திருநெல்வேலி மாவட்டம் திசையன் விளையில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த முத்தையா, நாடார் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதல் செய்தார் என்பதற்காக படு கொலை செய்யப்பட்டார். முதலில் வன்கொ டுமை தடுப்புச் சட்டத்தில் கொலை வழக்காக பதிவு செய்திருந்த காவல்துறை, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேரைக் கைது செய்து சிறையில் அடைந்துவிட்டு, அந்த மூன்று பேரில் முத்தையாவை யார் என்றே தெரியாத சுரேஷ் என்பவரின் தங்கையை முத்தையா கேலி செய்தார் என்பதற்காக இவர்கள் மூவரும் சேர்ந்து கொலை செய்தார்கள் என்று கூறி இப்போது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீக்கி விட்டு, வெறும் கொலை வழக்காக மாற்றியுள்ளது. இந்த திசை யன்விளை தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகரின் தொகுதிக்குள் வருகிறது என்பதையும் ஆணவப் படுகொலைகள் தமிழ் நாட்டில் கிடையாது என்று முதல்வர் அவர்கள் சட்டமன்றத்தில் கூறிய தையும் முத்தையாவின் கொலையோடு தொடர்பு படுத்திப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் தேனி மாவட்டத்தில் சாதியாதிக்கப்படுகொலை ஒன்று நடந்துள்ளது. அதுபற்றி நீதிக்கான மக்கள் இயக்கம் சார்பாக கள ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.
தேனி மாவட்டம் பெரியகுளம், கும்பக்கரை சாலையிலுள்ள காந்தி நகரில் மாரிமுத்து குடும்பமும் சம்பத் குடும்பமும் அக்கம் பக்கமாய் வசித்து வந்தன. சம்பத்தின் மகள் மகா லட்சுமி. மாரிமுத்துவுக்கும் மகாலட்சுமிக்கு மிடையே காதல் வளர்ந்துள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள். மாரிமுத்து பட்டியலின வகுப்பைச் சார்ந்தவர்(பறையர்). மகாலெட்சுமி பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர் (கள்ளர்). இவர்கள் இருவரும் பழகுவது அவர்களின் பெற்றோருக்கு தெரிய வந்திருக்கிறது. மகாலெட்சுமியின் பெற்றோர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள் வதை விரும்பவில்லை. அதனால், மகாலெட் சுமிக்கு 18 வயது முடியாத காரணத் தைக் காட்டி 2022ல் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி மாரிமுத்துவை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர். அதே காரணத்தைப் பயன்படுத்தி பெரியகுளம் காவல் துறை உதவியுடன் இரண்டு முறை மாரிமுத்துவை சிறையிலடைத்துள்ளனர். மகாலெட்சுமியை சிறிது நாட்கள் காப்பகத்தில் வைத்திருந்துவிட்டு பின் அவரது பெற்றோருடன் இருக்க காவல்துறை வழி காட்டியது. காவல் ஆய்வாளர் மேற்படி மகாலெட்சுமியின் சமூகத்தைச் சார்ந்தவராய் இருந்ததால் மகாலெட்சுமியின் பெற்றோருடன் சேர்ந்து காதலர்களைப் பிரிப்பதில் கண்ணும் கருத்தாய் இருந்தார். தொடர்ந்து மாரிமுத்துவை மிரட்டி வந்துள்ளார்.
18 வயது பூர்த்தி ஆனவுடன் மாரிமுத்து வைத்தான் திருமணம் செய்து கொள்வேன் எனத் தீர்மானகரமாக இருந்தார் மகாலெட்சுமி. இதனை காவல்துறையிடமும் நீதிமன்றங்களிலும் பலமுறை பதிவு செய்துள்ளார். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத மகாலட்சுமியின் தந்தை சம்பத், தாயார் பேச்சியம்மாள், அக்காள் கணவர் பாண்டி ஆகியோர் மகாலெட்சுமியை அடித்துத் துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். மகாலெட்சுமியைத் தங்கள் வழிக்கு கொண்டு வரப் பெரும் முயற்சி எடுத்தனர். பெரியகுளம் காவல்துறையினர் இயன்றவரை மகாலெட்சுமியின் மனதை மாற்றவும் மாரிமுத்துவை மிரட்டிப் பணிய வைக்கவுமே முயன்றுள்ளார்கள். மகாலெட்சு மியின் அக்காள் கணவர் பாண்டி, மாரிமுத்து வையும் மகாலெட்சுமியையும் கழுத்தறுத்து கொன்று விடுவேன் எனப் பகிரங்கமாகப் பேசியுள்ளார்.
தனக்கு 18 வயது பூர்த்தியாகச் சில மாதங்களே இருந்த நிலையில் நான் காப்பகத்தில் இருக்கிறேன் எனப் பெற்றோரிடமும் காவல் துறையிடமும் வேண்டுகோள் வைத் துள்ளார் மகாலட்சுமி. அவரது வேண்டுகோளை யாரும் கண்டு கொள்ளவில்லை. இந் நிலையில் தான் 5.08.2023 அன்று காலை 7.00 மணி அளவில் கும்பக்கரை செல்லும் வழியில் உள்ள மாந்தோப் புக்குள் மாரிமுத்துவும் மகாலெட்சுமியும் சடலமாக மரத்தில் தொங்கிக் கொண்டு இருப்பதை மக்கள் பார்த்துள்ளார்கள். அவர்க ளுடைய மரணம் பல கேள்விகளையும் சந்தேகங் களையும் எழுப்புகிறது.
சடலங்கள் இரண்டும் தரையைத் தட்டி கால் தரையில் பட்டவாறு இருப்பது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்பதைஉணர்த்துகிறது.
மாரிமுத்துவின் பெற்றோர்கள் இது தற்கொலை அல்ல கொலை என கொடுத்த புகார் மனு மீது காவல்துறை எந்த விசாரணையும் செய்யவில்லை.
மகாலெட்சுமியின் பெற்றோர் மற்றும் அவரது அக்காள் கணவர் மீது மாரிமுத்துவின் தாயார் மாலையம்மாள் கொடுத்த புகார் மனு முறையாக விசாரிக்கப்படவில்லை
மகாலெட்சுமியின் தாயார் பேச்சியம்மாள் தனது புகாரில் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்று கூறி இருந்தும் மகாலெட்சுமியின் உடலைப் பெற்றோர்களிடம் ஒப்படைக்காமல் அவசர அவசரமாகக் காவல் துறையே எரித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஏன் அவ்வாறு எரிக்கப்பட வேண்டும்?
இதுபோன்ற வழக்குகளில் பிணத்தைப் புதைக்கத்தான் வேண்டுமேயொழிய எரிக்கக் கூடாது. மறுவிசாரணை நடந்து இது கொலை என்கிற உண்மை வெளியே வந்து விடக் கூடாது என்பதற்காகவே எரித்துள்ளார்கள் என்ற சந்தேகம் வலுக்கிறது.
பெண் காவல் ஆய்வாளர் சம்பவ இடத்தில் பிரேத விசாரணை நடத்தவில்லை, ஏன்?
வன்கொடுமை மற்றும் கொலைக்கான அனைத்துக் கூறுகளும் இருப்பினும் சந்தேக மரணம் என வழக்கமான பாணியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாரிமுத்துவின் தாயாரின் புகாரின் படி இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத் தில் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை. உடற் கூறாய்வு சட்டப்படி வீடியோ பதிவு செய்யப்படவில்லை. மாவட்ட தலைமை மருத்துவர்களைக் கொண்டு உடற்கூராய்வு செய்யப்படவில்லை. அவசர கதியில் ஆதாரங் களை மறைக்கும் விதத்தில் நடத்தப்பட்டி ருக்கிறது. எதை மறைக்க? யாரைக் காப்பாற்ற?
இம் மரணமே சாதிப் பகைமையால் ஏற்பட்டிருப்பது கண்கூடாகத் தெரிந்திருந்தும் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படாதது ஏன்?
இப்படியான பல கேள்விகளுக்கும் சந்தேகங் களுக்கும் விடையை தெரிவிக்க வேண்டியது ஆளும் அரசின் கடமையாகும்.
பெண் காவல் ஆய்வாளர் பெண் வீட்டாரின் இனத்தைச் சேர்ந்தவராய் இருப்பதால் ஆரம்பத்தி லிருந்தே இக்காதலை முறித்து விட வேண்டும் என முழு மூச்சுடன் வேலை செய்துள்ளார். இவரே விசாரணை அதிகாரியாய் இருப்பாரே யானால் உண்மைக் குற்றவாளிகள் தப்பி விடுவார்கள். ஆதாரங்கள் அழிக்கப்படும். ஏற்கனவே பெண்ணின் பிணத்தையும் எரித்து விட்டார். எனவே விசாரணை அதிகாரி மாற்றப் பட வேண்டும் என்பது மட்டுமின்றி, மாரிமுத்து வின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒரு நேர்மையான காவல்துறை துணை கண்காணிப்பாளரை உடனடியாக விசாரணை அதிகாரியாக அரசு நியமிக்க வேண்டும். வன் கொடுமைச் சட்டத்தின் அடிப்படையில் மாரிமுத்துவின் பெற்றோருக்கு நிவாரணமும் நீதியும் கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.
இதேபோல் வட்டாட்சியரும் பெண் வீட்டாருக்குச் சாதகமாகச் செயல்படுவதால் அவரையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும். சட்ட விதிகளின் படி மாவட்டத் தலைமை மருத்துவர் குழுவினர் மூலம் மாரிமுத்துவின் உடலை உடற் கூறாய்வு செய்யப்பட வேண்டும். முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும். எந்த அடிப்படையில் மகாலட்சு மியின் உடல் எரிக்கப்பட்டது? என்பதையும் மகாலெட்சுமியின் பெற்றோர் உடலைப் பெற்றுக் கொள்ளச் சம்மதித்தனரா? இல்லையா? அவர்கள் ஒப்புதலுடன்தான் காவல்துறையே உடலை எரித்ததா? அல்லது தன்னிச்சையாக எரித்ததா? என்பதையெல்லாம் கோட்டாட்சியர் மூலம் விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக் கொணர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓராண்டிற்கு மேலாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. அரசு, காவல்துறை அதிகாரிகள் தெரிந்தே சாதியாதிக்க உணர்வுடன் செயல்பட்டுள் ளார்கள். இது கடும் கண்டனத்திற்குரியது. இப்படிப்பட்ட மரணங்கள் நிகழ்வதற்கு அரசு அதிகாரிகளின் சாதியாதிக்க உணர்வும் அலட்சிய மும்தான் காரணம். இம்மாதிரி அதிகாரிகள் மீது அரசு கடுமையான நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும். எஸ்சி.எஸ்டி ஆணையம் இது போன்ற வழக்குகளைத் தாமாக முன்வந்து விசாரித்து நீதியை நிலை நாட்ட வேண்டும். பெரியார், அண்ணாவின் பெயரில் ஆட்சி நடத்தும் அரசு, சமூக நீதி பேசும் அரசு, சட்டமன்றத்தில் தமிழ்நாட்டில் ஆணவப்படுகொலைகள் இல்லை என்று சொன்னதற்காக, உண்மைகளை மறைக்க முயற்சிப்பதோ, சாதியாதிக்க சமூகத்தின் வாக்குக ளுக்காக செயல்படுவதோ நீதியாகாது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)