ஸ்டெர்லைட் போராட்டம் பற்றிச் சொல்லுங்கள்
ஸ்டெர்லைட் முதலில் 19965 முன்னர் மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரியில் அமைக்க முயற்சித்தது. அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து தூத்துக்குடிக்குக் கொண்டு வந்தார்கள். தூத்துக்குடி மக்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடினார்கள். தூத்துக்குடி மக்களின் எதிர்ப்பையும் மீறி ஸ்டெர்லைட் ஆலை இங்கு அமைக்கப்பட்டது. பல்வேறு பிரச்சினைகளை தூத்துக்குடி மக்கள் சந்திக்க ஆரம்பித்தார்கள். ஆலைக்குள் வேலை பார்க்கும் பெண்கள் பலர் ஆலைக்குள் மயங்கி விழுந்தார்கள். 2013 ஸ்டெர்லைட்டின் நச்சு காரணமாகத்தான் பல்வேறு பிரச்சினைகள் வருகின்றன என்பதை ஆதாரபூர்வமாக நிருபித்தபின்னர் ஆலை முடப்படுகிறது. ஆனால், தான் சட்ட விதிகளை முறையாகப் பின்பற்றுவேன். என்று சொல்லி, 100 கோடி அபராதம் செலுத்தி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறந்தது. ஆனால், சொன்னபடி எந்த விதிமுறைகளையும் கடைபிடிக்கவில்லை., விதிமுறைகளை மீறி அதிக உற்பத்தியை மேற்கொண்டது. அதன் விளைவாக நிலத்தடி நீர், காற்று கெட்டுப் போனது. கேன்சர் வந்தது. உடம்பில் கட்டிகள் ஏற்பட்டன. அதை ஸ்டெர்லைட் கட்டி என்பார்கள். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள், கர்ப்பப்பை பிரச்சனைகள் ஏற்பட்டன.
சில காலம் பெரிய போராட்டங்கள் நடக்கவில்லை. எப்படி மீண்டும் போராட்டம் துவங்கியது?
வேலைவாய்ப்பு காரணமாக இடைப்பட்ட காலத்தில் போராட்டத்தில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டது. 2018 ஆலையை விரிவாக்கம் செய்யப்போவதாகச் சொன்னார்கள். ஆலை விரிவாக்கம் செய்தால், மக்கள் வாழ்வாதாரம் போய்விடும், என்பதால் வியாபாரிகளும் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தார்கள். 2018 மார்ச் 24ம் தேதி லட்சக்கணக்கான மக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் திரண்டார்கள். சிபிஐஎம்எல் கட்சியின் வழிகாட்டுதலில் பண்டாரம் பட்டியில் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். குமரெட்டியார் புரமும் இறங்கியது. 1000த்தில் இருந்து 3000 பேர் வரை நாள்தோறும் அணி திரண்டார்கள். இதர பகுதிகளும் திரண்டன. கட்சித் தலைவர்களும் வர ஆரம்பித்தார்கள். மே 22ஆம் தேதி கலெக்டரிடம் மனு கொடுப்பது என்று முடிவானது.மே 21ஆம்தேதி அமைதிப் பேச்சுவார்த்தை என்று போட்டார்கள். அதில் நானும் கலந்து கொண்டேன்.கலெக்டர் ஆபீஸிற்கு வர வேண்டாம். பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் மைதானத்தில் கூடுங்கள் என்று சொன்னார். மக்கள் கலெக்டர் ஆபிஸ்போக வேண்டும் என்று அணி திரண்டனர். லட்சக்கணக்கில் அணிதிரண்ட மக்கள் மீது எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், ஈவிரக்கம் இல்லாமல் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். 13 பேர் இறந்தார்கள். மறுநாள் இதர பகுதிகளிலும் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இது மத்திய மோடி அரசு மற்றும் அதிமுக அரசின் ஸ்டெர்லைட் ஆதரவு தாக்குதல் ஆகும்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பின்னர்...
அதன் பின்னர், உயர் நீதிமன்றத்தில் அரசால் அறிக்கை கொடுக்கப்பட்டது. மக்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் இவர்களோடு நானும் இணைந்து செயல்பட்டேன். மே 22 சம்பவத்திற்குப் பின்னர் மக்கள் மீது ஏகப்பட்ட வழக்குகள் போடப்பட்டன. தொடர்ந்து நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் நியமிக்கப்பட்டது. அதில் நானும் சாட்சியம் அளித்தேன். நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், காவல்துறை, வருவாய்துறையில் உள்ள அதிகாரிகள் 18 பேர் குற்றவாளிகள் என்றும் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது. ஆனால், இதுவரை அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சமீபத்தில் திமுக அரசால், நடவடிக்கை எடுக்கவியலாது என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்டாலின் அவர்கள் முதல்வரானால், துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக சொன்னார். மக்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றி?
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது என்று சொல்லியுள்ளது. ஆலை மூடப்பட வேண்டும் என்று சொல்லியுள்ளது. ஆலை மூடப்படுவது மட்டுமின்றி, ஆலை இங்கிருந்து முற்றிலுமாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். ஆலையின் நச்சுக் கழிவுகளை அகற்றுவதும் நிலத்தடி நச்சுகளை அகற்றுவதும் மிகவும் முக்கியம். இதை அரசாங்கம் உடனடியாகச் செய்ய வேண்டும். இதை ஸ்டெர்லைட் ஆலை முதலாளியைக் கொண்டே செய்ய வைக்க வேண்டும். நச்சுகளை அகற்றும் செலவுகளை ஆலை நிர்வாகம்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஸ்டெர்லைட் நச்சால் பாதிக்கக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும். நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தால் குற்றவாளிகள் என்று சொல்லப்பட்ட அதிகாரிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அதோடு ஸ்டெர்லைட் முதலாளிக்கு ஆதரவாகச் செயல்பட்ட பாஜகவும் அதிமுகவும் தண்டிக்கப்பட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)