ஜூன் 1953. அன்றைய காங்கிரசின் தமிழ்நாட்டு முதல் அமைச்சர் திரு. ராஜாஜி அவர்கள் ஒரு கல்வித் திட்டத்தை அறிவித்தார். "மாற்றப்பட்ட திட்ட அடிப்படையிலான ஆரம்பக் கல்வி" என்ற பெயரில் அறிவித்தார். அதன்படி, காலை நேரம் முறையான வகுப்பறைக் கல்விக்காகவும் மதிய நேரம் மாணவர்கள் தங்கள் தந்தையரின் பாரம்பரியமான குலத் தொழிலைக் கற்றுக் கொள்வதற்கும் என ஒதுக்கப்பட்டது. அந்தத் திட்டத்தின்படி, தோட்டியின் மகன் தோட்டி வேலையைத் தான் கற்றுக் கொள்ள வேண்டும். செருப்பு தைப்பவரின் மகன் செருப்பு தைக்கும் தொழிலைத்தான் கற்றுக் கொள்ள வேண்டும். பூசாரியின் மகன் பூசாரியின் தொழிலைத்தான் கற்றுக் கொள்ள வேண்டும். இது மொத்த மாநிலத்தையும் ஆர்ப்பரித்து எழச் செய்தது. ஒரு ஆற்றல்மிக்க திராவிட அரசியல் எழுந்திடுவதற்கு வழிகோலியது. எதிர்க் கட்சிகள் மத்தியில் இருந்து மட்டுமல்லாமல், தனது சொந்த கட்சிகுள்ளிருந்தே ராஜாஜி கடும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டி யிருந்தது. சாதிப் படிநிலைக்கு வலு சேர்க்கும் குலக் கல்வி முறையை ரத்து செய்திட வேண்டும் என்கிற கோரிக்கையின் தலைவராக மாநில காங்கிரசுக்கு உள்ளிருந்தே எழுந்து வந்தார் காமராசர். சர்ச்சைக்குரிய கல்வித் திட்டத்திற்கு எதிரான மாபெரும் எதிர்ப்புப் போராட்டத்தால், மார்ச் மாதத்தில் மாநில காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் இருந்து விலக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளான ராஜாஜி, இறுதியில் 1954 ஏப்ரல் மாதத்தில் முதல் அமைச்சர் பதவியில் இருந்தே விலக வேண்டியதாகி விட்டது.
இப்போது, 2023ல் திருவாளர் மோடியும் பிஜேபியும் அதே நிலைமைக்கு வந்திருக்கிறார்கள். விஸ்வகர்மா பிறந்த நாளன்று, மோடியின் பிறந்த நாளன்று, பிரதம அமைச்சர் மோடியால் அறிவிக்கப்பட்ட விஸ்வகர்மா திட்டம் என்பது குலத் தொழிலைக் கற்பதற்காக ராஜாஜியால் உருவாக்கப்பட்ட குலக் கல்வித் திட்டத்தின் மறுபெயரே தவிர வேறு எதுவும் இல்லை.
ராஜாஜியின் கொச்சையான திட்டத்திற்குப் பதிலாக, சம்பளத்துடன் கூடிய பயிற்சி, இலவச தொழிற்கருவிகள், கடன்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நாசூக்கான திட்டத்தை, சாதிய படிநிலையை நோக்கி கவர்ந்திழுக்கும் ஒரு திட்டத்தை, சாதிய முறைக்கு வலு சேர்க்கும் ஒரு திட்டத்தை, விஸ்வகர்மாத் திட்டம் என்கிற பெயரில் பிரதம அமைச்சர் மோடி அறிவித்து இருக்கிறார்.
கைவினைஞர்கள்: தொழிலால் அல்ல, சாதியால் (பிறப்பால்)
பொருள் உற்பத்திக்கான தொழிற் கருவிகள், கடன்கள் முதல் உற்பத்திப் பொருள் 'ப்ராண்ட்' உருவாக்குவது, விற்பனை செய்வது வரை அனைத்து விதங்களிலும் உதவி செய்வதாக மோடி தலைமையிலான பிஜேபி அரசு அறிவித்து இருக்கிறது. ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்த ஒருவர், தான் பரம்பரை பரம்பரையாக அதே தொழிலை செய்து வருபவன் என்பதை நிரூபித்தால் மட்டும்தான், அதாவது, வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தன் பிறப்பால், தன் சாதியால் அந்த தொழிலைச் செய்பவன் என்பதை நிரூபித்தால் மட்டும்தான், அவருக்கு அத்தகைய ஆதரவு வழங்கப்படும். பகுதி மட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் இதர அதிகாரிகள் அவர்களது பிறப்பை, சாதியை, பாரம்பரிய தொழிலை உறுதி செய்தால் மட்டுமே அவர்களுக்கு அத்தகைய ஆதரவு வழங்கப்படும். கைவினைஞர்கள் மற்றும் கைவினைப் பொருட் கள் செய்பவர்கள் தங்களது சாதி அடிப்படை யிலான தொழிலுக்குள் கட்டுண்டு கிடப்பதை உறுதி செய்வதற்கென, அதிலிருந்து தப்பிப்பதைத் தடுப்பதற்கென, மிகவும் திட்டமிட்ட ரீதியில் உருவாக்கப்பட்ட சதித் திட்டமே இந்த விஸ்வகர்மாத் திட்டமாகும். ஆர்எஸ்எஸ்ஸின் கனவான, சாதி அடிப்படையிலான, வருணாசிரம முறையின் அடிப்படையிலான ஒரு இந்து ராஜ்யத்தை உருவாக்குவதை, நிலவுகின்ற சாதீய முறையை மனு ஸ்மிருதியின் அடிப்படையில் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சதியே அன்றி இது வேறல்ல.
இந்தத் திட்டத்தின் மீதான ஆர்வத்தை உருவாக்குவதற்காகவும், கைவினைஞர்கள், கைவினைப் பொருள் செய்பவர்கள் மத்தியிலான இளைய தலைமுறையை ஈர்ப்பதற்காகவும், மிக முக்கியமாக, அந்த இளைய தலைமுறையினர் தமது சாதித் தொழிலை விட்டு விலகிச் செல்வதைத் தடுப்பதற்காகவும்தான் ஒரு கடன் வழங்கும் திட்டத்தை அறிவித்திருக்கிறார் மோடி. ஐந்து நாட்கள் அடிப்படைப் பயிற்சி பெற்றிருந்தால் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கடனாக வழங்கப்படும். அதை 18 மாதங்க ளுக்குள் திருப்பி செலுத்தி இருந்தால், 15 நாட்கள் முன்னேறிய பயிற்சி பெற்ற சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே இன்னுமொரு இரண்டு லட்சம் கடனாக வழங்கப்படும். மொத்தம் 13 சதவீத வட்டியில் 8 சதவீதத்துக்கு அரசும், மீதம் 5 சதவீதத்துக்கு கடன் வாங்கியவர்களும் பொறுப்பாவார்கள். இந்தத் திட்டத்தைத் துவக்கி வைத்து உரையாற்றிய மோடி, "கடனுக்கு உத்தரவாதம் மோடிதான்", எந்த வங்கியும் வேறு எந்த சொத்தையும் அடமானமாகக் கேட்காது என பெருமையுடன், புளகாங்கிதத்துடன் அறிவித்தார்.
நிகழ்ச்சி துவக்கத்தின் போது, "குரு சிஷ்ய பரம்பரை” எனும் பொருட்காட்சியின் ஊடாக மோடி இறுமாப்புடன் நடந்து சென்றது, விஸ்வகர்மாத் திட்டம் துவங்கப்படுவதன் உள்நோக்கத்தை, அதன் உட்பொருளைச் சுட்டிக் காட்டுவதாக இருந்தது.
மூலதனம் மற்றும் சாதி முறையின் கலவை
நிலப்பிரபுத்துவத்தை, அதன் மிச்ச சொச்சங் களை முதலாளித்துவம் அழிக்கும் என்கிற வழமையான, பாரம்பரியமான புரிதலுக்கு மாறாக, இந்தியாவில் சாதிய முறைக்கு வலு சேர்ப்பதாக, அதன் பாதுகாப்பு அரணாக முதலாளித்துவம் உருமாறி இருக்கிறது. 1950களின் காலகட்டத்திலான ராஜாஜியின் குலக் கல்வித் திட்டத்தை, குலத் தொழில் திட்டத்தை, 2023 நவதாராளவாத காலகட்டத்துக்கு பொருத்தமான தாக மாற்றி அமைத்து இருக்கிறார் பிரதம அமைச்சர் மோடி.
இந்தத் திட்டம் ஒரு நவதாராளவாத காலகட்டத்தில் அறிமுகப்படுத்தப்படுவதால், பயிற்சி மற்றும் தொழில் நுட்பங்களை வழங்குவதன் மூலம் உள்ளூர் கைவினைப் பொருட்களை உரக்க ஒலிப்போம் என்றும், கைவினைப் பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிப் பதன் மூலம் உள்ளூரை உலகமயமாக்குவோம் என்றும் முழங்குகிறார் மோடி. அவற்றை பாரத மண்டபத்திலும் யஷோ பூமியிலும் காட்சிப் பொருளாக வைப்போம் என்கிறார். 25 லட்சம் கோடி மதிப்புள்ள சர்வதேச சந்தையைக் கைப்பற்றுவோம் என்றும், ஏற்றுமதியில் ஒரு சதவீதமாக மட்டுமே இருக்கும் கைவினைப் பொருட்கள் பங்கை அதிகரிப்போம் என்றும் உரைக்கிறார்.
நிகழ்வுகள், பொருட்காட்சிகள், கருத்தரங் கங்கள், மாநாடுகள் போன்றவற்றால் அறியப் படும், வளர்ந்து வரும் ''மாநாடு சுற்றுலா" தொழில்துறை சந்தைக்கு வேண்டியவற்றை தயாரிக்க இருப்பதாக அதற்கு ஒரு நியாயம் கற்பிக்க, முலாம் பூச முயல்கிறார் மோடி. குளிர்சாதனப் பெட்டியில் இருந்து நீரெடுத்துக் குடிப்பதை விட மண்பானை நீரருந்த விரும்பும் பிரிவு மக்களை குறிவைத்து விற்பனையைப் பெருக்கப்போவதாக சொல்கிறார். நம் நாட்டு கைவினைஞர்களும் கைவினைப் பொருட்கள் செய்பவர்களும் பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளின் விற்பனைச் சங்கிலியின் ஒரு பகுதியாக, அந்த கம்பெனிகளின் ஒப்பந்த முறைச் சங்கிலியின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்பதை ஒளிவுமறைவில்லாமல் சொன்னார் மோடி. விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க முயல்கிறார் மோடி. சாதி அமைப்பு முறையைக் கட்டிக்காப் பதும், நவதாராளவாத பொருளாதார காலத்தில் அதே சாதியை மூலதன திரட்சிக்குப் பயன் படுத்திக் கொள்வதும் மோடியின் இரண்டு முக்கிய நோக்கங்களாக இருக்கின்றன.
தன்னந்தனியான திட்டம் அல்ல
விஸ்வகர்மா திட்டம் என்பது தன்னந் தனியான ஒரு திட்டம் அல்ல. மாறாக, அது நவதாராளவாத சூழலோடு, அதற்கு ஒத்திசைவானதாக, பின்னிப்பிணைக்கப்பட்ட ஒரு திட்டமாகும். அது, கீழ் சாதிக்காரகள் கல்வி பெறுவது தண்டிக்கத் தக்கது என்கிற மனு ஸ்மிருதியால் உத்வேகம் பெற்ற, புதிய கல்விக் கொள்கை 2020 உடன் மிக நெருக்கமான தொடர்புடையது. அது விளிம்புநிலை மக்களுக்கு கல்வியை மறுக்கிறது. கல்விக்கான ஊடக மொழியின் மூலம் (தாய்மொழிக் கல்வியை மறுப்பதன் மூலம், இந்தியைத் திணிப்பதன் மூலம்), கல்வியை தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம் (கல்வியை எட்டாக் கனியாக்குவதன் மூலம்), தொழிற்கல்வியைப் புகுத்துவதன் மூலம் என பல வழிகளில் ஒடுக்கப்பட்டோருக்கு கல்வியை மறுக்கிறது. அது ஆர்எஸ்எஸ்-பிஜேபியின் இந்து ராஜ்ய கனவோடு ஒன்று கலக்கப்பட்டது. சட்டங்களைத் திருத்தியதன் மூலம் குடும்பத் தொழில்களில் (சிறு நிறுவனங்களில்) சிறுவர் உழைப்பு என்பது ஏற்கனவே சட்டரீதியாக செல்லத்தக்கதாக மாற்றப்பட்டு விட்டது.
பிற்படுத்தப்பட்ட மக்களை சென்றடைகிறதா?
பிற்படுத்தப்பட்ட மக்களைச் சென்றடை வதற்கான மோடியின் திட்டம் இது என்கிறது என்டிடிவி எனும் தொலைக்காட்சி. பீகாரின் சாதிவாரியான கணக்கெடுப்பை தடுத்து நிறுத்திட உச்ச நீதிமன்றம் மறுத்ததன் பின்னணியில் இந்த திட்டம் துவங்கப்படுகிறது என்கிறது. எனவே, இந்த திட்டத்தின் மூலம் தனது பார்ப்பன- பனியா தோற்றத்தைக் கழற்றி விடுவதற்கான பிஜேபியின் திட்டமிது என்பது நமது விளக்க உரையாக அமைகிறது. இதை நிரூபிப்பது போல மோடியும் கூட சொல்கிறார், சேவை செய்யும் சாதிகள் இல்லாத கிராமம் ஒன்று கூட நாட்டில் கிடையாது என்கிறார். அதாவது, விஸ்வகர்மா என்று அழைக்கப்படும் முடி திருத்துபவர்கள், சலவைத் தொழிலாளர்கள், செருப்பு தைப்ப வர்கள், தோட்டிகள், தச்சர்கள், கொல்லர்கள், பொற்கொல்லர்கள் போன்ற சேவை செய்யும் சாதிகள் இல்லாத கிராமமே நாட்டில் கிடையாது என்கிறார்.
ஒடுக்கப்பட்டோர் மீதான ஆதிக்கம்
தான் ஒரு ஏழையின் மகன் என்றும், ஒரு 'ஏழையின் மகன்' நாட்டில் உரிமை 'மறுக்கப் பட்டவர்களுக்காக' சேவகம் செய்வதாகவும் கூறிக் கொள்கிறார் மோடி. ஆனால், சொல்லாமல் மறைக்கப்படுவது என்னவென்றால், அந்த ஏழையின் மகன்' எந்த ஒரு ஏழையும் பணக்காரர் ஆவதை விரும்பவில்லை, தங்கள் சாதியை உதறி எறிந்து விட்டு சமூக சமத்துவம் பெறுவதை விரும்பவில்லை, தங்களுக்கு விருப்பமான எந்தத் தொழிலையும் தாமே சுதந்தரமாக தேர்வு செய்து கொள்வதை விரும்பவில்லை என்பதுதான். மாறாக, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்புகிறார். அடிமைத் தொழில்களால் விலங்கிடப்பட்ட அவர்களை சாதீய அடிமைகளாகவே இருத்திட முயற்சிக்கிறார். படிப்படியாக, மிகமிக மெதுவாக தளர்ந்துவரும் சாதீயக் கட்டமைப்பை இறுகச் செய்திட, உறுதிப்படுத்திட எத்தனிக் கிறார். தச்சர்கள், கொல்லர்கள், முடி திருத்து பவர்களின் மக்கள் தங்களது சாதித் தொழிலை, சாதியால் விதிக்கப்பட்ட தொழிலை, பரம்பரைத் தொழிலைத் தூக்கி எறிந்து விட்டு, தமது சாதிக்கு அப்பாற்பட்ட ஏதாவது ஒரு தொழிலை, ஒரு பொறியாளராகவோ, மருத்துவராகவோ, வேறு ஏதேனும் ஒரு தொழில்முறையாளராகவோ மாறுவதை அனுமதிக்க மறுக்கிறார் அந்த ஏழையின் மகன் மோடி. அதுமட்டுமல்லாமல், அந்த சாதித் தொழிலை, பரம்பரைத் தொழிலை, கைவினைஞர்களை, கார்ப்பரேட்டுகள் சூப்பர் லாபம் ஈட்டுவதற்கான பலிகடாக்களாக ஆக்க விரும்புகிறார் என்பதுதான்.
1950களில் வருணாசிரம முறையைக் கட்டிக்காத்திட முயற்சித்த ராஜாஜி வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் தூக்கி எறியப்பட்டார். அவர் மீண்டும் எழவே முடியவில்லை. அன்றைய தினத்தின் ஜாம்பவானை கம்யூனிஸ்டு களும், பெரியாரிஸ்டுகளும் அன்றைய திராவிட இயக்கமும் குழிதோண்டிப் புதைத்தார்கள். மோடியும், ஆர் எஸ் எஸ் சும், பிஜேபியும் அதே விதியைத்தான் எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)