நாம் எதிர்கொள்ளும் மூன்று பெரிய கேள்விகள் இன்று இருக்கின்றன. அவை: உக்ரைன் யுத்தம், ரஷ்யா பற்றிய நமது அணுகு முறை, சீனா பற்றிய நமது அணுகுமுறை.
உக்ரைன் யுத்தத்தைப் பொறுத்தவரை, ரஷ்யா ஆக்கிரமிப்பை எந்த சந்தேகத்திற்கும் இடம் இன்றி கண்டித்தோம். புட்டின் அரசு பாசிச அரசு என்று குறிப்பிட்டிருக்கிறோம். யுத்தம் எந்த அளவுக்கு நீள்கிறதோ அந்த அளவுக்கு நம் அனைவருக்குமான கூடுதலான சிரமங்களை யுத்தம் கொண்டுவரும். ஒருவேளை மூன்றாம் உலக யுத்தம் என்ற அபாயத்தையும் அது கொண்டு வரலாம். இப்பிரச்சனையில் ரஷ்யாதான் ஆக்கிரமிப்பாளர். நேட்டோவுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா இந்த யுத்தத்தால் பலன் பெறும். ரஷ்ய ஆக்கிரமிப்பு முடிவுக்கு வர வேண்டும் என்று மட்டும் நாம் விரும்பவில்லை. அமெரிக்க ஆக்கிரமிப்பும் முடிவுக்கு வர வேண்டும் என்றும் விரும்புகிறோம். மேலும், நாம் நேட்டோ கலைக்கப்பட வேண்டுமென்றும் நாம் கோருகிறோம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வாகனமாக நேட்டோ இருக்கிறது.
லெனினின் தவறுகளை சரி செய்வதற்காக உக்ரைன் மீது போர் தொடுக்கப்பட்டுள்ளது என்று விளாடிமீர் புட்டின் சொல்கிறார். தேசிய இனப் பிரச்சனைகள் குறித்து லெனின் எடுத்த நிலைப்பாட்டினைத்தான் புட்டின் இப்படிச் சொல்கிறார்.
1917 புரட்சிக்குப் பின்பு தேசங்களுக்கு சுய நிர்ணய உரிமை கிடைத்தது. உக்ரைன் சுயாதி பத்தியம் உள்ள நாடாக மாறியது. நாம் லெனினின் நிலையை ஆதரிக்கிறோம். மேலும், லெனினுக்குப் பிந்தைய சோவியத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கை போன்றதே ரஷ்ய ஆக்கிரமிப்பு என்று கருதுகிறோம். அது பிரச்சனைக்குரியது.
ரஷ்யா மற்றும் சீனாவின் சோசலிச வரலாற்றின் காரணமாக அவர்களின் (குறிப்பாக) சர்வதேச கொள்கைகளை சிபிஎம் ஆதரிப்பதை நோக்கி சாய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. ரஷ்யா சோசலிச நாடாக இருந்தது. சீனா இன்னமும் சோசலிச நாடு என்றுதான் சொல்லிக்கொள்கிறது. ரஷ்ய சீன புரட்சிகளிலிருந்து நாம் உத்வேகம் பெறுகிறோம். இருந்தபோதும், சீனாவும் ரஷ்யாவும் 'கட்சி அரசாக' (Party State) மாறி விட்டன என்று நாம் புரிந்துகொள்கிறோம்.
ரஷ்யப் புரட்சி 1980களில் மங்கத் துவங் கியது. அப்போது சிபிஐஎம்எல் அந்த அதிகாரத் துவ அரசுக்கு எதிரான நிலையெடுத்தது. அந்த அதிகாரத்துவ அரசுக்கு எதிராகவும் ஆப்கானிஸ் தானை ஆக்கிரமித்ததற்கு எதிராகவும் நாம் நிலையெடுத்தோம். சிலர் 'சோசலிச குடியரசுகள்' சோசலிச ஏகாதிபத்தியமாக வடிவெடுத்து விட்டன என்று கூட குறிப்பிட்டனர். அதுவும் கூட ஒரு அதிதீவிர நிலைப்பாடுதான். நாம் அந்த அளவுக்குச் செல்லவில்லை. மாறாக, எந்தவித விமர்சனமுமின்றி ரஷ்ய மாதிரியை உயர்த்திப் பிடிக்க முடியாது என்று நாம் சொன்னோம்.
காலப்போக்கில் 'சீன குணாம்சம் உள்ள முதலாளித்துவமாக' சீனா மாறிவிட்டது. மிகவும் மலினமாக நல்வாழ்வு தத்துவமாக அது சோசலிசத்தைச் சுருக்கிவிட்டது. முதலாளித்துவம் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது உண்மைதான். ஆனால், மிகக் கடுமையான அளவுக்கு அரசியல் சுதந்திரமின்மை நிலவுகிறது.
மேற்கு வங்கம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அங்கே கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்தில் இருந்தது. ஆனால், அது நீடித்து நிற்கின்ற மக்கள் சார்பு அரசியல் கட்டுமானத்தை ஏற்படுத்த வில்லை, அதனால்தான் இன்று, மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளுக்கு ஒரேயொரு எம்எல்ஏ கூட இல்லாமல் போய்விட்டது. மேலும் மேற்கு வங்கத்தில் பாசிசம் வலுவான முன்னேற்றத்தை நிகழ்த்தியுள்ளது.
இன்று சோசலிச முகாம் என்று ஒன்றிருப்பதாக நாம் நம்பவில்லை. வடகொரியா, வியட்னாம் போன்ற சில நாடுகள் தங்களை சோசலிச நாடுகள் என்று அழைத்துக் கொள்கின்றன. தங்களை சோசலிச நாடுகள் என்று இந்நாடுகள் சொல்வதை, ரஷ்யா, சீனா சோசலிசம் விவகாரத்தில் செய்தது போல நாம் ஆய்வுக் கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்கிறோம். ஆப்பிரிக்காவிலும் பாகிஸ்தானிலும் சீனாவின் முதலாளித்துவம் என்ன செய்கிறது என்பதை நாம் விமர்சனக் கண்ணாடி வழியே பார்க்க வேண்டும். எனவே, ரஷ்யாவிடம் அதன் கடந்தகால சோசலிசம் காரணமாக சிபிஐஎம் பாசம் காட்டுவது போல நம்மால் அணுக முடியாது. எனவே, உக்ரைனுக்கு எதிரான யுத்தத்தை நாம்எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி கண்டிக்கிறோம்.
இப்போது உலகம் பன்முக உலகத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ஒரு பக்கம் அமெரிக்காவின் பொருளாதாரம் சரிந்து கொண்டி ருக்கிறது. அதேபோல அதன் ராணுவ பலமும் மங்கிக் கொண்டிருக்கிறது. அப்படி இல்லை யென்றால், ஈராக் போல உக்ரைனும் நொறுங்கிப் போயிருக்கும். மற்றொரு பக்கம் பிராந்திய அதிகார குழுவினர் (regional power blocks) ஒன்று சேர்ந்து (சீனாவை, தெற்காசியாவை மையப்படுத்தி) சர்வதேச அரசியலை வடிவ மைக்கப் பார்க்கின்றனர். அது ஒரு போக்காக இருக்கிறதே தவிர முழுமையானதொரு காட்சியாக இன்னமும் வடிவம் பெறவில்லை. பன்முகத்தன்மை உள்ள உலகு என்பது நமக்கு பலன் தரக் கூடிய ஒன்றாகும். ரஷ்யாவும் சீனாவும் எழுந்து வருவது பல்துருவ உலகு உருவாவதற்கு ஆதரவான ஒன்றாகும். ஆனால், நாம் சர்வதேச அரங்கில், எந்த விமர்சனமுமின்றி ரஷ்யாவை ஆதரிக்கிறோம் என்றோ, அல்லது சீனாவை ஆதரிக்கிறோம் என்றோ பொருள் அல்ல. அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் அவற்றின் சாதக பாதகத்தை பொறுத்தே ஆதரிப்போம்.
இந்த நாடுகளின் சர்வதேச கொள்கைகள் குறித்த நமது நிலைப்பாடு எதுவாக இருந்தாலும் அதனை, (நாம் அவற்றில் எதனையாவது ஆதரிக்கிறோம் என்றால் கூட), இந்தியாவில் இன்று நாம் நடத்தி வரும் பாசிச எதிர்ப்புப் போருக்கு அவர்களிடமிருந்து உத்வேகம் பெறுகிறோம் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. ரஷ்யப் புரட்சி மற்றும் சீனப் புரட்சியின் பல்வேறு அம்சங்களிலிருந்து நாம் உத்வேகம் பெறுகிறோம் என்றாலும் நாம் அந்த நாடுகளை பின்பற்ற வேண்டிய மாடல் என்று ஒருபோதும் உயர்த்திப் பிடித்ததில்லை. மாவோ கூட சோசலிசத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்று சொன்னார். நாம் அதில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற கோட்பாட்டை நாம் ஒப்புக்கொள்ளும் அதே சமயம், ஜனநாயகம் இல்லாமல் சோசலிசம் இல்லை என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். மேலும், இந்தியாவில் சோசலிசம் நமது பல கட்சி ஜனநாயக முறைக்குள்தான் செயல்பட வேண்டும். பல்வேறு அரசுகள் வந்தாலும் போனாலும் சோசலிச அடித்தளம் பாதிப்புக்கு ஆளாகாமல் இருக்கும் வகைப்பட்ட நீடித்து நிற்கும் வலுவான அரசியல் அமைப்பை (durable political fabric) உருவாக்குவதை நோக்கி நாம் போக வேண்டும். நாம் நிச்சயமாக முதலாளித்துவ ஜனநாயகத்தை உயர்த்திப் பிடிக்கவில்லை. மாறாக, முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட, பாட்டாளி வர்க்கச் சர்வா திகாரத்தில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.
இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை அமெரிக்காவை நோக்கியோ அல்லது இஸ்ரேலை நோக்கியோ நகரக் கூடாது என்று நாம் நம்பு கிறோம். இந்த இரண்டு நாடுகளும் ஏகாதிபத்தி யத்தின் இரண்டு பெரிய தொடர்புப் புள்ளிகள் ஆகும். நாம் நமது அண்டை நாடுகளான ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், வங்க தேசம், நேப்பாளம் மற்றும் பிறருடன் பொதுவான அம்சங்களைத் தேட வேண்டும்.
ஸ்டாலின் குறித்து
1992ல் நாம் ஒரு தீர்மானத்தை நிறை வேற்றினோம். ஸ்டாலின் தலைமையின் கீழ் சோசலிச பாதையிலிருந்து வழி விலகல் ஏற்பட்டது என்று நாம் அதில் விமர்சனம் செய்தோம். ஸ்டாலினின் பாசிச எதிர்ப்பு மரபை நாம் ஏன் வலுவாக உயர்த்திப் பிடிப்பதில்லை என்று சிலர் ஆச்சரியப்படலாம். இரண்டாம் உலக யுத்தத்தின் இறுதியில் ஹிட்லர் வீழ்த்தப் படுவதற்கு ஸ்டாலின் தனியொருவராக பொறுப்பாவார் என்று நாம் நம்பவில்லை. செம்படையின் தலைமை தளபதி என்ற முறையில் அவர் மிகப் பெரிய பாத்திரம் ஆற்றினார். (போர்க் காலங்களில் சாதாரணமாக நடப்பது போன்று) அப்போதைய மக்களின் பாசிச எதிர்ப்புப் போராட்டங்கள் கவனிக்கப்படாது போயின. அந்த பாசிச எதிர்ப்பு மக்கள் போராட்டங்களுக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. மேலும் பாசிச எதிர்ப்புப் போருக்கான பெரிய தத்துவப் பங்களிப்பு எதனையும் ஸ்டாலின் செய்துவிட வில்லை. கிளாரா ஜெட்கின், டிமிட்ரோவ் போன்றோர்களின் தத்துவப் படைப்புகளையே நாம் நம் ஆய்வுக்குப் பயன்படுத்துகிறோம்.
இவையெல்லாம், சர்வதேச சூழல் குறித்த நமது புரிதலை உருவாக்கிய முக்கியமான தீர்மா னிக்கும் கூறுகளாகும் (broad thrust). கருத்து வேறுபாடுகள் இருக்கும் என்றால், அனுமதிக் கத்தக்க அளவுக்கு, நாம் வேறுபாட்டை தக்க வைத்துக்கொள்ளலாம். நீங்கள் வேறு ஏதேனும் சேர்க்கைகளைச் செய்ய வேண்டும் என்று விரும்பினால் அவை செய்யப்படலாம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)