2014ல் மோடி பிரதமரானதிலிருந்து இதுவரை 24 முறை தமிழ்நாட்டுக்கு வந்துள்ளாரென ஒரு தகவல் கூறுகிறது. இந்த ஆண்டு, ஜனவரியில் இரண்டுமுறை தமிழ்நாட்டுக்கு வந்த மோடி, பிப்ரவரி-மார்ச் ஒரு வாரத்திற்குள் அய்ந்துமுறை வந்து போய்விட்டார். பல்லடம், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை என சூறாவளி பயணம் நடத்தியுள்ளார்.
உறுதியாக தேர்தல் வருகிறது என்பதை உணர்த்துகிற வகையில் பல்லடத்தில், மோடி தேர்தல் பரப்புரையையும் துவக்கிவிட்டார். 10 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என பாஜகவினர் ஊதிப்பெருக்கிய அண்ணாமலையின் "என்மண், என் மக்கள்" நிறைவுப் பேரணியில் மோடி கலந்து கொண்டார். பட்டாபிஷேகம் சூடிக்கொண்ட மன்னரைப்போல் மோடி அழைத்துவரப்பட்டாலும் அவரது முகத்தில் மகிழ்ச்சி இல்லை. வெள்ளமாய் பாய்ச்சப்பட்ட பணத்தால் மக்கள் வெள்ளத்தை கூட்டிவர முடியவில்லை. 67 கிலோ மஞ்சள் மாலை தவிர வேறு எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை. பெரிய கட்சிகளின் தலைவர்கள் பாஜகவில் இணைவார்கள் என்று சொல்லப்பட்டது. பாதுகாப்புக் காரணங்களுக்காக அது ரத்து செய்யப்பட்டது எனக்கூறி கருப்புத் துணியால் மூடிக்கொண்டார்கள். ஜிகே வாசன் தவிர குறிப்பிட்டுச் சொல்லத்தக்க மற்ற கூட்டணி கட்சித் தலைவர்கள் மோடியை ஏமாற்றிவிட்டனர். ஜனநாயக இயக்கங்களை ஒடுக்கிய எம்ஜிஆர் ஆட்சி, ஊழலுக்காக தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவின் " நல்லாட்சி' பற்றி பேசி, பாஜகவுக்கு மூடப்பட்ட அதிமுக கதவை தட்டிப்பார்த்தார். இதற்காகவே எடப்பாடி ஆட்சியில் நடந்த 'பொள்ளாச்சி கொடூரம் பற்றி பேசவில்லை. ஆனாலும் எடப்பாடி கதவு இதுவரை திறக்கவில்லை.
பெரும் தொழில் நகரங்களான கோவை, திருப்பூர், ஈரோட்டை மய்யமிட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் அதிகார பீடத்தை நோக்கிய கொங்கு வெள்ளாளர்களையும் அதிமுகவையும் வசியப்படுத்துவதற்கு மோடி தனது பயணத்தைச்செலவிட்டார். தமிழ்நாட்டின் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழிலகங்களில் கணிசமான எண்ணிக்கையை கொண்டிருக்கும் கோவை, திருப்பூர், ஈரோடு நகரங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான தொழிற்சாலைகள் நலிவு பற்றி, பல லட்சக்கணக்கான தொழிலாளர், தொழில் முனைவோர், துயரம் பற்றி பிரதமர் பேசவில்லை. ஜிஎஸ்டி வரிவிதிப்பு, செல்லாத பணநடவடிக்கை, சிறுதொழில் துறையின் முதுகெலும்பை நொறுக்கியது போதாதென்று மோடி ஆட்சியின் முட்டாள்தனமான கோவிட்- 19 கட்டுப்பாடுகளும் இந்தத் துறையை தரைமட்டமாக்கிவிட்டன. இந்தப்பகுதிகளில்மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. பலபத்து லட்சம் தொழிலாளர் வேலை இழந்தனர். பல லட்சம் புலம்பெயர் தொழிலாளர் பெரும் துயரத்துடன் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். இந்தப் பேரழிவுத்துயரை துடைக்க துரும்பளவு கூட எதையும் செய்யவில்லை, மோடியின் 10 ஆண்டுகால ஆட்சி. ஆனால், பீகார் மாநில தொழிலாளர் தமிழ்நாட்டில் கொல்லப்படுவதாக கூறி பிளவு ஏற்படுத்த நினைத்த பாஜகவின் சதிஅரசியலை தமிழ்நாடு, பீகார் தொழிலாளரும் இகக (மாலெ) உள்ளிட்ட முற்போக்கு சக்திகளும் தமிழ்நாடு அரசும் சேர்ந்து முறியடித்தனர். இது மோடிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அதனால்தான், 10 விழுக்காடு பொருளாதார இட ஒதுக்கீடும், காஷ்மீருக்கு 370 சிறப்பு சலுகை நீக்கமும் தனது ஆட்சியின் சாதனை என பேசியிருக்கிறார். பாஜக-ஆர்எஸ்எஸ் நீண்டகால திட்டமாக, திராவிட அரசியலுக்கு எதிராக சமூகநீதி எதிர்ப்பு, கூட்டாட்சி எதிர்ப்பு இந்துத்துவா அரசியலை தமிழ்நாட்டில் வேரூன்ற வைக்க, மோடி தேர்தலையும் பயன்படுத்துகிறார். பல்லடம், திருப்பூர் மக்களின் அளவிலா அன்பையும் ஆர்வத்தையும் கண்டு மகிழ்ச்சியடைந்ததாக எக்ஸ் தளத்தில் பதிவுசெய்து மோடி தனது துரோகத்தை மறைக்கப் பார்த்தார். ஆனாலும் அவரது இந்துத்துவ-துரோக அரசியல் அப்பட்டமாக கிழிந்து தொங்கியது.
மேற்கிலிருந்து தெற்கு நோக்கி சென்ற மோடி, மீனாட்சியை திருவரங்கத்தில் அரங்கநாத மதுரைக்குச் தரிசித்தார். பக்தனாக காட்சியளித்த மோடி, மதுரையில் மீனாட்சி பக்தனாக ஜொலித்தார்! மேற்கு மாவட்டங்களில் செய்யாத ஒன்றை மதுரையில் செய்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோர், தொழில்வல்லுநர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசியுள்ளார். இந்தத் துறைதான் வளர்ச்சியின் இயந்திரம் என கூறிய மோடி, ஒரு காரில், குறு, சிறு, நடுத்தர ஆலைகளில் உற்பத்தியாகும் பல லட்சம் உதிரி பாகங்கள் இருப்பதை புள்ளிவிவரத்துடன் பேசினார். (முத்ராகடன் திட்டத்தில் 43,730 கோடி தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது). இந்தத் துறை தொழிலாளரையும் தொழில்முனைவோரையும் கசக்கிப்பிழிந்து கார்ப்பரேட் முதலாளித்துவம் வழியாக உலக முதலாளித்துவத்துடன் இணைப்பதை தனது ஆட்சியின் சாதனையாக பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு டிவிஎஸ்(முதலாளி) - இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்ததிலிருந்து இந்த சாதனையைப் புரிந்துகொள்ள முடியும். இது குறு, சிறு, நடுத்தர தொழில்துறைக்கும் தொழிலாளருக்கும் மோடியின் துரோகமாகும். தமிழ், திருக்குறள், பாரதி பற்றி அய்நாசபை வரை பேசிவரும் மோடி, மதுரைக்கு மிக அருகில் இருக்கும் கீழடி பற்றி ஏன் பேசவில்லை என்பதை அண்ணாமலைக் கூட்டம்தான் விளக்க வேண்டும்.
ஓட்டுநர்களுக்காக நாட்டின் ஆயிரம் இடங்களில் தங்குமிடங்கள் கட்டித்தரப்படும் என்று மதுரையில் கூறிவிட்டு, தூத்துக்குடி சென்றார் பிரதமர். மரண விபத்து ஏற்பட்டால் 10 ஆண்டு சிறைத்தண்டனை, 7 லட்சம் அபராதம் என்று மோடி ஆட்சி கொண்டு வந்துள்ள கொடூர கிரிமினல் சட்டத் திருத்தத்தையும் மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெறக்கூறி, கடந்த பிப்ரவரி 12 அன்று தூத்துக்குடி துறைமுக லாரி, ட்ரக் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தியுள்ளனர். மோடியின் மதுரைப் பேச்சுக்கு இதுகூட காரணமாக இருக்கலாம். அங்கு ரூ17,500 கோடிகளுக்கான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்ததாக ஊடகங்கள் சிலிர்த்தன. ஆனால், பழைய திட்டங்களுக்கு மோடி புதுஸ்டிக்கர் ஒட்டியிருப்பதாக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆதாரங்களுடன் தோலுரித்துக் காட்டியிருக்கிறார். மோடியின் நண்பர் வேதாந்தாவின் அனில் அகர்வால் அவரது ஸ்டெர்லைட் ஆலை மூலம், தூத்துக்குடி மக்களைக் கொன்று குவித்ததைப் பற்றி, மோடியின் நண்பர் எடப்பாடி ஆட்சியில் தூத்துக்குடி மக்கள் போராட்டம் மீது ஜாலியன்வாலாபாக் நடத்தப்பட்டது பற்றி மோடி வாய் திறக்கவில்லை. தூத்துக்குடி மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தபோது அங்கு ஏன் வரவில்லை என்பது பற்றியும் வாய் திறக்கவில்லை. தூத்துக்குடி மக்களுக்கும் துரோகம் இழைத்த மோடி, திருநெல்வேலிக்குப் பறந்துவிட்டார்.
பாளையங்கோட்டையில், பேசிய பிரதமர், தனது ஆட்சித்திட்டங்களுக்கு, திமுக அரசு தடைபோடுவதாக வசைபாடினார். அதேசமயம், தமிழ்நாட்டில் 21 லட்சமாக இருந்த குடிநீர் குழாய் இணைப்புகளை ஜல்ஜீவன் திட்டம் மூலம் 1 கோடியாக்கி விட்டதாகவும் கூறிவருகிறார். ஆனால், இந்த திட்டத்துக்கு ஒன்றிய அரசிடமிருந்து வரவேண்டிய பணம் பாக்கி இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார். மோடி ஆட்சியின் திட்டங்களுக்கு திமுக ஆட்சி, தனது ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்வதாக குற்றஞ்சாட்டினார். தேர்தலுக்குப்பிறகு, திமுக இருக்காது என ஹிட்லர் வசனம் பேசினார். நெல்லை சங்கிகள், மோடியை நெல்லையப்பராக போஸ்டர் அடித்து ஒட்டியதை மக்கள் சகித்துக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தபோது, பீகார் இகக (மாலெ) சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஓடோடி வந்து உதவினர். ஆனால், மூன்றாவது முறையும் ஆட்சி அமைக்க ஆதரவு தேடும் மோடி, அவர் கலந்து கொண்ட கூட்டங்களில் மக்களது துயரத்துக்கு சிறு வருத்தத்தைக்கூட ஏன் தெரிவிக்கவில்லை? ஒத்தை ரூபாய் கூட நிவாரணம் தரவில்லை என்று கேட்கிறார்கள். அதனால்தான், இங்குள்ள மக்கள் திருநெல்வேலி அல்வா போல் இளகியவர்கள், இனிமையானவர்கள் என்று பேசியுள்ளார் மோடி. நெல்லை மக்கள் இளகியவர்கள்தான். அவர்கள், கட்டபொம்மன், பாரதி (சர்வாதிகாரி ஜார் மன்னன் வீழ்ந்ததைக் கொண்டாடி கவிதை பாடியவர் பாரதி), வஉசி வழியில் வளர்ந்தவர்கள், சர்வாதிகாரிகளுக்கும் துரோகிகளுக்கும் மனம் இளகாதவர்கள்.
அடுத்து சென்னைக்கு வந்த பிரதமர், சென்னை வெள்ளத்தில் மக்கள் முடங்கிப்போனதாக மூன்று மாதம் கழித்து கண்ணீர் சிந்தினார்.ஆனால், சென்னை ஒய்எம்சிஏ வில் நடந்த ஒருமணி நேர நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்வதற்காக, சென்னை மக்கள் 12மணிநேரம் முடங்கிப்போனார்கள். மோடி எத்தனைமுறை வந்தாலும், என்னதான் அரசியல் சித்துவேலைகளை செய்தாலும் மோடி, துரோகத்துக்கு "உத்திரவாதம்" என்பது தெளிவாகிறது. தமிழ்நாட்டு மக்கள், மோடியின் துரோகங்களின் சுற்றுப்பயணத்துக்கு இந்திய மக்களோடு சேர்ந்து நிரந்தரமாக முடிவுரை எழுதுவார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)