1) நரேந்திர மோடி அரசாங்கம் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து வருகிறது. மோடி அரசாங்கத்தின் முதல் ஆட்சிகாலம், என்னவெல்லாம் வரவிருக்கின்றன என்பது பற்றிய முன்கூட்டிய எச்சரிக்கையாக இருந்தது என்றால், அதன் இரண்டாவது ஆட்சிகாலம், பல முனையிலும் ஒருமுனைப்பட்ட தாக்குதல்கள் அதிவிரைவாக உயர்ந்தெழுகிற காலமாக இருந்து வருகிறது. அமித்ஷா, ஒன்றிய உள்துறை அமைச்சராகவும் அஜித் தோவல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இருக்கிற நிலையில், முன்னெப்பொழுதும் கண்டிராதவாறு, இந்திய அரசு ஒடுக்குமுறை அரசாகவும், பழிவாங்கும் அரசாகவும் மாறியுள்ளது. இந்திய அரசியல் சட்ட ஜனநாயகம் இன்று, மூர்க்கத்தனமான அரசும், ஆளும் அதிகாரத்தில் உள்ளோரது ஆதரவையும் தண்டனை பற்றிய அச்சம் தேவையில்லை என்ற உறுதி மொழியும் வழங்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான தனியார் படைகள், கண்காணிப்புக் குழுக்கள் கொண்ட கூட்டினால் (அரசமைப்புச் சட்டம்) தள்ளாடிக் கொண்டிருக்கிறது. சற்றும் தணியாத அரசு ஒடுக்குமுறை அத்துடன், முத்திரை குத்தப்பட்ட 'உள்நாட்டு எதிரிக'ளைக் குறிவைத்த எங்கும் நிறைந்துள்ள அரசு ஆதரவிலான பயங்கரம், தண்டனை என்ற இந்தச் சேர்க்கை, தேசியம் என்ற பெயரால் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. வரலாற்று ரீதியாக இதுதான் பாசிசத்தின் குணக் குறியாக இருந்து வருகிறது. இந்தியாவில் அரங்கேறும் இவ்வகை பாசிசம், இந்து மேலாண்மை அல்லது இந்துத்துவா என்பதாக தன்னைத்தானே அடையாளப்படுத்திக்கொள்கிறது. 

2) ஆர்எஸ்எஸ், எப்போதுமே கருத்தியல் ரீதியில் பாசிச அமைப்பாகவே இருந்து வருகிறது. பாசிச நிகழ்ச்சிநிரலை செயல்படுத்தும் அதன் திறன், அது பெறும் அரசு அதிகாரம் மற்றும் தெரு அதிகாரத்தை பிரயோகிப்பதை பொறுத்தே இருக்கிறது. ஆர்எஸ்எஸ் இந்த சக்தியை, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் முழுவதும் சற்றும் தளர்ச்சியடையாத வெறுப்பு, பொய், வதந்தி பிரச்சாரத்தைப் பரப்புவதையும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து வகைப்பட்ட நிறுவனங்களுக்குள்ளும் ஊடுருவுவது, தங்கள் நோக்கத்திற்காக சூழ்ச்சிமிக்க வகையில் அவற்றைக் கையாளுவது ஆகியவற்றின் வாயிலாக இந்த சக்தியை அது திரட்டிக் கொண்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின், ராமர் கோவில் பரப்புரை இயக்கம், அதன் எழுச்சியின் மூர்க்கத்தனமான கட்டமாகும்.அதன்மூலம் அது, வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் பல மாநிலங்களில் பிஜேபியை ஆட்சி அதிகாரத்துக்கும் கொண்டு சென்றது. ரத யாத்திரை என்ற வெறித்தனமான அந்த எழுச்சியின் தன்மையை, நாம் மதவாதம், அடிப்படைவாதம் அல்லது மாற்றுக்கருத்துகளை சகித்துக் கொள்ளாமை என்று மட்டும் குறிப்பிடாமல் மதவெறி பாசிசம் என்று மிகச்சரியாகவே குறிப்பிட்டோம். ஏனென்றால், இந்தியாவின் அடையாளத்தையும், அரசியல் சட்ட ஜனநாயகத்தின் அடித்தளத்தையும் மறுவரையறை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியாக அதைப் பார்த்தோம். 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது முதல், 2002ல் கோத்ராவிற்குப் பிந்தைய (முஸ்லீம்) இன அழிப்பின் அரங்கேற்றம் வரை, இந்த மதவெறி பாசிசம் என்ற விஷம் பரவுவதையும் தாக்கத்தை உண்டுபண்ணுவதையும் பார்த்தோம்.

3) இந்த மதவெறி பாசிசம், அவ்வப்போது வெறித்தனத்தைக் கட்டியெழுப்பியது என்றாலும், அதன் உச்சத்தைத் தொட்ட போது அது தனிமைப்பட்டது, பலவீனமடைந்தது, மிகப்பெரிய அளவுக்கு அம்பலமாகிப் போனது. 2002 குஜராத்துக்குப் பிறகு, 2004ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்தியாவை இழந்தது. குஜராத் இனப்படு கொலைகளின் காரணமாக நரேந்திரமோடி, சர்வதேச குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார். அமெரிக்க ஐக்கிய நாடுகளும், அய்ரோப்பாவும் அவருக்கு நாட்டிற்குள் நுழைவதற்கான அனுமதியை மறுத்துவிட்டன. இந்த சமயத்தில்தான், 'துடிப்பு மிக்க குஜராத்' என்ற முழக்கத்துடன் இந்திய முதலாளிகள் நரேந்திர மோடியைச் சுற்றித் திரண்டனர். இந்திய முதலாளிகளின் பற்றுறுதி மிக்க ஆதரவு மாபெரும் சக்தியையும் உந்தாற்றலையும் அளித்து, சங்கப் பரிவாரத்தின் அதிகாரத்துக்கான பரப்புரையை எடுத்துச் சென்று 2014ல் வெற்றிக்கும் இட்டுச் சென்றன. அப்போதிலிருந்து, அம்பானி குழுமத்தாலும், வெகுவேகமாக வளர்ந்து வரும் அதானி குழுமத்தாலும் (இழந்தவற்றை மீட்டெடுத்து வளர்ந்து வந்த டாட்டாக்களாலும்) தலைமை தாங்கப்படும் இந்திய முதலாளிகளுக்கும், சங்கப் பரிவாரத்துக் கும் இடையிலான பாலம் உறுதிப்பட்டு எழுந்து முரட்டுத்தனமான புல்டோசராக வடிவெடுத்தது. பாஜக, ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக, முதலாளிகள் (கார்ப்பரேட் இந்தியா) பணத்தை வாரி இறைத்தனர். அதற்கான நன்றிக் கடனாக பாஜக,வரிசையாக பல்வேறு கொள்கைகளை சட்ட வடிவமாக்கியது. விளைவாக, அரிய மதிப்பு வாய்ந்த இயற்கை வளங்கள், நிதி, பொதுத்துறை உள்கட்டு மானங்கள் போன்ற அனைத்து மூலவளங் களும் ஒரு சில இந்திய முதலாளிகளின் கட்டுப் பாட்டுக்குள் வந்தன. இந்திய முதலாளிகளின் நிறுவ னங்களின் கொள்ளையும், பாசிசத்தின் கொடுந் தாக்கு தலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து, ஒன்றுக்கொன்று வலுவூட்டி வளர்கின்றன என்பது தெளிவாகிறது.

4) இந்திய மதவெறிப் பாசிச எழுச்சியின் அறிகுறிதான் பாபர் மசூதி இடிப்பு என்று மிகச் சரியாகவே கணித்திருந்தோம். வளர்ந்துவரும் அந்த அபாயத்துக்கு எதிராக, தொடர்ச்சியான கருத்தியல் அரசியல் பிரச்சார இயக்கங்களை நடத்தினோம். நரேந்திர மோடியை மய்ய அதிகாரத்திற்கு கொண்டு வரவேண்டுமென்று இந்திய முதலாளிய நிறுவனங்கள் காட்டிய பெருவிருப்பத்தையும், இந்த கார்ப்பரேட் பெரு விருப்பம் எவ்வாறு நரேந்திர மோடியை வளர்ச்சியின் திருஉரு என்றும் ஊழல் பிடித்த, வாரிசு அரசியலுக்கு மிகவும் தேவைப்பட்ட நேர்மையான மாற்று இதுதான் என்றும், காட்டப்பட்ட பாசிசம் சமூக ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் புதிய பரப்புகளுக்குள் தகர்த்து முன்னேறுகிறது என்பது குறித்தும் ராஞ்சியில் நடைபெற்ற காங்கிரசில் உரிய கவனத்தை செலுத்தினோம். 2018 மார்ச்சில், மான்சாவில் பத்தாவது காங்கிரஸ் நடைபெற்றபோது, மோடி அரசு மத்திய ஆட்சியில் இருந்த நான்காண்டு கால அனுபவத்தை நாம் பெற்றிருந்தோம். பாசிசத்தின் வளர்ந்துவரும் அதிகாரம் என்பது அபாயகரமான யதார்த்தம் என்பதையும் அதனை அனைத்து வழிகளிலும் எதிர்த்து நின்றாக வேண்டும் என்பதையும் இகக(மா) வால் தலைமை தாங்கப்படும் இடதுசாரி பிரிவுகள் உள்ளிட்ட இந்திய எதிர்க்கட்சிகள் பலவும் இன்னமும் ஒப்புக்கொள்ளாமலிருக்கின்றன. கட்டற்ற சலுகைசார் முதலாளித்துவம், அதிகரித்துவரும் மதவாத அணிச்சேர்க்கை, அரசமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்படும் வளர்ந்து வரும் தாக்குதல்கள் ஆகியவற்றை தனித்தனியாக ஒப்புக்கொள்கின்றன என்றாலும், இந்தப் போக்குகளும், இயல்புகளும் ஒன்று சேர்ந்து இந்திய வகைப்பட்ட பாசிசமாகிறது என்பதையும், அதன் அதிகரித்து வரும் சக்தியும், தேர்தல் ரீதியான விரிவாக்கமும் இந்தியாவிற்கான முன்னெப்போதுமில்லாத பேரிடர், அழிவு என்பதையும் இது, இந்தியா ஒரு நவீன அரசியல் சட்டக் குடியரசு என்ற கருத்துக்கும் இருப்புக்குமே ஆகப்பெரிய அச்சுறுத்தல் என்பதையும் ஒருபோதும் கண்டு கொள்ளப்படவில்லை. அதன் இருத்தலுக்கான ஆகப்பெரிய அச்சுறுத்தல் என்பதும் ஒருபோதும் அடையாளம் காணப்படவில்லை. இகக(மா), எதேச்சாதிகாரம் என்பதற்கு அப்பால் செல்ல மறுக்கிறது. எதேச்சாதிகாரம் என்று குறிப்பிடுவதன் மூலம், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வெளிப்படுத்தும் அபாயத்தின் உண்மையான அளவையும், இயல்பையும் பிரதிபலிக்கத் தவறிவிட்டது என்பதே.

5) வடகிழக்கின் அசாம், திரிபுரா, வடக்கில் உத்தரப்பிரதேசம், தெற்கில் கர்நாடகா என்று தனது சுருக்குப் பைக்குள் சேர்த்துக் கொண்டும் 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது மேற்கு வங்கத்தின் முதன்மையான எதிர்க்கட்சியாகவும், 2021 சட்டமன்றத் தேர்தலின்போது மேற்கு வங்க அதிகாரத்தைக் கைப்பற்றிவிடும் அபாயம் நிலவியபோதும்கூட கருத்தியல் தெளிவின்மை தொடர்கிறது. வர்க்கங்களின் மற்றுமொரு கட்சிதான் பாஜக, ஆளும் "எல்லாம் வழக்கமான ஒன்றுதான்" என்ற அணுகுமுறைக்கு வெகு கூர்மையான வேறுபாடாக நாம், மத்தியிலும் பல மாநிலங்களில் ஆளும் கட்சியாகவும் வேறு சில மாநிலங்களில் எதிர்க்கட்சியாகவும் இருக்கும் மோடி ஆட்சியை பாசிச ஆட்சியென்றும் வளர்ந்துவரும் உறுதிப்பட்டுவரும் பாசிச ஆட்சிக்கு எதிராக அனைத்தும் தழுவிய எதிர்ப்பைக் கட்டமைக்க வேண்டுமென்றும் கட்சியின் மான்சா காங்கிரஸ் அடையாளம் கண்டது. தீர்மானகரமான வெகுமக்கள் போராட்டங்கள் மூலம் பாசிச ஆட்சியின் தாக்குதலுக்கு எதிரான எதிர்ப்பை அதிகப்படுத்துவதற்கு முக்கியத் துவம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அதேசமயம், பாஜகவுக்கு எதிரான வாக்குகள் பிளவுபடாதிருப்பதற்காக எதிர்க்கட்சிகளுடன் பரந்துபட்ட தேர்தல் உடன்பாடுகளை மேற்கொள்வ தற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிவதற்கும் முக்கியத்தும் கொடுப்பதென்று தீர்மானித்தோம். அறிவிக்கப்படாத ஆனால், எங்கும் நிறைந்திருக்கின்ற, நிரந்தரமான அவசரநிலை என்று தற்போது பரவலாக உணரப்படும் மோடி ஆட்சியின் தாக்குதலுக்கு எதிரான வெகுமக்கள் போராட்டங்களுக்கான உள்ளாற்றலும் வளர்ந்துகொண்டுள்ளது. நாம் இந்த உள்ளாற்றலை, பாசிச எதிர்ப்பிற்கான ஆற்றல்மிகு விசையாக வளர்த்திட வேண்டும்.

6) வெறிகொண்ட பிற்போக்கு கருத்தியல் அரசியல் போக்காகவும் அதி தீவிர தேசியவாத இயக்கமாகவும் 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பாசிசம் வேரூன்றி வளர ஆரம்பித்தது. முதல் உலக யுத்தத்தின் பின்னணியில், முதல் சோசலிசப் புரட்சியையும், அய்க்கிய சோசலிச சோவியத் குடியரசுகள் என்ற வடிவத்தில் நவம்பர் 1917ல் முதல் சோசலிச அரசையும் உலகம் கண்டது; அய்ந்து ஆண்டுகள் கழிந்த பின்னர் இத்தாலியில் முதல் பாசிச அரசையும் உலகம் காண நேர்ந்தது. இத்தாலிக்குப் பின்னர், ஸ்பெயினிலும், ஜெர்மனியிலும் ஆட்சியைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல் அய்ரோப்பாவின் நெடுகிலும் சோசலிசத்தின் மீது அதிகரித்துவரும் ஈர்ப்புக்கும் செல்வாக்குக்கும் எதிரான ஆற்றல் மிகு போக்காக வளர்வதில் பாசிசம் வெற்றிகண்டது. இப்போக்கு வடக்கு, தெற்கு அமெரிக்காவிலும் கூட வளர்ச்சி கண்டது. (இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றுபட்டு போராடிய 1857இந்தியாவின் முதல் சுதந்திரப் போருக்குப்பின்பு ) இந்துக்களுக்கும் முஸ்லீம் 'ஆக்கிரமிப்பாளர்' களுக்கும் இடையில் நிகழும் முடிவில்லா போராட்டத்தில் வேர்கொண்டதே இந்திய வரலாறு என்று சொன்ன இந்துத்துவ கருத்தியலால், ஆசியாவின் இந்தியாவிலும் பாசிசம் வேர்கொண்டது. பாசிச கருத்தியல் அமைப்பாக ஆர்எஸ்எஸ்ம் எழுந்து வந்தது.

7) இரண்டாம் உலகப்போர் இறுதியாக, பாசிசத்துக்கு எதிரான உலகளாவிய ராணுவ மோதலாக மாறியது. இது, இத்தாலியிலும், ஜெர்மனியிலும் இருந்த பாசிச ஆட்சிகள் சரிந்து வீழ்வதற்கும், சர்வதேச அளவிலான பெருத்த தோல்விக்கும், பாசிச கருத்தியலும் இயக்கமும் மதிப்பிழந்து போவதற்கும் தகுதி இழந்து போவதற்கும் வழிவகுத்தது. குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தின் உற்பத்திப் பொருளாக, உலகப் போர்களின் போக்கில் விளைந்த ஒன்றாக பாசிசத்தின் இராணுவத் தோல்வி நிகழ்ந்தது. இன்றைய இந்தியப் பாசிசத்தை நாம் எதிர்கொள்ளும் சமயத்தில், படித்தறிவதற்கு பொருத்தப்பாடுடைய ஒன்றாக பாசிசத்தைப் புரிந்துகொள்வது, எதிர்த்து நிற்பது என்பதில், சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் அனுபவங்கள் இருக்கின்றன.

8) 1920களின் துவக்க காலகட்டத்திலிருந்தே, சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் பாசிசம் பற்றிய விவாதம் நடத்துவதற்கான அவசரத்தேவை அதிகரித்துக்கொண்டே வந்தது. ஆனால், பாசிசம் கொண்டுவரும் அபாயத்தின் பெருங் கொடுமை யின் அளவைப் புரிந்துகொள்வதற்கு சிறிது காலம் எடுத்தது. 1920ல் சர்வதேச கம்யூனிச இயக்கத்திற்கு ஆண்டோனியோ கிராம்ஸ்கி எழுதிய கடிதத்தில் பாசிச அபாயத்தின் அதிபயங்கர வேகமெடுக்கும் காலம் வருவதைக் குறிப்பிட்டபோது பாசிசம் குறித்த விவாதம் அதிகரித்த அளவில் அவசரமானது என்ற கட்டத்திற்கு வந்து சேர்ந்தது. அதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் முசோலினி ஆட்சியைக் கைப்பற்றிய யதார்த்தம் அரங்கேறியது. அது ஒரு குறுகிய காலகட்ட ஆட்சியாக இருக்கும் என்று கிராம்ஸ்கி கருதவில்லை. விவசாய முதலாளிகள் முன்னிலைக்கு வந்ததாலேயே இத்தாலியில் பாசிசம் எழுந்தது என்று கிராம்ஸ்கி கருதினாரே தவிர தொழில்துறை முதலாளிகளும் கூட கைகோர்த்துக் கொள்வார்கள், முசோலினியோடு அணி திரள்வார்கள் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. கம்யூனிச அகில நிர்வாகக் குழுவின் மூன்றாவது விரிந்த அமர்வு ஜூன் 1923ல் நடைபெற்றபோது க்ளாரா ஜெட்கின் முன்வைத்த பாசிசம் குறித்த அறிக்கையில், வெகுமக்கள் மீது பாசிசம் கொண்டுள்ள செல்வாக்கு மீது கவனத்தை ஈர்த்த க்ளாரா, "ராணுவ நடவடிக்கை களின் மூலம் மட்டுமே பாசிசம் மறைந்துவிடாது,... அதனை நாம் அரசியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் வீழ்த்தப் போராட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். ஒவ்வொரு நாட்டின் குறிப்பான சூழலுக்கு ஏற்ப பாசிசம் வெவ்வேறு குணாம்சங்களைக் காட்டுகிறது என்பது ஒப்புக்கொள்ளத் தக்க கருத்து என்ற அவர், பாசிசத்தின் பின்வரும் அத்தியாவசியமான அம்சங்களை குறிப்பிட்டார்: "மக்கள் திரளின் மனப்பாங்கு, நலன், கோரிக்கைகளை, மிகவும் புத்திசாலித்தனமான வகையில் மோசடியான புரட்சிகரத் திட்டத்துடன் இணைப்பது; மிருகத் தனமான, வன்முறை பயங்கரவாதத்தைப் பயன் படுத்துவது."

9) கம்யூனிஸ்ட் அகிலத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஏழாவது காங்கிரசிலும், கடைசியாக நடைபெற்ற காங்கிரசிலும் ஒருங்கிணைந்த ஆய்வும் கருத்தாழ முடைய அணுகுமுறையும் உருவாகின. ஜெர்மனியின் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்ததாக சாட்டப்பட்ட பொய் குற்றச்சாட்டிலிருந்து லீஜிக் Leipzig) விசாரணையின்போது தன்னை தற்காத்துக் கொண்டு விடுதலை பெற்றதால் புகழ்பெற்ற, பெல்ஜியத்தின் கம்யூனிஸ்ட் தலைவரான ஜார்ஜ் டிமிட்ரோவ், 'மிகவும் ஏகாதிபத்திய தன்மைகொண்ட, மிகவும் பிற்போக்கான, நிதி மூலதனத்தின் அதி தீவிர தேசியவாத பிரிவின் வெளிப்படையான பயங்கரவாத அரசு' என்று கம்யூனிஸ்ட் அகிலத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பாசிசத்தை வரையறை செய்தார். பாசிச சக்திகள் ஆட்சிக் கட்டிலில் அமர் வதை, ஒரு முதலாளிய அரசாங்கத்தின் இடத்திற்கு மற்றொரு முதலாளிய அரசாங்கம் வருவது என்பதாக கம்யூனிஸ்ட் இயக்கம் தவறாக கருதிவிடக் கூடாது என்றும், முதலாளிய ஜனநாயகத்தில் பாசிச கருத்தியலும், சக்திகளும் எழுந்து வருவதைக் கண்டு கொள்ளாமல் இருந்து விடக் கூடாது என்றும் அந்த அறிக்கை கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு எச்சரிக்கை செய்கிறது. இருந்தபோதும், பாசிச சர்வாதிகாரத்தின் கரங்களில் அதிகாரம் குவிக்கப்படும் துவக்க காலகட்டம் பற்றி மட்டுமே டிமிட்ரோவ் அறிக்கை பேசியதுடன் அவ்வகை அரசின் தன்மை குறித்தும், பாசிசத்தின் கீழ் ஆளுகை எப்படியிருக்கும் என்பதைப் பற்றியும் ஆழமான கவனம் குவித்தது. நாஜி திட்டத்தின் மையமான அம்சமாக நச்சுத்தன்மை வாய்ந்த, யூத வெறுப்பின் (antisemitism) கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரம் அல்லது அரசு அதிகாரத்திற்கு முந்தைய கட்டம் பற்றியும் தாக்குதல் தன்மைகொண்ட வகையில் வெகுமக்களை அணி திரட்டுவது இயக்கம் நடத்துவது பற்றியும் அவ்வறிக்கை போதுமான கவனம் செலுத்தவில்லை.


10. 1945இல் ஹிட்லர் தோற்கடிக்கப்பட்ட பின்னர்தான், ஆறு மில்லியன்களுக்கும் (அறுபது லட்சத்துக்கும்) அதிகமான யூதர்கள் கொல்லப் பட்ட ‘பெருநாசம்' (Holocaust) என்று சொல்லப் படும் நிகழ்வின் அதிர்ச்சி தரும் அளவையும் கொடூரத்தையும் உலகம் தெரிந்து கொண்டது. ஜனநாயகம் முற்றிலுமாக நசுக்கப்படுவதும், நாஜி எதிர்ப்பாளர்களை மவுனமாக்குவதும் 'உள்நாட்டு எதிரிகள்' என்று இலக்காக்கப்பட்டவர்களை (யூதர்கள், நாடோடி இனமக்கள், கம்யூனிஸ்டுகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் ஆகியோர் நாஜி ஜெர்மனியின் முக்கிய எதிரிகளில் அடங்குவர்) கொடூரமாக ஒழித்துக் கட்டும் திட்டத்தை நிறைவேற்ற வசதிசெய்து தந்தன. நாஜி ஜெர்மனியின் அனுபவம் பாசிசத்தின் கொடூரத்தைப் பற்றிய உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது; உலகிலிருந்த பாசிச சக்திகள் தோற்கடிக்கப்பட்டு, இழிவுக்குள்ளாக்கப்பட்டு பின்னணிக்குத் தள்ளப்பட்டன. இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபை போன்ற அமைப்புகள் சுதந்திரப் போராட்டத்தின்போது விளிம்பு நிலையில் இருந்தன. சுதந்திரத்திற்குப் பிந்திய உடனடியான பின் விளைவாக, நாட்டுப் பிரிவினையால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்ட காலத்திலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் செல்வாக்கு எதனையும் பெற முடியவில்லை. ஏனெனில், இந்தியா புதிதாக உருவாக்கப்பட்ட தனது சொந்த நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற அரசமைப்புச் சட்டக் கட்டமைப்புக்குள் இயங்கி வந்து கொண்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ். இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் தேசியக் கொடியையும் எதிர்த்து வந்ததும், தவழும் பருவத்திலிருந்த குடியரசை சீர்குலைப்பதற்கான தெளிவான முயற்சியாக காந்தி கொலை செய்யப்பட்டதும், அந்த அமைப்பைத் தனிமைப் படுத்தி, அமைப்பு ரீதியாவும் கருத்தியல் ரீதியாகவும் இழிவுக்குள்ளாக்கின. இன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் மோடி அரசாங்கமும் விரக்தியோடு தன்வயமாக்க முயன்று கொண்டி ருக்கிற இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார்வல்லபாய் பட்டேல்தான், தேசத்திற்கு ஊறு விளைவிக்கும் "வெறுப்புச் சக்திகள், தீயசக்திகள் ஆகியவற்றை வேரோடு பிடுங்கி எறிவதற்காக " 1948 பிப்ரவரி முதல் 1949 ஜூலை வரை ஆர்.எஸ்.எஸ்.ஐத் தடை செய்தி ருந்தார். ஆனால் பின்னோக்கிப் பார்க்கையில், சுதந்திரத்திற்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனிமைப்படுத்தப்பட்ட அந்த முக்கிய நிகழ்வுக்குப் பிறகு, அரசும் ஆளும் காங்கிரஸ் கட்சியும் மட்டுமல்லாது, காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளும்கூட ஆர்.எஸ்.எஸ்., அதன் அரசியல் இணைப்புகளான பாரதிய ஜன்சங், அதை அடுத்து வந்த பாரதிய ஜனதாக்கட்சி ஆகியவற்றின்மீது எச்சரிக்கையுடன் கூடிய மென்மையான அணுகுமுறையை மேற்கொண்டு வந்த பலசந்திப்பு முனைகளைக் காண்கிறோம். அந்த அணுகுமுறை இந்த அமைப்புகள் தொடர்ந்து அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை நெறிகளை மீறிக்கொண்டே இருந்தபோதிலும், அவற்றுக்கு நியாயம் கற்பித்துவந்து, வலுப் பெறச் செய்து, குறிப்பாக அயோத்தியாக் கிளர்ச்சி முதல் பாபர் மசூதி இடிப்பு வரையிலான நாட்களில் வியப்புதரும் வகையில் அவை மீண்டும் குதித்தெழுந்து வருவதைச் சாத்திய மாக்கியது.

11.1920களுக்கும் 1940களுக்கும் இடைப் பட்ட காலத்தில் இருந்தது போலவே இன்று பாசிசம் மீண்டும் ஒரு சர்வதேசப் போக்காக வளர்ந்து வருகிறது. சென்ற நூற்றாண்டின் முதல் பாதியில் பாசிசம், உலகப் போரின் பின் விளைவாகத் தோன்றியது. அதன் பிறகு பொருளாதாரப் பெருமந்தம் ஏற்பட்டபின் ஆக்கிரமிப்புத் தன்மை வாய்ந்த தேசப்பற்று, தேசியவெறி, கடுமையான பொருளாதார நெருக்கடி, விரக்தி ஆகியவை நிலவிய சூழல் ஏற்பட்டது. அய்ரோப்பா முழுவதிலும் சோசலிசம் பரவக்கூடும் என்ற 'அச்சுறுத்தல்', பல நாடுகளைச் சேர்ந்த முதலாளிய வர்க்கங்களை பாசிசத்தை நோக்கிச் செல்லுமாறு தூண்டியது. இன்றும் உலக முதலாளியம் மீண்டுமொருமுறை ஆழமான நெருக்கடியிலும் நிச்சயமற்ற நிலை யிலும் உள்ளது. போர், பாசிசத்தை வலுப்படுத்துதல், முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு குழி பறித்தல் ஆகியவற்றின் மூலம் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வ ஆட்சி செயல்படுவதற்கும் இடையே இருக்கும் ஒன்றுக் கொன்று இணையான அம்சங்கள் கடந்த இருபதாண்டுகளாக பரிணமித்து வந்துள்ளன: முதலாவதாக, இனக்கொலை, திட்டமிட்ட முறையிலும் விரிவான அளவிலும் சட்டத்திற்குப் புறம்பான பயங்கரவாதச் செயல்களைப் பிரயோகித்தல் ஆகியவற்றின் மூலம் குஜராத்தில் பாசிசம் தன்னை வலுப்படுத்திக் கொண்டு, பின்னர் 2014ம் ஆண்டு முதல் அனைத்திந்திய அளவில் இந்த குஜராத் முன்மாதிரியைப் பிரதி செய்கிறது என்பது வெள்ளிடைமலை. இதைப் பார்க்காமல் இருப்பது எவருக்கும் சாத்திய மில்லை. இந்த இரண்டு பாசிசங்களுக்குள்ள ஒத்த தன்மைகள் ஹிட்லர், மோடி வழிபாடுகளின் பாணிகளிலும் அம்சங்களிலுமோ அல்லது இரண்டு ஆட்சிகளுக்தற்கான ஒருவழியைத் தேடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இருபதாம் நூற்றாண்டு பாசிசக் கட்டத்தைப் போலவே, இன்றைய கட்டத்திலும் பல்வேறு நாடுகளிலுள்ள பாசிசங்கள் அதனதன் குறிப்பிட்ட தேசியத் தன்மைகளை வெளிப்படுத்தியாக வேண்டும். இந்திய பாசிசம் மிகவும் அலாதியானது. அதற்குக் காரணம் இந்த பாசிச செயல்திட்டத்தை நூறாண்டுக் காலமாக வளர்த்து வந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். இதில் மையப்பாத்திரம் வகிப்பது தான். இந்தியாவில் பாசிசத்தின் வளர்ச்சிக்கு உந்துவிசையாக இருப்பது முதன்மையாக இந்தியாவிற்குள்ளேயே ஏற்பட்ட வளர்ச்சிகள், மாற்றங்கள் ஆகியவைதான் என்றாலும், தற்போதுள்ள சர்வதேசச் சூழ்நிலைமை இந்திய பாசிசம் தனது இலக்குகளை அடைவதற்காக, அதற்கு கணிசமான நீண்டகால (தொழில், வணிக வகைப்பட்டத் திட்டங்களுக்கான) ஆதரவையும் அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளது.

12. நாஜி ஜெர்மனிக்கும் மோடி ஆட்சி செயல்படுவதற்கும் இடையே இருக்கும் ஒன்றுக் கொன்று இணையான அம்சங்கள் கடந்த இருபதாண்டுகளாக பரிணமித்து வந்துள்ளன: முதலாவதாக, இனக்கொலை, திட்டமிட்ட முறையிலும் விரிவான அளவிலும் சட்டத்திற்குப் புறம்பான பயங்கரவாதச் செயல்களைப் பிரயோகித்தல் ஆகியவற்றின் மூலம் குஜராத்தில் பாசிசம் தன்னை வலுப்படுத்திக் கொண்டு, பின்னர் 2014ம் ஆண்டு முதல் அனைத்திந்திய அளவில் இந்த குஜராத் முன்மாதிரியைப் பிரதி செய்கிறது என்பது வெள்ளிடைமலை. இதைப் பார்க்காமல் இருப்பது எவருக்கும் சாத்திய மில்லை. இந்த இரண்டு பாசிசங்களுக்குள்ள ஒத்த தன்மைகள் ஹிட்லர், மோடி வழிபாடுகளின் பாணிகளிலும் அம்சங்களிலுமோ அல்லது இரண்டு ஆட்சிகளுக்குமான அதிகார முத்திரை யாக இருப்பதும் பொய்களால் இயக்கப்படுவதும் எதிரிகள் என்று கருதப்படுபவர்கள் மீது துரிதமாக நடத்தப்படுவதுமான பரப்புரை இயக்கங்க ளிலுமோ மட்டுமல்ல; ஆனால் அதைவிட முக்கியமானது கருத்தியல், அரசியல், சட்டம், சட்டமியற்றுதல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இரண்டு ஆட்சிகளின் நிர்வாகக் கட்டுக் கோப்பு இயங்குவதிலும் ஒத்த தன்மைகள் உள்ளன. 'பெருநாசம்' என்ற கொடூரத்துக்கும் ஏறத்தாழ ஆறு மில்லியன் (அறுபது லட்சம்) யூதர்கள் ஒழித்துக் கட்டப்பட்டதற்கு வழிவகுத்த யூத விரோத இயக்கத்திற்கு உந்துசக்தியாக இருந்தவை வெறுப்புப்பிரசாரமும் ஜெர்மன் யூதர்களின் உரிமைகளில் பெரும்பாலா னவற்றைப் பறித்து, அவர்களை சட்டரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் பலவீனமானவர்களாக ஆக்கி அவர்களை ஜெர்மன் அரசாலும் நாஜி கண்காணிப்புக் குழுக்களாலும் மேற்கொள்ளப் பட்ட மிருகத்தனமான தாக்குதல்களுக்கும் இனக்கொலைக்கும் உட்படுத்தச் செய்யும் வகையில் அவர்களைக் குறியிலக்காகக் கொண்டு இயற்றப்பட்ட, கேடுகெட்ட நியூரம் பர்க் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களும்தான். அதேபோன்ற அப்பட்டமான, திட்டமிட்ட பாசிசம் கட்டமைக்கப்படுவதை இங்கும் பார்க்கிறோம். இஸ்லாமிய சமுதா யத்தைக் குறியிலக்காகக் கொண்டு பல்வேறு மாநில அரசாங்கங்களாலும் ஒன்றிய அரசாங்கத்தாலும் பல்வேறு விஷயங்கள் குறித்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் நிர்வாக நடவடிக் கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை அச்சமுதாயத்தின் வாழ்வாதாரங்கள் தொடங்கி (கால்நடைவர்த்தகம், இறைச்சிக் கடைகள் ஆகியவற்றைத் தடைசெய்தல்), மதச்சுதந்திரம் (மதமாற்றம், மசூதிகளை இடித்தல், இரு சமயங்களைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதைக் குற்றத்தன்மையாக்குதல், பொது சிவில் சட்டத்தொகுப்பு, ஹிஜாப் அணிவதற்குத் தடை, பொது இடங்களில் தொழுகை நடத்து வதற்கான தடை), குடியுரிமை (குடியுரிமைத் திருத்தச்சட்டம் [CAA] வெளிப்படையாக முஸ்லிம்கள் மீது பாரபட்சம் காட்டுகிறது), வாழ்க்கையை நடத்துவதற்கான அடிப்படைப் பாதுகாப்பு வரை (இஸ்லாமியர்களின் வீடுகளை புல்டோசர்கள் கொண்டு இடித்தல், இஸ்லாமி யர்கள் மீது நடத்தப்படும் கும்பல் வன்முறை, இஸ்லாமியர்களை இனக்கொலை செய்யுமாறு விடுக்கப்படும் பகிரங்க அறைகூவல் வட்டார அளவிலான வன்முறை நிகழ்வுகள் அதிகரித்து வருதல்) தொடர்கின்றன.

13. ஜெர்மன் பாசிசம், இந்திய பாசிசம் ஆகியவற்றுக்குச் சில ஒத்ததன்மைகள் இருந்த போதிலும், முன்னாள் காலனி நாடான இந்தியா வில் இன்னும் ஏகாதிபத்தியக் கொள்ளை தொடர்வதால் இந்திய பாசிசத்திற்கு ஏகாதிபத்திய நாடுகளின் பாசிசத்திற்கு மாறுபட்ட பண்புகள் இருப்பது தவிர்க்க முடியாததாகும். குறிப்பாக, இந்திய மக்கள் உலக மூலதனம், உள்நாட்டிலேயே வளர்ந்த, ஆனால் ஏகாதிபத்தியத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பில்லியனர் முதலாளிகள் (கோடீசுவரர்கள்) ஆகிய இரு சாரராலும் கொள்ளையடிக்கப் படுகின்றனர். எனவே, அய்ரோப்பாவில் இருந்த பாசிசத்தின் அனுபவங்களுக்கு மாறாக, பெரும் பான்மைச் சமுதாயமும் இந்திய தேசமும் ஒன்றே என்று அடையாளப் படுத்தப்படுபவர்களுக்கு பொருளாதார வெகுமதிகள் கிடைப்பதென்பது சுத்தமாக இல்லை. அதற்குப்பதிலாக, தேசத்தின் 'உள்நாட்டு எதிரிகள்' என்று அடையாளப் படுத்தப்படுவர்களுக்கெதிராக அதிகரித்துவரும் வன்முறை என்ற அன்றாடக் காட்சியை அவர்களுக்கு ஊட்ட வேண்டியதாகிறது. மேலும், பாசிசத்தின் இன்றைய கட்டம், உலக நவதாராள வாதப் பின்னணியில் தோன்றியதாகும். இங்கு மூலதனம் தாக்குதலில் இறங்கியுள்ளது; திரும்பத் திரும்ப வரும் பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக, தொழிலாளர் இயக்கங்கள் பெற்றிருந்த ஆதாயங்கள் அனைத்தையும் அது திரும்பவும் பறித்துக் கொள்கிறது; தனியார்மய மாக்கல், நிலஅபகரிப்பு, சுற்றுச்சூழலை நாசமாக்குதல் ஆகிய தொடர்பான மிகப்பெரும் திட்டங்களின் மூலம் பொதுவெளியில் இன்னும் என்னென்ன மூலவளங்கள் எஞ்சியிருந்தனவோ, அவற்றை அபகரித்துக்கொள்கிறது. இது மோடி ஆட்சி போன்ற பாசிச ஆட்சிகளுக்கான வளமான நிலமாக அமைகின்றது. அவை மேற்சொன்ன நிகழ்முறைகள் நடைபெறுவதை மேலும் எளிதாக்குகின்றன. எனவே, சர்வதேச அளவில், அரசுகள் மோடிக்கு எதிர்ப்புக் காட்டுவதற்கான வாய்ப்பே இல்லை. 2002 குஜராத் இனக் கொலைக்குப் பிறகு அந்த மாநிலத்தின் முதலமைச்சர் என்ற முறையில் மோடி எதிர் கொண்ட வரம்புக்குட்பட்ட கண்டனம், தற்போது சர்வதேச முதலாளிய அமைப்பிலிருந்து வரும் ஒத்துழைப்பு, சட்டரீதியான அங்கீகாரம் ஆகியவற்றுக்கு வழிவிட்டுவிட்டது.

14. பாசிசம், 'உள்நாட்டு எதிரிகள்' என்று அதனால் சொல்லப்படுபவர்கள் மீது வெகு மக்களின் வெறித்தனத்தைத் தூண்டிவிடுகிறது. உள்நாட்டு எதிரிகள் என்று சொல்லப்படுபவர்கள் அரசு, தேசம், நாகரிகம், பண்பாடு ஆகியவற்றுக் கான, பொது ஒழுங்கு, பொது சுகாதாரம் என்ற கருத்துகளுக்கும் கூட ஓர் அச்சுறுத்தல் என்று காட்டப்படுகிறார்கள். இதைச் செய்யும் பொருட்டு, பெரும் பான்மைச் சமுதாயத்தினர் இந்த உள்நாட்டு எதிரிகளுக்குப் பலியானவர்கள், ஊறுவிளைவிக்கப்பட்டவர்கள் என்ற உணர்ச்சி களையும் அதேவேளை அவர்களது பெருமை, மேன்மை பற்றிய உணர்ச்சிகளையும் ஒரே சமயத்தில் தீவிரமாகத் தூண்டிவிடுகிறது. இந்தியாவில் பொற்காலம் இருந்தது என்ற கட்டுக்கதையையும் மகத்தான எதிர்காலம் உருவாகப்போகிறது என்ற கனவையும் இடை விடாது உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இது இந்தியாவில் இன்று மிகவும் திட்டமிட்ட முறையில் நிகழ்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கி றோம். வேத காலம்தான் அறிவின் உச்சநிலை என்று காட்டுவதற்காக சங் பரிவாரம் இடை விடாமல் போலி 'வரலாற்றை' ஊக்குவிக்கிறது; இந்தியா தனித்துவம் மிக்க ஒரு நாகரிகமேயன்றி அரசமைப்புச் சட்டரீதியான குடியரசு அல்ல என்று முன்னிறுத்தி, இந்தியாவை 'அகண்ட பாரதமாக' அது இன்றைய இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகியவற்றை மட்டுமின்றி, மேற்கிலுள்ள ஆஃப்கானிஸ்தான், தெற்கிலுள்ள சிறீலங்கா, வடக்கிலுள்ள திபெத், நேபாளம், பூடான், கிழக்கிலுள்ள மியான்மார் ஆகியவற்றையும் உள்ளடக்கியதுமாக்கி அதற்கு வல்லரசு அந்தஸ்தை மோடியின் சொற்களில் 'விஸ்வகுரு' ஏற்படுத்தப் போவதாக வாக்குறுதி தருகிறது. மக்களிடையே, சோசலிசத்திற்கு இருந்த கவர்ச்சியைப் பயன்படுத்திக்கொண்டு பாசிசத்தை 'தேசிய சோசலிசம்' என்பதற்கான முன்மாதிரி என்று நாஜிகள் சித்திரித்தது போல, ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பாஜகவும் பாசிசத்தை, புதிய மட்டத்திலுள்ள சுதந்திரமும் சுயசார்புமே என்று சித்தரிக்கின்றன. 'அத்மானிபார் பாரத்' என்ற பாஜகவின் சொற் ஜாலத்தில் 'சுதேசி'ப் பொருளாதார உள்ளடக்கம் ஏதுமில்லை. அது விரும்புவதெல்லாம்' இந்தியத் தயாரிப்பு' (make in India) என்ற பெயரில் இந்தியாவை உலக மூலதனத்துக்கு வாடகைக்கு விடுவதுதான்.

15. அதேபோல, அது காலனிய எதிர்ப்பு சொற் ஜாலத்தையும் பயன்படுத்துகின்றது. ஆனால் அது கார்ப்பரேட் ஆதிக்கத்துக்கும் ஏகாதி பத்தியத்துக்கும் எதிரான முழக்கம் அல்ல; மாறாக, இந்தியாவின் சிறுபான்மையினருக்கு குறிப்பாக இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கெதிரான முழக்கம்தான். 'இஸ்லாமி யர்கள் மீதான வெறுப்புஅரசியல்' (Islamophobia) இன்று உலகளவில் உருவாக்கப்பட்டுள்ள சூழலுடன் இணைந்ததாக உள்ள இந்த முழக்கம், இஸ்லாம் மக்கள் தொகைப் பெருக்கம், இஸ்லாமியர்கள் இந்தியாவிற்குப் புலம்பெயர்தல், இஸ்லாமியர்களின் ஊடுருவல் ஆகியன இந்துக் களை முந்திச்சென்று அவர்களை இந்தியா விலுள்ள ஒரு சிறுபான்மையினராகக் குறைத்து விடும் என்ற பொய்யான உணர்வை உண்டாக்கு கின்றன. நாஜி ஜெர்மனியும் இனத்தூய்மை கொண்ட, இன ரீதியான கற்பனா உலகைச் சாதிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டது. அதன் பொருட்டு அது திட்டமிடப்பட்ட இனக் கொலைகள், பெருமளவிலான கருத்தடைகள், மரபணுவியல் வகையில் நோயாளிகள், ஊனமுற்றவர்கள் என்ற அடையாளப்படுத்தப் பட்டவர்களை ஒழித்துக் கட்டுவதற்கான கருணைக் கொலைகள் ஆகியவற்றை இணைத்துச் செயல்படுத்தியது. அதுமட்டுமின்றி ஜெர்மானிய மரபினத்தை 'மரபணுவியல் முறையில் மேம்படுத்துவதற்காக' மரபின ரீதியில் தாழ்ந்தவர் களாகக் கருதப்பட்டவர்களை விலக்கி வைத்து விட்டு, ஜெர்மானியர்களை 'மேன்மைமிக்க மரபினத்தவராக' ஆகுவதற்காக அவர்களுக்கு மரபணுவியல் மாற்றம் செய்வதையும் மேற் கொண்டது. இந்தியாவிலும் இன்று இதுபோன்ற திட்டமிடப்பட்ட இனக்கொலைகளையும், முகாம்களையும் கருத்தடைகளையும் செய்வ தற்கான அழைப்பு அரசின் ஒப்புதலுடன் நடைபெற்று வருகிறது. இந்த அழைப்புகள் விரைவில் நடைமுறை யதார்த்தமாக மாறும் என்பதற்கான தெள்ளத்தெளிவான எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றியுள்ளன. நாஜி ஜெர்மனியி டமிருந்து மட்டுமல்ல, மோடியின் கீழுள்ள இந்தியா, இஸ்ரேல் மாடலிலிருந்தும் பெருமளவு எடுத்துக் கொள்கிறது. இந்தியாவின் பாதுகாப்புக் கொள்கை இஸ்ரேலிலுள்ள இராணுவக் கொள்கை யையும் கண்காணிப்புத் தொழில் நுட்பங்களையும் நெருக்கமாகப் பின்பற்றுகிறது. இந்துத்துவத் திற்கும் ஜியோனிச ஆக்கிரமிப்பு என்ற இஸ்ரேலியக் கொள்கைக்கும் மிக நெருக்கமான கருத்தியல் ஒற்றுமை உள்ளது. இஸ்ரேலின் பாலஸ்தின விரோதக் கொள்கை மீதான எந்த வொரு விமர்சனத்தையும் அவதூறு செய்வதற்காக, யூதவிரோதம் என்ற பூச்சாண்டியை அந்த அரசு பயன்படுத்திக்கொள்வதைப்போல, மோடி ஆட்சியும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இந்து மேலாதிக்கப் பிரச்சாரத்திற்கு எதிரான ஒவ்வொரு எதிர்ப்பையும் அடக்குவதற்கு இப்போது 'இந்துக்களுக்கு ஆபத்து' 'இந்துக்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு' என்ற சொல்லாடலைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

16. சங்-பாஜக பட்டாளம், மக்களிடையேஉள்ள அச்சம், வெறுப்பு ஆகியவற்றையும் இந்துக்கள், அந்நியருக்குப் பலியானவர்கள், அவர்கள் மேன்மையானவர்கள் என்ற கருத்து களையும் ஒன்றிணைத்து, மக்களின் சம்மதத்தைப் பெறுவதற்கான திட்டத்தை உருவாக்கியுள்ளது. தொடக்கத்திலிருந்தே மோடி தன்னை நிறுவன எதிர்ப்புப் போராளி என்று விளம்பரப்படுத்திக் கொண்டு வந்துள்ளார். இதன் பொருட்டு மக்களின் பெரும் பகுதியினர் தங்களது பரிதாபத் துக்குரிய வாழ்க்கை நிலைமைகளுக்கு அவை வறுமை, ஒடுக்குமுறை ஆகியவற்றால் மேலும் மோசமாக்கப்பட்டிருந்ததற்கு எதிராகக் கொண்டி ருந்த சீற்ற உணர்வைப் பயன்படுத்திக் கொண் டார். மிகச் சாதுரியமாக இந்திய நிலைமைகளில் உள்ள தீங்குகள் அனைத்தையும் இந்தியாவி லிருந்த நீண்டகால காங்கிரஸ் ஆட்சியுடன் தொடர்புபடுத்தினார். காங்கிரஸ் ஆட்சியை அவர் ஊழல், வாரிசு அரசியல் கொள்கைகள் ஆகிய வற்றை சமன்படுத்திக் காட்டி வந்தார். 'காங்கிரஸ் இல்லாத இந்தியா' வை உருவாக்கவேண்டும் என்ற அவரது அறைகூவல் மக்களிடம் இருந்த நிறுவன (அரசு) எதிர்ப்பு மனோநிலையை நன்கு பயன்படுத்திக் கொண்டது. ஒன்றிய அரசாங்கத்தில் அதிகாரத்துக்கு வந்த பிறகும்கூட, 'லுட்யெனின் இந்தியா' என்று அவரால் அழைக்கப்படுமொன்றுக்கு எதிரான தனது, சீற்ற மிக்க குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டிருந்தார். பொருளாதாரம் தொடர்பான அவரது வாக்குறுதிகள் 'ஜூம்லா' அல்லது வெற்றுச் சொற்ஜாலம் என்பது அதிகரித்த அளவில் அம்பலப்படுத்தப்பட்டுவந்தது. அவரது புதிய அரசாங்க நிர்வாகம் என்பது ஒளிவு மறைவில்லாத அரசுசார் சலுகை முதலாளித் துவம், சங் அமைப்பின் வளர்ந்துவரும் ஆதிக்கம் ஆகியவற்றால் குறிக்கப்படுவது மேன்மேலும் வெளிப்படையாகத் தெரியவந்தது. அப்படி யிருந்தும்கூட எல்லா வர்க்கங்களிலும் பிரிவுகளி லுமுள்ள கணிசமான மக்கள் நிறுவன எதிர்ப்பு என்ற சொற் ஜாலத்துக்கு இன்னும் கட்டுண்டு கிடக்கின்றார்கள்.

17. அரசின் முற்றுரிமையாக இருந்த வன்முறையை தனியார்மயமாக்குதல், சட்டம், நீதி ஆகியவற்றுக்குப் புறம்பான கண்காணிப்புக் குழுக்களிடம் அதை ஒப்படைத்தல் ஆகிய வற்றைப் போலவே தலைவர் மீதான கவர்ச்சி என்பது சங்-பாஜகவின் நீண்ட காலத்திட்டத்தின் மய்ய அம்சமாகும். இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு அரசியல் என்பது இந்திய இஸ்லாமியர்களை 'உள்நாட்டு எதிரிகள்' என்று இடைவிடாமல் பிறத்தியார்களாக்கும் (மற்றவர்க ளாக்கும்) பாசிச நடவடிக்கைக்கு ஊட்டம் தருகிறது. இந்தப் பாசிச நடவடிக்கையை, சங் பரிவாரம் புதிதாக உருவாக்கியுள்ள மூலோபா யத்தின் மூலம் வலுப்படுத்தி உறுதிப்படுத்த முயற்சி செய்கிறது. சமுதாயத்திலுள்ள மக்களின் அணுகுமுறையையும் நடத்தை முறைகளையும் மாற்றியமைத்தல் (social engineering) என்பது தான் இந்த மூலோபாயம். அதாவது வெவ்வேறு மாநிலங்களிலுள்ள ஆதிக்க சமுதாயக் குழுக்க ளுக்கு எதிராக ஒரு சமூகக்கூட்டணியை உருவாக்கி, கீழ்நிலையிலுள்ள மக்களின் தோற்றத்தைத் தனக்கு உருவாக்கிக் கொள்வதன் மூலம் சங்பரிவாரம் தனது மனுவாதி முகத்தை மூடிமறைத்துக்கொள்வதுதான் இந்த மூலோ பாயம். பிற்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக்குவது, தலித், பழங்குடி மக்கள் பின்னணியைக் கொண்டவர்களைக் குடியரசுத் தலைவர்களாக்குவது என்பன ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பார்ப்பனிய மய்யக்கூறை மறைப்ப தற்காக இன்று பாஜக மேற்கொண்டுள்ள முக்கியமான பரப்புரை அம்சங்களாகும். சங்-பாஜக சொல்லாடல்கள் அரசமைப்புச் சட்டம், உச்சநீதிமன்றம், நவீன இந்தியாவின் நிறுவனக் கட்டமைப்பு ஆகியவற்றையும், அறிவாளிகள் மத்தியில் குறிப்பாக கல்விப்புலத்திலும், கலாச் சாரக் களத்திலுமுள்ள அறிவாளிகள் மத்தி யில் விமர்சனக் கண்ணோட்டங்களைக் கொண்டிருப் பவர்களையும் (அவர்களை மேலைநாட்டுக் கருத்துகளால் உள் உந்துதல் பெற்றவர்கள், மேட்டுக்குடி மனப்பான்மையுள்ளவர்கள் என்று சித்திரித்து) தனது தாக்குதலுக்கான குறியிலக் காக்குகின்றன. அதேவேளை, நரேந்திர மோடியையும் அவரது ஆட்சியையும் நிறுவன எதிர்ப்புப்போராட்டச் சக்திகளாகக் காட்டுகின்றன. பெரும்பாலான எதிர்க்கட்சிகள், பரம்பரை அரசியல் நடத்துபவை, குடும்ப நிறுவனங்களை நடத்துபவை என்று இழிவுபடுத்தப்படுகின்றன. ஆனால், மோடி அரசாங்கத்தின் ஆடம்பரச் செலவுகள் ஆட்சியதிகாரத்தில் மோடி இருக்கும் காலகட்டத்தைக் குறிக்கும் வண்ணம் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுதல், ஏராளமான நினைவுச் சின்னங்களை எழுப்புதல், சிலைகளை உருவாக்குதல், கோவில்கள் கட்டுதல் ஆகியவற்றுக்கான செலவுகள் காலனியாட்சிக்கு முந்திய காலகட்ட சாம்ராஜ்யங்களின் பாணியைப் பின்பற்றுகின்றன.

18. இந்திய நிர்வாகமுறை தொடர்பான காலனிய மரபு, இந்தியாவின் ஜனநாயக நிறுவனங்கள், கலாசாரம் ஆகியவற்றிலுள்ள பலகீனங்கள் ஆகியவற்றிலிருந்தும் இந்தியப் பாசிசம் தனது பலத்தைத் தருவித்துக் கொள் கிறது. சுதந்திரம் என்பது வெள்ளையர்களின் கைகளிலிருந்து பழுப்பு நிற எஜமானர்களின் கைகளுக்கு மாற்றப்படுவதல்ல என்று பகத்சிங் கூறுகையில் காலனியாட்சி சகாப்தத்திலிருந்து முழுமையான முறிவை ஏற்படுத்திக் கொள்ளும் தேவையுள்ளது என்பதை வலியுறுத்திக் கூறிய கருத்து பிரபல்யம் பெற்றிருந்தது. 1980களிலிருந்து பாஜக அடைந்த பிரமிக்கத் தக்க வளர்ச்சிக்கு ஒரு காரணமாக இருப்பது, முன்பு நீண்ட காலம் ஆட்சியிலிருந்த காங்கிரஸ், இந்தியாவின் ஜனநாயக நிறுவனங்களிலுள்ள பலகீனம் என்ற பிரச்சினையின் மீது கவனம் செலுத்தி அதைக் கையாளவில்லை என்பதாகும். அப்படிச் செய் வதற்கு மாறாக, ஜனநாயக உரிமைகளை இரத்து செய்யும் பொருட்டு 1975ல் உள்நாட்டு அவசரநிலையை அறிவிக்க அரசமைப்புச் சட்டத்திலுள்ள பிரிவுகளைப் பயன்படுத்திக் கொண்டார் இந்திராகாந்தி.

19. மோடி ஆட்சியால், அதன் பாசிச நோக்கத்தின் பொருட்டுப் பரிபூரணமாக்கப் பட்டுள்ள சர்வாதிகார அரசாங்க நிர்வாகத்திற்கான உருமாதிரியை வழங்கியது இந்திராகாந்தி அறிவித்த அவசரநிலைதான். அது இந்திய நீதித் துறையின் பலகீனத்தையும், ஆதிக்கம் செலுத்தும் அரசாங்க நிர்வாகிகளிடம் சரணடைவதற்கு அது கொண்டிருந்த நாட்டத்தையும் அம்பலப் படுத்தியது. இந்த முன்னுதாரணத்தைப் பின் பற்றி, மோடி அரசாங்கம் திட்டமிட்ட முறையில் நீதித்துறை மீதான தனது பிடியை இறுக்கிக் கொண்டு, அதனுடைய தன்னிச்சையான நடவடிக்கைகளில் கிட்டத்தட்ட அனைத்துக்கும், அரசமைப்புச்சட்டத்தை அப்பட்டமாக மீறுவதற் கும் நீதித்துறையின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டு வந்துள்ளது. அவசரநிலைக் காலத் திலும்கூட பத்திரிகைகள் கணிசமான அளவுக்கு சுதந்திர உணர்வைப் பிரதிபலித்துவந்தன. எனவே, அவசரநிலைக் கால எதேச்சாதிகார அமைப்பு பத்திரிகைகள் தனக்கு இணங்கிச் செல்ல வேண்டுமென்பதற்காக பத்திரிகைத் தணிக்கை முறையைத் திணித்தது. ஆயினும் இது மக்களின் அதிருப்தியை அதிகரிக்க மட்டுமே பயன்பட்டது. இன்றுள்ள முதன்மையான ஊடகங்களை, குறிப்பாக தொலைக்காட்சி சேனல்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விசுவாசமிக்க அரசு சலுகைசார் கார்ப்பரேட்டுகளின் முழு ஆதரவுடன் மோடி அரசாங்கமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஊடகங்களின் தன்மையையேமாற்றி, அவற்றை 'வாலாட்டும் ஊடகம்' அல்லது 'எஜமானருக்கு வாலாட்டும்/அரசாங்கத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் ஊடகங்கள்' என்று பிரபலமாகியிருக்கும் ஒன்றாகக் குறுக்கியுள்ளன. இதற்கிடையே தங்கள் பணியை நேர்மையாகச் செய்து கொண்டிருக்கும் இதழியலாளர்கள் ஒடுக்கப்படுகின்றனர் அல்லது கொலை செய்யப்படுகின்றனர்.

20. இந்தியாவிற்கு வெளிநாட்டிலிருந்தும் உள்நாட்டிலிருந்தும் வரும் அச்சுறுத்தல் என்ற பூச்சாண்டியைக் காட்டி அவசரநிலை அறிவிக்கப் பட்டது. 1971ஆம் ஆண்டு நடாளுமன்றத் தேர்தலில் இந்திராகாந்தி பெற்ற வெற்றி செல்லாது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்புக் கூறியதும் அந்தத்தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிசெய்ததும் இந்த அச்சுறுத்தலுக்கான மிகப்பெரும் திட்டவட்டமான எடுத்துக் காட்டாகக் காட்டப்பட்டது. அன்றிருந்த அரசாங் கத்தையும் நாட்டையும் ஒன்றோடொன்று சமப்படுத்திக்காட்டி, அரசாங்கத்திற்குக் காட்டப் படும் எதிர்ப்பை தேசவிரோதச்செயல் என்று வர்ணித்த வாதம்தான் அவசர நிலையின் மய்ய அம்சமாக இருந்தது. அதன் காரணமாக, அவசரநிலை அறிவிக்கப்பட்டவுடன் எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கிட்டத்தட்ட அனைவரும் சிறைக்கு அனுப்பப் பட்டனர்; தான் விரும்பிய வண்ணம் அரசாங்கம் கொள்கைகளை வகுக்கவும் அவற்றை நடை முறைப்படுத்தவும் அதற்குச் சுதந்திரம் தருவதற் காக அரசியல் உரிமைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டன. இந்த எண்ணப் போக்கையும் அரசாங்க நிர்வாக முறைக்கான இந்த உருமாதிரியையும் மோடி அரசாங்கம் விரிவு படுத்திக்கொண்டு அதனுடன் கூடவே மத அடிப்படையில் மக்களை எதிரெதிர் துருவங் களாகப் பிளவுபடுத்துதல், இஸ்லாமிய வெறுப்பு அரசியல் என்ற ஆயுதங்களையும் சேர்த்துக் கொண்டது. மோடி அரசாங்கத்திற்குக் காட்டப் படும் எதிர்ப்பு இந்திய தேசவிரோதமாகவும் இந்துக்கள் மீதான விரோதமாகவும் திரித்துக் கூறப்பட்டு, கொடூரமான சட்டங்கள், பொய்வழக்குகள், தகவல் தொடர்புத் தொழில் நுட்பங்கள் மூலம் வதந்திகளையும் பொய்களையும் பரப்பும் சேனைகள், வன்முறையையும் சித்திரவதையையும் செய்யும் படைகள் ஆகிய வற்றை ஆயுதங்களாகத் தரித்துக்கொண்டு சங்பரிவாரம் அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பு ஒவ்வொன்றையும் அடக்குவதற்கான ஒரு முழுமையான இயந்திரத்தை வளர்த்தெ டுத்துள்ளது. எண்மய (டிஜிட்டல்) தொழில் நுட்பங்கள், கண்காணிப்புகளைப் பெருமளவில் விரிவுபடுத்துவதை எளிதாக்கியுள்ளன. அவை கருத்து வேறுபாடு கொண்டவர்கள் மீதும் மனித உரிமைகளைப் பாதுகாப்பவர்கள் மீதும் பொய் வழக்குகளைப் புனையவும் அவர்கள் மீது குற்றச்சாட்டுகளைத் தொடுக்கவும், அதேபோல், மூலவளங்களை அடையச் செய்வதில் வறுமைப் பட்டவர்களையும் சமுதாயத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்களையும் விலக்கிவைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

21. அவசரநிலைக்குப் பிந்திய காலகட்டம், மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் சில வற்றை நடைமுறைப்படுத்துதல், பஞ்சாயத்து ஆட்சி முறையை நிறுவனப்படுத்துதல் போன்ற வழிமுறைகளின் மூலம் அனுகூலமற்ற நிலையில் இருந்த மக்கள் பிரிவினரை நாட்டின் அரசியல், சமுதாய, பொருளாதார வாழ்வில் பங்கேற்க வைப்பதையும் அதிகாரம் பரவலாக்குவதையும் விரிவுபடுத்தியது. ஆனால் 1990களின் தொடக்க ஆண்டுகளிலிருந்து நவதாராளவாதக் கொள்கைக் கட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் காரணமாக சமுதாய, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கின; ஜனநாயக உரிமைகள் மெல்லமெல்ல அழிக்கப்படும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டன. மூலவளச் செழிப்புள்ள ஒடிஸா, சட்டிஸ்கர், ஜார்கண்ட் ஆகிய பகுதிகளில் நிலமும் இதர மூலவளங்களும் பலவந்தமாகக் கைப்பற்றப் படுதல், பழங்குடி மக்களையும் விவசாயிக ளையும் இடம்பெயரவைத்தல், அவற்றை எதிர்ப்பவர்களை மாவோயிஸ்டுகள் என்றுகூறி துன்புறுத்தல் ஆகியன வழக்கமான நிகழ்வுகளாகி யுள்ளன. மோடியின் ஆட்சி இந்த நவதாராள வாதத் தாக்குதலை புதிய மூர்க்கத்தனமான மட்டத்திற்கு கொண்டு சென்றதன் விளைவு என்ன வென்றால், மக்கள் பெருமளவில் இடப் பெயர்வுக்கும், உடைமை பறிப்புக்கும் உட்படு வதும் முன்னுதாரணமற்ற அளவிற்கு வேலை யில்லாத் திண்டாட்டம் பெருகுவதுமாகும். ஆனால், அதிகரித்துவரும் பொருளாதார அவதிக ளாலும் நிச்சயமின்மையாலும் மக்கள் சீற்ற மடையும் போதிலும், சங் பட்டாளம் மக்களின் இந்த விரக்தியைத் தனது ஆயுதமாக்கிக் கொண்டு, அவர்களது கோபத்தைத் தனது தீவிரமான வெறுப்புப் பரப்புரை அரசியலுக்கு உட்படுத்தி அதனைத் தவறான பாதையில் கொண்டு செல்கிறது. மக்கள் மனதில் ஆழப்பதிந்துள்ள விவாதம், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களின் அனைத்துத் துன்பங்களுக்குமான பழியை, இன்றுள்ள அரசாங்கத்தைத் தவிர்த்து விட்டு, (மக்களை) ஒருவருக்கொருவர் மீது சுமத்திக் கொள்ளும்படி செய்வதுடன், இந்து அடையாளத்தின் மேன்மையை அறுதியிடுவதும், இந்து அடையாளத்தைக் கற்பனையான அச்சுறுத்தல்களிலிருந்து காப்பாற்றுவதை முன்னிறுத்துவதும்தான் மோடி அரசாங்கத்தின் மிகப்பெரும் சாதனையாகும். அந்தசாதனைக்கு எதிரே மற்ற பிரச்சினைகள் யாவும் வெளிறிப் போய் முக்கியத்துவமற்றதாகி விடுகின்றன.

22. பாசிசப் பேரிடர், நாசம் விளைவித்தல் என்னும் நச்சுச் சுழலிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றுவதுதான் புரட்சிகரக் கம்யூனிஸ்டு களுக்கு இன்றுள்ள மிக அவசரமான சவாலாகும். இந்தச் சவாலை எதிர்கொள்ள மிகப்பரந்த அளவுக்கு சாத்தியமான வகையில் அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் கருத்தியல் போக்கு களுக்குமிடையில் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றன. இந்தியாவில் இந்த ஒற்றுமை,அரசமைப்புச் சட்டத்தையும் சுதந்திரப் போராட்டமரபையும் காப்பாற்றுதல், இந்திய நாட்டையும், அதன் மூலவளங்களையும், உள்கட்டுமானங்களையும் கார்ப்பரேட்டுகள் முழுமையாகக் கைப்பற்றுவதிலிருந்து பாது காத்தல் என்ற வடிவத்தில் பரவலாக வெளிப் படுத்தப்பட்டுவருகிறது. அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாறுவதற்கும் தனியார் மயமாக்குதலுக்கும் எதிரான வலுவான இயக்கங்கள் தோன்றியுள்ளன. அவை முன்னுவமையற்ற அளவிலான ஒற்றுமை, உறுதிப்பாடு ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றன. இதற்கு சாட்சியமாக இருப்பது குடியுரிமைத் திருத்தச்சட்டத்திற்கு எதிரான இயக்கமும், அதைவிட முக்கியமாக இந்தியாவின் விவசாயப் பொருளாதரத்தைக் கார்ப்பரேட்டுகள் கைப்பற்று வதை ஊக்குவிப்பதற்கு மோடி ஆட்சி மேற் கொண்ட முயற்சிக்கு எதிராக நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகளின் போராட்டமும் ஆகும். பாசிச எதிர்ப்பு சக்திகளுக்கு வலு வூட்டுவதற்கும் அனைத்து முனைகளிலும் எதிர்ப்பைத் தீவிரப்படுத்துவதற்கும் குடிமைச் சமுதாயச் செயலார்வலர்கள் பாசிச ஆட்சியின் ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு காட்டிய தீரத்தை இப்போதுநடைபெற்றுவரும் மக்கள் இயக்கங்களிடமுள்ள ஒற்றுமை, உறுதிப்பாடு ஆகியவற்றுடன் இணைக்க வேண்டியது புரட்சிகரக் கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். குடிமைச் சமுதாய மக்கள் இயக்கங்களுக்கு மாறாக, பொதுவாகச் சொல்வதென்றால், முதலாளித்துவக் கட்சிகளின் எதிர்ப்பு என்பது பாசிசத் தாக்குதலுக்கு குறிப்பாக பணத்தைக் கொண்டு ஆசைகாட்டுதல், ஏதோவொரு காரணம் காட்டி மிரட்டப்படுதல், பழிவாங்கப்படுவோம் என்ற அச்சம் ஆகியவற்றுக்குத் தாக்குப்பிடிக்க முடியாத பலகீனத்தைக் கொண்டிருப்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் இயங்கும் நிலப்பரப்பின் பன்முக, சிக்கலான தன்மை, காங்கிரஸ் தொடர்ந்து அடைந்துவரும் வீழ்ச்சி, அனைத்திந்திய அளவில் செயல்படும் வலுமிக்க கட்சி ஏதும் இல்லாமை ஆகியன இன்றைய காலகட்டத்தை அனைத்திந்திய அளவில் பாஜவுக்கு உகந்ததாக ஆக்கியுள்ளன. இந்தக் காலகட்டத்தில் பாஜக மிகவும் மேலோங்கிய கட்சியாக இருந்தபோதிலும், ஒரு சில மாநிலங்களில் நாம் பார்த்தது போல நிச்சயமாக அது தேர்தலில் வெல்லப்பட முடியாததோ எதிர்க்கப்பட முடியாததோ அல்ல. அனைந்திந்திய அளவிலும் பெரிய மாநிலங் களிலும் பாசிசத்திற்கு எதிரான ஆற்றல்மிக்க, உறுதியான அய்க்கியப்பட்ட எதிர்ப்பை உருவாக்குவது, வரப்போகும் தேர்தல் களத்தில் பாஜகவை பலகீனப்படுத்துவதற்கும் மோடியின் ஆட்சியை அகற்றுவதற்கும் மிகமுக்கியமானவை. எனினும், 1977ஆம் ஆண்டுத் தேர்தலில் இந்திராகாந்தியின் சர்வாதிகார ஆட்சியை இந்தியா அகற்றியபோது, அவசரநிலை ஏற்கெனவே விலக்கப்பட்டிருந்தது என்பதையும், இப்போது அறிவிக்கப்படாத அவசரநிலை நிலைமகளின்கீழ் தேர்தல் நடக்கிறது என்ப தையும், 2024 தேர்தல் 1977ஆம் ஆண்டுத் தேர்தலைவிட மிகப்பெரும் சவாலாக இருக்கும்என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். 

23. இப்போது உருவாக்கப்பட்டு வரும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்பது இன்னும் கூட பொதுவான பாசிச எதிர்ப்பு உணர்வாலோ அர்ப்பணிப்பாலோ கற்றறியப்பட்ட ஒன்றாக இல்லை என்பதையும் நாம் குறித்துக் கொள்ள வேண்டும். மோடியின் ஆட்சி, தன்னுடைய பலத்தின் மய்ய அம்சத்தை ஆர்.எஸ்.எஸ். வலைப் பின்னல்களின் மூலம் பெற்றிருக்கையில், பல எதிர்க்கட்சிகள் ஆர்.எஸ்.எஸ். அமைப் பையோ வெறுப்பையும் பொய்களையும் கிலியூட்டுவதையும் கொண்டுள்ள அதன் நச்சுத்தனமான பரப்புரை இயக்கத்தையோ எதிர்ப் பதற்குத் தயாராக இல்லை. நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படைப் போக்கு, அமெரிக்க சார்பு வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றைப் பொருத்தவரை அக்கட்சிகளிடையே பரந்த கருத்தொற்றுமையும் இருந்து வருகிறது. கருத்து மாறுபாடு கொண்ட குடிமக்கள் மீதும் மக்கள் இயக்கங்கள் மீதும் கொடூர மான சட்டங்களும், அரசு அடக்கு முறையும், துன்புறுத்தலும் செலுத்தப்படுவது எதிர்க்கட்சிகளின் செயல்திட்டத்தில் வெளிப் படையாகவே புறக்கணிக்கப்படுகின்றன. எனவே, எதிர்கட்சிகளிடையேயும் எதிர்ப்புச் சக்திகளி டையேயும் சாத்தியமான அளவுக்கு ஏற்படும் மிகப்பரந்த அளவிலான அய்க்கியத்தை வரவேற்கவும், அதை உருவாக்குவதற்கான வசதி வாய்ப்புகளை உருவாக்கவும், அதில் இணை வதையும் செய்கையில் கம்யூனிஸ்டுகள் பாசிசத்திற்கு எதிரான முழுமையான செயல் திறமுள்ள எதிர்ப்புப் போராட்டத்தை நடத்து வதற்காகத் தங்கள் அரசியல், கருத்தியல் சுதந்திரத்தை முழுமையாகத் தக்கவைத்துக் கொண்டு அதைப் பிரயோகிக்க வேண்டும்.

24. எனவே மோடி அரசாங்கத்தை தேர்தல் மூலம் அகற்றுவதன் மூலம் மட்டுமே பாசி சத்தைத் தீர்மானகரமான முறையில் தோற்கடிக்க முடியாது என்பதைநாம் நினைவில் கொள்ள வேண்டும். தேர்தலின் ஒன்றிரண்டு தோல்வி களைத் தாங்கிக்கொள்ளும் அளவிற்கு சங்பரி வாரம் போதுமான வலுவைத்திரட்டி வைத்தி ருக்கிறது. இப்போது நமக்குத் தேவைப்படுவ தெல்லாம் அதனை இந்திய அரசியலில் விளிம்புநிலைக்கு மீண்டும் தள்ளிவைக்கக்கூடிய வகையில் அதன் அரசியலையும் கருத்தியலையும் மிக உறுதியாக நிராகரிப்பதுதான். இந்த பாசிசத்தாக்குதலில் ஈட்டிமுனையாக இருப்ப திலும் தற்போது அனைத்திந்திய அளவில் பாஜக பெற்றுள்ள வாக்கு விகிதத்தைப் பெறுவதிலும் நரேந்திரமோடி ஒரு மய்யப்பாத்திரம் வகிக்கிறார். மோடியின் ஆளுமையை வழிபாடு செய்வது சங் இலாயத்திலுள்ள இதர தலைவர்களை மிகக் குறுகியவர்களாக ஆக்குகிறது என்றாலும், வரலாற்றுரீதியாக சங் ஒவ்வொரு கட்டத்திலும் சங்கிலித்தொடர் போன்ற தலைமைகளைத் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். எனவே முரணற்ற ஜனநாயகம், புரட்சிகரமான சமுதாயமாற்றம் ஆகியவற்றுக்கான போராளிகள் என்ற முறையில் கம்யூனிஸ்டுகள் பாசிசத் தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுப்பதற்காக ஒரு நீடித்த, பாசிசத்தின் ஒவ்வொரு அம்சத்தின் மீதுமான போராட்டத்தை நடத்த வேண்டும். நமது அரசமைப்புச் சட்டத்தை, ஜனநாயகத் தன்மையற்ற மண்ணின் மேல்தூவப் பட்டுள்ள உரம் என்று அம்பேத்கர் வர்ணித்தார். சாதிதான் நவீன இந்தியாவிற்கு மிகப்பெரும் இடையூறு என்று அடையாளப்படுத்தி அதை முற்றிலுமாக அழித்தொழிக்கவேண்டியது இன்றியமையாதது என்று கூறினார். அதனால் தான் அவர் இந்துராஜ்யம் என்பது மிகப்பெரும் தீங்கு ஏற்படுத்தும் கொடிய நிகழ்வு என்றும் அதிலிருந்து இந்தியா காப்பாற்றப்பட வேண்டும் என்றும் கூறினார். மிகப்பிற்போக்குத் தனமான கருத்துகள், அணுகுமுறைகள், நடைமுறைகள் ஆகியன ஒடுக்குமுறை தன்மைவாய்ந்த இந்திய சமூகக் கட்டமைப்பில், குறிப்பாக நன்கு வேரூன்றியுள்ள பார்ப்பனிய சாதி அமைப்பு, ஆணாதிக்கம் ஆகியவற்றில் வேர் கொண்டுள்ளன. அவை பாசிசத் தாக்குதலுக்கு ஊட்டம் கொடுத்து இந்த ஜனநாயக விரோதச் சூழலில் அதற்கு புதிய வலிமையையும் அங்கீகாரத்தையும் ஈட்டித் தந்துள்ளன. பாசிசத்தை வீழ்த்துவதற்கு இந்திய வரலாற்றிலும் கலாசாரத்திலும் காணப்படும் முற்போக்கான மற்றும் சமுதாயத்தை மாற்றிய மைக்கின்ற ஒவ்வொரு போக்கையும், குறிப்பாக வலுவான சாதிஎதிர்ப்பு, ஆணாதிக்க எதிர்ப்புப் போராட்டங்கள், சமத்துவம், பகுத்தறிவு, பன்மைத்துவம் ஆகியவற்றுக்காக இந்திய சமுதாயத்திலும் வரலாற்றிலும் காணப்படும் தேடல்கள் ஆகியவற்றைக் கம்யூனிஸ்டுகள் தீவிரமாக ஆதரிக்க வேண்டும்.

25. பாசிசம், இந்தியா மீது விழுந்துள்ள பெருங்கேடு என்று பார்க்கப்படுகையில், பாசிச எதிர்ப்பு இயக்கம் என்பது இந்தியாவை இந்தப் பெருங்கேட்டிலிருந்து மீட்பதும், இந்தியாவைப் புதிதாகக் கட்டியெழுப்பும் பொருட்டு பேரிடர்கள், பேரழிவுகள் ஆகியவற்றைக் கடந்து வருவதுமாகும். இந்திய தேசத்தைக் கட்டியெ ழுப்பும் நிகழ்முறைகளிலிருந்த பலகீனங்கள், முரண்பாடுகள், நிலப்பிரபுத்துவ எச்சங்களுடன் இந்திய முதலாளித்துவ ஜனநாயகம் செய்து கொண்ட சமரசங்கள், ஒத்துழைப்பு, காலனிய ஆட்சியின் பின்விளவுகள், ஏகாதிபத்தியத் திட்டங்கள் ஆகியன அதிகாரத்தைக் கைப்பற்று வதையும், இந்துத்துவத்தின் அடிப்படையில் இந்திய தேசியத்தை மறுவரையறை செய்து இந்திய நிர்வாக முறையை வேறுமாதிரியான தாக்கவும் பாசிச சக்திகள் செய்துகொண்டிருக்கிற நடவடிக்கைகளை சாத்தியமாக்கியுள்ளன. சட்டத்தின் ஆட்சி என்பதற்கான அடிப்படைகள் ஏற்னெவே பலத்த அடிவாங்கியுள்ளன. இந்த பாசிசஆட்சி நீடிப்பதும் ஆழவேரூன்றி நிற்பதும் அரசமைப்புச்சட்டத்தின் பார்வையையும், நவீன இந்தியாவின் ஆதாரக்கட்டமைப்பையுமே தடம்புரளச்செய்யும். எனவே, பாசிசத்தின் பிடிகளிலிருந்து இந்தியாவை மீட்பதற்கும் இந்திய மக்களின் அனைத்துப் பிரிவினருக்கும் முழுச் சமூகச்சுதந்திரத்தையும், அரசியல் தன்னுரிமையையும், பண்பாட்டு பன்மைத் துவத்தையும் உறுதிப்படுத்துகிற வலிமையான, அனைத்துவகையிலும் முழுமை பெற்ற ஜனநா யகத்தின் அடிப்படையில் அதை வலிமை யாக்குவதற்கும் மறுநிர்மாணம் செய்வதற்கும் ஒரு நீடித்த, முழுமையான, தீர்மானகரமான எதிர்ப்புப்போராட்டத்தை நடத்தப் புரட்சிகரக் கம்யூனிஸ்டுகள் ஆயத்தமாக வேண்டும். அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவோம் என்பதை ஒருதற்காப்பு முழக்கமாகவும், இருக்கும் நிலையை கட்டிக்காக்க ஒப்புதல் அளிப்பதாகவும் பார்க்கக்கூடாது. அதன்பொருள், இறையாண்மை கொண்ட, ஜனநாயக, சோசலிச, மதச்சார்பற்ற குடியரசு என்று இந்தியாவை வரைய றுக்கும் அரசமைப்புச்சட்டத்தின் முகப்புரை, அனைத்து மக்களுக்கும் தன்னுரிமை, சகோதரத் துவம், முழுமையான சமூகப், பொருளாதார, அரசியல்நீதி வழங்கப்படும் என்ற வாக்குறுதி அளிப்பதை அடிப்படையாகக் கொண்டு, அரசமைப்புச்சட்டத்தின் கடமைகளை நிறை வேற்றச் செய்வதாகும். இந்தியாவை நாசமாக்கி அதைப்பின்னுக்குத் தள்ளும் அச்சுறுத்தலை, பாசிசம் நமக்கு விடுத்துக் கொண்டிருக்கையில் வெற்றிகரமான பாசிச எதிர்ப்புப் போராட்டம், இந்தியக் குடியரசை மீட்டுவந்து, மக்களின் ஆற்றலையும் முன்முயற்சியையும் விடுவித்து, அதை முரணற்ற ஜனநாயகமும் மக்களின் முழுமையான உரிமைகளும் நிலவும் கோட்டை யாக மாற்றும். தமிழாக்கம் - எஸ்.வீ.ஆர்

(குறிப்பு: சென்ற இதழில் இந்த தீர்மானத்தின் பத்தி 9ல் பெல்ஜிய கம்யூனிஸ்ட் தலைவர் ஜார்ஜ் டிமிட்ரோ என்பதை பல்கேரிய கம்யூனிஸ்ட் தலைவர் ஜார்ஜ் டிமிட்ரோவ் என வாசிக்கவும். தவறுக்கு வருந்துகிறோம்)