சர்வாதிகாரியை
அரியணையிலிருந்து விரட்டுவோம்!
பாஜக தனது பாசிசக் கோரப்பற்களை உலகுக்கே காட்டிட முதல் கட்ட தேர்தலே போதுமானதாகிவிட்டது. முதல் கட்டத் தேர்தலில், வாக்களித்தோர் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சிதான் பேசப்பட வேண்டிய முக்கிய விசயமாகியிருக்கிறது. பதினாறு மாநிலங்கள், நான்கு ஒன்றிய பகுதிகளின் (யூனியன் பிரதேசங்கள்) 102 தொகுதிகளுக்கான முதல் கட்டத் தேர்தல் நடைபெற்றது. ஏழு கட்ட மக்களவைத் தேர்தல்களில் இதுவே அதிக தொகுதிகளைக் கொண்ட கட்டமாகும். இதில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் வாக்களித்தோர் எண்ணிக்கை அய்ந்து விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. பாஜக/தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) வசமுள்ள தொகுதிகளில்தான், எதிர்க் கட்சி கூட்டணி தொகுதிகளை விட, வாக்களித்தோர் எண்ணிக்கை அதிக வீழ்ச்சி அடைந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.
வாக்களித்தோர் எண்ணிக்கையில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சி என்பது பாஜக வாக்காளர்களிடம் நிலவிய விருப்பமின்மை, உற்சாகமின்மையின் பிரதிபலிப்பு என்பது தெளிவாகிறது. 2014, 2019 இல் நரேந்திர மோடியின் பெயரால் வாக்களித்திருந்த வாக்காளர்கள் பின்னர், தாங்கள் மோசமாக ஏமாற்றப்பட்டதாக உணர்கின்றனர். ”மோடி மாயாஜாலத்தின்” செல்வாக்கு தேய்ந்து வருவதையே இந்த ஏமாற்றமும் சோர்வும் சுட்டிக்காட்டுகின்றன என்பதை ஆட்சியாளர்களும் உணர்ந்து வருகின்றனர். எனவே அவர்கள் 400 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று மிருகப் பெரும்பான்மை பெறுவதை இலக்காக வைத்தனர். ஆவேசப் பரப்புரை இயக்கம் நடத்திட முயற்சித்தனர். ஆனால் அந்த ஆவேசம், கீழ் மட்டத்தில், மக்கள் மத்தியில் எந்த உற்சாகத்தையும் தூண்ட முடியவில்லை என்பதைத்தான் வாக்களித்தோர் எண்ணிக்கையின் வீழ்ச்சி சுட்டிக் காட்டுகிறது. மேலும் பல்வேறு மாநிலங்களிலும் அதிருப்திகளும் பிளவுகளுமே பாஜக முகாமில் காணக் கிடைக்கின்றன. இது பாஜகவின் உயர்மட்ட தலைவர்களிடையே அச்சத்தையும் விரக்தியையும்தான் உருவாக்கியுள்ளது. நரேந்திர மோடி, தானே முன்னின்று நடத்துகிற கண்மூடித்தனமான வெறுப்புப் பரப்புரையில் இந்த விரக்தியின் வெளிப்பாட்டைத்தான் காண முடிகிறது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம் லீக்-கின் முத்திரை பதிக்கப்பட்டுள்ளதாக மோடி அபத்தமாக குற்றம் சாட்டினார். அதன் மூலம், வாக்காளர்களை ஆதரவு - எதிர்ப்பு அணிகளாகப் பிளவுபடுத்தும் (துருவச் சேர்க்கை நிகழ்த்தும்) நோக்குடன் மோடி செய்யும் பரப்புரை அதனை அம்பலப்படுத்தி விட்டது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பொருளாதார நீதி, சமூக நலன், சமூக நீதி குறித்து பேசினால் அதற்கு கம்யூனிஸ்டுகளின் மீது ”பழி” போடப்படுகிறது. அம்பேத்கரின் தீவிரமான சமத்துவக் கருத்துகள், அவருடைய தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட அரசமைப்பு சட்டம் ஆகியவற்றை இகழ்வது மட்டுமல்ல, ஆரம்பத்தில் இருந்தே, முஸ்லிம்களையும் கம்யூனிஸ்டுகளையும் கூட சங்கிப் படைகள் தமது முதன்மை இலக்காக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலேயே மிகவும் வறுமை நிலவுகிற ஒரு மாவட்டமான ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் மோடி ஆற்றிய உரை, பொய் பேசுவதை, வெறுப்பு அரசியலை ஒரு உச்சத்துக்கே கொண்டு சென்று விட்டது. அதோடு ஒப்பிடுகையில், மோடியின் கடந்தகால உரைகள் ஓரளவு மென்மையானவையோ என எண்ணத் தோன்றுகிறது.
இந்தியாவின் வளங்களுக்கான முதல் உரிமையை முஸ்லிம்களுக்கு மன்மோகன் சிங் 2006லேயே வழங்கிவிட்டதாக கூறப்படும் பாஜகவின் கேடுகெட்ட பரப்புரையை மோடி மீண்டும் துவங்கி விட்டார். இது முற்றிலும் பொய் என உண்மையறியும் சோதனைகள் பல அதைத் திரும்பத் திரும்ப அம்பலப்படுத்தி இருக்கின்றன, உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கின்றன. தேசிய வளர்ச்சி கவுன்சிலின் 52 வது கூட்டத்தில், அப்போதைய பிரதம மந்திரி மன்மோகன் சிங், யுபிஏ-1 அரசாங்கத்தின் முன்னுரிமைகளை கோடிட்டுக் காட்டினார். அந்த உரையில், விவசாயம், நீர்ப்பாசனம், உடல்நலம், கல்வி போன்ற துறைகளை வளர்த்தெடுப்பதற்கான நடவடிக்கைகள், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட சமூகப் பிரிவினரின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் பற்றி வலியுறுத்திப் பேசினார். அதைத் திரித்து, முஸ்லிம்களின் நலன் குறித்த பிரச்சனையை, ஒட்டுமொத்த நாட்டு வளர்ச்சி மேம்பாடு எனும் பின்னணியில் இருந்து துண்டித்து பொய் மூட்டையை அவிழ்த்து விட்டு வருகின்றன சங்கிப் படைகள். சமூகத்தின் பிற பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக முஸ்லிம்களை நிறுத்த முயற்சிக்கின்றனர். அத்தகைய புளுகுமூட்டையை, நச்சுப் பரப்புரையை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்கிறார் மோடி.
இந்து பெண்களின் தாலியும் பறிக்கப்படும் என்ற பொய்யின் மூலம் முஸ்லீம்களுக்கு எதிராக, காங்கிரசுக்கு எதிராக அவர்களை தூண்டி விட முயற்சிக்கிறார் மோடி. ஒருவேளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து விட்டால் சாமான்ய மக்களின் சொத்துக்கள் பிடுங்கப்படும் (மறுபங்கீடு செய்யப்படும்) என்று பயமுறுத்துகிறார். இவையெல்லாம், இன்று வரை எந்த ஒரு தலைவரும் செய்யத் துணியாத அளவுக்கு வெறுப்பை விதைக்கிற செயலன்றி வேறல்ல. முஸ்லிம்களைத் தீயவர்களாக சித்தரிப்பதற்காக, அவர்கள் அதிக பிள்ளை பெறுகிறார்கள், அண்டை நாடுகளிலிருந்து ஊடுருவுகிறார்கள் என்பது போன்ற பழைய பூச்சாண்டி காட்டுகிறார் மோடி. பத்தாண்டுகள் ஆட்சியில் இருக்கும் பிரதம மந்திரியே இதுபோன்று விஷத்தை கக்குவது, இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அரசமைப்புச் சட்ட கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள தீவிர அச்சுறுத்தலைக் கோடிட்டு காட்டுவதாக இருக்கிறது.
சாதாரண மக்களின் சொத்துக்களுக்கும் வருமானத்திற்கும் மிகப்பெரிய எதிரி மோடி அரசாங்கம்தான் என்பதை கடந்த பத்தாண்டு கால ஆட்சியும் மக்கள் அனுபவமும் சுட்டிக்காட்டுகிறது. பணமதிப்பிழப்பு முதல் முழுமுடக்கம் வரை, முழுமையான தனியார்மயம் முதல் உழைக்கும் மக்களை வறுமையில் தள்ளுவது வரை, மிகப்பெரும் பணக்காரர்கள் தமது செல்வத்தை மேலும் மேலும் குவிப்பதற்கான திட்டங்கள் வரை தாக்குதல் மேல் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசாங்கம். சாதாரண மக்களின் குறைந்தளவு சேமிப்புகளையும் வருமானங்களையும் கூட அவர்களிடமிருந்து திட்டமிட்ட ரீதியில் அபகரித்து வருகிறது. கருப்புப் பணத்திற்கு எதிரான போராட்டத்தின் வெற்றி என பணமதிப்பிழப்பைச் சொல்லி, அதனால் விளைந்த மக்களின் அவலத்தைக் கண்டு குரூரமாக மகிழ்ந்தார் நரேந்திர மோடி. மோடியைப் பொறுத்தளவில் அனைத்து வளங்களுக்குமான முதல் உரிமை அவரது கார்ப்பரேட் நண்பர்களுக்கு மட்டுமே சொந்தமானது. அதே வேளையில், 80 கோடி இந்தியர்கள் மாதத்திற்கு 5 கிலோ இலவச ரேஷன் பொருளைப் பெற்றுக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டுமென பணிக்கப்படுகிறார்கள்.
543 உறுப்பினர்கள் கொண்ட ஒரு அவையில் 400க்கும் கூடுதலான
பெரும்பான்மை பெறும் பீற்றலுடன் துவங்கிய மோடியின் பரப்புரை இயக்கம், தற்போது, காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடும் என மிரட்டுவதாகவும், தனியார் மயம் போன்ற பேரழிவுமிக்க கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளிலிருந்து விலகிப் போய்விடும் என பயமுறுத்துவதாகவும் மாறிப்போய் இருக்கிறது. ஆட்சியாளர்கள் அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. பீதியடைந்த ஆட்சியாளர்கள், தமது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக வெறுப்பை, வெறியை தூண்டுவது மட்டுமல்ல, அதையும் தாண்டி, சகலவிதமான சதி நடவடிக்கைகளிலும் இறங்குவதைக் கண்டு ஆச்சரியப்பட ஏதுமில்லை. சண்டிகர் வாக்கு எண்ணிக்கை மோசடியில் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட பிறகு, ஆட்சியாளர்கள் இனி ஓரளவுக்காவது நியாயமாக நடந்து கொள்வார்கள் என எதிர்பார்த்தவர்களுக்கு, தேர்தலைத் திருடிய சூரத் மாதிரி பெரும் அதிர்ச்சியைத்தான் கொடுத்தது. வென்றவர்களை விலை கொடுத்து வாங்கும் ‘குதிரை பேரம்’ என்பது மாறி, தேர்தலே இல்லாமல் வெற்றி, வேட்பாளர்களையே விலை பேசுவது என்கிற தேர்ச்சி பெற்ற கலையாக ஆகிவிட்டது.
சுட்டெரிக்கும் கோடை வெயிலில் 2024 தேர்தல் நடக்கிறது. இந்நேரத்தில் பாசிஸ்ட்டுகளை ஆட்சியிலிருந்து வெளியேற்ற, ஜனநாயக சக்திகள் அதிக விழிப்புணர்வுடனும் தீர்மானகரமாகவும் பணியாற்றிட வேண்டும். வேலைவாய்ப்பு, சமூக நீதி என்ற மய்ய நிகழ்ச்சி நிரலையொட்டி மக்கள் அணிதிரண்டு வருகிறார்கள். நாட்டின் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறை, அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டம், பன்மைத்துவம், உள்ளடங்கிய கலாச்சாரம் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டுமென மக்கள் உறுதி பூண்டிருக்கிறார்கள். இதனால் ஆட்சியாளர்கள் கலங்கிப் போயிருக்கிறார்கள் என்பதை சர்வாதிகாரியின் கண்களில் தெரியும் பீதியே காட்டிக்கொடுத்து விடுகிறது. தன்னுடைய பணியை சரியாக செய்யும் தேர்தல் ஆணையம் மட்டும் இப்போது இருக்குமானால், விஷத்தைக் கக்குகிற வெறுப்புப் பரப்புரைக்காக இந்நேரம் பிரதமர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். ஆனால், தேர்தல் ஆணையம் தவறுகளைக் கண்டும் காணாமல் இருக்கும் போது, மக்கள் நீதிமன்றம்தான் அதற்கு சரியான தண்டனை வழங்க வேண்டும். முதல் கட்டத் தேர்தல் உருவாக்கிய வேகத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நமது பரப்புரையை தீவிரப்படுத்த வேண்டும். உறுதியாக பணியாற்றிட வேண்டும். வெறுப்பு, பொய்கள், பயங்கரம், கொள்ளையின் பேரழிவுமிக்க பத்தாண்டு கால ஆட்சியைத் தோற்கடித்திட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)