முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் கிட்டத்தட்ட நூறு சதவீதத்தை நிறைவேற்றி விட்டதாக சொல்லிக் கொண்டிருக்கும்போது, தலைநகர் சென்னை ஆசிரியர்கள், செவிலியர்களின் போராட்டக் களமாகக் காட்சியளிக்கிறது. நவதாரளவாதக் கொள்கைகளை அமல்படுத்தும் எந்த அரசும் தொழிலாளர்கள், ஊழியர்கள், விவசாயிகளின் போராட்டத்தைச் சந்தித்தே ஆக வேண்டும். நன்கு கட்டமைக்கப் பட்டத் தொழிற்சங்கங்களை கொண்டிருக்கிற ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராட்டக் களத்துக்கு மீண்டும் மீண்டும் வருகின்றனர்.
ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆயிரக்கணக்கானோர் பழிவாங்கப்பட்டு, கிட்டத்தட்ட 1.50 லட்சம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அத்தனையும் திரும்பப் பெறப்பட்டது. இப்போது கூட முதலமைச்சர் ஸ்டாலின் இவற்றையெல்லாம் நினைவுபடுத்திப் பேசியிருக்கிறார். தாங்கள் அப்படியெல்லாம் கொடூரமாக நடந்து கொள்ளவில்லை என்றும் சொல்லி இருக்கிறார். கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்பதினாலோ அல்லது கோரிக்கைகள் பற்றி அரசுக்குப் பரிந்துரைக்க கமிட்டி ஏற்படுத்தப்படுவதினாலோ என்ன பயன் என்கிறார்கள் ஆசிரியர்கள். தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று திமுக வாக்குறுதி கொடுத்த காரணத்தால் அவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். இரண்டரை ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் முடிந்து விட்ட நிலையில் வாக்களித்த ஆசிரியர்கள், ஊழியர்களிடம் எதிர்பார்ப்பு இருப்பது நியாயமானது. அரசியல் தளத்தில் பாஜக எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு, மதவாத எதிர்ப்பு என்பது தமிழக மக்களுக்கு உகந்தது தான். ஆனால், பொருளாதாரத் தளத்தில் பாஜக பின்பற்றும் அதே கொள்கைகளை திமுகவும் பின்பற்றும்போது, பாஜக எதிர்ப்பில் திமுகவின் நிலைப்பாட்டை, உறுதிப்பாட்டை கேள்விக்குள்ளாக்கும்.
பல்வேறு வளர்ச்சிக் குறியீடுகளில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்வதற்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், செவிலியர்களின் பங்களிப்பு முக்கியமானது. அவர்கள்தான் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்பவர்கள். அதேபோல் அவர்களால்தான் சமூகத்தில் கருத்துருவாக்கத்தையும் செய்ய முடியும். வலுவான சங்கங்கள் காரணமாக உருவான கூட்டுப் பேர ஆற்றலால் ஊதியக் குழுக்கள் உருவாக்கப்பட்டு ஊதிய உயர்வு பெற்றார்கள். சில துறைகளில் ஊதிய முரண்பாடுகள் இருந்தாலும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் பெற்றனர்.
தற்போதைய ஆசிரியர் போராட்டங்கள்:
ஆசிரியர்கள் மத்தியில் கோரிக்கைகள் நீறு பூத்த நெருப்பாக இருந்து கொண்டிருக்கிறது. ஒரே கல்வித் தகுதியோடு ஒரே வேலை செய்யும் இடைநிலை பணி மூப்பு ஆசிரியர்களுக்கு இடையிலான ஊதிய வித்தியாசம் களையப்பட வேண்டும் எனக் கோரி அவர்கள் சென்னை பள்ளிக் கல்விதுறைத் தலைமையகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜூன் 1, 2009க்கு பின் பணியில் சேர்ந்தவர்கள் மே 31, 2009 வரை பணியில் சேர்ந்தவர்களை விட ரூபாய் 3000க்கும் மேல் குறைவாக ஊதியம் பெற்று வருகிறார்கள். ஒரு நாள் வித்தியாசத்தில் 3000 ரூபாய் வேறுபாடு சரியானது அல்ல என்பதை முதலில் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக மூன்று பேர் கொண்ட கமிட்டி போட்டு பரிசீலனை என்று இழுத்தடிப்பதை ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
2013 ஆம் ஆண்டு டெட்(TET) தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இதுவரை பணிக்கமர்த்தப்படவில்லை. சென்ற எடப்பாடி அரசு அரசாணை 149 மூலம் இன்னொரு போட்டித் தேர்வு எழுத வேண்டும் என்று சொன்னது. அதே வளாகத்தில் அதே காலகட்டத்தில் அவர்களும் இரவு பகலாக போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
அதுபோல் பல்நோக்கு திறன் வளர்ப்பு என்ற பெயரில் 2012 முதல் பகுதி நேர ஆசிரியர்களாக ஓவியம், கணினி, தோட்டக்கலை, தையல், உடற்கல்வி, இசைப் பயிற்சி போன்ற பல பிரிவுகளில் பதிவு நேர ஆசிரியர்களாக 12,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். ரூ.5,000 ஊதியத்தில் பணிக்கமர்த்தப்பட்டவர்கள் இப்போது ரூ.10,000 பெறுகின்றனர். குறைந்தபட்ச ஊதியம் ரூ.25,000 என்பதும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதும் அவர்களது கோரிக்கை. தற்போது போராட்டத்தின் காரணமாக ரூ.2,500 ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அது போதுமானதல்ல என்கிறார்கள். தற்காலிகமாக போராட்டத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர்.
இந்த மூன்று பிரிவு ஆசிரியர்களின் போராட்டமும் தொடர்ந்து வந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் வாக்குறுதி களை, அரசாங்கத்தின் அறிவிப்புகளை ஏற்காத நிலையில் திமுக அரசாங்கம் காவல்துறை கொண்டு பெண், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரையும் அப்புறப்படுத்தியது. அதிகாலை நேரத்தில் குண்டுக் கட்டாகத் தூக்கி, கைது செய்து சமுதாயக்கூடங்களில் அடைத்தது. ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளின் நியாயம் காரணமாகவே அத்தனை இன்னல்களையும் பொறுத்துக் கொண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு பகலாக குழந்தைகளுடன் காத்திருந்தனர். பலர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
கோரிக்கைகளின் நியாயத்தை, போராட் டத்தின் தீவிரத்தை உணர்ந்து செயல்பட்டிருக்க வேண்டிய அரசு, ஜனநாயக விரோதமாக ஒடுக்கு முறையைக் கையாண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. கண்டிக்கத்தக்கது.
ஜெயலலிதா ஆட்சியில் எப்படியெல்லாம் ஒடுக்குமுறை ஏவப்பட்டது என்று அமைச்சர் பெருமக்கள் பேசுவதற்கு பதிலாக ஆசிரியர்களின் நம்பிக்கையை பெறும் நடவடிக்கையில் ஈடுபடுவது அவசியமானது.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்ட அறிவிப்புக்கு பின் சமரசம்
அடுத்ததாக எண்ணும் எழுத்தும் திட்டம், எமிஸ் இணையதள பதிவேற்றம் என்று ஆசிரியர் பணி அல்லாத பல பணிகள் கொடுக்கப்படுவ தால் தங்களால் மாணவர்களுக்கு கல்வியைக் கற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்த முடியவில்லை என்று சொல்லி அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு தொடக்கக் கல்வி சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம். ஆதாரமான தொடக்கக் கல்வியில் ஆசிரியர்களின் கவனம் இருப்பதும் முக்கியம். தமிழகம் கல்வியில் பின்தங்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு திமுக அரசுக்கு இருப்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. கல்வித்துறை அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் 30 கோரிக்கைகளில் எமிஸ் இணையதள பதிவு வேலையில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிப்பது உட்பட 12 கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
மதுரையில் நடைபெற்ற ஆசிரியர்கள் கோரிக்கை மாநாடு
மதுரையில் மக்கள் கல்விக் கூட்டியக்கம் நடத்திய கோரிக்கை மாநாடு சுயநிதிக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை வெளி உலகத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. பல்வேறு ஆசிரியர் பெருமக்களின் கோரிக்கைகளை இணைத்து வெளியீடும் கொண்டு வந்திருக்கிறது. ஆசிரியர், மாணவர், பெற்றோர், கல்வியாளர்கள், தொழிற்சங்க தலைவர்கள் என சகலரையும் இணைக்க முயற்சி எடுத்திருக்கிறது. பகுதி நேர அரசுப் பள்ளி ஆசிரியர் பணி நிரந்தரம், கௌரவ விரிவுரையாளருக்கு யுஜிசி ஊதியம் ஆகியவை முக்கிய கோரிக்கைகள் ஆகும். கோரிக்கைகளை சாத்தியப்படுத்த அடுத்தடுத்த நடவடிக்கைகள் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)