பிஜேபி ஆட்சியை வீழ்த்துவோம் ! தொழிலாளர் வாழ்வாதாரம் காப்போம்!
தொழிலாளர் வர்க்கம் நிம்மதியான வாழ்க்கை நடத்திட வேண்டுமென்றால், மோடியால் தொழி லாளர் உரிமைகள் பறித்தெடுக்கப்படுவதைத் தடுத்திட வேண்டுமென்றால், 2024 ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. அதாவது வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான பிஜேபியை ஆட்சியிலிருந்து தூக்கி எறிவது, தேர்தலில் தோற்கடிப்பது என்பது ஆகும். மோடியை, பிஜேபியைத் தோற்கடிப்பது என்பது தொழிலாளர் வர்க்கத்தின் மாபெரும் கடமையாக முன் வந்திருக் கிறது. மோடியைத் தோற்கடிப்பது என்பது அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் குறித்தது மட்டுமல்ல, தொழிலாளர்களின் வாழ்வாதாரம், வாழ்வுரிமை, வேலை, தொழிற்சங்க உரிமைகள் பறிபோகாமல் தடுப்பதோடு நேரடியாக தொடர்புடையது. மோடிக்கு அளிக்கப்படும் வாக்கு தொழிலாளர்கள் தங்களை தற்கொலை செய்து கொள்வதற்கு இணை யானது. தொழிலாளர் வாழ்வைக் காத்திட மோடியின் பிஜேபியை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றியே தீர வேண்டும் எனும் நிலை வந்திருக்கிறது.
ஏனென்றால், மோடியின் பிஜேபி ஆட்சி,தற்போது சட்டப்படி கட்டாயமாக இருக்கும்,குறைந்தபட்ச ஊதியம் (15000) கொடுக்க வேண்டிய கட்டாயமில்லை, தரை மட்ட ஊதியம் (4500) கொடுத்தாலே போதுமானது என்கிறது. தொழிலாளர் ரத்தம் சிந்தி பெற்ற 8 மணி நேர வேலை உரிமை ஒழிக்கப்பட்டு, 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்கிறது. இஎஸ்ஐ, பிஎப் கட்டாயமில்லை என்கிறது. வேலை நிறுத்த உரிமையைப் பறிக்கிறது. பணி நிரந்தரம் என்கிற கருத்துக் கோப்பையே முற்றாக ஒழிக்க வேண்டும் என கனவு காண்கிறது. அத்தக் கூலிகள் போல இருக்கும் தொழிலாளர்களையே 2047ல் நமது நாட்டில் காணமுடியும் என்கிறது. இம் என்றால் சிறைவாசம்,ஏன் என்றால் வனவாசம் என்பது போல, மூச்சுக்காற்று சூடாக வந்தால் கூட உடனடியாக கேள்வி ஏதுமின்றி,இழப்பீடு ஏதுமின்றி தொழிலாளியை வேலையை விட்டுத் தூக்கிட முதலாளிகளுக்கு உரிமை வேண்டும் என்கிறது. வேலை நிறுத்தம் செய்தால் அந்த சங்க உள் நிர்வாகிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும், சங்க வெளித் தலைவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்கிறது. சங்க அங்கீகாரம் என்பது முதலாளிகளின் பாக்கெட் சங்கங்களுக்கு மட்டுமே. தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, பிஎப், பணிக்கொடை, ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அந்த முதலாளிகளும் அரசுமே பொறுப்பு என்பது ஒழிக்கப்பட்டு, அந்தந்த தொழிலாளர்களே பொறுப்பு. அவர்கள் பணம் கொடுத்தால், கொடுக்கும் பணத்தின் அளவிற்கு ஏற்ப நலத் திட்டங்கள் கிடைக்கும் என்கிறது. எல்லா நலவாரியங்களையும் ஒழித்து, நலத் திட்டங்கள் என்பது இன்சூரன்ஸ் கம்பெனிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. அரசும் கூட ஒரு இன்சூரன்ஸ் ஏஜெண்ட் வேலையைத் தான் செய்ய முடியும் என்கிறது. பல லட்சக்கணக்கான தொழிலாளர் பணி புரியும், நாட்டின் போக்குவரத்து நரம்பு மண்டலமான ரயில்வேயை, வங்கிகளை, அரசுக்குச் சொந்தமான,எல்ஐசி உள்ளிட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்களை,நிலக்கரி முதல் இரும்பு எஃக்கு சுரங்கங்கள் வரையிலான தாதுப் பொருட்களை, தாது மூலாதாரங்களை, சாலைகளை, துறைமுகங்களை, விமான நிலையங்களை தனியார் கார்ப்பரேட் முதலாளி களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கிறது. இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர் குரல் கொடுத் தால் அவர்களை விசாரணை ஏதுமின்றி ஆண்டுக் கணக்கில் சிறையில் தள்ளக்கூடிய ஆள்தூக்கி சட்டமான ஊபா சட்டத்தையும் கூட பயன்படுத்து வோம் என்கிறது. இப்படி தொழிலாளர் மீது மோடி ஆட்சி தொடுக்கும் தாக்குதல்கள் எண்ணற்றவை. தொழிலாளர் விரோத, கார்ப்பரேட் முதலாளி ஆதரவு தொகுப்புச் சட்டங்கள் நான்கு ஏற்கனவே நாடாளு மன்றத்தால் நிறைவேற்றப்பட்டு விட்டன. அவற்றை தொகுப்புச் சட்டங்கள் என சொல்வதைவிட, தொழிலாளர் அடிமைச் சாசனங்கள் அல்லது தொழி லாளர் மரண சாசனங்கள் என்றே சொல்ல வேண்டும். அவற்றை அமுலாக்கம் செய்யும் ஆணைக்கான, ஒரே ஒரு கையெழுத்துக்காக அவை காத்திருக்கின்றன. அந்தக் கையெழுத்தை இப்போது போட்டால் தோற்று விடுவோம் என்று நாடாளுமன்றத் தேர்தலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார் மோடி.
எனவே, அந்தத் தொழிலாளர் அடிமைச் சாசனங் களைத் தடுத்து நிறுத்திட வேண்டுமானால், அந்த அரசியல் கடமையை நிறைவேற்றிட வேண்டு மானால், தொழிலாளர் வாழ்வாதாரத்தைக் காத்திட வேண்டுமானால், தொழிலாளர் வர்க்கத்திற்கு இருக்கும் ஒரு நல்வாய்ப்பைப் பயன்படுத்திட வேண்டுமானால், வரவிருக்கும் நாடாளு மன்றத் தேர்தலில் மோடியை, பிஜேபியை, ஆர் எஸ் எஸ் சை, பாசிச ஆட்சியை மண்ணைக் கவ்விடச் செய்திட வேண்டும்.
பிஜேபியைத் தோற்கடித்திட, பிஜேபிக்கு எதிரான அனைத்து விதமான அரசியல் சக்திகளோடும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் முதல் பிஜேபியை தேர்தலில் தோற்கடிக்க முனையும் அரசியல் கட்சிகள் வரை கரம் கோர்த்திட தயாராக இருக்கிறோம். இதில் எந்தவித சமரசமும் கிடையாது. ஆனால், அதே நேரத்தில், தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராக, உழைக்கும் மக்களுக்கு எதிராக, கார்ப்பரேட் டுகளுக்கு ஆதரவாக எந்த கட்சி, எந்த அரசு என்ன விதமான தாக்குதல் தொடுத்தாலும் அதையும் சமரச மற்ற விதத்தில் எதிர்த்திட உறுதி பூண்டிருக்கிறோம்.
அப்படி பிஜேபியைத் தோற்கடித்திட வேண்டுமானால், கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை முறியடித்திட வேண்டுமானால், அதற்கு வலுவான அமைப்பு ஒரு முன்நிபந்தனை ஆகும். நமது அகில இந்திய அறைகூவலை நிறைவேற்றும் திசையில், மாநில மாநாட்டுக்கு முன்னால் பல மாவட்ட மாநாடுகளை நடத்தி இருக்கிறோம். மிச்சமிருக்கும் மாவட்ட மாநாடுகளை விரைவில் நடத்திட வேண்டும். மாநாடுகள் அமைப்பை ஒழுங்கு படுத்துவதற்காக மட்டும் நடத்தப்படுவன அல்ல. அமைப்பை விரிவுபடுத்துவதும் பெற்ற அனுபவங் களின் அடிப்படையில் போராட்டங்களை கூர்மைப் படுத்திடுவதும் கூட அதன் நோக்கமாகும்.
விரிவடைந்து வரும் வேலைகள்
ஒப்பீட்டுரீதியில் நாம் வளர்ந்திருக்கிறோம். கட்டிடத் தொழிலாளர் மத்தியிலான நமது வேலை மாநிலம் முழுவதும் விரிவடைந்திருக்கிறது. மின் வாரியத் தொழிலாளர் மத்தியில், போக்குவரத்துத் தொழிலாளர் மத்தியில், டாஸ்மாக் தொழிலாளர் மத்தியில், தோட்டத் தொழிலாளர் மத்தியில் புதிதாக வேலைகளைத் துவங்கி இருக்கிறோம். நமது மாநிலச் சங்கங்கள் பல மாவட்டங்களில் கிளைகள் கொண்டதாக வளர்ந்திருக்கின்றன. சிவில் சப்ளைஸ் சுமைதூக்கும் தொழிலாளர் மத்தியில் ஒரு போராட்ட சக்தியாக தொடர்கிறோம். சவால்களையும் சந்திக் கிறோம். வளர்ந்தும் வருகிறோம்.
கிருஷ்ணகிரியில், திருப்பூரில், திருச்சியில், திண்டுக்கல்லில், தேனியில், தென்காசியில், தஞ்சை யில், திருவண்ணாமலையில், வேலூரில், திருப்பத் தூரில் புதிதாக வேலைகளைத் தொடங்கி இருக்கி றோம். விரிவுபடுத்தி இருக்கிறோம்.
கன்யாகுமரியில் தூய்மைப் பணியாளர் மத்தியில், மீனவர் மத்தியில், தோட்டத் தொழிலாளர் மத்தியில் வேலையை விரிவுபடுத்தியிருக்கிறோம். நெல்லையில் பீடித் தொழிலாளர் மத்தியில் இருந்த வேலைகளை மீட்டெடுத்து வருகிறோம். தென்காசி யில் தூய்மைப் பணியாளர் மத்தியில், பீடித் தொழிலாளர் மத்தியில், இதர பல்வேறு அமைப்பாக் கப்படாத தொழிலாளர் மத்தியில் புதிதாக வேலை செய்கிறோம். தூத்துக்குடி துறைமுகத் தொழி லாளர்கள் மட்டுமல்லாமல், கட்டிடத் தொழிலாளர் போன்ற இதர பிரிவினர் மத்தியிலும் வேலை செய்து வருகிறோம். சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளர் மத்தியில் பணியாற்ற முயற்சித்து வருகிறோம்.
திண்டுக்கல்லில் பஞ்சாலைத் தொழிலாளர், டெக்ஸ் தொழிலாளர் மத்தியில், கரூரில் டெக்ஸ் தொழிலாளர் மத்தியில் நமது வேலைகளை விரிவுபடுத்தியுள்ளோம். நாமக்கல்லில் நமது வேலை விசைத்தறி தொழிலாளர் மத்தியில் குவிந்து இருக்கிற போதும் இதர பிரிவு தொழிலாளர் மத்தியில் விரிவடைகிறோம். மாறிவரும் தொழிலாளர் சேர்க்கையை படித்தறிந்து அதற்கேற்ப நமது நடைமுறையை மாற்ற முயற்சிக்கிறோம். தறித் தொழிலாளியின் மகன் தறித் தொழிலாளியாக இல்லாத நிலை வந்திருப்பதைக் காண்கிறோம். சேலத்தில் விசைத்தறி தொழிலாளர் மத்தியில் சிறப்பு கவனம் செலுத்தும் அதே நேரத்தில், தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட பிற பிரிவு தொழிலாளர் மத்தியில் விரிவாக்க முயற்சிக்கிறோம். தர்மபுரியில் மின்வாரிய தொழிலாளர், போக்குவரத்து தொழி லாளர், மருத்துவமனை தொழிலாளர் உள்ளிட்ட பல பிரிவினர் மத்தியில் செயல்பட்டு வருகிறோம். சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட கிராமப்புற மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், கட்டிடத் தொழிலாளர் உள்ளிட்ட அமைப்பாக்கப்படாத பிரிவினர் பலரையும் திரட்டி வருகிறோம்.
கோவையில் நமது வேலை பிரிக்காலை மையமாக கொண்டதாக, ஒரு படித்தான தன்மை கொண்டதாக இருந்தது. அதனை பலபடித்தான தன்மை கொண்டதாக மாற்ற வேண்டும் என்ற நம் முடிவின் அடிப்படையில் வேலை செய்து இப்போது தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் நாம் தவிர்க்க முடியாததோர் சக்தியாக வளர்ந்திருக்கிறோம். ஊதிய உயர்வு கோரிய வேலை நிறுத்தப் போராட்டத்தை கூட்டாகவும் சுதந்திரமாகவும் நடத்தி இருக்கிறோம். கட்டிடத் தொழிலாளர் மத்தியில் வேலையைத் தொடங்கி இருக்கிறோம். தொழிற்துறைப் பகுதி களில் விரிவாக்க முயன்று கொண்டிருக்கிறோம்.
வாணியம்பாடியில் தோல் மற்றும் தோல் பொருள் தொழிலாளர்கள் சங்கம் மீண்டும் ஏஐசிசிடியு வுடன் இணைந்துள்ளது.
சென்னையில் நாம் அடைந்த மிகப்பெரும் பின்னடைவுக்குப் பிறகும் மீண்டு எழுந்திருக் கிறோம். கிட்டத்தட்ட புதிதாக வேலையைத் துவங்கி இருக்கிறோம் எனலாம். கட்டிடத் தொழிலாளர் உள்ளிட்ட பல அமைப்பாக்கப்படாத தொழிலாளர் மத்தியில் வேலை செய்து வருகிறோம். அமைப்பாக் கப்பட்ட தொழிற்சாலைப் பகுதிகளுக்கு விரிவு படுத்துவதென்பதை ஒரு முக்கிய சவாலாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
நாம் சந்திக்கும் சவால்கள்
ஆனாலும், நாம் எல்லாம் நன்றாகவே நடக்கிறது என சுயதிருப்தி அடைந்துவிட முடியாது. கீழ்க் காணும் அம்சங்களை ஒரு சவாலாக ஏற்று வரவிருக்கும் காலத்தில் செயலாற்றிட வேண்டும்.
நாமும் சங்கம் நடத்துகிறோம் என்கிற அளவுக்கு இருந்தால் போதாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் புறநிலை ரீதியாக கொந்தளிக்கும் நிலையில் உள்ள தொழிலாளர் பிரிவினரை அடையாளம் காண்பது, அவர்கள் மத்தியில் திட்ட மிட்ட விதத்தில் வேலைகளை வளர்த்தெடுப்பது ஒரு முக்கிய கடமையாக முன்வந்திருக்கிறது.
மின்வாரியத் தொழிலாளர், போக்குவரத்து தொழிலாளர் போல, தாக்குதல் திறன்மிக்க தொழிலாளர் பிரிவினர் மத்தியில் நமது வேலைகளை வளர்த்தெடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
அநீதிக்கு உள்ளாகும் அரசுத் துறை, தனியார் துறைகளில் பணியாற்றும் ஒப்பந்த முறை மற்றும் வேறு பல்வேறு முறைசாரா முறைகளில் பணியாற்றும் தொழிலாளர் மத்தியில் பணியாற்ற இன்னமும் கூடுதல் கவனம் தேவை.
மாவட்ட வாரியாக, நாம் கவனம் செலுத்த தேர்ந்தெடுத்திருக்கும் துறை தொழிலாளர் மத்தியில் பல்லாயிரக்கணக்கானோரை சென்றடைவதும் அவர் களைப் போராட்டங்களில் அணிதிரட்டுவதும், அவர்களை சங்க உறுப்பினர்களாக மாற்றுவதும் உடனடிக் கடமையாகும்.
நமது மாநிலச் சங்கங்கள் பலம் பெற்றவை யாக வளர்க்கப்பட வேண்டும். மாறிவரும் தொழில் துறை மற்றும் அரசியல் சூழலுக்கேற்ப தேவையான மாற்றங்களை நமது நடைமுறையில் கொண்டுவர சற்றும் தயங்கக் கூடாது. உதாரணமாக, கட்டிட அரங்கில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. நாளை நலவாரியமே இருக்காது எனும் நிலையை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. அந்தப் பின்னணியில், நமது கட்டிடத் தொழிலாளர் இயக்கத்தை, நடைமுறையை மறுதிசைவழிப் படுத்துவது மிக முக்கிய கடமை ஆகும். நலவாரியம் சார்ந்த நடைமுறையை உதறித் தள்ளிவிட்டு, கட்டிடத் தொழிலாளர் இயக்கத்தை ஒரு போர்க் குணமிக்க போராட்ட இயக்கமாக மாற்றி யமைப்பது நமது தலையாயக் கடமையாக இந்த அரங்கில் முன்வந்திருக்கிறது. அதை நாம் நிறை வேற்றிட வேண்டும். சின்னஞ்சிறு கட்டிடங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களை நலப் பயன்களை விரிவுபடுத்தக் கோரி அரசுக்கு எதிரான போராட்டங்களில் அணிதிரட்டிட வேண்டும். அதேபோல, பல பன்னாட்டுக் கம்பெனிகள், கார்ப்பரேட் முதலாளிகள் இப்போது கட்டிடத் துறைக்குள்ளும் பொருளாதாரத்திலும் ஆதிக்கம் செலுத்தி வருவதைக் காண்கிறோம். அத்தகைய பெரிய கம்பெனிகளில் வேலை செய்யும் தொழி லாளர் மத்தியில் சங்கங்களே இல்லை எனும் நிலை நிலவுகிறது. நாம் அத்தகையத் தொழிலாளர்களைத் திரட்டிட கவனம் செலுத்த வேண்டும். அரசு அதிகாரி கள், ரியல் எஸ்டேட் முதலாளிகள், நில மாஃபியாக் கள், பெரும் கட்டுமான நிறுவனங்கள், ஒப்பந்ததாரர் கள் ஆகியோரின் கள்ளக் கூட்டணிக்கு எதிராக தொழிலாளர்களைத் திரட்டிட வேண்டும். இப்படி நமது வேலைகளை மறுதிசைவழிப்படுத்தும் போக்கில், கட்டிடத் தொழிலாளர் சங்கத்தை ஒரு வர்க்கப் போராட்டச் சங்கமாக, பெருமூலதனத்திற்கு, அரசுக்கு சவால் விடும் சங்கமாக வளர்த்திட வேண்டும்."ஒரு புரட்சிகர கட்டிடத் தொழிலாளர் இயக்கத்தைக் கட்டி எழுப்புவோம்” எனும் தலைப்பில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மொழிகளில் அகில இந்திய மாநாட்டின் போது வெளியிடப்பட்ட புத்தகத்தை அனைவரும் படித்து அதனை நடை முறைப்படுத்திட வேண்டும். விரைவில் நடக்க விருக்கும் கட்டிடத் தொழிலாளர் பயிற்சி முகாம் இது போன்ற பிரச்சனைகளை விவாதிக்கும் என கருதுகிறேன்.
நிர்வாக வசதிகளுக்காக சங்கங்களை நாம் மாநிலச் சங்கங்களாக பதிவு செய்திருக்கிறோம். கடந்த காலங்களில், பொதுவாக, இவை அனைத்தும் மாவட்டச் சங்கங்களாகவே பதிவு செய்யப்பட்டன. இப்போது மாநிலச் சங்கங்களாக இருப்பதால் அவற்றை மாவட்டத்தைத் தாண்டிய சங்கங்களாக நாம் பார்க்க முடியாது. விதிவிலக்காக, சில சங்கங்கள் மட்டும் அப்படி இருக்க வேண்டி இருக்க லாம். அத்தகைய சங்கங்கள் அனைத்தின் செயல் பாடும் மாவட்ட ஏஐசிசிடியு கமிட்டி மட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அனைத்து தொழிற் சங்க நடவடிக்கைகளையும் மையத் தொழிற்சங்க நடவடிக்கையோடு இணைக்கும் போதுதான் குறிப்பிட்ட பிரிவு சங்கங்களின் நடவடிக்கைகளும் வேகம் பெறும். நாம் கனவு காணும் தொழிலாளர் ஒற்றுமையையும் நிதர்சனமாக்க முடியும்.
பரந்த தொழிலாளர்களை பெரும் எண்ணிக்கையில் உறுப்பினர்களாகச் சேர்ப்பது தொழிற்சங்க இயக்கத்தின் மிக முக்கியமான ஒரு அங்கம்தான். ஆனால், அதில் மட்டும் நாம் சுயதிருப்தி அடைந்து விட முடியாது. சங்க உறுப்பினர்களில் எவ்வளவு பேரை சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறோம், போராட்டங்களில் அணிதிரட்டுகிறோம் என்பது மிக முக்கியமான அளவுகோல் ஆகும். அதுதான் சங்கத்தை உயிர்த் துடிப்பானதாகவும் செயல் துடிப்பானதாகவும் பணியாற்ற உதவும். சங்க உறுப்பினர் எண்ணிக்கை மட்டுமல்ல, தொழிலாளர் அணிதிரட்டல் பலம் சங்க வளர்ச்சியின் முக்கியமான அளவுகோலாக கொள்ளப்பட வேண்டும். அதன் மூலம் தான், தொழிலாளர் பங்கேற்கும் தொழிற்சங்க ஜனநாயகம் என்பதை, ஜனநாயகப்படுத்தப்பட்ட தொழிற்சங்கங்கள் என்பதை நாம் அடைய முடியும். அப்போதுதான் தொழிற்சங்கம் அதிகாரத்துவமய மாவதைத் தடுக்க முடியும்.
வர்க்க அரசியல் என்பது ஒரு கட்சி அரசியல் அல்ல. ஆனால், தொழிலாளர் வர்க்கத்தை, வர்க்க அரசியல் செயல் துடிப்புடன் வளர்க்கவில்லை என்றால், அந்தச் சங்கத்தை, இயக்கத்தை, சமரசமற்ற போராட்டச் சங்கமாக, இயக்கமாக வளர்த்திட முடியாது. அது மட்டுமல்ல, வரவிருக்கும் காலங் களில், தொழிலாளர்களுக்கு சட்டரீதியான வாய்ப்பு கள் மூடப்படுமென்றால், அத்தகைய தருணங் களிலும் தொழிற்சங்க இயக்கத்தை துடிப்பானதாக வைத்திட, தொழிலாளர் போராட்டங்கள் நான்கு சுவர்களுக்குள் கட்டுண்டு கிடக்கும் நிலைமை யிலிருந்து மீட்டெடுத்திட வேண்டும்.
இந்திய தொழிலாளர் வர்க்கம், தமிழக தொழிலாளர் வர்க்கம் ஏராளமான தியாகங்கள் செய்துதான் தொழிற்சங்க இயக்கம் கட்டி எழுப்பப் பட்டது. சுதந்தரப் போராட்ட காலத்தில், வெள்ளைப் பரங்கியர்களுக்கு எதிராக துப்பாக்கிக் குண்டு களையும் பீரங்கிகளையும் எதிர்கொண்டு போராடிய வர்க்கம் இது. அத்தகைய சூழல் வருமானால், அதையும் எதிர்கொள்ள தொழிலாளர்களைத் தயார் செய்வதுதான் புரட்சிகர தொழிற்சங்க இயக்கத்தின் கடமை ஆகும்.
அத்தகைய கடமைகளை நிறைவேற்றிட,தமிழக தொழிலாளர் வர்க்கத்தைத் தயார் செய்திட,இந்த 10வது மாநில மாநாட்டில் உறுதி ஏற்போம்,தோழர்களே.
இன்குலாப்! ஜிந்தாபாத்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)