கேரளாவின் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் உள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றி உள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்ட மக்கள், ஈழவர்கள், புலையர்கள், தீயர்கள் நடமாடத் தடை விதிக்கப் பட்டிருந்தது. அந்த மக்களை தடைவிதிக்கப் பட்டிருக்கும் தெருக்களில் 1924 மார்ச் 30 அன்று ஊர்வலமாக அழைத்துப் போகப் போவதாக அன்றைய கேரள காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் கே.பி.கேசவ மேனன் அறிவிப்பு வெளியிட்டார். அப் போராட்டத்தைத் துவக்கியவர் வழக்கறிஞராக இருந்த டி.கே.மாதவன். தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவம் என்று இருந்த காலக் கட்டம் அது. அறிவித்தபடி தொண்டர்களுடன் அணி திரண்டனர். அந்தத் தெருவில் சென்று நின்றவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஆனாலும் தொடர்ந்து நாள் தோறும் மூன்று பேர் என்று தெருவில் நுழைந்து போராட்டம் நடத்தினார்கள். திருவிதாங்கூர் அரசர் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தார். நாட்கள் ஆக ஆக தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். டி.கே.மாதவன், கே.பி.கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப் ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள். தொடர்ந்து போராட் டத்தைத் தலைமையேற்று நடத்த தமிழ்நாட்டில் இருந்து பெரியார் வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்கள். பெரியார் அன்று காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். 1924 ஏப்ரல் 13ம் தேதி பெரியார் முதன் முதலாக வைக்கம் சென்றார். திருவிதாங்கூர் அரசர் பெரியாரின் நண்பர் என்பதால் பெரியாருக்கு அரச மரியாதை அளித்து வரவேற்றார். ஆனால், பெரியார், நான் அரசுக்கு எதிராகப் போராட வந்திருக்கிறேன், உங்கள் நண்பராக வரவில்லை என்று அந்த அரச மரியாதையை, வரவேற்பை மறுத்து விட்டார். பெரியார் தலைமையில் போராட்டம் உத்வேகமடைந்தது. அரசர் பெரியார் பேச தடை விதித்தார். பின்னர் நுழைய தடைவிதித்தார். பின்னர் கைது செய்து சிறையிலடைத்தார். ஒரு மாத கால சிறைவாசத்திற்குப் பின்னர் வெளியே வந்த பெரியார் மீண்டும் போராடச் செல்கிறார். மீண்டும் கைது, சிறை. 140 நாட்கள் வைக்கத்தில் இருந்த பெரியார் 70 நாட்களுக்கு மேல் சிறையில்தான் இருந்துள்ளார். இந்தப் போராட்டம் காந்தியின் வழிகாட்டுதலில் நடந்தது என்றாலும் போராட்ட வழிமுறையில் சில மாற்றுக் கருத்துக்களும் கூடவே இருந்துள்ளன. காந்தி 1925 மார்ச் மாதம் வைக்கம் வருகிறார். ராணியிடம் பேசுகிறார். போராட்டம் 1925 நவம்பர் 23ல் முடிவு பெற்றது. போராட்டக் களத்தில் மக்களோடு மக்களாக நின்று போராடியவர் பெரியார். இந்தப் போராட்டம்தான் பிற்காலத்தில் பல்வேறு போராட்டங்களுக்கு குறிப்பாக கோயில் நுழைவுப் போராட்டங்களுக்கு முன்மாதிரியாக மாறியது. வைக்கம் போராட்டம்தான் தனக்கு உணர்வூட்டியதாக அம்பேத்கர் கூட 1936ல் மகர் போராட்டத்தின் போது கூறியிருக்கிறார்.
அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கப் போராட்டத்தின் நூற்றாண்டு துவக்க விழாவில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் கேரள முதல்வர் பினரயி விஜயனும் சேர்ந்து கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் பேசிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், "சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம், சமத்துவம், மானுடப்பற்று, ரத்தபேதமின்மை, பால் பேதமின்மை, சுய முன்னேற்றம், பெண்கள் முன்னேற்றம், சமூகநீதி, மதச்சார்பற்ற அரசியல், அறிவியல் மனப்பான்மை இவைகள்தான் பெரியாரியத்தின் அடிப்படை. இது உலகம் முழுவதுக்குமான கருத்தியல், இந்தக் கருத்தியல்களை வென்றெடுக்க நாம் அனைவரும் உழைத்தாக வேண்டும். மீண்டும் சனாதன-வர்ணாசிரம- சாதியவாத மதவாத சக்திகள் கோலோச்ச நினைக்கும் காலத்தில் நமக்கு இந்தக் கடமை அதிகம் இருக்கிறது" என்று பேசினார்.
ஆனால், முற்போக்கு விழுமியங்களுக்கு பெயர் பெற்ற தமிழ்நாட்டில், பெரியாரின் வழியில் ஆட்சி நடப்பதாகச் சொல்லிக் கொள்ளும் தமிழ்நாட்டில் சாதியாதிக்க வன்கொடுமைகளும் படுகொலைகளும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் காவல்துறையின் அத்துமீறல்களும் மனித உரிமை மீறல் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ருக்மணி தேவி உருவாக்கிய கலாச்சேத்ரா கல்லூரியில் இன்று ஆசிரியர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார்கள் என்று மாணவிகள் புகார் அளித்துள்ளார்கள். பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், இதற்கு முன்பு பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்ற மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் எத்தனை பேர்களுக்கு தண்டனை கிடைக்கப் பெற்றுள்ளது? கடந்த ஐந்து ஆண்டுகள் 2021 டிசம்பர் வரை 7293 போக்சோ வழக்குகள் நிலுவையில் இருந்ததாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. அந்த வழக்குகளில் வெறும் 10% மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. பாலியல் குற்றங்கள் அதிகமாக நடக்கும் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேச மாநிலங்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. இன்னும் பதியப்படாத வழக்குகள் பல உள்ளன. கலாசேத்ரா கல்லூரியில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் நான்கு பேரைக் கைது செய்யக் கோரி இரவு பகலாக மாணவர்கள் நான்கு நாட்கள் போராட்டம் நடத்திய பின்னர்தான் காவல்துறை கண்டு கொண்டது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரணத்திற்கு இன்று வரை நியாயம் கிடைக்கவில்லை. குடி தண்ணீரில் மலத்தைக் கலந்த குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்பட வில்லை. தென்காசி மாவட்டம் அரியநாயகிபுரம் பள்ளிக்கூடத்தில் தலித் மாணவர் மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. திருநெல்வேலி மாவட்டம் பணகுடியில் தலித் மக்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட சுடுகாட்டில் கூட இறந்தவர்களை அடக்கம் செய்யவிடாமல் ஆதிக்க சாதியினர் தடுத்து அட்டூழியம் செய்கிறார்கள். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் துணை போகிறது.
பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கு பெண்கள் வெளியே வருவதும் பெண்களின் உடைகளும் காரணம் என்று சங்கிக் கூட்டங்கள் ஒரு புறம் கத்திக் கொண்டிருக்க, நீதிமன்றங்கள் கூட அதற்கு ஏற்ற சில கருத்துக்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21 வழங்கியுள்ள திருமணம் செய்யாமலே சேர்ந்து வாழும் உரிமைதான் இந்த பாலியல் குற்றங்களுக்குக் காரணம் என்றும் அதனால் லிவ்-இன்-ரிலேஷன்சிப்பை தடை செய்ய வேண்டும் என்று மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் கூறியது. அப்படி என்றால், பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு யார் காரணம்? பெண்கள் படிக்க வருவதுதான் காரணம் என்றுகூட கூறுவார்கள் போலும்.
உண்மையில் இதுபோன்ற குற்றங்களுக்கு பெரியாரின் கொள்கைகள் முழுமையாக மக்களிடத்தில் கொண்டு செல்லப்படாமையும் சனாதன சங்கிகளின் மூடத்தன பிற்போக்கு செயல்பாடுகள் தமிழ்நாடு முழுவதும் அதிகரித்துக் கொண்டிருப்பதும் ஒரு காரணமாகும். காலச்சாரக் காவலர்களாக வேஷம் போடும் சங்கிகளின் ஆளுகையின் கீழ் உள்ள இடங்களில்தான் இந்தக் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. கலாச்சேத்திராவில் இயக்குநராக உள்ள ரேவதி ராமச்சந்திரனின் கணவர் ஆர்எஸ்எஸ் பொறுப்பில் உள்ளவர். அவர் சொல்படிதான் அந்த கல்லூரி நடந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் அங்குள்ள ஆசிரியர் மீது கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதிகமான பாலியல் வழக்குகளில் சிக்குபவர்கள் பாஜகவினர் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இது ஒருபுறமிருக்க கூட்டுப் பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. பொள்ளாச்சி, சென்னை, காஞ்சிபுரம் என்று நீண்டு கொண்டே போகின்றன. இந்தக் குற்றங்கள் அதிகரிப்பிற்கு காவல்துறையினரின் மெத்தனப் போக்கும் அராஜப்போக்குமே முக்கிய காரணமாக இருக்கின்றது.
தமிழ்நாட்டில் காவல்துறை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் கீழ் இருந்தாலும் காவல்துறையினரின் நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அவர்கள் காக்கி உடையும் காவி மனமும் கொண்டவர்களாகவே உள்ளனர். அதனால்தான் காந்தியைக் கொன்றவன் கோட்சே என்று கூட சொல்லக் கூடாது என்கிறார்கள் காவல் அதிகாரிகள். சாத்தான் குளத்தில் தந்தை மகன் காவல்நிலையத்தில் வைத்து அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்டார்கள். அது போன்ற நிகழ்வுகள் நாள்தோறும் நடந்து கொண்டிருக்கின்றன. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங், விசாரிப்பதாகச் சொல்லிக் கொண்டு அவர்களின் பல்லை கட்டிங் பிளயர் கொண்டு உடைத்துள்ளார். சிலரின் விரையை நெருக்கித் துன்புறுத்தியுள்ளார். சுமார் 40 பேர்களை அவ்வாறு செய்திருப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால், இது உளவுத் துறையின் மூலம் நன்கு தெரிந்து இருந்தும் உயர் அதிகாரிகள் யாரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வில்லை. பிரச்சனை வலைத் தளங்களில் வெளி வந்து போராட்டங்கள் நடந்த பின்புதான் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் காத்திருப்போர் பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், பாதிக்கப்பட்டவர்களை மிரட்டுவதும் பணத்தைக் கொடுத்து அவர்கள் குளியல் அறையில் வழுக்கி விழுந்து பல்லை உடைத்துக் கொண்டதாக சொல்ல வைப்பதும் நடக்கின்றது. பல்வீர் சிங் அம்பையில் பணியில் சேர்ந்து 6 மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் இங்கு குற்றங்கள் குறைந்துள்ளது என்றும் அவர் கிரிமினல்களிடம்தான் அவ்வாறு நடத்து கொண்டார் என்றும் அவரை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்றும் பிரச்சாரங்கள் திட்டமிட்டு கட்டமைக்கப் படுகின்றன. இதுபோன்று மனித உரிமை மீறலில் ஈடுபட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்து விட்டு, பணியில் இருக்கும் நீதிபதிகள் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அது மட்டுமின்றி, அவருக்கு துணையாக இருந்த காவல் உயர் அதிகாரிகள், காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அனைவர் மீதும் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்று இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சக்திகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.
ஒப்புக்காக நடவடிக்கைகள் எடுப்பதும் குற்றவாளிகள் எல்லாம் ஆட்சியாளர்களால் காப்பாற்றப்படுவதும் நடக்கும்போது வைக்கம் போராட்டம், சமூக நீதி, மனித நேயம் பேசுவது மக்களை ஏமாற்றும் செயலாகாதா?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)