சிபிஐஎம்எல் கட்சியின் இந்த மாநாடு வெற்றியடைய வாழ்த்துகிறேன். இந்த மாநாட் டில் எனக்கு வாய்ப்பு அளித்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது விடுதலை சிறுத்தைகள் கட்சி புரட்சிகர சிந்தனையாளர் மார்க்ஸையும் பின்பற்றுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடதுசாரி கட்சி என்று பறைசாற்றிக் கொள்கிறது. நான் அம்பேத்கர், பெரியார் கருத்துக்களை உள்வாங்கியது போலவே மார்க்ஸ் கருத்துக்களையும் உள்வாங்கி இருக்கிறேன். 10 ஆண்டுகளுக்கு மேலாக தேர்தலில் பங்கு பெறாமல் சமூக மாற்றத்திற்கான இயக்கமாக மட்டுமே இருந்து வந்தோம். இன்று எங்களுக்கு 4 எம்எல்ஏக்கள் 2 எம்பிக்கள் உள்ளனர். அனைத்து தென் மாநிலங்களிலும் எங்களுக்கு கிளைகள் உள்ளன. ஆந்திரா, தெலுங்கானா உட்பட சிபிஐஎம்எல் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளுடன் சேர்ந்து செயல்படுகிறோம்.
நாம் பாசிசத்தின் முக்கிய கூறுகளை கணக்கில் கொள்ள வேண்டும். பாசிச சர்வாதிகாரத்தின் வடிவங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பது டிமிட்ரோவின் கருத்து. சனாதன சங்பரிவார சக்திகளை பாசிசத்தின் வடிவமாக நாம் பார்க்கலாம். இது ஜனநாய கத்தை ஒழித்துக் கட்டி கும்பல் படை ஆட்சியை (mobocracy) வளர்க்கும்.
பெரும்பான்மை வாதமும் அரசு சலுகை சார் முதலாளித்துவமுமே மோடி ஆட்சியின் அடிப் படை கட்டமைப்பாக இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி அவர்களின் லட்சியமாக இல்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டுவது அவர்களின் இலக்காகும். அவர்கள் பொருளாதார சுயசார்பை மறுத்து ஒரு சிவில் இராணுவத்தை உருவாக்கி தங்கள் பிடிக்குள் வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள்.
எல்லா நிறுவனங்களும் மோடி ஆட்சியின் உபகரணங்களாக மாற்றப்பட்டுள்ளன.
தன் எழுச்சியான போராட்டங்களுக்கு அரசியல் வடிவம் கொடுத்து வழி நடத்தும் பொறுப்பு இடதுசாரிக் கட்சிகளுக்கு உள்ளது.
சமரசத்திற்கு இடமில்லாமல் மத வெறியை நாம் உறுதியாக எதிர்க்க வேண்டும். இந்திய ஜனநாயகத்தை பாசிசம் ஒரு சுனாமி போல் தாக்கிக் கொண்டிருக்கிறது. பெரும்பான்மை பெற்ற அரசாங்கம் பெரும்பான்மை வாத அரசாங்கமாக இயங்க விரும்புகிறது.
நிக்கோலஸ் போலணாட்ராஸ் பாசிசத்தின் மூன்று முக்கிய அம்சங்களாக கட்சி,குடும்பம், பிரச்சாரம் ஆகியவற்றை இனம் காட்டினார். இந்த ஆட்சியில் ஊடகம், ஆட்சியில் இருப்பவர் களின் பிரச்சார சாதனமாக மாற்றப்பட்டுள்ளது" என்றும் அவர் கூறினார்.