2023, ஜூலை 7 அன்று கன்னியாகுமரியில் தோழர்கள் என்.கே நடராஜன் பொன்ராஜ் நினைவரங்கில், தோழர் அந்தோணி முத்து தலைமையில் தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் 4வது மாநில மாநாடு பெருந்திரள் தொழிலாளர் பங்கேற்பு மாநாடாக நடைபெற்றது. மாநாட்டு நுழைவு வாயிலில் தோழர் சுசிலா கொடியேற்றிய பின்பு, தியாகிகள் ஸ்தூபிக்கு தோழர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, தோல் மற்றும் தோல் பொருள் ஜனநாயக தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் ஏஐசிசிடியு மாநிலத் துணைத் தலைவருமான தோழர் சுகுந்தன் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின் முறையாக மாநாடு துவங்கியது. தோழர்கள் கார்மல், பிலோமினா, ராஜன், சிவராஜ், வெங்கடேசன், வேல்முருகன், சௌந்தர்ராஜன், இளையராஜா, ஆபிரகாம் ஆகியோர் முன்னிலை வகிக்க தோழர் சுசீலா வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாநாட்டைத் துவக்கி வைத்து அகில இந்திய கட்டுமான தொழிலாளர் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் எஸ்.கே. சர்மா உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத் தலைவரும் பீகார் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் வீரேந்திர குப்தா மாநாட்டை வாழ்த்திப் பேசினார். மாநாட்டு அறிக்கையை மாநில பொதுச் செயலாளர் தோழர் இரணியப்பன் முன் வைத்தார். அறிக்கை அவையால் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. கலைந்து செல்லும் மாநிலக் கமிட்டி சார்பாக முன்வைக்கப்பட்ட 31 பேர் கொண்ட மாநில குழுவையும் நிர்வாகிகள் பட்டியலையும் மாநாடு ஏக மனதாக ஏற்றுக் கொண்டது. மாநாட்டின் நிறைவாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநில அமைப்பாளர் தோழர் ரேவதி, புரட்சிகர இளைஞர் கழக மாநிலத் தலைவர் தோழர் சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக மாநாட்டை வாழ்த்தி இககமாலெ மாநிலச் செயலாளர் தோழர் பழ. ஆசைத்தம்பி உரையாற்றினார்.