அம்பேத்கர் விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள். எப்படி உணர்கிறீர்கள்?
ஒரு முதலாளித்துவ அரசாங்கம் என்னைப் போன்ற போராளிகளுக்கு விருது வழங்குவது என்பது முற்றிலும் எதிர்பாராதது. ஆதிவாசி மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டது, குறிப்பாக, அரசு அதிகாரிகள் வாச்சாத்தி கிராம பழங்குடி மக்கள் மீது நடத்திய வன்கொடுமை, சூறையாடலை எதிர்த்து நீதிக்காக நடத்திய நீண்ட போராட்டத்தை அங்கீகரித்து அதற்காக இந்த விருது வழங்கப்பட்டது மகிழ்ச்சிக்குரியது. இதன் மூலம், வாச்சாத்தி வழக்கு மீண்டும் மக்கள் மத்தியில் விவாதிக்கப்படுவதாக மாறியது. இந்த விருது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பணியில் மேலும் எனது பொறுப்பை அதிகரித்து ஊக்கமும், உற்சாகமும் கொடுத்துள்ளது. அதிலும் டாக்டர். அம்பேத்கர் விருது என்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. தனது வாழ்நாள் முழுவதையும் பட்டியல் சாதி மக்களின் முன்னேற்றத்திற்கு அர்ப்பணித்த மாபெரும் தலைவர் அம்பேத்கர். அவருடைய தியாகம், சமூகப் பார்வை, நாட்டின் மீதான அக்கறை என்றென்றும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது.
வாச்சாத்தி பழங்குடி மக்கள் மீது, வனத்துறை காவல்துறை இணைந்து தொடுத்த தாக்குதல்களின் வரலாற்று பின்னணி மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் முன்னெடுத்த தொடர் போராட்டங்கள், இயக்கங்கள் பற்றி...
1992 ஜுலை 14ந் தேதி நானும் என் உடன் வந்த தோழர்களும் ''பேச்சில்லா கிராமமாக" வாச்சாத்தியை பார்த்தோம். மனிதர்கள் யாருமே இல்லை. வீடுகள் உடைக்கப்பட்டு, பாத்திரங்கள், உடமைகள், மாணவர்களின் நோட்டு, புத்தகங்கள், ரேசன்கார்டு, பட்டா ஆவணங்கள் கிழிக்கப்பட்டும், மின்இணைப்பு உள்ளிட்ட அனைத்தும் சேதப்படுத்தப்பட்டும் இருந்தன. உணவு தானியங்களை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்ற நோக்கத்தோடு அவற்றில் பாட்டில் துகள்கள், மண்ணெண்ணெய், டீசல் கலக்கப்பட்டு இருந்தன. குடிநீர் கிணற்றில் ஆடு, கோழிகளின் கழிவுகள், ஆயில் ஊற்றப்பட்டு குடிதண்ணீர் கூட கெடுக்கப்பட்டிருந்தது. விளை நிலங்களில் பாசனத்திற்கான கிணறுகள் இடித்துத் தள்ளப்பட்டிருந்தது. கிராம மக்கள் இனிமேல் இங்கு வாழவே கூடாது என்ற வன்மத்துடன் கிராமமே சூறையாடப்பட்டு இருந்தது. மலைகளில், காடுகளில் மறைந்திருந்த மக்களை அழைத்து கேட்ட போது தான் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமை தெரிய வந்தது.
கிராம முன்சிப், தாசில்தார் மற்றும் பெண் காவலர்களும் இருந்துள்ள சூழலில் வனத்துறை, காவல்துறையைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டவர்களால் இக்கொடுமை நடந்தது. உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்கள் இருந்த சேலம் சிறைக்கு சென்று உறுதிப்படுத்திக் கொண்டோம். அன்று முதல் கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக அந்தப் போராட்டம் தொடர்கிறது.
நமது இயக்கம் போராட்ட வடிவம் என்று வரையறுத்திருக்கிற அனைத்து வடிவங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அன்றைய ஆளுங்கட்சி அதிமுக அரசாங்கம் நடந்த குற்றங்கள் அனைத்தையும் மறுத்தது; அதிகாரிகளுக்கு ஆதரவாக குற்றவாளி அரசு நின்றது. எனவே, அதிமுகவை அம்பலப்படுத்தவும், உண்மைகளை மக்களுக்கு சொல்ல வேண்டிய கட்டாயமும் இருந்தது. எனவே, தொடர்ச்சியான, அடுக்கடுக்கான போராட்டங்களை நடத்தவும், நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியமும் ஏற்பட்டது.
சந்தனக் கட்டை திருடர்கள் என்று ஒட்டுமொத்த கிராமமும் முத்திரை குத்தப்பட்டு கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. அரசாங்க அதிகாரிகள் அப்பாவி பழங்குடி மக்கள் மீது சட்டவிரோத தாக்குதல்கள் நடத்தவும், பெண்களிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபடவும் எந்த சட்டங்கள் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது?
சந்தன மரக் கடத்தல் பேர்வழிகளுக்கு இருந்த அரசியல் தொடர்பு என்ன? வன்கொடுமைகள் அரங்கேற்றம் செய்வதிலும், வழக்கில் நீதியை தாமதப்படுத்தியதிலும், அதிமுக அரசின் அணுகுமுறை எப்படி இருந்தது ?
ஆளுங்கட்சி பிரமுகர்கள், வனத்துறை அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்புடன் தமிழ்நாடு முழுவதும் சந்தனமரக் கடத்தல் என்பது பிரபலமாக நடைபெற்று வந்த காலமிது. அதிமுக ஆட்சியில், சந்தனமரக் கடத்தல் தொழில் நடத்தியவர்கள், அரசியல் செல்வாக்குமிக்கவர்கள், வனத்துறையினர் மூவரும் சேர்ந்து மதிப்புமிக்க வனச் செல்வமான சந்தன மரங்களை வேரோடு அழித்தார்கள். அப்பாவி மக்கள் இதில் மலைவாழ் பலிகடாக்கள் ஆக்கப்பட்டனர். திருப்பத்தூரில் வனத்துறை அதிகாரிகளே நேரடியாக கடத்தலில் ஈடுபட்டனர். அங்கு சந்தனமரக்கிடங்கு தீப்பிடித்து எரிந்ததாக சித்தரிக்கப்பட்டு கோடிக்கணக்கில் மதிப்புள்ள சந்தனமரங்கள் கடத்தப்பட்டன.
'வாச்சாத்தியில் இப்படியொரு வன்கொடுமை சம்பவமே நடக்கவில்லை' என்று சட்டமன்றத்திலும், நீதிமன்றத்திலும் அதிமுக அரசு சொன்னது. இந்த நிலையில் பாமதி ஐ.ஏ.எஸ் அவர்களை ஒரு நபர் விசாரணை ஆணையராக சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது. அவருடைய அறிக்கையின் அடிப்படையில் மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து அதிமுக அரசு முழு பெஞ்ச்க்கு மேல் முறையீடு செய்தது; பிறகு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சிபிஐ விசாரிக்க வேண்டாம், நாங்களே விசாரிக்கிறோம் என்றனர். 'இவ்வளவு காலமும் அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த நீங்கள் எப்படி நியாயமாக விசாரிப்பீர்கள்' என்று கூறி சிபிஐ விசாரணையை உறுதிப்படுத்தியது, சென்னை உயர்நீதிமன்றம். வழக்கை தாமதப்படுத்துவதற்காக, விசாரணைக்கு குற்றவாளிகளான சிபிஐ அதிகாரிகள் ஒத்துழைக்க மறுத்தது,, அடையாள அணிவகுப்பை சீர்குலைத்தது, சாட்சிகளை மிரட்டுவது, ஆசைக்காட்டுவது, அச்சுறுத்துவது என பல்வேறு முயற்சிகளை அதிமுக ஆட்சி மேற்கொண்டது. பெண் முதல்வர் ஆட்சியில் பெண்களுக்கு கொடுமைகள் இழைத்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டார், அப்போதைய முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்கள். குற்றவாளிகளான அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுக ஆட்சியையும் எதிர்த்து போராட வேண்டியிருந்தது.
வாச்சாத்தி பழங்குடி பெண்கள் மீதான வன்கொடுமை வழக்கில் கிடைத்த வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பின் முக்கியமான அம்சங்கள் என்னென்ன என விவரிக்க இயலுமா?
வாச்சாத்தி வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை தருமபுரி மாவட்ட அமர்வு நீதிபதி.குமரகுருபரன் அவர்கள் 2011, செப்டம்பர் 29ந்தேதி வழங்கினார். குற்றம் சாட்டப்பட்டிருந்த பேரும் என்றும், 269 குற்றவாளிகள் உயிரோடு இருக்கிற 215 பேருக்கும் ஒரு ஆண்டு முதல் பத்து ஆண்டுகள் வரை தண்டனை மற்றும் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். வழக்கை இந்த திறமையாக புலனாய்வு செய்த சிபிஐ-யை பாராட்டி 1 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டார்.
இறந்து போனவர்களும் குற்றவாளிகள்தான் என்றதும், சீருடைப்பணியாளர்கள் இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் தண்டிக்கப்பட்டதும் இதுதான் முதன் முறை.
இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீட்டு வழக்கில் 2023, செப்டம்பர் 29 அன்று நீதியரசர். பி.வேல்முருகன் அவர்கள் சிறப்புமிக்க தீர்ப்பு அளித்தார்.
தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அப்படியே உறுதி செய்ததுடன் மேலமுறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், "சம்பவம் நடந்த போது மாவட்ட ஆட்சியராக இருந்த தசரதன் ஐ.ஏ.எஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராமானுஜம் ஐ.பி.எஸ் ஆகியோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 18 பெண்களுக்கும் தலா 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அதில் 5 லட்ச ரூபாயை பாலியல் வன்புணர்வு குற்றவாளிகளிடம் இருந்து அரசு வசூலித்து கொள்ளலாம். குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரமான வேலை, ஒட்டுமொத்த கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கிராமத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும் அரசு திட்டம் வகுத்து அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்" என்ற சிறப்பு மிக்க தீர்ப்பினை வழங்கினார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்சநீதிமன்றம், குற்றவாளிகள் சிறைக்கு செல்வதிலிருந்து விலக்களித்துள்ளதே தவிர தீர்ப்புக்கு தடை விதிக்கவில்லை.
உச்சநீதிமன்றத்திலும் மக்கள் தான் வெற்றி பெறுவார்கள். உண்மை ஒரு நாளும் தோற்காது. நிச்சயம் வெல்வோம்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பு தற்கால மக்கள் இயக்கங்களுக்கு எவ்வாறு உதவும்? பயன்படுத்த முடியுமென்று கருதுகிறீர்கள்?
பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 கீழ் நடைபெற்ற மிகப்பெரிய வழக்கு இது. எனவே, நாடு முழுவதும் இப்பிரிவு மக்களுக்கு எதிராக நடத்தப்படும் கொடுமைகளுக்கு எதிரான வழக்குகளில் முன்னுதாரணமாக இந்த தீர்ப்பை பயன்படுத்த முடியும். 'பெரிய அரசு அதிகாரியாக இருந்தாலும், அரசாங்கத்தை எதிர்த்தும் போராடி வெற்றிபெற முடியும்' என்ற தன்னம்பிக்கையை ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களிடம் ஏற்படுத்த இந்த தீர்ப்பு உதவும். வன்கொடுமை தடுப்புச் சட்டவிதிகள் 1995ஐ பயன்படுத்தி, 'சுமார் மூன்று கோடி ரூபாய் இழப்பீடு பெற்றது, சாட்சிகளுக்கு போக்குவரத்து கட்டணம், படி, சிறப்பு வழக்கறிஞர் நியமனம் பெற்றது, சிறப்பு நீதிமன்றம் என பல வழக்குகள் போட்டு உத்தரவுகளை பெற்றுள்ளது' நிச்சயம் மக்கள் இயக்கங்களுக்கு பயன்படும்
இந்தியா கூட்டணியில் இகக(மாலெ)வும் உள்ளது. இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வதில் இடதுசாரி கட்சிகளின் முக்கியத்துவம் குறித்து...
நடைபெற இருக்கக்கூடிய 18 வது நாடாளுமன்ற தேர்தல் மிகவும் சவாலானதும், முக்கியமானதும் ஆகும். தப்பித்தவறி பிஜேபி ஆட்சி அமைந்தால் இந்தியாவில் நடக்கும் கடைசி தேர்தலாகவும் கூட இது இருக்கலாம். எனவே, இந்திய அரசியல் சாசனத்தின் விழுமியங்களை பாதுகாப்பது இந்த தேர்தலின் மிக முக்கிய கடமையாகும்.
இந்தியா அணியை உருவாக்கியதிலும், அதை பாதுகாப்பதிலும் இடதுசாரி கட்சிகளுக்கு முக்கிய பங்குண்டு. இடதுசாரிகள் பெறும் வெற்றி மத்தியில் மாற்று அரசு அமைப்பதில் முக்கிய பங்கு வசிக்கும். கருத்தியல் ரீதியாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார கும்பலை எதிர்த்த பிரச்சாரத்திலும், சமரசமற்று எதிர்த்துப் போராடுவதிலும் இடதுசாரிகள் இந்திய மக்களின் மனங்களிலும், எதிர்க்கட்சியினரிடமும் நன்மதிப்பை பெற்றுள்ளனர். இது தேர்தலில் இந்தியா - அணியின் வெற்றிக்கு பலன் சேர்க்கும்.
அய்க்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் ஓராண்டுக்கு மேலாக நடைபெற்ற விவசாயிகளின் டெல்லி போராட்டத்திலும், அதை நாடுதழுவிய அளவில் நடத்தியதிலும் இடதுசாரி விவசாய அமைப்புகளுக்கு முக்கிய பங்குண்டு. ஒன்றிய பிஜேபி அரசின் மக்கள் விரோத, விவசாயிகள் விரோத, தொழிலாளர் விரோத பொருளாதார கொள்ளைகளுக்கு எதிராகவும், அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராகவும், நாடு தழுவிய அளவில் நடத்திய தொடர் போராட்டத்தில் முன்னணி பாத்திரம் வகித்தது இடதுசாரிகள். எனவே, இடதுசாரிகள் இல்லாமல் இந்தியா - அணி இல்லை. இடதுசாரிகள் இந்தியா அணியின் வெற்றிக்கு தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குவர். குறிப்பாக, கேரளா, பீஹார், தமிழ்நாடு, மே.வங்கம் ஆகிய மாநிலங்களில் இடதுசாரிகள் முக்கியமான பங்கை வகிப்பர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)