"திரும்பிப்போ மோடி" ட்விட்டர் இயக்கத்தால் மோடியை, பாஜகவை பீதியடையச் செய்த தமிழ்நாடு, "வருக மோடி, வணக்கம் மோடி" என்று ட்விட்டர் இயக்கம் நடத்தி திருச்சி வந்த மோடியை வரவேற்றுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளேடு மகிழ்ச்சி தெரிவிக்கிறது. "வணக்கம் மோடி" ஹாஷ்டேக் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சுட்டுரை களைப் பெற்றுள்ளதைச் சுட்டிக் காட்டி பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், தமிழ்நாடு மக்களை பாராட்டி மகிழ்ந்துள்ளதையும் அந்த ஏடு செய்தியாக்கி உள்ளது. இதை எதிரொலிப்பது போல், "புத்தாண்டின் எனது முதல் பொது நிகழ்ச்சி, தமிழ்நாட்டில் நடைபெறுவது பெரும் பாக்கியம்" எனக் கூறி மோடி தன்னுடைய மகிழ்ச்சியை 'பொங்க' விட்டிருக்கிறார்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனைய திறப்பு, பல்வேறு தொழில் திட்டங்களுக் கான அடிக்கல் நாட்டுதல் (ரூ.20,140 கோடி என்று சொல்லப்படுகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனை ஒற்றை செங்கல்லோடு இருப்பதையும் மறந்து விடமுடியாது), பாரதிதாசன் பல்கலைக்கழக 38வது பட்டமளிப்பு விழா என பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். விமானநிலைய விழாவில் பேசிய பிரதமர் மோடி தனது "மேக் இன் இண்டியா" தூது வராக தமிழ்நாடு இருப்பதாகக் கூறி ஸ்டாலினை புன் முறுவல் பூக்கச் செய்தார் மோடி. பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த ஆட்சி மாநிலங்களுக்கு ரூ.30 லட்சம் கோடி வழங்கியிருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் தனது ஆட்சி, ரூ.120 லட்சம் கோடி வழங்கியிருப்பதாகக் கூறி ஸ்டாலினை நாற்காலி யின் நுனியில் உட்கார வைத்துவிட்டார். இதில் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு வழங்கப்பட்டது என்று துல்லியமாக சொல்லவில்லை. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இரண்டரை மடங்கு அதிகம் நிதி கொடுத்து விட்டதாகக் கூறி முதல்வரை உதடு பிதுக்கச் செய்துவிட்டார் பிரதமர். டிசம்பர் மாத வெள்ளத்தில் மரணமுற்றவர்கள், உடமைகள் இழந்தவர்கள் குறித்து 'வேதனைப்படுவதாக' தெரிவித்த மோடி, மாநில அரசு கேட்ட ரூ. 21,700 கோடி பேரிடர் நிவாரணம் பற்றி வாய் திறக்க வில்லை. (ஜிஎஸ்டி யில் உ.பி, ரூ. 3 லட்சம் கோடி கொடுத்து, ரூ. 9 லட்சம் கோடி பெற்றுள்ளது. ஆனால் தமிழ்நாடு ரூ. 5 லட்சம் கோடி கொடுத்து வெறும் ரூ. 2லட்சம் கோடி மட்டுமே பெற்றுள்ளது).
பாரதிதாசன் பல்கலைக்கழக 38வது பட்ட மளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய மோடி அங்கும் அவரது 10 ஆண்டு காலச் சாதனையை பட்டியலிட்டுள்ளார். 74ஆக இருந்த விமான நிலையங்கள் 150 ஆக அதிகரித்து விட்டன. 100 க்கு குறைவாக இருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஒரு லட்சத்துக்கும் கூடுதலாக அதிகரித்து விட்டதாகவும்; 2014ல் நாலாயிரமாக இருந்த பேடன்ட்கள் 2023ல் 50ஆயிரமாக அதிகரித்து விட்டதாகவும் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். 2047ல் வளர்ந்த நாடாகும் திசையில் இளைஞர்கள் உந்து சக்தியாக இருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்ற வாக்குறுதியின்படி 20 கோடி வேலைகள் பற்றி பிரதமர் வாய்திறக்கவில்லை. ஆனால், இந்திய இளைஞர்களுக்கு "இப்போது இருப்பதை போன்ற மிகச் சிறந்த காலம் இனி எப்போதும் இருக்கப் போவதில்லை" என்று நாக்கூசாமல் பேசுகிறார்.
ஜனவரி 22 ராமர் கோவில் திறப்பு பற்றி, "அயோத்தி கோவிலில் தமிழ்நாட்டின் முத்திரை” என தினத்தந்தி தலையங்கம் எழுதுகிறது. குமரியி லிருந்தும் ராமேஸ்வரத்திலிருந்தும் புனித நீர், நாமக்கல்லில் இருந்து 1200 கிலோ மணி, மகாபலிபுரத்திலிருந்து கதவுகள், தமிழ்நாடு முழு வதும் இருந்து செங்கற்கள், சென்னை அய்அய்டியின் தொழில்நுட்ப ஆலோசனை, 93 வயதான வழக்கறிஞர் பராசரனின் வழக்காடு திறன் இவையெல்லாம் "அயோத்தி ராமர் கோவிலில் தமிழ்நாட்டு முத்திரைகள்” என தினத்தந்தி கூறுகிறது. காசி தமிழ்ச் சங்கமம் கலாச்சாரச் சங்கமம் என சிறப்புக்கட்டுரை தீட்டியுள்ள தினகரன் தமிழ்நாட்டு பாரதிக்கும் காசிக்கும் உள்ள கலாச்சார பிணைப்பு பற்றி பேசுகிறது. பாஜக-ஆர்எஸ்எஸ் சனாதன சக்திகள் தெருத்தெருவாக இறங்கி அயோத்திக்கு வருமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆனால், ராமனை ஈவிஎம் (மின்னணு வாக்கு எந்திரம்) ஆக்கி வாக்குகளை வாரிக் குவிக்கும் திட்டத்துடன் இறங்கியுள்ள பிரதமர் மோடி, திருச்சியில் ராமர் கோவில் பற்றி பேசாதது வியப்பளிக்கிறது. தமிழ் நாட்டில் ராமனுக்கு உள்ள வாக்கு பலம் பற்றி இன்னும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து நல்ல தகவல் கிடைக்கவில்லை போலும்.
திருச்சி விமான நிலைய நிகழ்ச்சியில் பேசிய மோடி, வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதனுக்கும் விஜயகாந்துக்கும் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். சுவாமிநாதனுக்கு ஒரு வரியில் அஞ்சலி கூறியுள்ள அவர், விஜயகாந்துக்கு ஒரு சிறப்புக் கட்டுரையே வெளியிட்டிருக்கிறார்! பல நாளேடுகளும் இதை தோளில் தூக்கி வெளியிட்டுள்ளன. ஜெயலலிதா, கருணாநிதி மறைவின் போதுகூட இப்படி ஒரு உருக்கமான புகழஞ்சலியை மோடி வெளியிட வில்லை. 'தமிழ்நாட்டின் இருதுருவ அரசியல்' பின்புலத்தில் விஜயகாந்த் மூன்றாவது அரசியல் சக்தியாக எழுந்து வந்ததை மோடியின் புகழஞ்சலி அழுத்தமாக குறிப்பிடுகிறது. விஜயகாந்த் மறைவை அடுத்து, அரசு மரியாதை உள்ளிட்ட விரிவான ஏற்பாடுகளைச் செய்து விஜயகாந்த் அனுதாபி களிடம் நல்ல பெயரும் பிரமேலதாவிடம் நன்றியை யும் பெற்றுள்ள ஸ்டாலின் ஒரு துருவம். பாஜகவிட மிருந்து விலகி எதிர்க்கட்சி தோற்றம், இஸ்லாமியர் மாநாட்டில் பங்கேற்பு, பில்கிஸ்பானோ தீர்ப்புக்கு வரவேற்பு, கால் வலியை பொறுத்து ராமர் கோவிலுக்கு செல்வது அமையும் என பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலும் காட்டும் பழனிச்சாமி மற்றொரு துருவம். இந்தப் பின்னணியில் தேமுதிகவை வளைக்க, முடிந்தால் அப்படியே விழுங்க எத்தனிக்கும் முயற்சிதான் விஜயகாந்துக்கு கிடைத்த மோடியின் ஆகப்பெரும் புகழஞ்சலி!
பாஜக தலைவர்கள் பலரும் வரிசை கட்டி விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிநிகழ்வில் திரண்ட மக்கள் திரள், தமிழ்நாடு முழுவதும் வெளிப்பட்ட விஜயகாந்துக்காக உருவான அனுதாப பெருவெள்ளம் என்ற பின்னணியில் தேர்தல் எந்திர மோடி இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது!மோடி நிச்சயம் ராமர் கோவில் பற்றி பேசுவார் என்று எதிர்பார்த்திருந்த ஸ்டாலின், விமானநிலைய வரவேற்பின்போது, பெரியாரின் வைக்கம் கோவில் நுழைவு போராட்டம் பற்றிய புத்தகத்தை பரிசாக கொடுத்து மோடியை வரவேற்றார். முதல்வரது விமானநிலைய உரையில், வெள்ள நிவாரண கோரிக்கையை வலியுறுத்தும்போது, "இது மக்கள் நலக் கோரிக்கை; அரசியல் முழக்கமல்ல" என மோடியை இடிக்கும் விதமாகப் பேசினார். பல்கலைக் கழக உரையின்போதும் அகில இந்திய அளவில் கல்வியில் முன்னேறியுள்ள தமிழ்நாடு பற்றி புள்ளிவிவரங்களை குறிப்பிட்டுப் பேசினார். இது நீதிக்கட்சி காலத்திலேயே விதைக்கப்பட்டு தொடர்ந்து வளர்க்கப்பட்டு வருவதாகவும் பேசி யுள்ளார். கல்வியில் பாஜக-ஆர்எஸ்எஸ் அரசியலுக் கும் திராவிட அரசியலுக்கும் உள்ள அடிப்படையான கருத்தியல் வேறுபாட்டை முதலமைச்சர் உணர்த்த முற்பட்டுள்ளார். ஆனால், பல ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடத்தாமல் மாணவர்களை பெரும் பாதிப்புக்குள்ளாக்கிய ஆளுநரின் அடாவடிச் செயலை எதிர்த்துப் போராடிய இடதுசாரி மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கத் தலைவர்களை போலீஸ் கண்காணிப்பில் வைத்து, கல்வித் துறை யில் ஜனநாயகத்தை மறுத்தது சமூகநீதி ஆகுமா? திருச்சி நிகழ்ச்சிகளில் பாஜகவினர், மோடி பேசும் போது அவரை வாழ்த்தி முழக்கம் எழுப்பச் செய்ததை யும் ஸ்டாலின் பேசும்போது கூச்சல் குழப்பம் எழுப்பச் செய்ததையும் முதலமைச்சரும் கவனித்திருப்பார்.
திருச்சி நிகழ்ச்சிகளில் மோடி, 'அரசியல் ராமன்' பற்றி பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால் தெள்ளத் தெளிவாக மக்களவைத் தேர்தல் நிகழ்ச்சி நிரலையே உருட்டி விட்டிருக்கிறார். அதிமுக உள்ளிட்ட துண்டு துக்காணிகளைக் கொண்ட கூட்டணி கட்ட தேமுதிகவை குறிவைத்துள்ளார். பாஜக-ஆர்எஸ்எஸ் திட்டத்தின்படி, தெருத்தெருவாக சனாதனக்கும்பல் ராமர் கோவிலுக்கு அழைப்பு விடுவதும் மோடியின் உருப்பெறாத கூட்டணி முழக்கமும் ஒன்றிணைந்து பாஜகவுக்கு தேர்தலில் பலனளிக்கலாம் என்று நம்புகிறார் மோடி. பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசும்போது, பாரதிதாசன் பாடலில் ஒரு வரியான, "புதியதோர் உலகம் செய்வோம்" என்று உதிர்த்திருக்கிறார் மோடி.
ஜனவரி 26, திருச்சியில் நடைபெறும் 'வெல்லும் ஜனநாயகம்' மாநாடும், பிப்ரவரி 1, தஞ்சையில் நடக்கவிருக்கும் "வீழ்க பாசிசம், வெல்க இந்தியா” பேரணியும் சொல்லவிருப்பது, "கெட்டப் போரிடும்(சனாதன) உலகத்தை (மோடி ஆட்சியை) வேரோடு சாய்ப்போம்"!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)