1. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதானி யின் அரசு சலுகைசார் முதலாளித்துவத்தை ஹிண்டன் பர்க் அறிக்கை அம்பலப் படுத்தியுள்ளது. பாஜகவை ஆட்சியில் தக்க வைக்க, கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது பணத்தை வாரி இறைத்தன; பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக கொள்கை மாற்றங்கள் செய்யப்பட்டன; இதில் நாட்டின் ரயில்வே, எஃகு நிறுவனம், வங்கிகள், எல்ஐசி, மற்ற பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனையும் அடங்கும். இதன் காரணமாகவே, 2014க்கும் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிடப்பட்டதற்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில், உலக முதலாளிகளின் பட்டியலில் அதானி, தான் இருந்த 609வது இடத்திலிருந்து 3வது இடத்திற்கு மோசடி வழியில் முன்னேறிச் செல்ல முடிந்தது. அதானி குழுமத்தை பொறுப்பேற்க வைப்பதற்கும் அதன் பொதுப் பங்குதாரர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கும் பதிலாக, நரேந்திர மோடி அமைதியாக இருப்பதைத் தேர்ந்தெடுத்துள்ளார். காந்தி மைதானத்தில் நடைபெறும் இந்தப் பேரணி, மோடி-அதானியின் கள்ளக் கூட்டை முறியடிக்கும் என சூளுறைக்கிறது. இந்தப் பேரணியின் மூலம், அதானி குழுமத்திற்கு எதிராக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சி களின் கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம்.
2. ஒருபுறம் தங்குதடையற்ற கார்ப்பரேட் கொள்ளை, மறுபுறம் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது முழுமையான தாக்குதல். நாட்டைப் பாதுகாப்போம் என்ற போர்வையில் இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் குறிவைத்துத் தாக்கப்படுவது துரதிஷ்டவசமானது. இருப்பினும், கார்ப்பரேட் கொள்ளையும் பாசிசமும் ஒன்றோடொன்று ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, பாஜக ஆர்எஸ்எஸ், பல்வேறு ஜனநாயக நிறுவனங்க ளையும் கைப்பற்றி தங்கள் பாசிசத் தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளன. பிஜேபியின் பாசிசத்தை ஒழித்துக்கட்ட, இந்த நாட்டில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு, நமது ஜனநாயகத்தைக் காக்க போராட வேண்டிய நேரம் இதுவாகும். பீகாரில் பாஜக-ஆர்எஸ்எஸ் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட போதும், அவர்களை சமூகத்தில் இருந்து முற்றிலும் வேரோடு பிடுங்கி எறியவேண்டியது முக்கிய மானதாகும். இந்த பேரணியின் மூலம், பாசிசத் தாக்குதலை எதிர்க்கவும் நமது இறையாண்மை மிக்க, ஜனநாயக, சோசலிச, மதச்சார்பற்ற குடியரசைப் பாதுகாக்கும் அரசியலமைப்பு நெறிமுறைகளை வலுப்படுத்துவதை உறுதி செய்வதற்கான ஒரு இயக்கத்தை உருவாக்க மக்கள் உறுதி ஏற்கிறார்கள். 2024ல் பாஜக-ஆர்எஸ்எஸ், மோடியை தோற்கடிக்கவும் ஆட்சியதிகாரத்தில் இருந்து அகற்ற, மக்கள் இயக்கங்களை வலுப்படுத்தவும் இந்தப் பேரணி உறுதி ஏற்கிறது.
3. சமீபத்திய அசமத்துவ அறிக்கை, நாட்டில் அதிகரித்து வரும் வறுமையையும், கடுமையான அசமத்துவத்தையும் காட்டுகிறது. மோடி ஆட்சியில், உலகளாவிய பசி குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை கீழிறங்கி, ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகியுள்ளது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், கடன் போன்ற காரணங்களால் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இந்த ஆட்சியில் கல்வி, சுகாதாரத் துறைகள் கடுமையான சீரழிவைக் கண்டுள்ளன. இந்த கவலைக்குரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக, மோடி அரசும் பாஜக- ஆர்எஸ்எஸ் அமைப்பும் சமூகத்தை வகுப்புவாத அடிப்படையில் பிளவுபடுத்தவும் இத்தகைய ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கும் செயல்பாட்டாளர்களை சிறையில் அடைக்கவும் செய்கிறது. இந்தப் பேரணி, அதிகரித்து வரும் ஒடுக்குமுறையையும் வெறுப்பு அரசியலையும் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், விலை வாசி உயர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த, அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டுமெனக் கோருகிறது. தரமான, அனைவரும் பெறக்கூடிய குறைந்த கட்டணத்தில் கல்வி, மருத்துவ சுகாதார அமைப்புகளுக்காக, வலுவான இயக்கத்தை கட்டமைக்க மக்களைக் கேட்டுக்கொள்கிறது.
4. சமீபத்திய நிதிநிலை அறிக்கையில், வளர்ந்து வரும் வருமான அசமத்துவத்திற்கு தீர்வுகாணல், பணக்காரர்களுக்கு செல்வ வரி விதித்தல், கார்ப்பரேட் வரியை அதிகரித்தல் அல்லது விலைவாசி உயர்வால் சாமானிய மக்களின் வேதனையை குறைக்கும் ஏற்பாடுகளை உறுதி செய்தல் என்பவற்றுக்கு பதிலாக, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிதிட்டத்திற்கும், பிற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம் குறைத்துள்ளது. அதன்மூலம் பொருளாதார நெருக்கடியின் போது வேலையில்லாத் திண்டாட் டத்தின் சாத்தியக்கூறுகளை அதிகரித்து, எளிய மக்களைத் துன்பத்தில் தள்ளுவதற்கு வழிவகுத்துள்ளது. இந்த பேரணி மக்கள் விரோத பட்ஜெட் 2023 மீதான தனது கோபத்தை வெளிப்படுத்து கிறது. மேலும், பொது மக்களின் துன்பத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோருகிறது.
5. உயர் சாதியினருக்கான 10% இடஒதுக் கீட்டை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததை இந்தப் பேரணி வன்மையாகக் கண்டிக்கிறது. இதற்கு மோடி அரசாங்கத்தின் மௌன அங்கீகரிப்பையும் எதிர்க்கிறது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீறுவ தாகும். மேலும், ஏதாவது சாக்குப் போக்குகளைக் கூறி, தலித்துகள், மற்ற பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் இடஒதுக்கீடு திருத்தப்படுவதற்கும் நாம் சாட்சியாய் இருக்கிறோம். அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கான இடஒதுக்கீடு ஒழிக்கப்பட வேண்டும் எனவும், தலித்துகளுக்கும், மற்ற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் இடஒதுக்கீடு அதிகரிக்கப் படவேண்டும் எனவும் இந்தப் பேரணி கோருகிறது.
6. கொடூரச் சட்டங்களின் கீழ் பொய் வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, அரசியல் கைதிகள், ஊடகவியலாளர்கள், அறிவாளிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் எனவும் வழக்குகளை திரும்பப் பெற்று அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் காந்தி மைதானத்தில் இன்று நடைபெறும் இப்பேரணி கோருகிறது.
7. பீகாரில் கடந்த பல ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்ததால், ஆட்சி நிர்வாகத்தில் தேவையற்ற செல்வாக்கைக் கொண்டுள்ளது. பாஜக நிர்வாகத்தின் பாசிச தாக்குதல் பீகாரில் இன்னும் பரவலாக உள்ளது. தலித்துகளுக்கும் முஸ்லீம்களுக்கும் எதிராக கட்டவிழ்த்து விடப்படும் புல்டோசர் கலாச்சாரமும், போராட்டக் காரர்களை கைது செய்வதும் ஆளும் பாஜகவின் முக்கிய பாசிசப் போக்குகளாகும். புல்டோசர் கலாச்சாரத்தை எதிர்க்கவும் ஏழைகள், தலித்துகள், முஸ்லிம்களின் வீடுகளை இடிப்பதில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவரும் சட்டத்தை மீறியதற்காக தண்டிக்கப்பட வேண்டும் எனவும் ஏற்கனவே நிர்வாகத்தின் அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு மாற்று வசதிகளை வழங்க வேண்டும் எனவும் இந்தப் பேரணி வலியுறுத்துகிறது.
8. பாஜக-ஆர்எஸ்எஸ் கட்டளையின்படி, தேசிய புலனாய்வு நிறுவனம் அப்பாவி முஸ்லிம்களை குறிவைத்து அவர்களை துன்பு றுத்தி வருகிறது. தேசிய புலனாய்வு நிறுவனத்தால் முஸ்லிம்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதைத் தடுக்க பெருங்கூட்டணி (மகாகத்பந்தன்) அரசு கடுமையான நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என்று இந்தப் பேரணி கோருகிறது.
9. தலித்துகளும், ஏழை மக்களும் அதிக மின்கட்டணத்தைச் செலுத்தவில்லை என்ற காரணத்தால் குறிவைக்கப்பட்டு, அவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு தண்டிக்கப் படுவது குறித்து பல செய்திகள் வந்த வண்ண முள்ளன. இந்தக் கவலைகளை இப்பேரணி கவனத்தில் எடுத்துக் கொண்டு, இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் மாநில அரசு மின் இணைப்புகளை திரும்ப ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும், தனது நுகர்வோருக்கு தொல்லைகளை கொடுக்காமல் இருக்க மின் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரு கிறது.
10. மாநிலத்தில் பெண்கள், தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவது மிகவும் கவலைக்குரியது. மாநிலத்தில் பாஜக- ஆர்எஸ்எஸ் மூலம் ஏழைகளைத் தாக்கும் சக்திகள், உள்ளூர் நிர்வாகத்தின் மறைமுக ஆதரவைப் பெற்றுள்ளன. தலித்துகள், பெண்கள், ஏழைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் தாக்குதல் களைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் தொடங்குவதுடன், பாஜகவின் மறைமுக ஆதரவைப் பெற்றுள்ள குற்றவாளிகள், குண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மாநில அரசாங்கம் எடுக்க வேண்டும் எனவும் இந்தப் பேரணி கோருகிறது.
11. இந்தப் பேரணி அனைத்து ஆஷா, மதிய உணவுத் திட்டத் தொழிலாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்களுக்கும் கண்ணியமான மாத ஊதியம் வழங்கக் கோருகிறது. மேலும், திட்டப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் துரோக மிழைக்கும் மோடி அரசாங்கத்தைக் கண்டிக்கிறது. இந்தத் தொழிலாளர்கள் கோவிட் நெருக்கடியின் போது முக்கியப் பங்காற்றியிருந்தாலும், இவர்களுக்கு சிறப்பு நிவாரணமும், திட்டங்களும் இல்லாதது அரசாங்கத்தின் அக்கறையின்மையையும், தொழிலாளர் விரோத நிலைப்பாட்டையும் காட்டுகிறது. திட்டப் பணியாளர்களுக்கு கண்ணியமான மாத ஊதியம் ரூ.21,000/- வழங்க வேண்டும் என்ற கோரிக் கையை இந்தப் பேரணி வலியுறுத்துகிறது. அதோடு, பீகார் அரசாங்கம் மீதான திட்டப் பணியாளர்களின் ஏமாற்றத்தையும், அவர்களின் கவலைகளையும், பிரச்சினைகளையும் தீர்ப்பதில் தோல்வியையும் இப்பேரணி சுட்டிக் அதன் காட்டுகிறது. விலைவாசி உயர்வு, பணவீக் கத்தின் போது திட்டப் பணியாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் பல வாக்குறுதிகளையும் மகாகத்பந்தன் அறிக்கை கொண்டுள்ளது.
12.பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் உள்ள பகுதி நேர ஆசிரியர்களை முறைப்படுத்த வேண்டும்; அந்த பணிகளுக்கு நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஆளெடுக்கும் பணி துவங்கப்படவேண்டும்; அதையும் நியாயமான, வெளிப்படையான முறையில் செய்ய வேண்டும்; இது சிறந்த கல்விச் சூழலை உறுதி செய்வதோடு, பாடத்திட்டங்கள் குறித்த நேரத்தில் முடிக்கப் படுவதை உறுதி செய்யும். கல்வியறிவு பெற்ற இந்தியாவை உருவாக்க, ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கும் கண்ணிய மான சம்பளம் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் இந்தப் பேரணி கோருகிறது.
13.இப்பேரணி கல்வி வணிகமயமாக்கப் படுவதைக் கண்டிக்கிறது. புதிய கல்விக் கொள்கை 2020 திரும்பப் பெறப்படவேண்டும்; அரசுப் பள்ளிகளின் தரம் மேம்படுத்தப் படுவதோடு, பொதுப் பள்ளிக் கல்வி முறையை அமல்படுத்தவும் வேண்டும்; 'சம வேலைக்கு சம ஊதியம்', பள்ளிகளில் பணிபுரியும் ஒப்பந்த ஆசிரியர்கள், இதர திட்டப் பணியாளர்களை நிரந்தமாக்க வேண்டும் எனவும் இப்பேரணி கோருகிறது.
14. விவசாயிகளிடம் இருந்து விளை பொருட்களை கொள்முதல் செய்வதற்கு அதிகபட்ச ஆதரவு விலையை சட்டபூர்வ உரிமையாக்குவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவதில் மத்திய அரசின் துரோகத்தை இந்தப் பேரணி கண்டிக்கிறது. இந்த விசயத்தில், பொருத்தமான சட்டம் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதிகபட்ச ஆதரவு விலை சட்டபூர்வ உரிமையாக் கப்பட வேண்டும்; விவசாயப் பொருட்கள் சந்தைக் குழு சட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும்; மற்ற மாநிலங்களைப் போல விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்; ஆகிய விவசாயிகள் இயக்கத்தின் கோரிக்கையை இந்தப் பேரணி மீண்டும் வலியுறுத்துகிறது.
15. இந்தப் பேரணி தடா சட்டத்தை விலகிக் கொள்ள வேண்டும் எனவும், மதுவிலக்கு சட்டத் தின் காரணமாக சிறையில் உள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் கோருகிறது. மக்கள் ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள சட்டப் பேரவை உறுப்பினர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோருகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)