நமது செயலுக்கு அடிப்படையாகவிருக்கும் கம்யூனிஸ்ட் கோட்பாடுகள் மத்திய கமிட்டிக்கும் பொருந்தும். பலமாக இருந்தாலும் பலவீனமாக இருந்தாலும் அது மத்தியக் கமிட்டி யையும் உள்ளடக்கியதுதான். அந்த உணர்வின் அடிப்படையில்தான் இந்த அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சோவியத் சோசலிச குடியரசுகள் வீழ்ந்த பின்னர், பலரும் தங்களைக் கம்யூனிஸ்ட்டுகள் என்று சொல்லிக் கொள்வதிலிருந்து, சப்தமே எழுப்பாமல் வெளியேறினர். அப்போதுதான் நாம் வெளிப்படை செயல்பாட்டுக்கு வந்திருந்தோம். நாங்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர் என்று உரத்துச் சொன்னோம்.
மூலதனம் பொருளாதார ஏகபோகத்தின் மூலமும் அதிகார ஏகபோக மயமாக்கத்தின் மூலமும் தன்னைத் தானே வலுப்படுத்திக் கொள்கிறது, ஆனால், பரந்த மக்கள் பலமும் எண்ணிக்கையும் நம் பக்கமிருக்கிறது. நாம் மக்களை அமைப்பாக்க வேண்டும். அவர்களின் உணர்வை மேம்படுத்தப் பாடுபடவேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை சொல்கிறது. முதலாளித்துவம் எப்படி தன்னைத்தானே பலப்படுத்திக் கொள்கிறதோ அதேபோல, நமது அமைப்புகளும் துடிப்பாற்றல் மிக்க விதத்தில் மக்களை பெருமளவில் அமைப்பாக்குவதன் மூலம் தன்னைத்தானே பலப்படுத்திக் கொள்ளவேண்டும். அப்படிப்பட்ட ஆற்றலை உள்ளார்ந்ததாகக் கொண்ட அமைப்பு முறையை நாம் வலுப்படுத்திட வேண்டும் வெகுமக்கள் போல்ஸ்விக் கட்சியைக் கட்டி எழுப்ப வேண்டும் என்று தோழர் வினோத்மிஸ்ரா சொன்னார். வெகுமக்கள் போல்ஸ்விக் கட்சி என்றால் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி என பொருளாகும். ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி என்பது பரந்த மக்கள் செல்வாக்கைக் கொண்டதாகவும் போல்ஸ்விக் (கம்யூனிஸ்ட்) குணாம்சம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று பொருளாகும். வெகுமக்கள் பலமும் போல்ஸ்விக் குணாம்சமும் ஒரு சேர இருக்கும் போதுமட்டும்தான் அது வெகுமக்கள் போல்ஸ்விக் கட்சியாக இருக்கமுடியும். இந்த இரண்டையும் ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்கமுடியாது. இன்னும் சொல்லப் போனால், வெகுமக்களை போல்ஸ்விக்குகளாக மாற்ற வேண்டும். போல்ஸ்விக்குகள் வெகுமக்களை ஈர்க்கத்தக்கவர்க ளாக இருக்க வேண்டும். அப்போது தான் நாம் வெகுமக்கள் போல்ஸ்விக்கட்சி எனக் கூறிக் கொள்ள முடியும். ஒவ்வொரு முறையும் நாம் இந்தக் கூற்றை, நமது அமைப்புகளின் மூலம் உயிருள்ள ஒன்றாக ஆக்கவேண்டும்.
வெளிப்படையான கட்சி என்றால் கட்டுப்பாடுகள் தளர்வாக இருக்கும் என்று பொருள் அல்ல. அது அசைந்து கொடுக்காத ஒன்றாக இருக்க வேண்டும். அதுகட்டுப்பாடுள்ள அமைப்பாக இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் நாடாளுமன்ற வேலைகள் கொண்டு வரும் சவால்களையும் எதிர்கொண்டு நிற்க வேண்டும்.
நமது மேடைக்கு பல எதிர்க்கட்சித் தலைவர்கள் வரலாம். பாசிச எதிர்ப்பு அரசியலை முன்கொண்டு செல்ல அனைத்து விதமான பாசிச எதிர்ப்பு சக்திகளையும் திரட்டிக் கொள்வது கம்யூனிஸ்டுகளின் கடமை. ஆனால், அவர்களைத் திரட்டும் பலம் நமக்கு எப்போது வரும் என்றால், எப்போது நமது சொந்த அடித்தளம் பலமாக இருக்கிறதோ அப்போதுதான் அந்த பலம் வரும். எனவே, பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் நாம் முன்னணியில் இருக்க வேண்டுமென்றால், நமது தலையாயக் கடமை என்பது நமது சொந்த அரசியல் பலத்தை, வெகுமக்கள் அடித்தளத்தைக் கட்டியெழுப்புவதே ஆகும்.
கடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலை ஆய்வு செய்தால், நமக்கு எங்கெல்லாம் வலுவான அமைப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் நாம் வெற்றி பெற்றோம் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். நாம் வெற்றிவாய்ப்பை இழந்த இடங்களில்கூட நமக்கோர் பலம், அமைப்பு இருந்த காரணத்தினால்தான் நாம் போட்டியாளர்களாக இருக்க முடிந்தது. பொதுவான சிலநோக்கங்களின் அடிப்படையில் வேறு பலசக்திக ளோடு ஒன்றுபடுவதன் மூலம் கிடைக்கும் பலம் அல்ல அது. மாறாக, நமது சொந்த பலத்தின் அடிப்படையில் தான் வேறு பலசக்திகளோடு ஒன்றுபடமுடியும். இதில் எந்தவிதமானமாயையும் இருக்கக்கூடாது.
நக்சல்பாரி காலத்திலிருந்தே, நமது உருவெடுத்த முறையின் கட்சி காரணமாக,கட்சி அமைப்பைக் கட்டியெழுப்புவதில் பிரச்சனைகள் நீடித்ததாகவே இருக்கின்றன. நமது இயக்கங்களில், கருத்தியலில், கொள்கையில் அல்லது கட்சி வழியில் நாம் பலவீனமாக இல்லை. ஆனால், அமைப்பு விவகாரங்களில் நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம். நாம் வெற்றிகளைப்பார்க்கிறோம். ஆனால், வெற்றிகளின் பின்னே என்ன இருக்கிறது என்பதைப்பார்ப்பதில்லை. நாம் மூலதனத்தைப் பார்க்கிறோம். ஆனால், மூலதனத்தை உருவாக்கியதில் ஒழிந்துபோன உழைப்பை நாம் பார்ப்பதில்லை. நாம் 12 எம்எல்ஏ சீட்டுகள் வென்றதைப் பார்க்கிறோம். ஆனால், எம்எல்கட்சி அமைப்பு சுமார் 50 ஆண்டுகளாக இங்கு செயல்பட்டு வருகிறது என்பதைப் பார்ப்பதில்லை. சூழ்நிலை மாறிக் கொண்டே இருக்கும். ஆனால், நம்மைக் குடைபோல காத்து நிற்பது அமைப்பு மட்டுமே.
முதல் இடத்தில் கேரளாவிலும், இரண்டாவது மூன்றாவது இடங்களில் திரிபுரா பீகாரிலும் இடது சாரிகள் இருப்பதைக் காண்கிறோம். ஆனால், பீகாரின் பின்னணியில் பார்க்கும்போது அங்கேயுள்ள இடதுசாரி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 16 என்பது கணிசமானதுதான். வங்காளத்தில் வரலாறு பின்னோக்கிச் சென்றுள்ளது. ஒரே ஒரு இடதுசாரி எம்எல்ஏ கூட அங்கில்லை. சிபிஐஎம் கட்சி பிரதானமாக கேரளாவிலும் தென்மாநிலங்களிலும் செயல்பட்டு வருகிறது. எனவே, இந்தி பேசும் மக்கள் வாழும் மாநிலங்களில் பிரதானமாக வேலை செய்யும் நமது தோள்களின் மீது மிகப் பெரும் சுமை சுமத்தப்பட்டுள்ளது.
இந்திப் பிராந்தியத்தில் நாம்தான் இடதுசாரி கட்சியாக இருந்து வருகிறோம். அதே பகுதியில்தான் ஆர்எஸ்எஸ்சும் மிகப் பலமாக இருக்கிறது. எனவே, பாசிச சக்திகளை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் கடமையை நாம் நிறைவேற்றியாக வேண்டும். 1990களில் இதே கடமையை நமது மாணவர் கழகம் எதிர் கொண்டு சாதித்தது. வாரணாசி, அலகாபாத், உத்தரக்கண்ட்டில் (மாணவர்) தேர்தல்களில் வெற்றி பெற்று, மாணவர் இயக்கத்தின் திசைவழியை மாற்றியது. மாணவர் இயக்கத்தின் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்துக்குமான புதிய வாய்ப்புகளை உருவாக்கியது. அதேபோன்ற நேரம் இப்போது நிலவுகிறது. அந்த சவாலை நாம் ஏற்றாக வேண்டும். அதற்கு நம் அமைப்பைப் பலம் பொருந்தியதாக வளர்த்திட வேண்டும்.
அவ்வப்போது நினைவு படுத்திக்கொள்ளும் ஒன்றல்ல அமைப்பு என்பது. அதனை நாம் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும், சிறப்பானதாக்க வேண்டும். புதுப்பிக்க வேண்டும். மாபெரும் இயக்கங்களைக்கட்டி எழுப்பிய அத்தனை பேருமே அமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள். "கற்பி, கிளர்ச்சி செய், அமைப்பாக்கு" என்று அம்பேத்கர் முழங்கினார். இந்த மூன்றில் ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை என்பதை அவர் உணர்த்தினார். அவை அனைத்தும் ஒன்றொடு ஒன்று ஒருங்கிணைந்தவை.
அனைத்து வேலைகளையும் செய்வது அனைவருக்கும் சாத்தியமில்லை. நமது சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் மக்கள் பணியாற்றுகிறார்கள். மற்றவர்கள் மக்கள் மத்தியில் சென்று பணியாற்றுகிறார்கள். நாம் அனைவரும் நம் அமைப்பின் போர் வீரர்கள். பொதுச் சமூகம் எம்எல்ஏக்களை விஐபிகளாகப் பார்க்கலாம். ஆனால், நமக்கு அது போன்ற சிந்தனைச் சுமைகள் கிடையாது.
நாம் மக்களுக்காக ஆற்றும் அனைத்துப் பணிகளுமே உயர்ந்த, மதிப்புள்ள வேலைகள்தான். இதில் உயர்வு தாழ்வு ஏதுமில்லை. சிலருக்கு சில பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவ்வளவு தான். நமது அனைவருக்குமான பொதுவான அம்சம், மிக உயர்ந்த பொறுப்பு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என்பதே. அதுதான் நமது முதன்மை அடையாளம். மற்ற அனைத்து அடையாளங்களும், அது பொதுச் செயலாளர் என்கிற பொறுப்பாக இருந்தாலும் சரி, மத்தியக் கமிட்டி உறுப்பினர் என்கிற பொறுப்பாக இருந்தாலும் சரி, எம்எல்ஏ என்கிற பொறுப்பாக இருந்தாலும் சரி, இவை அனைத்தும் நாம் செய்யும் வேலையைப் பொறுத்து, காலத்துக்கு காலம், அவ்வப்போது, மாறக்கூடியவை.
கட்சி அமைப்பில் பெண்களை ஏராளமாகச் சேர்த்திட வேண்டும். அதற்கு சிறப்பு கவனம் செலுத்திட வேண்டும். நமது அனைத்து முயற்சிகளும் அதை நோக்கி மேற்கொள்ளப் படவேண்டும். பெண்களின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மட்டும் போதாது, பெண் தலைவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது இன்னும் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த்து ஆகும்.
நாம் இந்தியாவின் பன்முகத் தன்மையைப் பிரதிபலிப்பதை நோக்கி நகரவேண்டும். ஆனால், அடையாளஅரசியல் செய்வதன் மூலம் நாம் அதனைச் சாதிக்க முடியாது. அம்பேத்கர் பல வகைப்பட்ட கருத்தியல்கள் பற்றி பேசினார். ஆனால், அவரைப் பின்பற்றியவர்கள் பின்னாட்களில், அவரை தலித்துகளின் தலைவராகச் சுருக்கிவிட்டனர்.
ஒடுக்கப்பட்ட மக்களை போராட்டங்களில் அணி திரட்டும் போது, அவர்கள் மத்தியில் கம்யூனிச கருத்துகளை நாம் உறுதியாக எடுத்துக்கூற வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)