கர்நாடகா தேர்தலின் ஆரவாரம் இப்போது அடங்கிவிட்டது. சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்று உள்ளது. சட்டமன்றத்தில் காங்கிரசுக்கு பெரும்பான்மை பலம் அளித்துள்ள கர்நாடக மக்கள், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சியையும், தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதையும் எதிர்நோக்கியுள்ளனர்.
2018ல் பாஜக பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஊழல் "ஆபரேஷன் கமலா' வழியாக பிளவுகளை ஏற்படுத்தியதன் மூலமும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியதன் மூலமும் ஓர் ஆண்டுக்குப் பிறகு அது ஆட்சியை அபகரித்தது. அரசாங்கம் அதன் மதவெறி, சாதிவெறி, கார்ப்பரேட் நிகழ்ச்சி நிரலை எவ்விதக் கூச்சமுமின்றி பின்பற்றியது. உண்மையில் வரலாறு காணாத ஊழல், விலைவாசி உயர்வு, வாழ்க்கை நடத்துவதற்கான செலவின் அதிகரிப்பு, வீழ்ச்சியடைந்த உள்கட்டமைப்பு, விவசாயிகள், தொழிலாளர் விரோதச் சட்டங்கள், விண்ணைத் தாண்டிய வேலையின்மை, அதிகரித்த கடன்சுமையால் முடங்கிய மாநில பொருளாதாரம், பெண்களுக்கு எதிரான வன்முறை, அவர்களின் சுதந்திரம், தன்னாட்சி மீதான தாக்குதல்கள், அதிகரித்து வரும் சாதி பாகுபாடுகளும் அட்டூழியங்களும், வகுப்புவாத நல்லிணக்கமின்மையும் மதம் சார்ந்த வெறுப்பும் என்ற அதன் வரலாற்றுக்கு பொருத்தமானதாக இந்த பாஜகவின் ஆட்சி இருந்தது.
காங்கிரஸ் 43% வாக்குகளுடன் 135 இடங்களை வென்றது. இவை இரண்டும் 1989 லிருந்து கர்நாடகாவில் எந்தக் கட்சியும் பெற்றதை விட மிகமிக அதிக எண்ணிக்கைகள் ஆகும். 2018 தேர்தலில் 38.1% வாக்குகளுடன் 80 இடங்களை காங்கிரஸ் வென்றது. தென்னிந்தியாவிலேயே பாஜகவிற்கு சிறந்த தேர்தல் வெற்றி கிடைத்த ஒரே மாநிலம் கர்நாடகா தான். மேலும் தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியைக் கண்ட ஒரே மாநிலமும் கர்நாடகா தான். 2018 தேர்தலில் 36.2% வாக்குகளைப் பெற்று 104 இடங்களை கைப்பற்றியதுடன் ஒப்பிடுகையில், இம்முறை பாஜக 36% வாக்குகளுடன் 66 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. மதச்சார்பற்ற ஜனதாதளம் 13 சதவீத வாக்குகளுடன் 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2018 தேர்தலில், மதச்சார்பற்ற ஜனதாதளம் 18% வாக்குகளுடன் 37 இடங்களை வென்றது. இது 1999க்குப் பிறகு அக்கட்சி பெற்ற மிகமிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.
பகுதி வாரியான செயல்பாடு:
கர்நாடகாவின் நிலப்பகுதி ஆறு அரசியல் துணைப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை சமூக சேர்க்கைகள், பொருளாதாரப் பண்புகள், அரசியல் வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. இவை கடலோர கர்நாடகா, பழைய மைசூர், மத்திய கர்நாடகா, கித்தூர் கர்நாடகா (மும்பை கர்நாடகா) கல்யாண கர்நாடகா (ஹைதராபாத் கர்நாடகா) மற்றும் பெங்களூரு மாநகராட்சி பகுதி எனப்படும். பாரம்பரியமாக ஒவ்வொன்றும் பல்வேறு கட்சி களின் கோட்டைகளாக இருந்து வருகின்றன. கடலோர கர்நாடகாவும் மத்திய கர்நாடகாவும் பாஜகவின் கோட்டைகளாக சொல்லப்படும் போது, ஹைதராபாத் கர்நாடகாவில் காங்கிரசும், பழைய மைசூரு பகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதளமும் வலுவாகக் காணப்படுகின்றன. பெங்களூரு விலும் ஓரளவிற்கு மும்பை கர்நாடகாவிலும் காங்கிரசும், பாஜகவும் மேலா திக்கத்திற்காகப் போட்டியிட்டு வருகின்றன.
கடலோர கர்நாடகா: இது பாஜகவின் பாரம் பரியக் கோட்டையாகும். அங்கு அது தனது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை களத்தில் அமல் படுத்தியுள்ளது. அங்கு பாஜக வலுவாக செயல் பட்டு, மொத்தமுள்ள இடங்களில் 13 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், இது 2018 ஐ விட 3 இடங்கள் குறைவானதாகும். மேலும் இந்த பகுதியில் அதன் வாக்குகளின் பங்கு 3.1% குறைந்துள்ளது. காங்கிரஸ் எண்ணிக்கையை 3லிருந்து 6 ஆக இரட்டிப் பாக்கியும் அதன் வாக்குகளின் பங்கை 2.8% அதிகரித் தும், 2018 ஐ விட சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்த இந்துத்துவா கோட்டையில் பாஜக சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், வாக்குகளின் பங்கு, வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை ஆகிய இரண்டிலும் காங்கிரஸ் அதன் 2018 செயல்பாட்டினைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்பட்டிருப்பதை யாரும் புறக்கணிக்க முடியாது.
பழைய மைசூரு: 64 இடங்கள் உள்ள இந்தப் பகுதி, மதச்சார்பற்ற ஜனதாதளம் பாரம்பரியமாக சிறப்பாக செயல்பட்டு வரும் பகுதியாகும். இருப்பினும் இந்த முறை, மதச்சார்பற்ற ஜனதாதளம் 2018 இல் பெற்ற 26 இடங்களுடன் ஒப்பிடும்போது 14 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. அதன்மூலம் 2018 இல் அது வென்ற இடங்களில் கிட்டத்தட்ட பாதியை இழந்துள்ளது. மேலும் அது இந்த பகுதியில் கிட்டத்தட்ட 7% வாக்குகளையும் இழந்துள்ளது. 2018ல் 20 இடங்களை பெற்றிருந்த காங்கிரஸ், இந்த முறை 43 இடங்களை பெற்றுள்ளதுடன், அதன் வாக்கு சதவீதம் 6.9% அதிகரித்துள்ளது. மறுபுறம், பாஜகவும் தனது வாக்கு சதவீதத்தை 2.8% அதிகரித்துள்ளது. இருப்பினும் அது பெற்ற இடங்கள் 16ல் இருந்து 5 ஆக குறைந்துள்ளது.மிகமிக முன்னதாகவே, மார்ச் 2023ல் மாண்டி யாவில் மோடியின் சாலைவழி பரப்புரையுடனும் பல கவர்ச்சிகரமான பேரணிகளுடனும் பாஜக வலுவாக முயற்சித்த பகுதி இதுவாகும். பாஜக இந்தப் பகுதியில் மேற்கொண்ட கவனக் குவிப்புக்கு ஏற்ப அது பெற்ற வாக்குகளின் பங்கு அதிகரிக்கவில்லை. மேலும், திப்பு சுல்தானால் உரிகவுடா நஞ்சேகவுடா கொல்லப்பட்ட புனைக் கதையைப் பயன்படுத்தி வொக்கலிகா வாக்கு வங்கியை வகுப்புவாதமயமாக்கும், அதில் துருவச் சேர்க்கையை உருவாக்கும் முயற்சியில் பாஜக தோல்வியடைந்தது. மேலும் அந்த சமூகத்திற்கு இடஒதுக்கீட்டை அதிகப் படுத்துவதன் மூலம் ஈர்ப்பதற்கு செய்யப்பட்ட முயற்சியும் கூட தோல்வியுற்றது. கட்சி விலகல்களும், தேவகவுடாவின் மகன்கள் ஹெச் டி குமாரசாமி, ஹெச் டி ராவன்னா இருவருக்கும் இடையிலான மேலாதிக்கப் போட்டிகளும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் வாய்ப்புகளை கடுமையாக பாதித்தது.
கித்தூர் கர்நாடகா: பாஜக பாரம்பரியமாக இந்த பகுதியில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை அதற்கு கிடைத்த இடங்களின் எண்ணிக்கை 30 திலிருந்து 16 ஆகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் அதன் வாக்கு சதவீதமும் 2.8% குறைந்துள்ளது. காங்கிரஸ் பெற்ற வாக்குகளின் பங்கு 5.1% அதிகரித்துள்ளது. அதன்மூலம் 16 இடங்கள் அதிகரித்து, இந்தப் பகுதியில் உள்ள 50 சட்டமன்றத் தொகுதிகளில் 33 இடங்களை அது வென்றுள்ளது. தெளிவாக, இந்த பகுதியில் பாஜகவின் கோட்டையை அசைப்பதில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மேலும் முப்பதாண்டுகளில் முதல்முறையாக, இந்த பகுதியில் அதன் வாக்குகள் 40%க்கும் அதிகமாக உள்ளது.
மத்திய கர்நாடகா: காங்கிரஸ் இங்கு தனது வாக்குகளை 7.5% அதிகப்படுத்தியதன் விளைவாக அதற்குக் கிடைத்த இடங்கள் 4 லிருந்து 15 ஆக அதிகரித்தது. அதே நேரத்தில் பாஜக 10 இடங்களை இழந்து 6 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. மேலும் 2018 க்குப் பிறகு 4.9% வாக்குகளை இழந்துள்ளது.
கல்யாண கர்நாடகா: காங்கிரஸ் தனது பாரம்பரிய கோட்டையான இந்தப் பகுதியில் தனது வாக்குகளின் பங்கை 4.2% அதிகரித்து 46.4% ஆகவும், வெற்றிபெற்ற இடங்களின் எண்ணிக்கையை 21லிருந்து 26 ஆகவும் உயர்த்தியுள்ளது. இந்த பகுதியில் பாஜகவின் வாக்கு சதவீதம் 3.1% குறைந்து, அது பெற்ற இடங்களின் எண்ணிக்கை 15லிருந்து 10 ஆக குறைந்துள்ளது. பட்டியல் சாதி வாக்காளர்கள் அதிக அளவில் குவிந்திருப்பதாலும், மல்லிகார்ஜுன் கார்கேயாலும் இந்த வலுவான பகுதியில் காங்கிரஸ் தனது வெற்றியை மேம்படுத்தியுள்ளதற்கு முக்கிய காரணமாகும். இந்த பகுதியில் உள்ள 40 இடங்களில் காங்கிரஸ் 26 இடங்களை வென்றுள்ள அதே நேரத்தில் பாஜக 10 இடங்களில் மட்டுமே வென்றது.
பெங்களூரு பகுதி: நகரம் முழுவதும் இரண்டு நாள் மேற்கொள்ளப்பட்ட சாலைவழிப் பரப்புரையின் மூலம் மோடி பிம்பத்தை நம்பி பாஜக வலுவான களத்தை உருவாக்கிய மற்றொரு பகுதி இதுவாகும். மத்திய கர்நாடகத்தைப் போலவே இப்பகுதியிலும் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. இம்முறை காங்கிரஸ் பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 15ல் இருந்து 13 ஆகக் குறைந்து விட்ட போது, பாஜக பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 11ல் இருந்து 15 இட டங்களாகவும் அதிகரித்தது. வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை, பாஜக 5.3% அதிகரிப்பை எட்டியுள்ளது. காங்கிரசும் அதன் வாக்கு சதவீதத்தை 1% அதிகரித்துள்ளது. 2018ல் வென்ற இரண்டு இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் தோல்வியடைந்துள்ளது.
தனித் தொகுதிகள்: 36 தொகுதிகள் பட்டியல் சாதியினருக்கும், 15 பழங்குடியினருக்கும் என கர்நாடகாவில் இட ஒதுக்கீடு செய்யப்பட்ட 51 தனித் தொகுதிகள் உள்ளன.பட்டியலிடப்பட்ட சாதிகளுக்கு ஒதுக்கப்பட்டதனித் தொகுதிகளில், பாஜக 12 இடங்களை வென்றது (2018 இல் 16 இடங்களிலிருந்து குறைந்து விட்டது). காங்கிரசுக்கு 12 இடங்களிலிருந்து 21 இடங்களாக அதிகரித்திருக்கிறது.மதச்சார்பற்ற ஜனதாதளம் 3 இடங்களை பெற்றது.
பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளில் காங்கிரஸ் 14 இடங்களைக் கைப்பற்றியது (2018 இல் அது 8 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது). மீதமுள்ள 1 இடத்தை மதச்சார்பற்ற ஜனதாதளம் வென்றது. பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடத்தைக் கூட பாஜக வெல்லத் தவறியது. மேலும் மாநிலத்தில் பெயர் பெற்ற எஸ்டி தலைவரும், போக்குவரத்து மற்றும் எஸ்டி நலத்துறை அமைச்சருமான பி.ஸ்ரீராமுலு, பல்லாரி ரூரல் தொகுதியில் தோல்வியடைந்தார்.
பட்டியல் சாதியினருக்கான இட ஒதுக் கீட்டை 15%லிருந்து 17% ஆகவும், பழங்குடியி னருக்கு 3% லிருந்து 7% ஆகவும் உயர்த்தி வழங்க பொம்மை அரசு முடிவு செய்த போதிலும் கூட, இந்த முழுமையான தோல்வி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதால் இவை தேர்தல் வித்தைகளாகவே பார்க்கப்பட்டன. இதேபோல், பட்டியல் சாதியினரின் உள் இடஒதுக்கீடு குறித்த முடிவும் பாதகமாக திரும்பியது. ஏனெனில் இந்த முடிவு பல பட்டியலிடப்பட்ட சமூகங்களால் எதிர்க்கப்பட்டது. அதே நேரத்தில் உள் ஒதுக்கீட்டால் பயனடையும் சமூகங்கள் ஒரு அரசியல் வித்தையாகக் கருதினர். ஏனெனில் மத்திய அரசு இதற்கும் அனுமதி தரவில்லை.
தெளிவாகவே, இட ஒதுக்கீட்டி ல் தலையிடும் பாஜகவின் சோதனை முயற்சியானது, சமூக, பொருளாதார நிலைமைகளில் அடிமட்டத்தில் தொடர்ந்து நலிந்து கொண்டிருக்கும் எஸ்சி/எஸ்டி சமூகத்தினரிடையே உள்ள அதிருப்தியை சரிசெய்யத் தவறிவிட்டது.
பெண் வேட்பாளர்கள்: 2023ல் நடந்த 16வது கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், 1 முஸ்லீம் பெண் உட்பட 10 பெண் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இது முந்தைய சட்டமன்றத்தின் ஒன்பது என்ற எண்ணிக்கையை தாண்டிவிட்டது. 1989க்குப் பிறகு இதுவே அதிகபட்ச பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை யாகும்.
இம்முறை வெற்றி பெற்ற பெண்களில் காங்கிரஸ், பாஜகவிலிருந்து தலா 4 பேரும், ஒருவர் மதச்சார்பற்ற ஜனதாதளத்திலிருந்தும், மற்றுமொருவர் சுயேட்சையாக வெற்றி பெற்றவரும் ஆவர். இந்தத் தேர்தலில் மொத்தம் போட்டியிட்ட 2613 வேட்பாளர்களில் 185 பேர் பெண்கள் ஆவர். பாஜக 12 பெண் வேட்பாளர் களையும் காங்கிரஸ் 11 பெண் வேட்பாளர் களையும் நிறுத்தியிருந்தனர்.
சிறுபான்மை வேட்பாளர்கள்: சட்டசபையில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 9 சட்டமன்ற உறுப்பினரும், கிறிஸ்தவ சட்டமன்ற 1 உறுப்பினரும் இடம் பெறுகிறார்கள்.
காங்கிரஸ் 15 முஸ்லிம் வேட்பாளர்களுக்கு இடங்களை வழங்கியது. அவர்களில் 9 பேர் வெற்றி பெற்றனர். மதச்சார்பற்ற ஜனதாதள ம் 23 முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் யாராலும் வெற்றி பெற முடியவில்லை.
காங்கிரசால் நிறுத்தப்பட்ட ஒரே முஸ்லிம் பெண் வேட்பாளரான கனீஸ் பாத்திமா, குல்பர்கா வடக்கு தொகுதியில் வெற்றி பெற்றார்.
கர்நாடக சட்டமன்றத்தில் 2008 இல் 9 முஸ்லிம்கள் இருந்தனர். அது 2013 இல் காங்கிரசிலிருந்து ஒன்பது பேரும் மதச்சார்பற்ற ஜனதாதளத்திலிருந்து இரண்டு பேரும் என 11 ஆக உயர்ந்தது. 1978ல்தான் அதிக எண்ணிக்கை யில் 16 முஸ்லிம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக் கப்பட்டனர். அதே சமயம் 1983ல் ராமகிருஷ்ண ஹெக்டே முதல்வர் பதவியில் இருந்தபோது மிகக் குறைவான அளவுக்கு இருவர் மட்டுமே இருந்தனர்.
கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள்:
வர்க்கம் ஒரு முக்கிய அம்சம்: அது பெற்ற இடங்கள், வாக்குகளின் பங்கு என்ற அடிப்படையில், காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றியின் அளவுப்படி பார்த்தால் அதன் பாரம்பரிய வாக்காளர்கள் மட்டும் அதற்கு வாக்களித்திருக்கவில்லை; மற்ற சாதிகளைச் சேர்ந்த ஏழை வாக்காளர்களும் இந்தத் தேர்தல்களில் அக்கட்சிக்கு ஆதரவளித்துள்ளனர் என்பதையே காட்டுகிறது. மூன்று பெரிய கட்சிகளின் தேர்தல் வாய்ப்புகளை தீர்மானிப் பதில் சாதி ஒரு முக்கிய காரணியாக உள்ளது. இருப்பினும், இந்தத் தேர்தல்கள் காட்டியுள்ளபடி, அது மட்டுமே வரையறுக்கும் காரணி அல்ல. பாரம்பரியமாக, உயர் சாதியினர் மற்றும் லிங்காயத்துகளின் ஆதரவை பாஜக பெற்றுள்ளது. அதே சமயம் அகிண்டா (சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள்) எனப்படும் பல்வகை சாதிகளின் ஆதரவு காங்கிரசுக்குப் பின்னால் உள்ளது. மேலும் மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு வொக்கலிகர்களின் ஆதரவு உள்ளது. இருந்தபோதிலும், இந்தியா டுடேஆக்சிஸ் மை இந்தியா மற்றும் ஈடினா, கர்நாடகாவில் உள்ள மாற்று ஊடகக் குழு ஆகியவற்றின் தேர்தலுக்குப் பிந்தைய இரண்டு கருத்துக் கணிப்புகளும் வாக்காளர்கள் முடிவெ டுப்பதில் பொருளாதாரக் காரணிகள் முக்கிய செல்வாக்கு செலுத்தின என்பதை உறுதிப்படுத்து கின்றன. லோக்நிதிசிஎஸ்டிஎஸ்சின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புத் தரவுகள், மாநிலத் தில் வாக்காளர்களுக்கு மிகப் பெரிய தேர்தல் பிரச்சினையாக வேலையின்மை இருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து வறுமையும் விலைவாசி உயர்வும் இருப்பதாகவும் தெரிவிக்கின்றன. பாரம்பரியமான சாதிய எல்லைகளைத் தாண்டி ஒரு வர்க்கக் கூட்டணி உருவானது என்பது கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஒரு தனித்துவ மான காரணியாகும். இதனால், மக்கள் எதிர் கொள்ளும் கடுமையான பொருளாதார நெருக்க டியைப் புறக்கணித்து, சாதியை வகுப்பு வாதமாக்க பாஜக செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இந்துத்வாவுக்கு பின்னடைவு: பாஜக இந்த தேர்தலில், தனது ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையை அறிந்தே இருந்தது. இதனை இந்துத்துவா மற்றும் மோடியின் விளம்பர உத்திகளின் மூலம் எதிர்கொள்ள முயன்றது. இவற்றை பயன்படுத்தி சாதியக் கணக்கீடுகள் மற்றும் கூட்டணிகளை முறியடிக்கவும் முயற் சித்தது. இதற்காக, எடியூரப்பா உள்ளிட்ட பல வலுவான லிங்காயத் தலைவர்களை பாஜக ஒதுக்கி வைத்துவிட்டு, ஆர்எஸ்எஸ் தொழு வத்தில் இருந்து 75 புதிய போட்டியாளர்களுக்கு வாய்ப்பை வழங்கியது. கர்நாடகாவில் ஒரே சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) அறிமுகப் படுத்துவதற்கும், மத அடிப்படை வாதத்தை விசாரிக்க சிறப்பு காவல் பிரிவை அமைப்ப தற்கும் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தது. "யுகாதி", "கணேஷ் சதுர்த்தி", "தீபாவளி" ஆகிய விழாவின் மாதங்களில் தலா ஒன்று என அனைத்து வறுமை கோட்டுக்கு கீழேயுள்ள குடும்பங்களுக்கும் மூன்று இலவச சமையல் எரிவாயு உருளைகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியையும் வழங்கியது. மறுபுறம், வகுப்புவாத அரசியலுக்கு எதிராக காங்கிரஸ் தாக்குதல் நடத்தியது; அதன் தேர்தல் அறிக்கை "சர்வ ஜனங்கத சாந்திய தோட்டா" அதாவது. ''அனைத்து சமூகங்களின் அமைதியான தோட்டம்" எனத் தலைப்பிடப்பட்டது. சட்டத்தை மீறுகின்ற, மத வெறுப்பை விதைக் கின்ற, மதவெறியை, வகுப்புவாத வன்முறையை பரப்புகின்ற எந்தவொரு அமைப்புக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தது. மேலும் பஜ்ரங் தள் என குறிப்பிட்டுச் சொன்னது.
தேர்தல் அறிக்கை வெளியானதும், இது தொடர்பாக ஊடகங்களில் பரபரப்பு ஏற்பட்டது. மோடி உட்பட, பாஜக தலைவர்கள் ஒவ்வொரு பேரணியிலும் அனுமனின் பெயரைக் கூறினர். மே 9 ஆம் தேதி அனுமன் வேண்டுதலை பாடுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் பஜ்ரங் தளத்தை அனுமனுடன் சமப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவை அனைத்தும் தோல்வியடைந்தன. பஜ்ரங் தளத்தை தடை செய்வது குறித்த முடிவின் அறிவாண்மை குறித்து அதை தேர்தல் அறிக்கையில் சேர்த்ததில் சதி இருப்பதாகக் கூறியும் பலர் கேள்வி எழுப்பிய போதிலும், காங்கிரஸ் தனது முடிவில் உறுதியாக நின்றது. சமூகப் பொறியியலின் மூலம் சாதிய கணக்கீடுகளை மறுவடிவமைக்கும் முயற்சிகளும் கூட, இந்துத்துவா மற்றும் மோடியின் விளம்பர உத்திகளைப் போலவே பலனளிக்கவில்லை. "இரட்டை என்ஜின்" அரசாங்கம், குறிப்பாக மாநிலத்தை சார்ந்த பிரச்சனைகள் இல்லாமை, மோடி, யோகி போன்றோரிடம் மாநிலத்தை ஒப்படைத்தது ஆகியவை மாநிலத்தின் பெருமையையும் விருப்பங்களையும் புண்படுத்தி யது. பாஜக தனது குஜராத்/உ.பி./அஸ்ஸாம் மாதிரியை கண்மூடித்தனமாக செயல்படுத்துவது, அதாவது சாதியக் கூட்டணிகளையும் ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையையும் எதிர்கொள்ள இந்துத்வா நம்பியது தவறு என நிரூபிக்கப் பட்டது. இந்தத் தேர்தல் இந்துத்துவா அல்லது வெறுப்பு அரசியல் மீதான வாக்கெடுப்பா? ஒருவேளை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது நிச்சயமாக இந்துத்துவா நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பட்ட பின்னடைவாகும். வகுப்புவாத துருவசேர்க்கை நிகழ பல பத்தாண்டுகளாக அது கடினமாக உழைத்துள்ள கர்நாடகாவின் கடலோரப் பகுதியில், பாஜகவின் வாக்குகளின் பங்கு/பெற்ற இடங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்துத்துவ முத்திரை பதித்த அரசியலின் இரண்டு முக்கிய முகங்கள் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்தனர். பாபா புத்தங்கிரியை இந்துக் கோவிலாக அறிவிக்க வேண்டும் என்று கோரி பரப்புரையின் முன்னணியில் செயல்பட்ட பாஜக தேசிய செயலாளர் சிடி.ரவி, சிக்மகளூரில் தோல்வியுற்றார். ஹிஜாப் தடையை அமல் படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த ஆரம்பநிலை, நடுநிலைக் கல்வி அமைச்சர் பிசி. நாகேஷ், தீப்டூர் தேர்தலில் தோல்வியடைந்தார்.
மோடி என்ற பிராண்ட் வெல்லப்பட முடியாதது என்ற மாயை, தேய்ந்து விட்டது: பாஜகவின் மிகவும் நம்பகமான தேர்தல் பரப்புரையாளர், அவர் வெல்லப்பட முடியாதவர் என ஒரு மாயை உணர்வுபூர்வமாக வளர்க்கப் பட்டு மோடியைச் சுற்றி அதிக பரபரப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக பரப்புரையின் மையப் புள்ளியாக மோடியை பாஜக நிறுத்தியது. பேரணிகள் முதல் சாலைவழி பரப்புரை வரை தேர்தல் பிரச்சாரத்தின் ஒவ்வொரு அம்சமும் மோடியை முன்னிறுத்து வதாகவே இருந்தது. மோடி நிச்சயமாக, தன்னை முன்னிறுத்த இதையெல்லாம் செய்துகொண்டார். 91 முறை அவமானப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டி, தான் பாதிக்கப்பட்டவர் எனக்காட்ட பெருமுயற்சி செய்தார். இதை காங்கிரஸ் பலவீனமான "அழுகாச்சி பிரதமர்" என்று நையாண்டி செய்தது. பெங்களூருவில் மோடியின் இரண்டு நாள் சாலைவழி பரப்புரை, அதன் ஒவ்வொரு மீட்டருக்கும் நேரடி ஊடக ஒளிபரப்பின் மூலம் தேர்தல்களை பாஜகவிற்கு ஆதரவாக மாற்றுவதற்கான சிறந்த திட்டம் என பார்க்கப்பட்டது. இருப்பினும், இந்த சூதாட்டமும் தோல்வியடைந்தது. மேலும் மோடியின் ஆழ்ந்த தனிப்பட்ட ஈடுபாடு கூட பாஜகவின் தலைவிதியை மாற்றமுடியவில்லை. இரண்டு குறிகாட்டிகள் அதன் மோசமான தோல்வியை சுட்டிக்காட்டுகின்றன. முதலாவதாக, பெங்களூருவில் வாக்குப்பதிவு குறைவாக இருந்தது. இரண்டாவதாக, வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையிலோ வாக்குகளின் பங்கிலோ பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை. உண்மையில், பெங்களூரு பகுதியில் பாஜகவின் வாக்கு சதவீதம் 5% அதிகரித்திருந்தாலும், காங்கிரசும் அதன் வாக்கு சதவீதத்தை 1% அதிகரித்தது. பாஜக பெற்ற இடங்கள் 11ல் இருந்து 15 ஆக அதிகரித்தது (2022 இல் பாஜகவிற்கு கட்சி மாறியவர்கள் உட்பட), இருப்பினும், பாஜக கோவிந்தராஜநகர் தொகுதியை காங்கிரசிடம் இழந்தது. ஜெயநகர் தொகுதியை கைப்பற்ற தீவிர முறைகேட்டில் ஈடுபட்டது. ஆக இந்தத் தேர்தலில் வெளிப்பட்ட செய்தி தெளிவாக உள்ளது தேர்தலில் வெற்றி பெற மோடி மட்டும் போதாது!
சிவில் சமூகத்தின் பங்கு: தேர்தல் முடிவைப் பாதிக்கும் கட்டாய முன்னேற்றங் களில் ஒன்று சிவில் சமூக அமைப்புகளின், குறிப்பாக, "பகுத்வா கர்நாடகா" மற்றும் "எட்டேலு கர்நாடகா" ஆகியவற்றின் பங்காகும். ஒருவேளை அதன் வரலாற்றில் முதல்முறையாக, இந்தத் தேர்தலில் தான் பிரிவினைவாத, மதவெறி, மக்கள் விரோத பாஜகவை நிராகரிக்குமாறு மக்களை வேண்டிக் கொண்ட, கட்சி சார்பற்ற அமைப்புகளின் செயல்பாடுகளை கர்நாடகா சந்தித்துள்ளது.
பகுத்வா கர்நாடகா (பன்மைத்துவ கர்நாடகா), எனப்படும் வகுப்புவாத நல்லிணக்கத்திற்காகப் போராடும் 2 வருட கால பரந்த கூட்டணி, பிஜேபி அரசாங்கத்தின் மோசமான தோல்விகளை அம்பலப்படுத்தும் துறை வாரியான தகவல் அறிக்கைகளை வெளி யிட்டது. வாக்காளர்களுக்கு தகவல்களை வெளியிடும் இன்ஸ்டாகிராம் பதிவுகள், துண்டு பிரசுரங்கள், இணையதளங்களில் இந்த தகவல் அறிக்கைகள் மற்ற சிவில் சமூக குழுக்களால் பயன்படுத்தப்பட்டன.
தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், தேவனூர் மகாதேவா, ரஹ்மத் தரிகெரே, டு சரஸ்வதி மற்றும் பலர் உள்ளிட்ட அறிவுஜீவிகளின் தலைமையில், மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமான முற்போக்கு சிந்தனையாளர்கள், இலக்கியவாதிகள், சிவில் சமூக ஆர்வலர்கள், சிவில் சமூகக் குழுக்களால் உருவாக்கப்பட்ட "எட்டேலு கர்நாடகா" (விழித்தெழு கர்நாடகா) என்பது இன்னுமொரு முக்கியமான முன்முயற்சியாகும். பாஜகவின் தேர்தல் தோல்வியை உறுதிசெய்யும் ஆர்வத்தில் கட்சி சார்பற்ற சக்திகளால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மற்ற தலையீடுகளில், எட்டேலு கர்நாடகா பாஜக அரசாங்கத்தின் தோல்விகளைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்க மாநிலம் முழுவதும் வாக்காளர் சேர்க்கை இயக்கங்கள், கருத்தரங்குகள், பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்தியது. மேலும் சமூக ஊடகங்களில் பகிர்வதற்கு சுவரொட்டிகளையும் காணொளிகளையும் ஒவ்வொரு நாளும் வெளியிடப்பட்டது. பாஜக அரசின் தவறான ஆட்சியையும் அட்டூழியங்களையும் விளக்கும் துண்டுப் பிரசுரங்கள் அச்சிடப்பட்டு லட்சக்கணக்கில் விநியோகிக்கப்பட்டன.
குடிசைவாசிகளின் உரிமைக்காகப் போராடும் 'ஸ்லம் ஜனந்தோலனா கர்நாடகா', விவசாயிகள், தலித்துகள், தொழிலாளர் அமைப்புகளின் கூட்டணியான 'சம்யுக்த ஹொராடா', 'வெறுப்பு பேச்சுக்கு எதிரான பரப்புரை'ஆகியவை இந்த நேரத்தில் செயல்பாட்டில் இருந்த பிற சிவில் சமூக அமைப்புகளாகும். இவை பாஜகவின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக பொதுக்கருத்தை உருவாக்க பெரும் பங்காற்றின.
தலித் அமைப்புகளிடமிருந்து வந்ததே, மிகப்பெரிய முயற்சியாக இருக்கலாம். பல பிரிவுகளாகப் பிரிந்து கிடந்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தக் குழுவினர் ஒன்றிணைந்து, 2022 டிசம்பர் 6ஆம் தேதி ஒரு மாபெரும் மாநாட்டை நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். வகுப்புவாத சக்திகளை, பாஜகவை மொத்தமாக எதிர்க்க வேண்டும் என்று அவர்கள் அழைப்பு விடுத்தனர். இது தலித் வாக்காளர்கள் மத்தியில் பாஜக நுழையும் போக்கை மாற்றி யமைக்கவும், தலித் வாக்குகளை காங்கிரசுக்குப் பின்னால் ஒருங்கிணைக்கவும் கருவியாக இருந்தது.
இந்தியத் தேர்தல் ஆணையம்: இந்தியத் தேர்தல் ஆணையம் தற்போது அறியப்படும் அதன் பண்புக்கேற்ப பாகுபாடான முறையில் செயல்பட்டது. மோடியும் பாஜகவும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தையும் மாதிரி நடத்தை விதிகளையும் அப்பட்டமாக மீறியதற்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. வெறுப்புப் பேச்சுக்களும் மத அடிப்படையிலான வாக்குகளுக்கான அழைப்புகளும் கண்மூடி கண்டுகொள்ளாமல் விடப்பட்டன. மேலும் மோடியின் இரண்டு நாள் நிகழ்ச்சியானது மீறல்களும் சட்டத்திற்கு புறம்பானவையும் மிகுந்ததாக நடத்தப்பட்டன.
இடதுசாரிக் கட்சிகளின் செயல்பாடு: புரிந்துணர்வை எட்டுவதற்கான முயற்சிகள் இருந்த போதிலும், இடதுசாரிக் கட்சிகளுக் கிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், இகக(மா),இகக, எஸ்யுசிஐ, இகக(மாலெ) ஆகியவை சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தன. அவற்றில் சில இடங்களில் "நட்புப் போட்டிகள்" இருந்தன. இகக(மா) போட்டியிட்ட கேஆர்புரத்தில் மதச் சார்பற்ற ஜனதாதளம் தனது வேட்பாளரை நிறுத்தியபோதிலும், மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் இகக(மா) ஒரு "புரிதல்" ஏற்படுத்திக் கொண்டது. பரப்புரை சூடு பிடித்த நிலையில், பெங்களூருவில் உள்ள கேபிசிசி அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர்களுடன் இணைந்து இகக, செய்தியாளர் சந்திப்பு நடத்தி, இகக(மா) போட்டியிடும் பாகேபல்லி, சர்வோதயா கர்நாடக வேட்பாளர் போட்டியிடும் மெலுகேட், இகக போட்டியிடும் 7 தொகுதிகள் ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் காங்கிரசுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தது. இகக(மாலெ) இரண்டு இடங்களில் போட்டியிட்டது. கேஆர்புரத்தில் தோழர் பி.பி.அப்பண்ணாவும் கனககிரியில் தோழர் கெஞ்சப்பாவும் போட்டிட்டனர். மீதமுள்ள இடங்களில் அது இடது, மதச்சார்பற்ற, ஜனநாயக கட்சிகளை ஆதரித்தது. மொத்தத்தில் இடதுசாரிக்கட்சிகளின் செயல்பாடுகள் பெரிய அளவில் இல்லை. இகக(மாலெ) கே.ஆர்.புரத்தில் 227 வாக்குகளும் கனககிரியில் 747 வாக்குகளும் பெற்றது.
முன்னோக்கிச் செல்வது: கர்நாடகாவில் பாஜகவிற்கு ஏற்பட்டுள்ள தீர்மானகரமான தோல்வி மற்ற மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழக்கும் போக்கிற்கு வலிமை சேர்க்கிறது. கர்நாடகா தனது பிடியில் இருந்து விலகி விட்ட நிலையில், தென்னிந்தியாவில் எந்த மாநிலத் திலும் பாஜக ஆட்சியில் இல்லாததால் வட இந்தியக் கட்சி என்ற அதன் அடையாளம் உறுதிப் படுத்தப்பட்டுவிட்டது. 2024ன் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தும் தாக்கங்களே இதன் முக்கியத்துவ மாகும். பாஜகவிற்கு வெற்றி கிடைத்திருந்தால் அதன் முரட்டுத்தனம் பலமடைந்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம் எதிர் கட்சிகளின் நம்பிக்கையை தளரச் செய்திருக்கும்.
தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருந்த ஒரே மாநிலம் 'தெற்கின் நுழைவாயில்' எனப்பட்ட கர்நாடகா மட்டுமே. அதன் கதவுகள் அடைக்கப்பட்டுவிட்ட நிலையில், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெற விருக்கும் சட்டமன்றத்தேர்தல்களுக்கு இப்போது தேர்தல் போராட்டம் நகர்ந்துவிட்டது. பாஜக வுக்கு எதிரான இந்தத் தேர்தல் போராட்டங்கள் சங்க படையணியின் கார்ப்பரேட் மதவெறி பாசிசத்தை உறுதியாக நிராகரிப்பதை உறுதி செய்வதற்கான நீண்ட, நெடிய போராட்டத்தின் ஒரு அங்கமாகும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)