தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஈஆர்டி) அதன் வரலாற்று பாடப்புத்தகத்தின் 'இந்திய வரலாற்றின் கருப்பொருள்கள் பாகம் II' இல் இருந்து 'அரசர்களும் காலங்களும்: முகலாய அரசவைகள்' (16ஆம் 17ஆம் நூற்றாண்டுகள்) என்ற அத்தியாயத்தை நீக்கியுள்ளது. நாம் அறிந்த இந்தியாவின் ஆட்சிப்பகுதியின், கலாச்சாரத்தின் வரைபடத்தை வடிவமைப்பதில் முகலாயர் நிர்வாக ஒருங்கிணைப்பு முக்கியப் பங்காற்றி இருப்பதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் போது, இந்த நீக்கம் நமக்கு சில அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துகிறது. முகலாயர் ஆட்சியின் போது 'இஸ்லாமியமயமாக்கல்' நடைபெற்றது என்னும் நீண்டகால பிரிட்டிஷ் காலனிய/இந்துத்துவ பரப்புரை இருந்தபோதிலும், முகலாயர் காலகட்டம், தற்போது 'இந்து' எனப்படுகின்ற, குறிப்பிடத்தக்க பக்தி இயக்கம் மற்றும் பிற கலாச்சார நீரோட்டங்களை வடிவமைத்த, மதங்களுக்கிடையிலான கலப்பு மற்றும் ஒத்திசைவின் ஒரு வளமான பாரம்பரியத்தை பெற்றிருந்தது.
நவம்பர் 2022 இல், அசாமில் நடைபெற்ற கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'நமது வரலாற்றை நாம் பெருமையுடன் மாற்றி எழுதுவதை இப்போது யார் தடுக்க முடியும்? இதனை நாம் திருத்தியாக வேண்டும். நமது வரலாற்றை உலகின் முன்பு பெருமையுடன் வைக்கவேண்டும்.' என அறிவித்தார். சமீப காலங்களில் இந்துமுஸ்லிம் ஒற்றுமையை கட்டி எழுப்பும் நோக்கில் மகாத்மா காந்தியின் முயற்சிகள், காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து ராஷ்டிரிய சுயம்சேவக் மீதான தடை, அந்தப் படுகொலையில் நாதுராம் கோட்சேவின் பங்கு, அவரது பிராமணப் பின்னணி இவை அனைத்தும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 'நிபுணர்களின்' கோபத்தை எதிர்கொண்டன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதேபோல், 11ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் 'உலக வரலாற்றின் கருப்பொருள்கள்' பாடத்திலிருந்து 'மத்திய இஸ்லாமிய நிலங்கள்', 'கலாச்சாரங்களின் மோதல்', 'தொழில் புரட்சி' போன்ற அத்தியாயங்களும் நீக்கப்பட்டுள்ளன.
இந்திய வரலாற்றில் செய்யப்படும் திருத்தங்களை, மற்ற பாடங்களிலும் செய்யப்படும் இது போன்ற மாற்றங்களுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து தலித் எழுத்தாளர் ஓம் பிரகாஷ் வால்மீகி பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு 2002 குஜராத் கலவரம் பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டன; மக்கள் மீதும், நிறுவனங்களின் மீதும் அவசர நிலை காலத்தின் கொடூரமான தாக்கத்தைக் குறித்த பத்திகள் கைவிடப்பட்டன; நர்மதா பச்சாவ் அந்தோலன், தலித் சிறுத்தைகள், பாரதிய கிசான் யூனியன் போன்றவற்றால் வழிநடத்தப்பட்ட போராட்டங்கள், சமூக இயக்கங்கள் பற்றிய அத்தியாயங்கள் ஆகியவை சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டன. பாடப்புத்தகங்களை காவிமய மாக்கும் 2014க்குப் பிந்தைய இந்த முயற்சிகளில் மூன்று கருப்பொருள்கள் நீக்கப்படுகின்றன அல்லது நீர்த்துப்போக வைக்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது. முதலாவது, இந்திய வரலாற்றின் ஒரு அங்கமாக முஸ்லிம்களைக் குறிப்பிடுவது, இரண்டாவது, இந்நாட்டின் புகழ்மிக்க சமூகஅரசியல் வெகுமக்கள் இயக்கங் களைக் குறிப்பிடுவது, மூன்றாவது, ஆர்எஸ்எஸ் மற்றும் அவர்களின் கருத்தியலாளர்கள் செய்த அட்டூழியங்கள் என்பனவாகும்.
நீண்ட காலமாகவே ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக பள்ளிப் பாடத்திட்டங் களை சீரமைப்பது என்னும் இயக்கப்போக்கு உள்ளது. இந்த மறுசீரமைப்பிற்கு சட்டபூர்வத் தன்மையை வழங்குவதற்குத் தேவையான கொள்கைக் கட்டமைப்பை இப்போது தேசியக் கல்விக் கொள்கை (2020) அவர்களுக்கு வழங்கியுள்ளது. தேசியக் கல்விக் கொள்கை 2020இல் வரையறுக்கப்பட்டுள்ள கற்றல் நோக்கங்களில் ஆர்எஸ்எஸ்-ன் செல்வாக்கு தெளிவாகத் தெரிகிறது. ஆவணத்தில் குறிப்பிடப் படாமல் ஒதுக்கப்பட்டுவிட்டதன் மூலம், அரசமைப்புச் சட்ட உரிமைகளின் முக்கியத் துவத்தை குறைக்கும் வகையில் உருவாக்கப் பட்டுள்ள இந்தக் கல்விக் கொள்கை, 'சங்'கின் சொந்த மதிப்பீடுகள் மற்றும் அரசமைப்புச் சட்ட மதிப்பீடுகளின் விசித்திரமான கலவையாகும். மதிப்பீடுகளின் ஆதாரமாக, பண்டைய இந்திய பாரம்பரியம் பற்றிய குறிப்புகள் நிறைந்த, இஸ்லாம் பற்றிய குறிப்புகள் எதுவுமற்ற இந்த ஆவணம், கல்வியின் முக்கிய நோக்கமாக உரிமைகளுக்கு மாறாக கடமைகள் அறிவுறுத்தப் படுவதை முக்கிய நோக்கமாக வரையறுக்கிறது.
தேசியக் கல்விக் கொள்கை (2020) மற்ற வழிகளிலும் காவிமயமாக்கத்தை எளிதாக்குகிறது.
ஆசிரியர் பயிற்சி, மதிப்பீடு செய்தல், கல்வி வளாகங்களில் பாதுகாப்பு சேவைகள் போன்ற செயல்பாடுகளை தனியார் அமைப்புகளுக்கு ஒப்பந்த சேவைகளாக மாற்ற இது அரசாங்கத்தை ஊக்குவிக்கிறது. கல்வியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகளின் பங்கேற்பைக் கட்டுப்படுத்துவதில் தெளிவு இல்லாததால், ஆசிரியர் கல்வி, மதிப்பீடு செய்தல், பிற வளாக சேவைகளில் ஆர்எஸ்எஸ் ஆதரவு அமைப்புகள் அதிகம் பங்கு வகிக்கும் வாய்ப்புகள் உருவாகும் என்ற உண்மையான அச்சம் உள்ளது. கல்வியில் அச்சம், பிரிவினை, கீழ்ப்படிதல் போன்ற சூழலை உருவாக்க இது காவிமயமாக்கப்படும் பாடத்திட்டங்களுடன் இணைந்து செயல்படும். இதன் மூலம் விமர்சன கல்விமுறை, அரசமைப்புச் சட்டத்திற்கு ஆதரவான கல்விமுறை ஆகியவை ஒழித்துக்கட்டப்படும். இதோடு கூட, பெரும் சிக்கன நடவடிக்கைகள், தொழிற்கல்வி, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட இந்துத்துவ பாடத்திட்டம் ஆகியவற்றின் வழியாக வழங்கப்படும் மலிவான, இணக்கமான தொழிலாளர் சக்தி மூலம் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த ஏற்பாட்டில் பெரும் லாபம் ஈட்ட வழிவகை கிடைக்கும். தேசியக் கல்விக் கொள்கையால் கிடைக்கப்போகும் இலாபத்திற்கான (வெளிப்படையான அல்லது மறைக்கப்பட்ட) புதிய வாய்ப்புகளைப் பற்றி குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.
என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின் மீதான தாக்குதல்கள் நமது கவனத்தை கோருகின்றன. ஏனெனில் தற்போதைய பாடப்புத்தகங்கள் முந்தைய பாடப்புத்தகங்களை விடவும் மக்களின் ஜனநாயக மரபுகளையும் அரசமைப்புச் சட்ட உணர்வையும் பிரதிபலிக்கின்றன. இந்த பாடத்திட்ட அடிப்படைக் கட்டமைப்பு 2005 இல் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் போது தயாரிக்கப்பட்டது. ஆனாலும் இந்தப் பாடப்புத்தகங்கள் இந்திய சமூகம் மற்றும் வரலாற்றின் காங்கிரசின் நோக்குநிலை சார்ந்த கதையாடல்களுக்கும் அப்பால் சென்றன. ஒரு உதாரணத்திற்கு, 2005 க்குப் பிந்தைய பள்ளி வரலாற்றுப் பாடத்திட்டம், பிராந்திய வரலாறுகளை கற்பதற்கு அதிக அழுத்தம் கொடுத்தது. சாதிய, பாலின ஒடுக்குமுறையின் வரலாறுகளை அவற்றைக் புரிந்துகொள்ளும் நோக்கில் சிந்திப்பதற்கும், கடந்த காலம் குறித்த தகவல்களின் அதீத சுமைகளுக்குப் பதிலாக, வரலாற்று ரீதியாக சிந்திக்கவும் குழந்தைகளுக்கு கற்பிக்க முயன்றது. இந்த பாடத்திட்ட அடிப்படைக் கட்டமைப்பானது, ஓரளவுக்கே என்றாலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு கல்வியை ஜனநாயகப்படுத்தும் 1970களில் தொடங்கப்பட்ட இயக்கப்போக்கின் விளை பொருளாகும். இது தலித் பகுஜன், பெண்ணியவாத, பழங்குடியின, மார்க்சிய அறிஞர்களின் பல தலைமுறையினரின் நோக்கு நிலையை ஒன்றிணைத்தது. என்சிஇஆர்டி பாடத் திட்டத்தின் மீதான இந்தத் தாக்குதலானது விமர்சன நோக்கிலான அறிவை உருவாக்கிய கல்வியளிக்கும் பொதுவெளி மீதான தாக்குதலின் மற்றொரு வெளிப்பாடாகும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)