நமது மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதியை உறுதி செய்வதற்காக நமது முழு நாட்டையும் ஜந்தர் மந்தராக மாற்றுவதற்கான நேரம் இது !
இன்று ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மல்யுத்தப் போராட்டத்தில் சிபிஐ(எம்எல்) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் கலந்து கொண்டார். பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக தைரியமாகப் பேசும் மற்றும் பாலின நீதிக்கான போராட்டத்தை தைரியமாக வழிநடத்தும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு தனது ஒருமைப் பாட்டைத் தெரிவித்தார். பிரிஜ் பூஷன் ஷரண் சிங் போன்ற வர்களுக்கு பாஜக வழங்கிய அனுசரணை மற்றும் தண்டனையின்மை எவ்வாறு மல்யுத்த வீரர்களின் நீதிக்கான போருக்கு உறுதியையும் ஆதரவையும் வலுப்படுத்தப் போகிறது என்று திபங்கர் கூறினார். "நமது பெண் மல்யுத்த வீராங்கனைகள் நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் போது, மணிப்பூரில் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டி ருக்கும் வேளையில், ஒன்றிய பாஜக அரசுக்கு சொந்த மக்களுக்காக நேரம் ஒதுக்க முடியாத நிலையில், பிரதமரோ கர்நாடகா பிரச்சாரத்தில் மும்முரமாக இருக்கிறார்” என்று அவர் வேதனை தெரிவித்தார்.
ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்களின் இரண்டாம் கட்ட தர்ணா நடந்து இரண்டு வாரங்கள் ஆகிறது. உச்ச நீதிமன்றத்தின் தலை யீட்டைத் தொடர்ந்து பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு 10 நாட்கள் கடந்துவிட்டன. இந்தியாவின் விருது பெற்ற மல்யுத்த வீரர்கள் கடுமையான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை வைத்துள்ள நிலையில், இந்த பத்து நாட்களில், குற்றவாளி கைது செய்யப்படாதது மட்டுமின்றி முன் எந்தவொரு விசாரணையும்கூட நடத்தப் படவில்லை.
புகார் அளித்த ஏழு பேரில் ஒருவர் மைனர், எனவே இரண்டு முதல் தகவல் அறிக்கைகளில் ஒன்று பாலியல் குற்றங்களுக்கு எதிரான குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் பிரிஜ் பூஷன் சரண் சிங் சுதந்திரமாக சுற்றித் திரிந்து கொண்டு பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தி மல்யுத்த வீரர்களை மிரட்டுகிறார். மோடி ஆட்சியின் ஆதரவும் பாஜ மேலிடத்தின் ஆதரவும் தனக்கு உள்ளது என்று மொத்த உலகத்திற்கும் சொல்கிறார். பிரதமர் மோடியோ உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ அல்லது பாஜக தலைவர் நட்டாவோ தன்னை பதவி விலகச் சொன்னால், பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்கிறார். ஆனால் இந்தத் தலைவர்கள் யாரும் வாயைத் திறக்கவில்லை.
இகக(மாலெ), அகில இந்திய மாணவர் கழகம், ஏஐசிசிடியு, புரட்சிகர இளைஞர் கழகம் மற்றும் அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்களைக் கொண்ட குழு ஜந்தர் மந்தரிலுள்ள போராட்ட இடத்திற்குச் சென்றது. வினேஷ் போகட் மற்றும் சாக்ஷி மாலிக் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் உரையாடினர். சிபிஐ (எம்எல்) பொதுச் செயலாளரும் அவர்களுடன் உரையாடினார். ஒருமைப்பாடு தெரிவித்தார்.
இந்தியாவின் தலைசிறந்த பெண் மல்யுத்த வீரர்களின் நீதிக்கான போராட்டமானது, கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்களின் உணர்வைத் தூண்டி, தற்போதைய அநீதி மற்றும் பாசிச ஆக்கிரமிப்பு ஆட்சிக்கு எதிராக ஒரு தீர்மானகரமான எழுச்சியை உருவாக்கும் ஆற்றலைக் கொண் டுள்ளது. பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உ.பி.யைச் சேர்ந்த விவசாயிகள், தில்லியைச் சேர்ந்த தொழிலாளர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் மற்றும் பிற செயற்பாட்டாளர்கள் ஜந்தர் மந்தரில் இன்று ஒன்றிணைந்திருப்பது அவ்வாற்றலை வெளிக் காட்டுவதாக இருந்தது. மேலும், "ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் பஹல்வான்" முழக்கமானது சந்தேகத்திற்கு இடமின்றி போராட்டக்காரர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி ஒற்றுமை உணர்வை வளர்த்து, உறுதியை ஏற்படுத்தும்.
நமது மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக நிற்கவும் பிரிஜ் பூஷன் சரண் சிங் கைது செய்யப்படுவதை உறுதிப்படுத்தவும் பாலின நீதியை உத்தரவாதப்படுத்தவும் நாட்டு மக்களை சிபிஐ(எம்எல்) கேட்டுக்கொள்கிறது.