இகக(மாலெ) பொதுச்செயலாளர் திபங்கரின் அரசியல் ஈடுபாடு, கொல்கத்தாவின் பிரசித்திப் பெற்ற இந்திய புள்ளியியல் கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு பயின்றபோது துவங்கியது. மும்பையில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டத்தின்போது ஜோதி புன்யானியுடன் நடைபெற்ற உரையாடலின் போது, 'புல்டோசரை எதிர்க்க வேண்டும் என்றால் நீங்கள் அதோடு மோதித்தான் ஆகவேண்டும்' என்றார்.
பாஜகவை விவரிக்கும்போது 'பாசிஸ்ட்' என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. நீங்களும் கூட அதைப் பயன்படுத்துகிறீர்கள். ஆனால், இந்தக் கருத்தாக்கத்தை மக்களிடம் எப்படி எடுத்துச் செல்வீர்கள்?
நீங்கள் அந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஹிட்லரிஸம், தானாயிஸம் என்பதைப்போல் இப்போது மோடியிஸத்தையும் மக்கள் அறிவார்கள்.
அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்படுவதற்கு எதிராக நாங்கள் மக்களிடம் இயக்கத்தை எடுத்துச் செல்வோம். குடியுரிமை திருத்தச் சட்டம்(CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீடு (EWS) ஆகியவற்றால் ஏற்கனவே அரசியல் அமைப்புச் சட்டம் சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. இப்போது இந்திய தண்டனைச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவதன் மூலமும் சேதப்படுத்தப்படுகிறது.
சிஏஏ, என்ஆர்சி எதிர்ப்பு இயக்கத்தின் போது அஸ்ஸாம் என்ஆர்சியில் இறுதி பட்டியலில் இடம் பெற முடியாத பெரும்பான்மை யானவர்கள் ஏழைகள் என்று நாங்கள் மக்களிடம் சொன்னோம். ஏனென்றால், ஏழைகள்தான் நிலமோ அல்லது ஆவணங்களோ வைத்திருக்க மாட்டார்கள்.
பீகாரில் பல இடங்களில் நாங்கள் ஷாகின்பாக்குகளை நடத்தினோம். மற்ற இடங்களைப் போல் அல்லாமல் இதில் 70% இந்து பெண்களும் 30% முஸ்லிம் பெண்களும் கலந்து கொண்டனர். முஸ்லிம் பெண்களை அணி திரட்டுவதில் என்ன இருக்கிறது? அவர்கள் எப்படியாகிலும் போராட தயாராக இருப்பார்கள். எங்களுடைய வேலை முஸ்லிம் அல்லாதவர்களை அணிதிரட்டுவதுதான்.
30,000 பேரைக் கொண்டு வலுவான சட்டமன்றம் நோக்கிய பேரணியை நடத்தினோம். சிஏஏ, என்ஆர்சிக்கு எதிராக ஏக மனதாக சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற வைத்தோம். இது தேஜகூ ஆட்சியில் இருக்கும் மாநிலத்தில் முதன் முதலில் நிறைவேற்றிய தீர்மானமாகும். முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், அப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சி செய்தது. பேரணியில் கலந்து கொண்ட வர்களில் 80% பேர் இந்துக்கள்.
நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொள்கிறார்கள். புதிய நாடாளு மன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்ட போது, அது மன்னராட்சியின் சின்னம் என்று மக்களிடம் விவரித்துச் சொன்னோம்.
என் வீட்டு முற்றத்தில் உனக்கென்ன வேலை? என்ற பிரபலமான பாடலை, ஜனநாயகத்தில் செங்கோலுக்கென்ன வேலை என்று மாற்றிப் பாடுவோம்.
எதிர்க்கட்சிகள் வெறுமனே பாஜகவுக்கு எதிர் வினை மட்டுமே ஆற்றுகிறார்கள். நீங்கள் உங்களுடைய சொந்த நிகழ்ச்சிநிரலை அமைக்க முடியுமா?
தேசிய அளவிலான ஒரு விவரணை நமக்குத் தேவை. ஜனநாயகத்தை காப்பாற்றுவது இன்று மிக முக்கியமான அவசியமான விசயம். ஜனநாயகத்தை காப்பது நமது நோக்கம் என்பதற்காக மட்டும் நாம் இதை சொல்ல வில்லை, ஜனநாயகத்தை காப்பாற்றுவது ஏழை மக்களுக்கு மிகவும் அவசியமானதாகும். ஏழைகள் ஜனநாயகத்தைப் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று பாஜக நினைக்கிறது. ஆனால், ஏழைகளுக்கு நிலம், கூலி எவ்வளவு முக்கியமோ அதேபோல் சுயமரியாதையும் முக்கியம் என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.
எங்களுடைய சொந்த அனுபவமே இந்த விவரணையை வளர்க்க உதவும்.
•நாம் சுதந்திரப் போராட்ட இயக்க மரபை கொண்டிருக்கிறோம். இப்போது நிலவும் சூழ்நிலையை விளங்கிக் கொள்ள, வெள்ளை நிற எஜமானர்கள் இருந்த இடத்தில் பழுப்பு நிற எஜமானர்கள் மாற்றப்படுவார்கள் என்று பகத்சிங் கணித்ததை நாம் பயன்படுத்த வேண்டும்.
•நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டத்தில் நம்முடைய அனுபவங்கள். ஜமீன்தாரி முறையை ஒழிப்பதன் மூலம் நிலப்பிரபுத்துவம் முடிவுக்கு வந்து விடாது. நிலப்பிரபுத்துவத்தின் முடிவு என்று சொன்னால், அது அவமானப்படுத் தப்படுதல் மற்றும் சாதிய வன்கொடுமையின் முடிவைக் குறிப்பதாக இருக்க வேண்டும். உயர்ந்த ஜாதியை சேர்ந்தவராக சொல்லப்படும் ஒருவர் ஆதிவாசி ஒருவரின் முகத்தின் மீது சிறுநீர் கழிக்கிற சூழலில், நிலப்பரப்புத்துவம் எப்படி பாஜகவின் கீழ் திரும்பி வருகிறது என்பதை நாம் விவரித்து சொல்ல வேண்டும்.
சமூக நீதிக்கான போராட்டம். பாஜக, இந்தக் கருத்தாக்கத்தை சமூக பொறியியல் என்று மாற்றியுள்ளது. பிரதம மந்திரி தனது சுதந்திர தின உரையில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு விஸ்வகர்ம யோஜனா திட்டத்தை அறிவித்திருக்கிறார். ஆனால், உள்ளார்ந்த வகையில் நீதியற்ற சமூகத்தில், நாம் நீதியை இறைந்து பெறும் ஒன்றாக ஏற்றுக் கொள்ள முடியாது.
முதலாளித்துவ எதிர்ப்புப் போராட் டத்தில் நமது அனுபவம். இந்தியாவில் தொழிலாளி வர்க்கம் இயல்பாகவே வரம்புக் குட்பட்ட நிலையிலேயே இருக்கிறது என்ற கருத்தியல் பொதுவானதாக இருக்கிறது. வளர்ந்து வரும் நகர்மயம், ஜிக் தொழிலாளர்கள் என்று பார்க்கும்போது அந்தக் கருத்தியல் இனியும் நிலை பெறக்கூடியது அல்ல. நகர்மயத்தைத் தொடர்ந்து அடுத்து சுற்றுச்சூழல் பிரச்சனை வந்துவிடும். இப்போது சுற்றுச்சூழல்தான் மேலதிக மைய நீரோட்ட பிரச்சனையாக உ உள்ளது.
இவை எல்லாமே இதற்கு முன்னர் மக்களின் தனித்தனி எதிரிகளாக இருந்தன. இப்போது அவையெல்லாம் ஒன்றாகிவிட்டது. அந்த ஒன்றுதான் மோடி. அதுதான் பாசிசம். இந்தத் தனித்தனி போராட்டங்களில் நாம் செலவழிக்க வேண்டிய சக்தியை ஒன்று திரட்டிக் கொள்ள வேண்டும்.
நாம் தெருவில் இறங்கிப் போராடவும் தயாராக இருக்க வேண்டும். புல்டோசரை எதிர்கொள்ள வேண்டுமானால் நீங்கள் அதை எதிர்த்து நின்றாக வேண்டும்.
இந்தியா கூட்டணிக்குள் இந்த நிகழ்ச்சி நிரலை நீங்கள் எப்படி எடுத்துச் செல்வீர்கள்?
அது கேள்விதான். ஆனால், இந்தியா கூட்டணிக்கு வெளியே நாங்கள் சுதந்திரமாக செயல்படுவோம். மகாராஷ்டிரா, பீகார், பஞ்சாப் மாநிலங்களில் ஏற்கனவே துவக்கம் நிகழ்ந் துள்ளதாக நான் நினைக்கிறேன். அங்கெல்லாம் தேஜகூவில் பிளவு ஏற்பட்டுள்ளது.
பஞ்சாபில் விவசாயிகள் இயக்கத்தின் விளைவாக அகாலி தளம் பாஜகவை விட்டு விலகியது. பாஜகவின் மத்தியத்துவப்படுத்தப் பட்ட அதிகார குவிப்புக்கான ஆசையின் காரணமாக மகாராஷ்டிராவிலும் பீகாரிலும் பிளவு ஏற்பட்டது.
சந்தேகப்பட்டவர்களின் எண்ணம் தவறு என்று நிரூபிக்கும் வண்ணம் இன்னொரு பக்கம் இந்தியா கூட்டணி வளர்ந்து கொண்டே வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி ஒருபோதும் சேராது என்றார்கள். ஆனால், அவர்கள் சேர்ந்தார்கள். சரத் பவாரிடமிருந்து அஜித் பவார் விலகியதால் சரத் பவார் கூட்டணியிலிருந்து வெளியேறி விடுவார் என்றார்கள் இன்னும் அவர் கூட்டணிலேயேதான் இருக்கிறார்.
ஒவ்வொரு கட்சியும் தன்னுடைய சொந்த பிரச்சனைகளின் அடிப்படையிலான போராட் டங்களை தொடர்கிறார்கள். அவரவர்களின் அடிப்படையாக பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிற வரை எல்லாம் நல்லது தான்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)