1956ல் தொடங்கப்பட்டது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம். தமிழ்நாட்டின் பெருமையாகவும் வளர்ச்சியாகவும் பேசப் பட்டது. ஆண்டுக்கு ரூ 11,900 கோடி லாப மீட்டு கிறது என்எல்சி. ஆட்சியாளர்கள், "நவரத்னா" நிறுவனம் என்று மார்தட்டிக் கொள்கின்றனர்.
இந்தியாவின் பல மாநிலங்களிலும் விரிவு படுத்தியுள்ளனர். இப்போது, நெய்வேலி நிறுவனத்தை இந்திய நிறுவனமாக மாற்றியும் விட்டனர். பல தனியார் முதலைகளின் கண்ணை உறுத்துகிறது என்எல்சி இந்தியா!
இதுவரை, 37,256 ஏக்கர் (இன்றைய விலை ஏக்கர் ரூ30 லட்சம், ஆண்டுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 10 லட்சம் வரை வருமானம் ஈட்ட க் கூடிய விவசாய நிலம்), விவசாய நிலத்தை விவசாயிகள் கொடுத்துள்ளனர். வாக்குறுதி அளித்த படி இழப்பீடும் வழங்கவில்லை. வேலையும் கொடுக்கவில்லை. நிலத்தைக் கொடுத்த 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களிலிருந்து வெறும் 1800 பேர்களுக்கு மட்டுமே வேலை கொடுக்கப்பட்டது. 10000 க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளரை நிரந்தரப் படுத்திட வேண்டுமென்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் நிர்வாகம் செயல்படுத்தவில்லை. தொமுச, அதொசபே, சிஅய்டியு போன்ற வலுவான தொழிற்சங்கங்கள் இருந்தும் 10,000 பேர்களை பணியில் சேர்க்க வைக்க முடியவில்லை.
என்எல்சி, மேலும் மேலும் விரிவடைகிறது. ஆனால் கடலூர் மாவட்ட விவசாயம் சுருங்கி வருகிறது. நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்கு இறங்கிவிட்டது. வெறும் 8 அடி தூரத்தில் இருந்த தண்ணீர் இன்று 1000 அடிக்கு மேல் சென்று விட்டது. கடல் நீர் உள்ளே புகுந்து விடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
நிலம், நீர், காற்று அனைத்தும் அழிக்கப் பட்டு வருகிறது. மாவட்டத்தின் 30லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு கடும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது இந்திய என்எல்சி. இப்போது மூன்றாம் சுரங்கம் என்று சொல்லி 49 கிராமங்களில் இருந்து 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தை எடுக்க நிர்வாகம் அரசின் துணையோடு களத்தில் இறங்கியுள்ளது. மாவட்டத்தின் மொத்தமுள்ள விவசாயத்தில் 10% நிலத்தை அபகரித்துக் கொண்டது என்எல்சி. இதனால், வளமடைந்தவர்கள், ஊழல் என்எல்சி தலைவர்களும் அதிகாரிகளும் கழகங்களின் அரசியல்வாதிகளும் வடபுலத்து ஒப்பந்ததாரர் களும்தான். இவர்கள் கோடிசுவரர்களாகி விட்டார்கள். மகாலட்சுமி எனும் பெயர் கொண்ட நிறுவனம் நாட்டின் உள்துறை அமைச்சருக்கு நெருக்கமான நிறுவனமென்று பேசப்படுகிறது. முன்பிருந்த ஒரு என்எல்சி தலைவரது ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து தனியொரு ஆளாகிப் போராடிய 'மக்கள் முன்னணி' செல்வராசு திடீரென இறந்துவிட்டார். அவரது இறப்பில் மர்மம் உள்ளதென்று தொழிலாளர் நம்புகின்றனர். என்எல்சிக்கு நிலம் கொடுத்த விவசாயிகளும் உழைப்பைக் கொடுத்த தமிழ்நாட்டு, பிறமாநில தொழிலாளரும் ஓட்டாண்டிகளாகி விட்டார்கள். திட்டமிட்டே என்எல்சியிலிருந்து தமிழர்களை முழுவதுமாக விலக்கிவிட்டு வடமாநிலத்தவரைக் கொண்டுவர நிர்வாகம் சதி செய்து வருகிறது. சமீபத்தில் 299 பொறியாளர்கள் வேலைக்கு சேர்க்கப்பட்டனர். இதில் ஒருவர்கூட தமிழ்நாட்டவரல்ல.
மக்கள் விழித்துக் கொண்டனர். விவசாயி களை, தொழிலாளரை வஞ்சித்த என்எல்சிக்கு இனியும் நிலம் தரமுடியாது என்று போராட் டத்தில் இறங்கிவிட்டனர். மக்களின் ஆதரவை திரட்டிக் கொள்ள பாமக களத்தில் இறங்கி யுள்ளது. என்எல்சியை மாவட்டத் திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கூறி இரண்டு கட்ட போராட்டத்தை நடத்தியுள்ளார் 'சின்ன அய்யா' அன்புமணி ராமதாஸ்! பிடி மண்ணைக் கூட விட்டுத்தரமாட்டோம் என்று ஆவேசம் பேசிய ராமதாஸ், நிறுவனத்தை தனியாருக்கு விற்க மாட்டோம் என வாக்குறுதி அளித்தால் போராட்டம் பற்றி பரிசீலிக்கத்தயார் என்று கூறியுள்ளார். இவர் ஒன்றிய அதிகாரத்தில் இருந்தபோது என்எல்சியின் தவறுகளுக்கு எதிராக, கொள்ளைக்கு எதிராக எதுவும் செய்யவில்லை?!
இம்முறை திமுக கூட்டணி கட்சிகளும் போராட்டத்தில் இறங்கி உள்ளன. தமிழக வாழ்வுரிமைக் கட்சி முயற்சியின் பேரில் கூட்டுப் போராட்டத்தை நடத்தியுள்ளன. இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தில் திமுக கலந்து கொள்ளாதது பல கேள்விகளை எழுப்புகிறது. திமுக போராட்டத்தில் கலந்து கொள்ளாதது பற்றி, இதுவரை கூட்டணி கட்சிகளோ, திமுகவோ எவ்வித விளக்கத்தையும் தரவில்லை! போராட்டத்துக்குப் பிறகு நிர்வாகம் நடத்திய கூட்டத்தில், திமுக கிழக்கு, மேற்கு மாவட்டச் செயலாளர்கள் (அமைச்சர்கள் கணேசன், பன்னீர் செல்வம்) கலந்து கொண்டனர். வேளாண், உழவர் நலத்துறை அமைச்சர், பன்னீர்செல்வம், வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு விவசாயிகளை நிலத்தை தருமாறு வற்புறுத்தி வருகிறார். இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வாழ்வுரிமைக் கட்சி வேல் முருகனும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பி னரும் கூட்டத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.
அறுபது ஆண்டுகளுக்கு மேலான இழப்பும் ஏமாற்றமும் மக்களை போராடத் தூண்டி உள்ளன. கடந்த காலத்தில் பல போராட்டங்கள் நடந்திருந்தாலும் இம்முறை மாறுபட்ட நிலைமையைப் பார்க்க முடிகிறது. கட்சிகள் விவசாய மக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கி உள்ளதால் இது அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளது. பாமக தனது வன்னியர் அடித் தளத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முனைகிறது என்றால், திமுக கூட்டணிக் கட்சிகள் தங்கள் வாக்கு வங்கி கரையாமலிருக்க முயற்சி எடுத்து வருகின்றன. ஆனால், நாடாளு மன்றத் தேர்தலை முன்வைத்து நடத்தப்படும் கிளர்ச்சிகள், உண்மையில் ஒன்றிய மோடி அரசை வற்புறுத்துகிற போராட்டமாக நடத்தப்பட வேண்டும். கோரிக்கைகளை ஏற்று நிறைவேற்ற வைக்கும் போராட்டத்தை நடத்திட வேண்டும்.
நிலம் இழந்தவர்களுக்கு இப்போதுள்ள நிலவரத்தின் படி இழப்பீடு, குடியிருப்பு இழந்தவர்களுக்கும் இழப்பீடு, மாற்று இடம், உச்சநீதிமன்றம் தீர்ப்புப்படி தொழிலாளர் பணிநிரந்தரம், தற்போதுள்ள அனைத்து ஒப்பந்த தொழிலாளருக்கும் பணிநிரந்தரம், என்எல்சி செலவில் தோண்டப்பட்ட நிலங்களையும், பயன்படுத்தாத நிலங்களையும் பண்படுத்தி விவசாயிகளிடம் ஒப்படைப்பது ஆகியவை உடனடி கோரிக்கைகளாகும். மட்டுமின்றி, மாவட்டத்தின் சமூகப் பொருளாதார, வாழ்வாதாரம், இயற்கை சூழலுக்கு கடும் இழப்பு ஏற்ப டுத்திய என்எல்சி இந்தியா, மொத்த இழப்பைக் கணக்கிட்டு மாவட்ட மக்களுக்கு வழங்கிட வேண்டும். மூன்றாம் சுரங்கம் முயற்சியை கைவிடுவதோடு, ஆண்டுதோறும் படிப்படியாக என்எல்சி நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். மாநில அரசுக்கு தரவேண்டிய பலகோடிக்கணக்கான ராயல்டி தொகையை உடனடியாக ஒப்படைக்க வேண்டும். இது போன்ற கோரிக்கைகளுக்காகவும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இந்தப் போராட்டத்தில் தொழிலாளர், விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும். ஏஅய்சிசிடியு தொழிற் சங்கமும் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியும் மக்களை திரட்ட உறுதி ஏற்றுள்ளது.
'எல்லாம்வல்ல' மோடி அரசாங்கத்தையே மண்டியிட வைத்தது விவசாயிகள் போராட்டம்! தமிழ்நாட்டு தொழிலாளர், விவசாயிகளால் சாதிக்க முடியாதா? முடியும்.
மோடி பாசிசக் காவிக் கும்பலிடமிருந்து நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையும் குடிய ரசையும் பாதுகாக்க இந்திய மக்கள் போராடிக் கொண்டிருக்கும் போது, குடியரசுக்கு எதிராக 'கருப்புக்கொடி' சரிதானா? என்று கூட சிலர் கேட்கலாம். 'கருப்புக் கொடி' மக்கள் எதிர்ப்பின் ஆழத்தை, கோபத்தின் உயரத்தைக் காட்டுகிறது. மிக ஆழமான சுரங்கங்களும் மிக உயரமான மின்னுற்பத்தி கோபுரங்களும் மாவட்ட மக்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்தி விடும் போது வேறு என்னதான் செய்வார்கள்? இது குடியரசுக்கு எதிரான கருப்புக் கொடி அல்ல. என்எல்சியை கையில் வைத்திருக்கும் மோடி ஆட்சிக்கெதிரான கண்டனக் கொடி, என்எல்சி நிறுவனத்திற்கு எதிரான போராட்டக் கொடி.
என்எல்சி புதிய தலைவர் வெகு உற்சாகத் தோடு குடியரசு நாளில் தேசியக் கொடி ஏற்றி இருக்கிறார். வெளிப்படைத்தன்மையோடு என்எல்சியின் வளர்ச்சிக்குப் பாடுபடுவேன் என்று கூறியிருக்கிறார். நல்லது. முதலில் அவர், கருப்புக் கொடி ஏற்றிய ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு, போராடி வரும் தொழிலாளர் களுக்கு வெளிப்படையாக பதில் சொல்வது மிக மிக நல்லது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)