2013 இல் 'பிரதம மந்திரியாக மோடி' என்ற பரப்புரை தொடங்கப்பட்டது. அன்று முதல், மோடி வழிபாடு என்பதை மையமாகக் கொண்டு மாபெரும் பரப்புரைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கான பணபலம் என்பது மோடி வழிமுறையின் தேர்தல் முத்திரையாக இருந்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் மோடி வழிபாடும், மிருகத்தனமான பணபலமும் பெரும் பாய்ச்சலை எட்டியுள்ளன. இந்திய அரசமைப்புச் சட்டத்தை அதல பாதாளத்திற்குள் தூக்கி எறிவதை நோக்கமாகக் கொண்டு, 400 தொகுதிகளுக்கும் அதிகமான பெரும்பான்மை பெறுவோம் என ஆணவக் கூச்சலிடுகிறார் மோடி. மூன்றாவது முறை பிரதமராகத் துடிக்கிறார் மோடி. ஒன்றுபட்ட எதிர்க்கட்சி கூட்டணியைச் சுற்றி அணிதிரளும் மக்கள், தமது ஆட்சியை அகற்றி விடுவார்களோ என பெரும் அச்சப்படுகிறார். ஒன்றிய அரசு நிறுவனங்களை (அமுலாக்கத் துறை, வருமான வரித் துறை, தேசிய புலனாய்வுத் துறை) ஆயுதங்களாகக் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர்களைத் துன்புறுத்துகிறார், கைது செய்து சிறையில் அடைக்கிறார். இவையெல்லாம் 2024 தேர்தல் காலத்தில் மோடியின் விரக்தியையே சுட்டிக்காட்டுகின்றன.
மார்ச் 16 அன்று தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத்திற்கான 18 வது பொது தேர்தலின் அட்டவணையை அறிவித்தது. அப்போது தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல்களில் போட்டியிடுபவர்களுக்கு சம வாய்ப்பு வழங்கப்படும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். ஆனால், மாதிரி நடத்தை விதிமுறைகள் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள்ளாகவே, மற்றுமொரு பாஜக அல்லாத அரசாங்கத்தின் முதலமைச்சர் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார். ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்குப் பிறகு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். ஆனால், மனிஷ் சிசோடியா முதல் அரவிந்த் கெஜ்ரிவால் வரை கைது செய்யப்பட்டுள்ள எந்தவொரு ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும், மதுக் கொள்கை மோசடி வழக்கில், எந்தவொரு ஆதாரத்தையும் இன்றைய நாள் வரை அமுலாக்கத் துறையால் சமர்ப்பிக்க முடியவில்லை என்பதுதான் கேலிக்குரியது ஆகும். அதே வேளையில், அதே டெல்லி மதுக் கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, அரசு சாட்சியாக மாறிய பி சரத் சந்திர ரெட்டி இயக்குனராக உள்ள அரோபிந்தோ பார்மா லிமிடெட் கம்பெனியிடமிருந்து, பாஜக பெரும் நிதி பெற்றிருக்கிறது என்பதை, ஸ்டேட் பேங்க் வெளியிட்டுள்ள தேர்தல் பத்திர தரவுகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
ஓராண்டிற்கும் மேலாக பிணை விடுதலையின்றி மனிஷ் சிசோடியா சிறையில் வாடிக் கொண்டிருக்கும்போது, 2022 நவம்பரில் இதே வழக்கில் கைது செய்யப்பட்ட பி சரத் ரெட்டி 2023 மே மாதத்திலேயே பிணை விடுதலை பெற்று விட்டார். அவர் கைது செய்யப்பட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு அவரது நிறுவனம், பாஜகவிற்கு 5 கோடி ரூபாய் நன்கொடையை வழங்கியிருக்கிறது. அந்த நிறுவனம் வரிசையாக பல நன்கொடைகளை பிஜேபிக்குத்தான் வழங்கியுள்ளது. மே மாதத்தில் பிணை விடுதலை பெற்ற, சரத் ரெட்டி ஜூன் மாதத்தில் அரசு சாட்சியாக மாறினார். அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் 25 கோடி ரூபாயை பாஜகவிற்கு நன்கொடையாகவும் வழங்கினார். மொத்தத்தில் சரத் ரெட்டியினுடைய தந்தை பிவி ராம் பிரசாத் ரெட்டி-யால் நிறுவப்பட்ட அரோபிந்தோ பார்மா லிமிடெட் கம்பெனியும், அதோடு தொடர்புடைய வேறு இரண்டு நிறுவனங்களும், கிட்டத்தட்ட 55 கோடி ரூபாயை தேர்தல் பத்திரங்களின் வழியாக பிஜேபிக்கு வழங்கி இருக்கிறது. அதே நேரத்தில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 15 கோடியையும், தெலுங்கு தேசம் கட்சி 2.5 கோடியையும் அரோபிந்தோ பார்மா நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளன. கொழுத்த லஞ்சத்தை பெறுவதற்காக மட்டுமல்ல, எதிர்கட்சியினரைத் தாக்குவதற்கான கருவியாகவும், இந்த நிறுவனங்கள் மோடியால் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இதுவரையிலும் இந்தத் தேர்தல் பத்திர மோசடியின் சிக்கலான முடிச்சுகள் அவிழ்க்கப்பட்ட விதம் கண்டு மோடி அரசு கலங்கி போய் இருக்கிறது. அது இந்த மோசடியிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கு தன்னாலான அனைத்தையும் முயற்சிக்கிறது. இந்தத் தேர்தல் பத்திர திட்டம் என்பது, பண மோசடிக்கும், நிறுவனமயமாக்கப்பட்ட ஊழலுக்கும் வாய்ப்பான வெட்கக்கேடான முறையாகும். ஸ்டேட் பேங்க் இறுதியாக சமர்ப்பித்த தரவுகள் மூலம் இது அம்பலமாகிறது. கட்டுமானம், மருந்து நிறுவனங்கள், சுரங்க நிறுவனங்கள் இன்னும் இது போன்ற வெவ்வேறு துறைகளில் உள்ள நன்கு அறியப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அக்கம் பக்கமாகவே, பலராலும் அறியப்படாத புதிதாக உருவாக்கப்பட்ட பல நிறுவனங்களும் கூட பெரும் தொகைகளுக்கு பத்திரங்களை வாங்கியுள்ளன என்பது ஊடகவியலாளர்கள் முயற்சிகளால் வெளிப்பட்டது. பதிவேடுகளின்படி, அவர்களுடைய நிறுவனம் சம்பாதித்த லாபத்தை விட பல மடங்கு அதிக தொகைகளுக்கு பத்திரங்களை வாங்கி இருக்கிறார்கள் என தெரிகிறது. மேலும் சில நிறுவனங்கள் உண்மையிலேயே நட்டத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.
இந்தப் பத்திரங்கள் பண மோசடி செய்வதற்கான வழியாக மாற்றப்பட்டுவிடும் என தனது பெரும் கவலையை ரிசர்வ் வங்கி வெளிப்படுத்தியது. இது வெளிப்படைத்தன்மையையும், சம போட்டிக்கான வாய்ப்பையும் மறுத்து விடும் என தேர்தல் ஆணையம் எச்சரித்தது. இந்தப் பத்திரங்களின் மூலமாக நன்கொடை வழங்கும் கம்பெனிகள், அதற்கு கைமாறாக, தண்டனைகளில் இருந்து விலக்கு பெறுவது, ஒப்பந்தங்களைப் பெறுவது, கொள்கைகளில் சாதகமான மாற்றங்களையும் கூட பெறுவது என்பவற்றுக்கான ஒரு முறையாக இந்தப் பத்திரங்கள் மாறிவிடும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்தது. இப்போது அது போலவே நடந்து விட்டது. இவையனைத்தும் உண்மையென நிரூபிக்கப்பட்டு விட்டன. அனைத்து அறிகுறிகளின்படியும் பார்த்தால், இந்தத் தேர்தல் பத்திர திட்டம் என்பது சுதந்திர இந்தியாவின் பெரும் வெட்கக்கேடு எனலாம். அரசு ஆதரவுடன், சட்டபூர்வமாக நடத்தப்பட்டதோர் நிதி மற்றும் அரசியல் ஊழல் முறை இது. உச்சநீதிமன்றத்தின் முன்பு ஸ்டேட் பேங்க் மீண்டும் மீண்டும் பொய் சொன்னது, பத்திரங்கள் குறித்த தகவல்களை வெளியிடுவதைத் தவிர்க்க பல நொண்டிச்சாக்குகள் சொன்னது ஆகியன இந்த தேர்தல் பத்திர மோசடியின் ஊழல் அடிப்படையை உறுதி செய்கிறது.
முதன்மை ஊடகங்கள், மிகப்பெரிய இந்த மோசடி குறித்த அனைத்து தகவல்களையும் விவாதங்களையும் தடுத்து விட்டன, மறைத்தும் விட்டன. புலனாய்வு ஊடகவியலாளர்கள், உண்மையறியும் ஆராய்ச்சியாளர்கள், வெளிப்படைத் தன்மையைப் பரப்புரை செய்பவர்கள் ஆகியோரைக் கொண்ட அர்ப்பணிப்பு மிக்க குழுவினரால் அம்பலப்படுத்தப்பட்ட இந்த மோசடி குறித்த உண்மையான தகவல்களை மாற்று ஊடகங்களின் வாயிலாகவே மக்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே இந்த அரசாங்கம், மாற்று ஊடகங்களின் குரல் வளையையும் நெறிக்கப் பார்க்கிறது. 'உண்மைதானா என சோதிக்கும்' அதிகாரத்தை தனக்குத்தானே வழங்கிக் கொண்டு, அவை பொய்யானவை என முத்திரை குத்துவதன் மூலம் எந்த ஒரு விமர்சனத்தையும், அதைப் பரப்பும் வலைதளங்ளையும் முடக்க, தடுக்க முயற்சிக்கிறது. இந்தக் கொடூர நடவடிக்கையை, 'உண்மைதானா என சோதிக்கும்' அரசின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் தடை செய்ததன் காரணமாக சில தற்காலிக நிவாரணங்களை வலைதளங்களும் சமூக ஊடகங்களும் அனுபவிக்கின்றன. ஆனால் பேச்சு சுதந்திரம், கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம், மாற்று ஊடகம் ஆகியவற்றிற்கான அச்சுறுத்தல் மிகப்பெரும் ஆபத்தாக முன்வந்திருக்கிறது.
மோடி அரசாட்சி மூன்றாவது முறையும் ஆட்சிக்கு வந்தால், அது அப்பட்டமான ஊழல், கட்டுப்படுத்த முடியாத கார்ப்பரேட் கொள்ளை ஆகியவற்றுக்கு வழி வகுக்கும். அரசியல் சாசன சட்டத்தை அதல பாதாளத்தில் தள்ளுவதாக முடிந்து போகும். ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம், சிவில் உரிமைகள் போன்ற அதன் பன்மைத்துவ தன்மைகள் அரித்துப் போகும். அத்தகைய பிற்போக்கு அம்சங்கள் கூடுதல் உந்துதல் பெறும். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால், 2002ல், மதவெறி இனப்படுகொலை, அதிகரித்துக் கொண்டிருந்த விவசாய நெருக்கடி, பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் தற்கொலை ஆகியவற்றின் பின்னணியில், அடல் - அத்வானி தலைமையிலான தேசிய ஜனநாயக அரசாங்கம் (என்டிஏ) இந்திய மக்களால் ஆட்சிக் கட்டிலிலிருந்து அகற்றப்பட்டது. அதே போல, அதிகரித்துக் கொண்டிருக்கும் பொருளாதார, சமூக பேரழிவுகளை மற்றும் சர்வாதிகார ஆட்சியைத் தோற்கடித்திட 2024ல், இந்திய மக்கள் மீண்டும் எழுந்திட வேண்டும்.
(லிபரேசன் 2024 ஏப்ரல் தலையங்கத்தைத் தழுவியது)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)