்கன்வாடி, மதிய உணவு திட்டத் தொழிலாளர்கள், பல்வேறு தொழிற்பேட்டை தொழிலாளர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் என ஏஐசிசிடியு இணைப்புச் சங்க தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மறியல் போராட்டங்களில் கலந்து கொண்டனர். ராஞ்சியில் நடைபெற்ற போராட்டத்தில் மோடி அரசின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
மேற்கு வங்கத்தில் முக்கியமான தேர்வு இருந்த காரணத்தால் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 15 ஆம் தேதியே அனைத்து தொழிற்சங்க பேரணி நடைபெற்றது.போராட்ட நிகழ்ச்சிகளில் பேசிய பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தலைவர்களும் 2024 தேர்தலில் பாசிச மோடி ஆட்சியை தோற்கடிக்க உறுதி ஏற்றுக் கொண்டனர்.ஏஐசிசிடியு ரயில்வே தொழிலாளர்கள் ஒருமைப்பாட்டு ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிகளை கட்டமைத்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)