தமிழ்நாட்டில் நேற்று இருவேறு இடங்களில் நடைபெற்ற கள்ளச் சாராய விற்பனையால் குடித்த 14 பேர் பலியாகி உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் 9 பேர் உயிரிழப்பு, 43 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல, செங்கல்பட்டு மாவட்டத்தில் சித்தாமூரில் 5 பேர் உயிரிழப்பு 7 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உடனடியாக காவல்துறை சோதனை நடத்தினர். கள்ளச்சாராய வியாபாரிகளிடமிருந்து இதுவரை, 5901 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கள்ளச் சாராய வியாபாரிகள் 247 பேரை கைது செய்ததாகவும், அவர்களில் 81 பேர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், 121 பேர் சொந்த ஜாமினில் விடுதலை செய்யப்பட்டதாகவும் ( 'ஆளும் கட்சி' செல்வாக்கு மிக்கவர்கள் போலும்!) காவல்துறை அறிக்கை தெரிவிக்கிறது.
காவல்துறைக்கு தெரிந்தே தான் கள்ளச் சாராய வியாபாரம் நடைபெற்று வருகிறது. காவல்துறை - கள்ளச் சாராய வியாபாரிகள் கூட்டை உடைக்காமல் கள்ளச் சாராய உற்பத்தி- விற்பனையை தடுக்க இயலாது ; மக்கள் உயிர்களை பாதுகாக்கவும் இயலாது.
கள்ளச் சாராயம், டாஸ்மாக் மது இரண்டும் மக்களுக்கு கேடானதாகும்.தமிழ்நாட்டில், சாராயத்தால், மதுப் பழங்கத்தால் இலட்சக்கணக்கான குடும்பங்கள் வருமானத்தையும், உடல்நலம் இழந்து வீதிக்கு வந்துள்ளன. இதனால், உழைக்கும் பெண்கள் அன்றாடம் குடும்பத்தில் ஏராளமான துன்பங்களை சந்தித்து வருகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்கள் டாஸ்மாக் சாராயக் கடைகளுக்கு எதிராக நடத்திய போர்க்குணமிக்கப் போராட்டங்களை நாம் மறந்துவிட முடியாது.
தற்போதைய சாவுகளை தற்காலிக இழப்புகளாக கருதி நிவாரணங்கள் வழங்குவது மூலமாக கடந்து செல்லக் கூடாது ; இந்த பெரும் துயரச் சம்பவத்துக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். அபாய எச்சரிக்கையாக கருதி நீண்டகால நோக்கில் உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும்.
சிபிஐ-எம்எல் மாநிலக் கமிட்டி பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.
¶கள்ளச் சாராய வியாபாரிகள் மட்டுமல்லாமல், துணைபோகும் அதிகாரிகள், காவல்துறை மற்றும் அரசியல்வாதிகளையும் உடனே கைது செய்ய வேண்டும்! கண்காணிக்கத் தவறிய உயர்நிலை காவல் அதிகாரிகளை பொறுப்பாக்கிட வேண்டும்.
¶தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை விரைந்து மூட வேண்டும் !
¶தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு கொள்கையை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்!