போபாலில் வாக்குச்சாவடி மட்ட அளவிலுள்ள பாஜக தொண்டர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் போது, பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக உரத்த கூச்சலை எழுப்பினார்கள். சிறிது நேரத்தில், அதே மாநிலத்தில் இருந்து, அதிகார போதையில் மிதந்த பாஜக இளைஞரணித் தலைவரான பிரவேஷ் சுக்லா, தஸ்மத் ராவத் எனும் ஆதிவாசி தொழிலாளி மீது சிறுநீர் கழிக்கும் காணொளி வெளியாகி, சமூக ஊடகங்களில் அதிவேகமாகப் பரவியது. இருபதாண்டுகளாக பாஜக ஆட்சியில் இருக்கும் மத்தியப் பிரதேசத்தில் உண்மையிலேயே களத்தில் நிலவும் அநாகரிக நடத்தையை, காட்சிகளை அதிர்ச்சியூட்டும் இந்தக் காணொளி சித்தரித்துக் காட்டியது. விளிம்பு நிலையிலிருக் கும் ஒடுக்கப்பட்ட சமூகக் குழுக்களுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய கொடுமையான செயல்கள் பாஜக ஆதிக்கம் செலுத்தும் மேற்கு இந்தியா, வட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் எந்தத் தண்டனையுமின்றி நடந்து வருகிறது என்பதை அனைவரும் அறிவர். சங்கப் படைகளால் அவர்களின் உண்மையான அரசமைப்புச் சட்டமாக உயர்த்திப்பிடிக்கப்படும் மனுஸ்மிருதி, இதுபோன்ற சாதிய, பாலின பாகுபாட்டின், வன்முறையின் தீவிர வடிவங்களுக்கு தேவையான சமூக அங்கீகாரத்தை வழங்குகிறது.
1989ன் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம், சாதிய வன்முறையின் இந்த அதிர்ச்சியூட்டும் சமூக யதார்த்தத்தை ஒப்புக்கொண்டு, மேலும் கடுமையான சட்ட விதிகள் மூலம் அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றது. ஆனால் பாஜகவின் எழுச்சியாலும் அதன் தாக்குதல்தன்மைமிக்க இந்துத்துவ அரசியலாலும், இந்தச் சட்டம் பெருமளவில் பயனற்றதாக்கப்பட்டுள்ளது. மேலும் அதை நீர்த்துப் போகச்செய்வதற்கும் திரும்பப் பெற வேண்டுமென்றும் கூட கூச்சல் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் மதச் சிறுபான்மை யினருக்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக, திட்டமிடப்பட்ட வெறுப்புக் குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளன. கும்பல் படுகொலை என்பது பரவலாக்கப்பட்ட, தனியார்மயமாக்கப்பட்ட வன்முறையின் ஒரு புதிய வடிவமாக மோடி காலகட்டத்தில் உருவெடுத்துள்ளது. அதே நேரத்தில் நீதித்துறைக்கு அப்பாற்பட்ட அரசின் பழிவாங்கல் மற்றும் பயங்கரவாத குற்றங்களின் புதிய அடையாளமாக புல்டோசர் மாறியுள்ளது. வகுப்புவாத வெறுப்பு, சாதிய அட்டூழியங்கள், பாலின வன்முறை ஆகியவை ஒரே நேரத்தில் வளர்ந்துள்ளன; ஒன்றையொன்று ஊக்குவிப்பதாகவும் உள்ளன; இருந்தபோதிலும், மேலாதிக்கமிக்க ஊடகங்கள் வகுப்புவாத வெறுப்பு குற்றங்களை குறைத்து மதிப்பிடுவதிலும் அவற்றை நியாயப்படுத்துவதிலும் பெரும்பாலும் ஆட்சியாளர்களுக்கு உடந்தையாகவே இருக்கின்றன.
தேர்தல்கள் நெருங்கி வருவதாலும், ஆதிவாசிகளின் வாக்குகள் மத்தியப் பிரதேசத் தேர்தலில் குறிப்பிடத்தக்க காரணியாக இருப்பதாலும், சிவராஜ் சிங் சவுகான் அரசாங்கம் அவசர அவசரமாக சரிசெய்யும் சில முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டது. தஸ்மத் ராவத்தின் பாதங்களை சம்பிரதாயமாகக் கழுவி, அவருக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்து, 'பாவமன்னிப்பு' கேட்கும் காணொளியை முதல்வர் சுற்றுக்கு விட்டார். அதே சமயத்தில், பிரவேஷ் சுக்லா வீட்டின் ஒரு பகுதியை இடிக்க புல்டோசர் அனுப்பப்பட்டு, அவர் காவல்துறை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்படுவதை மற்றொரு காணொளி காட்டுகிறது. அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் அதிவேகமாகப் பரவாமல் போயிருந்தாலும், தேர்தல் நெருங்காமல் இருந்திருந்தாலும் இவை எதுவும் நடந்திருக்காது என்பது தெளிவாகவே தெரிகிறது. இவ்வாறு வெளிச்சத்திற்கு வரும் இதுபோன்ற ஒவ்வொரு சம்பவத்திற்கும் இணையாக, கவனம் பெறாத பலபத்து சம்பவங்கள் உள்ளன என்பதும் தெளிவாகிறது. பயத்தில் நடுங்கும் தஸ்மத் தன்மீது ஒடுக்குமுறை நிகழ்த்திய பிரவேஷ் சுக்லாவை 'மன்னிக்கும்படி' கெஞ்சுவதைக் காணுகின்ற போதே, இந்தூரில் இரண்டு ஆதிவாசி இளைஞர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டதை, சமூக ஊடகங்களில் அதிவேகமாகப் பரவிய புதிய காணொளி காட்டுகிறது.
சமூகப் பாகுபாடும் ஒடுக்குமுறையும், வெறுப்பும் வன்முறையும், இந்த மத்திய பிரதேச அத்தியாயத்தில் பிரவேஷ் சுக்லா போன்று தேர்தலில் இடர்பாடுகளை ஏற்படுத்தக் கூடிய குற்றவாளிகள் தவிர மற்ற குற்றவாளிகளுக்கு அரசியல் ஆதரவும் தண்டனையின்மையும் உள்ள அமைப்பில், மானுட கௌரவமும் உரிமைகளும் மறுக்கப்படுவது நிறுவனமயமாக்கப்பட்டுள்ள பின்னணியில், பொது சிவில் சட்டப் பிரச்சி னையை நாம் எவ்வாறு காண வேண்டும்? 22வது சட்ட ஆணையம், இந்த பொது சிவில் சட்டம் என்னவாக இருக்கும் என்பது குறித்து நமக்கு எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல், ஒரு மாத காலத்திற்குள் இது விஷயத்தில் பொதுமக்களின் கருத்தை கேட்டுள்ளது. இது விஷயத்தில் ஒரு கூர்மையான விவாதம் நடைபெற்ற பிறகு, அரசமைப்புச் சட்டத்தில் சட்டப்பூர்வமாக இதனை நடைமுறைப்படுத்தவோ அல்லது நியாயப்படுத்தவோ முடியாத, அரசு கொள்கையின் வழிகாட்டும் நெறிமுறையாக இதனை இணைத்துக் கொள்வதற்கு அரசியல் நிர்ணய சபை தீர்மானித்ததாக வரலாறு நமக்குக் கூறுகிறது. பொது சிவில் சட்டம் என்னும் கருத்து குடிமக்களுக்கு தன்விருப்பத்துடன் இருக்க வேண்டும் என்று பாபாசாகேப் அம்பேத்கர் விரும்பினார். 21வது சட்ட ஆணையம் கூட, தற்போதைய சூழலில் பொது சிவில் சட்டம் அவசியமானதோ அல்லது சாத்தியமானதோ அல்ல என்பதைக் கண்டறிந்தது. மேலும், பொது சிவில் சட்டத்திற்கு பதிலாக, அனைத்து தனிநபர் சட்டங்களின் வரம்பிற்குள் பாலின நீதியையும் சமத்துவத்தையும் உறுதிப்படுத்த பொருத்தமான சட்ட சீர்திருத்தங் களுக்கு அழைப்பு விடுத்தது. 22வது சட்ட ஆணையம் இவ்வளவு அவசரமாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டிய அளவுக்கு திடீரென்று என்ன நடந்தது?
பொது சிவில் சட்டம் குறித்த அதன் கருத்துகள் பற்றி அரசாங்கம் இன்னும் திட்டவட்டமான முன்மொழிவு எதையும் கொண்டு வராத நிலையில், சங்-பாஜக பரப்புரை யாளர்கள் ஏற்கனவே முஸ்லீம் சமூகத்தை இழிவு படுத்துவதில் மும்முரமாக இறங்கியுள்ளனர். மேலும் பொது சிவில் சட்டக் கருத்துக்கு எதிரான ஒவ்வொரு எதிர்ப்பையும், முஸ்லிம் சமூகத்தால் தூண்டிவிடப்பட்டதாகவோ அல்லது முஸ்லிம் சமூகத்தை திருப்திப்படுத்துவதற்கான முயற்சியா கவோ சித்தரிக்கின்றனர். யதார்த்தத்தில், மேகாலயா, நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களும் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பழங்குடியின சமூகங்களும் வெளிக்காட்டுமளவுக்கு அதீத அச்சத்தையும் எதிர்ப்பையும் முஸ்லிம் சமூகம் வெளிக் காட்டவில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சட்டம் குறித்த நாடாளுமன்ற நிலைக் குழு தலைவர் சுஷில் மோடியும் கிறிஸ்தவர்க ளுக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் பொது சிவில் சட்ட வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப் படலாம் என்று ஏற்கனவே சுட்டிக்காட்டி யுள்ளனர். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய வர்கள் பொது சிவில் சட்டம் பற்றிய யோசனையை வழிகாட்டும் நெறிமுறையாக வைத்திருந்ததற்கும், 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கூட, 21வது சட்ட ஆணையம் பொது சிவில் சட்டத்திற்கு அவசியமோ அல்லது சாத்தியமோ இல்லை என்று கண்டறிந்ததற்கும் இதுவே துல்லியமான காரணமாகும். உண்மை யில், இந்து அல்லாத பிற மதங்கள், சமூகங் களைப் போலவே, இந்துக்கள் தொடர்பான தனிநபர் சட்டத்திலும் பிராந்தியங்களுக்கு இடையே பரவலாக வேறுபடுகிற பழக்க வழக்கங்களின் பன்முகத்தன்மை உள்ளது.
ஒற்றுமை என்ற பெயரில் ஒருமைத்துவத்தை திணிக்க முயற்சிப்பதற்கு மாறாக, பன்மைத்து வத்துடன் சமத்துவமும் இயைந்து இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய 21வது சட்ட ஆணையத்தின் செயல் சரியானதாகும். ஆச்சரியப்படும் விதமாக, முன்னாள் ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கர் கூட, இந்தியா போன்ற பரந்த, பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் பொது சிவில் சட்டத்தை திணிப்பது என்னும் கருத்துக்கு எதிராக திட்டவட்டமாக எச்சரித்தி ருந்தார். 1971ல் ஆர்எஸ்எஸ் ஊதுகுழலான ஆர்கனைசரின் ஆசிரியர் கேஆர் மல்கானிக்கு அளித்த நீண்ட நேர்காணலில் ஒருமைத்து வத்தைக் காட்டிலும், நல்லிணக்கமே இந்தியா வின் ஒற்றுமைக்கு அவசியம் என்று கோல்வால்கர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், இன்றைய கால நெருக்கடி தரும் பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவும், இந்தியாவை வகுப்புவாத துருவச் சேர்க்கையின் அடிப்படையில் பிளவுபடுத்தவும் பொது சிவில் சட்டம் சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்று நம்புவதாலும், அது இன்று எந்த நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டிய தேவையில்லை என்னும் நிலையை எட்டியுள்ளதாலும், தனது சொந்த தத்துவ, நிர்வாக முன்னோடிகளால் அறிவுறுத்தப் பட்ட எச்சரிக்கையைக் கைவிடுவதில் மோடி அரசாங்கம் அவசரம் காட்டுகிறது.
சமத்துவத்தையும் நீதியையும் உறுதி செய்வதற்கான சட்ட சீர்திருத்தங்கள் ஒரு தொடர்ச்சியான நிகழ்ச்சி நிரலாகும். மேலும் அரசமைப்புச் சட்டத்தின் 44 வது பிரிவின் வழிகாட்டுதல்படி, அனைத்து சமூகங்களிலும் உள்ள பெண்களுக்கு பாலின நீதியை உறுதி செய்யும் சட்டங்களை உருவாக்கும் திசையில் அரசு தொடர்ந்து செயல்பட வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட அனைவரின் கூட்டுப் பங்கேற்பும் இசைவும் இல்லாமல், பிரிவு 44ஐ வெற்றிடத்தில் செயல்படுத்த முடியாது. மேலும், மோடி அரசாங்கம், அரசின் கொள்கைகளுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளை விரைந்து அமல்படுத்த வேண்டுமென விரும்பினால், அதற்கிணையான அனைவருக்கும் வேலைக்கான உரிமை, வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதம், வருமான சமத்துவமின்மையையும் செல்வம் மற்றும் உற்பத்திச் சாதனங்கள் சிலரின் கைகளில் குவிதலையும் குறைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்தும் அரசமைப்புச் சட்டம் தொடர்புடைய பிரிவு 36 முதல் 51 வரையிலான அடிப்படை வழிகாட்டுதல்களை புறக்கணித்து விட்டு அது பிரிவு 44 இல் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட கவனம் செலுத்த முடியாது.
ஆயினும்கூட, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நினைக்கும் பாஜகவின் தற்போதைய நடவடிக்கைகள், பாலின நீதியை உறுதிப்ப டுத்துவது அல்லது அரசின் கொள்கைகளுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளின் உணர்வுகளோடு தொடர்புடையது என்று நாம் நம்ப முடியாது. உண்மையில், பொது சிவில் சட்ட நிகழ்ச்சி நிரலை முன்னிறுத்துவது, வகுப்புவாத துருவச் சேர்க்கையை ஏற்படுத்தவும் முஸ்லிம்களை தீயவர்களாக சித்தரிக்கவுமான பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். 'காதல் ஜிஹாத்' என்ற தீய கட்டுக்கதையுடன், மக்கள் தொகை வளர்ச்சியில் பலதார மணத்தின் விளைவுகள் பற்றிய மோடியின் இழிவான, அபத்தமிக்க தவறான கூற்றுக்களால் உருவகப்படுத்தப்பட்ட 'இந்துக் களை விட எண்ணிக்கையில் மிஞ்சும் முஸ்லிம்கள்' என்ற அபத்தமான கதையாடலுக்கு ஏற்ப அப்பட்டமான வேண்டுகோளுடன் பொது சிவில் சட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை முறியடித்து, வாழ்வதற்கான நிதிச்செலவின் அதிகரிப்பு என்னும் நெருக்கடி, வேலையின்மை போன்ற பற்றி எரியும் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் மனுஸ்மிருதி நெறி முறையின் சமூக ஒடுக்குமுறையை, வன் முறையை பொதுவான தாக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் எதிராக, நவீன மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியா என்னும் அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்தை பாதுகாக்க வேண்டும். பாலின நீதியும் சமத்துவமும் வேண்டும்; பொது சிவில் சட்டம் என்ற பெயரில் வகுப்புவாத துருவச் சேர்க்கையை ஏற்படுத்தும், முஸ்லிம் களை தீயவர்களாக சித்தரிக்கும் அரசியல் வேண்டாம்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)