தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் கால வியூகங்களை அமைத்துக் கொண்டிருக்கின்றன. இந்தியா கூட்டணியைச் சார்ந்த கட்சிகள் தவிர, இதர கட்சிகளில் எந்தக் கட்சி எந்தக் கூட்டணியில் சேரும் என்பது இன்னமும் ஆடு புலி ஆட்டமாகவே இருக்கிறது. நாட்டின் பிரதம அமைச்சரே மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருகை செய்து கூட்டாளிகளை வலைவீசி பிடிக்க முயற்சிக்கிறார். ஒபிஎஸ் உள்ளிட்டோர் நாங்கள் பிஜேபியிடம் தொகுதி கேட்டிருக்கிறோம் என சொல்லிக்கொண்டு கைகட்டி நின்று கொண்டிருக்கின்றனர். பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் நல்ல பேரம் எங்கு படியும் என அதிமுக, பிஜேபி கூட்டணிகளோடு மாற்றி மாற்றி, வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எந்தக் கட்சி எந்தக் கூட்டணியில் இறுதியாக சேர்ந்தாலும் தேர்தலில் மூன்று கூட்டணிகள் களமிறங்கும், சீமானின் நாம் தமிழர் கட்சி தனியாக போட்டியிடும் என்பது போல தெரிகிறது. பிஜேபி கூட்டணியில் பாமக, தேமுதிக சேர்ந்து விட்டால், அதிமுக தனித்துப் போட்டியிடுமா என்கிற கேள்விகளையும் எழுப்பவே செய்கிறார்கள்.
கடந்த முறை திமுக கூட்டணிக் கட்சிகள் சுமார் 53.3 சதவீத வாக்குகள் பெற்று 38 தொகுதிகள் வென்றன. அதிமுக -பிஜேபி கூட்டணிக் கட்சிகள் சுமார் 30 சதவீதம் வாக்குகள் பெற்று அதிமுக மட்டும் ஒரு தொகுதியை வென்றது. இவை தவிர, மக்கள் நீதி மையம் 3.8 சதவீத வாக்குகளையும் நாம் தமிழர் கட்சி 3.9 சதவீத வாக்குகளையும் பெற்றன. கமலஹாசனுக்கு ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக சொல்லி அவர் வாக்குகளை இந்தியா கூட்டணி சேர்த்துக் கொண்டுள்ளது.
அதிமுக கடந்த முறை பிஜேபியோடு கூட்டணி வைத்ததால் பெருமளவிலான சிறுபான்மையினர் வாக்குகளை இழந்து விட்டது. அது மட்டுமல்லாமல், பிஜேபியை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் எடுத்துச் சென்று தனது சொந்த பலத்தைக் குறைத்துக் கொண்டுவிட்டது. பிஜேபி தமிழ்நாட்டில் காலூன்றக் காரணமாகி விட்டது. கடந்த தேர்தலில் 3.7 சதவீதம் வாக்குகள் பெற்ற பிஜேபி இந்த முறை 8 முதல் 15 சதவீதம் வரை வாக்குகள் பெறலாம் என கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன. குறிப்பிடத்தக்க அளவில், மாவட்ட மட்டத்திலான அதிமுக ஊழியர்கள், தலைவர்கள் பிஜேபிக்குத் தாவி விட்டனர் என சொல்லப்படுகிறது. இந்தப் பின்னணியில், பிஜேபியோடு கூட்டணி தனக்கு வாக்குகள் பெற உதவாது, கட்சியும் கரைந்து போகலாம் என்று முடிவு செய்து ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பிஜேபி கூட்டணியிலிருந்து விலகி விட்டது அதிமுக. ஆனால், இதுவும் பிஜேபியின் ஒரு செயல்தந்திரம்தான்; அதிமுக தனித்துப் போட்டி இடுவதன் மூலம் இந்தியா கூட்டணியின் வாக்குகளைக் குறைக்கலாம்; சில தொகுதிகளில் இதர கூட்டணிகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கலாம்; தேர்தலுக்குப் பிறகு பிஜேபி கூட்டணியில் சேர்ந்து கொள்ளலாம் என்று கூட அரசியல் நோக்கர்களால் கணிக்கப்படுகிறது. இந்தக் கணிப்பை முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட முடியாது என்பதைக் கடந்தகால அனுபவங்கள் சொல்கின்றன.
பிஜேபி கூட்டணியும் அதிமுக கூட்டணியும் தனித்தனியாக தேர்தலில் போட்டியிடுகின்றனவே தவிர, அவர்களுக்குள் கொள்கை வேறுபாடுகள் எதுவும் இருப்பது போல தெரியவில்லை. கடந்த காலத்தில், இந்தித் திணிப்பு, மாநில உரிமைப் பறிப்பு, ஜிஎஸ்டி, ஒன்றிய பிஜேபி அரசின் ஒடுக்குமுறைகள் உள்ளிட்ட அனைத்தையும் கைகட்டி வரவேற்றதுதான் அதிமுகவின் வரலாறு. தங்கள் கட்சி நலன், பதவி நலன் தவிர தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனைகள் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத கட்சிதான் அதிமுகவும் அதன் கூட்டாளிகளும். அப்படி இருக்கும்போது, அதிமுக தனியாகப் போட்டியிடுவதனால் அது புனிதராகிவிட முடியாது. மாறாக, தமிழ் நாட்டு மக்கள் தோற்கடிக்க வேண்டியது பாசிச பிஜேபியை மட்டுமல்ல, அதன் சந்தர்ப்பவாத அதிமுக கூட்டணியையும்தான்.
கருத்துக் கணிப்புகள்படி, எதிர்க்கட்சி வாக்குகள் சிதறுவது இந்தியா கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கு வழிகோலும், எதிர்க் கட்சி கூட்டணிகளின் ஒற்றுமை இந்தியா கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என ஆரூடம் கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் பிஜேபியும் அதிமுகவும் கூட்டணி சேர்ந்தால் அதிமுகவுக்குக் கிடைக்கிற வாக்குகளும் மிகக் கடுமையாக குறைய வாய்ப்பு உள்ளதே தவிர, வெற்றிக்கு வாய்ப்பில்லை. அண்ணாமலை மிகத் தெளிவாக கூறுகிறார். பிஜேபியின் நோக்கம் தமிழ்நாட்டில், 2024 நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெறுவதல்ல, வாக்கு சதவீதத்தை அதிகரிப்பது மட்டும்தான்; பிஜேபியின் நோக்கம் 2026 சட்டமன்றத் தேர்தலில் 50 தொகுதிகள் வெல்வதுதான் என்கிறார்.
திருப்பூர் பல்லடத்தில் பேசிய மோடி,பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை ஆதரித்துப் பேசி இருக்கிறார். ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்திருக்கிறோம் என்று மார்தட்டி இருக்கிறார். தமிழ்நாட்டில் மிகவும் கடுமையானவிமர்சனங்களுக்கு உள்ளான, தமிழ் நாட்டு மக்கள் எதிர்க்கிற அத்தகைய விசயங்களைப் பேசுவதற்கு ஒரே காரணம்தான் உள்ளது. தமிழ் நாட்டின் முற்போக்கு விழுமியங்களைச் சிதைத்திட வேண்டும்; கூட்டமைப்பு வாதத்தைக் குழி தோண்டிப் புதைத்திட வேண்டும் என்பதுதான் அது.
தேர்தலுக்கு சில வாரங்களே இருக்கும் பின்னணியில், குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை அமுல்படுத்துவதற்குத் தேவையான விதிகளை ஒன்றிய பிஜேபி அரசு உருவாக்கி இருப்பது தேர்தலில் மதவெறியைத் தூண்டி வாக்குகள் பெறுவதற்கான ஒரு முயற்சிதான்.
டாக்டர் அம்பேத்கர் வடிவமைக்கப்பட்ட அரசியல் அவர்களால் அமைப்புச் சட்டத்தை, இந்திய நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை, இந்திய ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டி, ஒரு காட்டுமிராண்டி கால சூழலை உருவாக்கி, இந்து ராஷ்ட்ரா என்கிற பெயரில் ஒரு பாசிச சர்வாதிகார ஆட்சியை அமைத்திட வேண்டும் என்பதுதான் அதன் கனவாக இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு ராமர் கோவில் திறந்ததும் கூட மதவெறி உணர்வுகளைத் தூபம் போட்டு வளர்த்திடுவதற்காகத்தான்.
தமிழ்நாட்டில், மதவெறி உணர்வுகளை மையப்படுத்தி அரசியல் செய்ய முடியாது என தெரிந்ததால், தனது வளர்ச்சித் திட்டங்கள் பற்றி தம்பட்டம் அடித்து வருகிறது.
கடந்த பத்தாண்டு கால மோடி ஆட்சியில் உழைக்கும் மக்களின், விவசாயிகளின் வாழ்வு பெருமளவு சிதைந்து போயிருக்கிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து இருக்கின்றன. வறுமை அதிகமாகி இருக்கிறது. ஆனால், வறுமையை அளவிடும் முறையை மாற்றுவதன் மூலம் அது குறைந்தது போல் காட்டப்படுகிறது. ஊதியம் பாதியாக குறைந்து இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. அசிம் ப்ரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் ஒரு ஆய்வில் இது தரவுகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், நாட்டின் பெருமுதலாளிகளின் செல்வம் அதிகரித்திருக்கிறது. உலக முதலாளிகள் பட்டியலில் இந்திய முதலாளிகள், பிரதமரின் கார்ப்பரேட் நண்பர்கள் வந்திருக்கிறார்கள். மோடியின் ஒன்றிய ஆட்சி, உழைக்கும் மக்களுக்கு எதிரான, விவசாயத் தொழிலாளர்களுக்கு எதிரான, விவசாயிகளுக்கு எதிரான, நடுத்தர மக்களுக்கு எதிரான ஆட்சியாக முன்வந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஆட்சியாக முன்வந்திருக்கிறது.
எனவே, பிஜேபியையும் அதன் கூட்டாளிகளையும் வரவிருக்கும் தேர்தலில் தோற்கடிப்பது என்பது தமிழ்நாட்டு மக்களின் மிக முக்கிய கடமையாகி இருக்கிறது. அதனால்தான், பேரழிவு பிஜேபியை, பாசிச பிஜேபியைத் தோற்கடிப்போம்!
மக்கள் விரோத, சந்தர்ப்பவாத அதிமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்!
இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்போம்!
என்பதைத் தனது தேர்தல் முழக்கமாக முன்வைத்திருக்கிறது சிபிஐஎம்எல் கட்சி. இது வெறும் ஆதரவு மட்டுமல்ல, அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணியின் அங்கமாகத் திகழும் சிபிஐஎம்எல் கட்சி, இந்திப் பிரதேசங்களில் பாசிசத்துக்கு நேருக்கு நேராக களத்தில் சவால் விடும் கட்சியாக எழுந்திருக்கும் சிபிஐஎம் எல் கட்சியின் வேண்டுகோள்.
பாசிச எதிர்ப்பு என்பது தேர்தல் சமயத்தில் பிஜேபி கூட்டணியை, இதர மக்கள்விரோத, சந்தர்ப்பவாத கூட்டணிகளைத் தோற்கடிப்பது என பொருள்படும். இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரிப்பது என பொருள்படும். அரசியல் கண்ணோட்டத்தில் இருந்து விலகி, உள்ளூர் கண்ணோட்டத்தில் இருந்து, தனிநபர் கண்ணோட்டத்தில் இருந்து, தேர்தலைப் பார்க்கக் கூடாது. நட்பு, பயன்கள், சொந்த முடிவுகள், சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது. இந்தியா கூட்டணியில் அல்லாத வேறு கட்சிகளுக்கோ, சுயேச்சை வேட்பாளர்களுக்கோ தேர்தல் பணிகள் செய்யக்கூடாது. பாசிச எதிர்ப்புக் கண்ணோட்டமே முதன்மையானது. கட்சி முடிவின்படி வாக்களிக்க வேண்டும்.
கூட்டணி கட்சிகளிடம் இருந்து நிதியுதவிகளோ, வாகன உதவிகளோ அல்லது அவர்களைச் சார்ந்து செயல்படத்தக்க அத்தகைய வேறு உதவிகளோ பெறக்கூடாது. கட்சி அனுதாபிகள், நண்பர்கள், சொந்த மக்கள் அடித்தளத்தைச் சார்ந்து மட்டுமே நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் பொதுவான, பொது வசூல் முறையும் பின்பற்றலாம். கூட்டணி கட்சிகளோடு இணைந்து செயல்படும் அதே நேரத்தில் நமது சுதந்திரத்தை பேணிக் காத்திட வேண்டும்.
வலுவான தேர்தல் பரப்புரைப் பணியோடு கூடவே, நமது அடித்தளத்தை வலுப்படுத்துவது,செயலூக்கப்படுத்துவது அதன் மூலம் தேர்தல் பங்கேற்பை வெற்றிகரமாக்குவது என்பதாக இருக்க வேண்டும். நமது கட்சி திட்டமிடுகிற,வழிகாட்டுகிற சொந்தப் பிரச்சார இயக்கத்திற்கு முழுக்கவனம் செலுத்தவேண்டும். தேர்வு செய்த தொகுதிகளில், கவனம்குவித்து வேலைகள் செய்ய வேண்டும்.
மாவட்ட வாரியாக தேர்தல் நிலைப்பாடு விளக்கக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். வாக்குச்சாவடி கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும். நமது சுதந்திர செயல்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும்.
இது வழக்கமான தேர்தல் அல்ல. இதில் நாம் முழு ஆற்றலையும் செலுத்தி, பிஜேபியை, அதன் கூட்டாளிகளைத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். வழக்கமான பரப்புரைகள் அல்லாமல், மக்களை வீடுவீடாகச் சென்று சந்திப்பது, கிளைகளை, கமிட்டிகளை செயலூக்கப்படுத்தி, தேர்தலில் பங்கேற்பது வேண்டும். தேர்தலில் ஒரு பெரும் அணிதிரட்டல் தொகுதியில் சுதந்திரமாக நடத்திட வேண்டும். நிதி உள்ளிட்ட அனைத்து விசயங்களிலும் நமது சொந்த பலத்தின் அடிப்படையில் தேர்தலில் பங்கேற்க வேண்டும்.
தேர்தலும் ஒரு போராட்டமே. அரசியல் போராட்டம். அந்தப் போராட்டத்தை வலுப்படுத்திட, கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும், கமிட்டி உறுப்பினர்களும் தாராளமாக தமது சொந்த நிதியைக் கட்சிக்கு வழங்கிட வேண்டும். நமது நண்பர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களிடமும் நிதி திரட்டிட வேண்டும்.
கட்சி சார் வெகுமக்கள் அமைப்புகள், பரந்த வெகுமக்களைச் சென்றடைந்திட, அவர்களிடம் நிதி திரட்டிட கவனம் செலுத்த வேண்டும். கட்சியின் மக்கள் அடித்தளத்தைத் தாண்டி விரிவாக செல்ல வேண்டும். அவர்கள் மத்தியிலான பரப்புரையையும் ஆழப்படுத்திட வேண்டும்.
இந்த நாட்டைக் காக்க, தமிழ்நாட்டைக் காக்க, அரசியலமைப்புச் சட்டத்தைக் காக்க, ஜனநாயகத்தைக் காக்க, மதவெறி வெறுப்பு அரசியலை முறியடிக்க, மதச்சார்பின்மையைக் காக்க, மாநில உரிமைகளைக் காக்க,தமிழ் மக்கள் உரிமைகளைக் காக்க, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபியை, அதன் கூட்டாளிகளை, சந்தர்ப்பவாத கட்சிகளை, கூட்டணிகளைத் தோற்கடித்திட வேண்டும். இந்தியா கூட்டணிக்கு வாக்களித்திட வேண்டும்!
அத்தகைய, மதவெறி பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் முன்னணிப் படையாக பணியாற்றிட வேண்டும்!
இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து, ஒன்றிய பிஜேபி ஆட்சியை அகற்றிட வேண்டுமென தமிழ்நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறது, சிபிஐஎம்எல் கட்சி.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)