கள ஆய்வு
2023 டிசம்பர் 16 அன்று மாலை துவங்கி டிசம்பர் 18 மதியம் வரை விடாது பெய்த மழையோடு அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரும் சேர்ந்து 18ஆம் தேதி தூத்துக்குடியில் மாவட்டங் களில் பெரும் பாதிப்பைக் கொண்டு வந்தது. வரலாறு காணாத மழை. 17ந் தேதி காயல் பட்டினத் தில் 93 சென்டிமீட்டரும் திருச்செந்தூரில் 69 சென்டிமீட்டரும் ஸ்ரீவைகுண்டத்தில் 63 சென்டி மீட்டரும் அதிகபட்சம் மழை பெய்தது.
கோரம்பள்ளம், மீள விட்டான் குளத்து நீர் சூழ்ந்து தூத்துக்குடி நகரத்தை ஸ்தம்பிக்க வைத்தது. தூத்துக்குடி நகரமெங்கும் மழை வெள்ளம். புதிய பேருந்து நிலையம், பி அன் டி காலனி, முத்தம்மாள் நகர், ரஹ்மத் நகர், ஆதிபராசக்தி நகர் உட்பட ஏராளமான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப் பட்டன. தாமிரபரணி நதி உடைந்து ஏரல், உமரிக்காடு, முக்காணி, ஆத்தூர் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. நூற்றுக்கணக்கான வீடுகள் உடைந்து போய்விட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் இருபதுக் கும் மேற்பட்டவர்கள் இறந்து போனதாக சொல்லப் படுகிறது. கால்நடைகளும் ஏராளமாக இறந்து நீரில் மிதந்தன. வீட்டினுள் வெள்ளநீர் புகுந்து ஏராளமான பொருள்கள் சேதமாகியுள்ளன.
விவசாயத்தைப் பொறுத்தவரை தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு விதமான விவசாயம். வடக்கு மாவட்டத்தில் மானா வாரி விவசாயம், தெற்கு மாவட்டத்தில் பாசனப் பயிர் விவசாயம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடபகுதியான விளாத்திகுளம், கோவில்பட்டி, எட்டயபுரம், ஓட்டப் பிடாரம் பகுதியில் மான வாரிபயிர்களான மிளகாய், வெங்காயம், பாசிப்பயிறு, மக்காச்சோளம் 1.7 லட்சம் ஹெக்டேருக்கு மேற்பட்ட பகுதியில் பயிரிடப் படுகிறது. தூத்துக்குடி மாவட்டத் தினுடைய தெற்கு பகுதியான ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் பகுதியில்
பாசன பயிர்களான நெல், வாழை, வெற்றிலை பயிரிடப்படுகிறது. இந்தப் பயிர்களெல்லாம் நாசமாகி விட்டன.
பாசன பயிருக்கு 17500 ரூபாயும் மானாவாரி பயிருக்கு ஹெக்டருக்கு 8,500 ரூபாயும் அரசால் நிவாரணம் வழங்கப்படுகிறது. இந்த நிவாரணத் தொகை உயர்த்தப்பட வேண்டும்.
எத்தனை ஏக்கர் நிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலும் 5 ஏக்கர் மட்டுமே அரசால் கணக்கிலெடுக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட நிலம் முழுமையும் கணக்கிலெடுக்கப்பட வேண்டும், காப்பீடு செய்யப்பட்ட நிலத்திற்கு பயிர் காப்பீடு முழுமையாக வழங்க வேண்டும், மானிய விலையில் விதை வழங்க வேண்டும், பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவின் உப்பு உற்பத்தியில் முன்னணி மாவட்டம் தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளத்தில் ஆரம்பித்து ஆறுமுகநேரி வரை ஏறத்தாழ 70 கிலோமீட்டர் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.100 கோடி ரூபாய் மதிப்புள்ள 6 லட்சம் டன் உப்பு மழை நீரில் கரைந்துள்ளது அல்லது சேதமாக்கப்பட்டிருக்கிறது.
தூத்துக்குடி துறைமுகம் மூலம் ஏற்றுமதி/ இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் சரக்குப் பெட்டக மையங்களில் (CFS) வைக்கப்படுகிறது. 150 சரக்குப் பெட்டக மையங்களில் 75 சரக்கு பெட்டகங்களில் சேமிக்கப்பட்டிருந்த 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜவுளி மற்றும் உணவுப் பொருட்கள் வெள்ளத்தால் சேதம் ஆகிவிட்டன.
ஆயிரக்கணக்கான கடைகள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் சிறு வணிக நகரம். இங்கு 500க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. தண்ணீர் நுழையாத கடைகளே கிடையாது. வணிகர்கள் வாழ வழி யில்லாத நிலையில், வட்டியில்லாக்கடன் வேண்டும், வணிக நல வாரியம் மூலம் நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும், இரண்டு ஆண்டுகளுக்கு கடனுக்கான மாதாந்திர தவணை நிறுத்தி வைக்கப் பட வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
மத்திய அரசினுடைய ஆய்வு 5 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு இருக்கும் என்கிறது. ஆனால் உண்மையான பாதிப்பு அதைவிட அதிகம்.
வெள்ளத்திற்கு முன் குளங்களை தூர்வாரி முறையாக மராமத்து செய்யாததாலும் வெள்ளத்தின் போது கரை உடைப்பு ஏற்படாதவாறு கரைகளை அமைக்காததாலும் ஊருக்குள் வெள்ளப் பெருக் கெடுத்தது மட்டுமின்றி மழை நீர் வீணாக கடலில் கலந்து கொண்டிருக்கிறது. மழை நீரை சேமித்து வைக்கும் வகையில் குளங்கள் இல்லை. இந்த வெள்ளத்தின் போது பல சாலைகள், பாலங்கள் உடைந்து போய்விட்டன. அதில் ஒன்று மிகச் சமீபத்தில் கட்டப்பட்ட ஏரல், ஆத்தூர் பாலம். அந்தப் பாலம் கட்டுவதற்காக ஒப்பந்ததாரர்கள் கொடுக்கக் கூடிய கமிஷன் தொகை அதிகரித்து விட்டதால் பாலம் பலமின்றிப் போய்விட்டது என்று சொல்லப்படுகிறது.
தமிழக அரசு கேட்கும் 21000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும். தற்போது கொடுக்கப்படும் நிவாரணங்கள்
தற்காலிகமானது. வீடுகளை,கடைகளை, விவசாயத்தை, உப்பளத்தை இழந்தவர்களுக்கு அரசு நிரந்தரத் தீர்வுக்கு வழி ஏற்படுத்தவேண்டும். ஏரிகள், குளங்கள், கால்வாய்கள்
தூர்வாரப்பட வேண்டும். சூழலியலாளர்கள்
எச்சரிக்கை செய்வதுபோல் புவி வெப்ப மயமாதலை குறைக்கவும் பசுமை வாயு வெளியேற்றத்தைக்குறைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். புதிய தொழிற்சாலைகள் சூரிய ஒளிபோன்ற புதுப்பிக்கத் தக்க ஆற்றல் (Renewable energy) மூலம் இயங்க வேண்டும். சுற்றுப்புறசூழலை பாதிக்கும் தொழிற்சாலைகள் மூடப்படவேண்டும் அல்லது கழிவு நீர் முறையாக வெளியேற்றப்பட வேண்டும். குறிப்பாக ஸ்டெர்லைட்ஆலையை முற்றிலுமாக தூத்துக்குடியில் இருந்து
அப்புறப்படுத்திட வேண்டும். தூத்துக்குடியின் விளை நிலங்களை நாசமாக்கிய ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சந்தடி சாக்கில் மக்களுக்கு நிவாரண உதவிகள் கொடுத்து நல்லபெயர் எடுக்க முயற்சித்தது. மக்கள் அதை விரட்டியடித்தனர். அலையாத்திக் காடுகள் காப்பாற்றப்பட வேண்டும். நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்.
ஆற்றங்கரைகள் பலமாக்கப்பட்டு அலைக்கற்கள்
பதிக்கப்பட வேண்டும்.