இந்தியா கூட்டணியில், பீகார் மாநிலத்தில் அர்ரா, காராக்கட், நலந்தா; ஜார்கண்ட் மாநிலத்தில் கோடர்மா மக்களவைத் தொகுதிகளிலும் பீகார் மாநிலம்

அகியோன் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலிலும் சிபிஐஎம்எல் கட்சி

வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. 

1) காராக்கட் : 

தோழர் ராஜாராம் சிங்

 பீகாரில் உள்ள காராக்கட் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். 80களில் அனைத்து பீகார் மாணவர் சங்கத்தின் தலைவராகவும் 90 களில் துவக்கப்பட்ட புரட்சிகர இளைஞர் சங்கத்தின் (RYA) நிறுவனத் தலைவராகவும் இருந்தார். அவர் 1995 முதல் 2005 வரை ஓப்ரா சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக இருந்தபோது, வளர்ச்சி மாநாடுகளை நடத்தி, பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் தனது வேலை அறிக்கையை அவர் வழங்கினார். ஒரு மக்கள் பிரதிநிதியாக அவருடைய முன்மாதிரியான செயல்பாடு அனைத்து எம்எல்ஏக்கள், எம்பிக்களால் அவசியம் பின்பற்றப்பட வேண்டியதாகும். தற்போது, ​​தோழர் ராஜாராம் சிங் அகில இந்திய கிசான் மகாசபைவின் பொதுச் செயலாளராகவும் சம்யுக்த் கிசான் மோர்ச்சாவின் பணிக்குழு உறுப்பினராகவும் உள்ளார். தற்போது நடைபெற்று வரும் நாடுதழுவிய விவசாயிகள் போராட்டத்தில் முன்னணிப் பங்காற்றிவருகிறார். தொழிலாளர், தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினர், அங்கன்வாடி மற்றும் திட்டப் பணியாளர்களின் போராட்டங்களில் அவர்களோடு உறுதியாக நிற்பவர். 

 2) நலந்தா: 

தற்போது பீகார் பாலிகஞ்ச் தொகுதியில் எம்எல்ஏவாக உள்ள தோழர் சந்தீப் சவுரவ் நலந்தா மக்களவைத் தொகுதியில் சிபிஐ எம்எல் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவர் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க (JNUSU) மேனாள் பொதுச் செயலாளராகவும், அகில இந்திய மாணவர் கழக (AISA) மேனாள் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியவர். மாணவர்கள், இளைஞர்கள், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்கான போராட்டங்களை வழிநடத்திய அனுபவமிக்க அமைப்பாளரும் தலைவருமாவார். ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தின் ஹிந்தித் துறையில் 2007 ஆம் ஆண்டு

முதுகலை மாணவராக சேர்ந்த சந்தீப்,

தனது கல்லூரி நாட்களிலிருந்தே அயராத இடதுசாரி செயற்பாட்டாளராகத் திகழ்ந்தவர். ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில்ஓபிசி - பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சேர்க்கை இடஒதுக்கீட்டைக் குறைப்பதற்கு எதிரானப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தியவர். தனது சொந்த வாழ்க்கையில் கடும் சிரமங்கள் ஏற்பட்ட போதும் கூட, தோழர் சந்தீப் அமைப்புக்கு தலைமை தாங்கி, அகில இந்திய மாணவர் கழகம் - AISA வின் தேசிய பொதுச் செயலாளராக ஆனார். அவருக்கு பீகாரில் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி கிடைத்த போதும் அதை விடுத்து, ஒரு தன்னடக்கமான சிபிஐஎம்எல் செயற்பாட்டாளராக ஏழை, எளிய, விளிம்பு நிலை மக்களுக்காகப் பணியாற்றுவதைத் தேர்ந்தெடுத்தார்.

 3) அர்ரா :-  தற்போது தராரி எம்எல்ஏவாக இருக்கும் தோழர் சுதாமா பிரசாத் அர்ரா மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் போஜ்பூரில் ஏழை, ஒடுக்கப்பட்ட சாதி விவசாயிகளின் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு போராட்டங்களின் முன்னணியில் இருந்தவர். போஜ்பூர் பகுதியின் கட்சி அடையாளமாக இருந்த, தோற்கடிக்கப்படாத எம்.எல்.ஏவுமான மறைந்த தலைவர், தோழர் ராம்நரேஷ் ராமின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை அவர் தொடர்கிறார். இப்பகுதியில் உள்ள சிறு வணிகர்களை, அவர்களின் உரிமைகள், வாழ்வாதாரத்திற்கானப் போராட்டத்தைக் கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். எம்எல்ஏக்கள் தங்களுடைய பொறுப்பேற்பைத் தவிர்த்தபோது, ​​தோழர் சுதாமா தனது எம்எல்ஏ காலத்தில், தான் மக்களுக்குச் செய்தவை பற்றிய விளக்கமான அறிக்கையை வெளியிட்டு ஒரு முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார்: ஒவ்வொரு பைசா செலவுக்கும் எடுக்கப்பட்ட ஒவ்வொரு முடிவுக்கும் கணக்கு தந்துள்ளார். தோழர் சுதாமா பிரசாத், தற்போது அகில இந்திய கிசான் மகாசபைவின் தேசிய துணைத் தலைவராகப் பொறுப்பு வகிக்கிறார்.

4) கொடர்மா:-

 ஜார்க்கண்டின் பகோதர் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவும், சிபிஐஎம்எல் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான தோழர் வினோத் சிங், 

கொடர்மா மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மக்களுக்கான அயராத அர்ப்பணிப்புக்காக நன்கு அறியப்பட்டவர்; கோவிட் முடக்க காலத்தில், பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவித்த ஜார்க்கண்ட் மாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மீட்பதில் முக்கிய பங்கு வகித்தார். சிபிஐஎம்எல் கட்சியின் செங்கொடியையும் தியாகி தோழர் மகேந்திர சிங்கின் புரட்சிகர மரபையும் முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார் தோழர் வினோத்சிங். அவர், ஜார்கண்ட் சட்டமன்றத்திலும் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் பிரச்சனைகள், கோரிக்கைகளுக்காக வீதிகளிலும் போராடி வருகிற சக்திவாய்ந்த குரலாக திகழ்கிறார். 

5) பீகார் அகியோன் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் :-

அரசியல் சதி நோக்கம் கொண்ட வழக்கு ஒன்றில் சிபிஐஎம்எல் எம்எல்ஏ மனோஜ் மன்சில் மற்றும் 22 தோழர்கள் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். எனவே, அகியோன் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் 

அறிவித்தது. தோழர் சிவபிரகாஷ் ரஞ்சன் அகியோன் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். தோழர் சிவபிரகாஷ் ரஞ்சன் புரட்சிகர இளைஞர் கழகத்தின் (RYA) பீகார் மாநிலச் செயலாளராகவும், சிபிஐஎம்எல் பீகார் மாநிலக்குழு உறுப்பினராகவும் உள்ளார். பள்ளிக்கல்வியை மேம்படுத்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ‘வீதிகளில் பள்ளிக்கூடம்’ இயக்கம் உட்பட அகியோனில் நடைபெற்ற பல்வேறு இயக்கங்களில் தோழர் மனோஜுடன் இணைந்து முன்னணியில் நின்று செயல்பட்டு வந்தவர் ஆவார்.