தலையங்கம்
போலி மோதல் படுகொலைகள் செய்வதுதான் சமூகநீதி அரசா?
சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாட்டில் நடக்கும் போலி மோதல்கள் பற்றி கவலை தெரிவித்திருந்தது. சமூக விரோதிகளைக் களையெடுப்பதாகச் சொல்லிக் கொண்டு போலி மோதல் படுகொலைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, குற்றவாளிகள் காவல்துறையினரைத் தாக்கினார்கள், தாக்க வந்தார்கள் என்று சொல்லி அவர்கள் எ்ன்கவுண்டரில் கொல்லப்படுகிறார்கள். குற்றவாளிகள் குளியல் அறையில் வழுக்கி விழுந்து அவர்களுடைய கை, கால் முறிந்து போய் விட்டது என்று கட்டுப் போடப்படுகிறது. காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் தப்பிக்க முயற்சி செய்தார்கள், காவலர்களைத் தாக்க வந்தார்கள் என்று அவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். சமீபத்தில் ஆம்ஸ்ட்ராங்கை கொன்ற முக்கிய குற்றவாளி, காவல்துறையின் கைக்குள் இருக்கும்போதே தப்பிக்க முயன்றதாகக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து பல சமூக விரோதிகள் என்று அறியப்பட்டவர்கள் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார்கள். இம்மாதிரியான கொலையை வரவேற்கும் மனோபாவம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது என்றும் இது அடிப்படையிலேயே தவறானது என்றும் பிற்போக்குச் சிந்தனை என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவா்த்தி கூறியுள்ளார்கள். பாலியல் வக்கிரம் மற்றும் பாலியல் வன்முறையால் சிறு குழந்தைகள், டெல்லி நிர்பயா, கொல்கத்தா மருத்துவர் போன்ற இளம் பெண்கள் மிகக் கொடூரமாக பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்கள். இதைப் பார்க்கின்ற பொதுமக்கள் மத்தியில் இருந்து அந்தக் குற்றவாளிகள் உடனடியாகத் தூக்கில் போடப்பட வேண்டும், என்கவுண்டரில் கொல்லப்பட வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்து வருகின்றன. இது மாதிரி அரசால் நடத்தப்படும் போலி மோதல்கள் பற்றி முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு, குற்றவியல் நீதி அமைப்பு முறைக்கு எதிரானது, இது சட்டத்தை, நீதியை நிலைநாட்டும் நீதிமன்றத்தின் செயல்பாடுகளை, நீதி பரிபாலன முறையையே கேள்விக்குள்ளாக்குகிறது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் குருவம்மாள் என்பவர் தன் மகனை போலி மோதலில் கொன்று விட்டார்கள், அதற்கு நீதி வேண்டும் என்று கேட்டுத் தாக்கல் செய்துள்ள வழக்கில்தான் நீதிபதி அவர்கள் மேற்படி கருத்துகளைக் கூறியது மட்டுமின்றி, அந்த போலி மோதலை நிகழ்த்திய எ்ன்கவுண்டருக்கு பெயர் பெற்ற அன்றைய காவல் உதவி ஆணையாளர் வெள்ளதுரை உள்ளிட்ட அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் ஓய்வு பெறும்போது வகித்து வந்த பதவிக்கும் கூடுதலான ஒரு காவல் அதிகாரி இந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது வரவேற்கத் தக்கதாகும். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று தண்டனை வழங்குவதும் அரிதினும் அரிதான வழக்கில் மரண தண்டனை வழங்குவதும் கூட அடிப்படை மனித உரிமை மீறல் என்று சொல்கிறபோது, குற்றவாளி நீதிமன்றத்தின் முன் நிறுத்தி விசாரணை நடத்தாமலேயே என்கவுண்டரில் கொன்றுவிடுவது என்பது மிகவும் ஆபத்தானது. பல வழக்குகளில் உண்மைக் குற்றவாளிகள் தண்டனையின்றி தப்பிவிடுகிறார்கள் என்பதற்காக, குற்றவாளியை விசாரிக்காமலேயே கொன்றுவிடுவது நீதி பரிபாலன முறையில்லை என்பது மட்டுமின்றி, அந்தக் குற்றச் செயலுக்குப் பின்னால் இருந்த உண்மைக் குற்றவாளிகளை தப்பிக்க வைப்பதுமாகும். குற்றச் செயல்களுக்குப் பின்னால் இருக்கும் சமூகக் காரணிகள் கண்டு கொ்ள்ளப்படாமல் என்கவுண்டர் கொலை என்பது நாளை மக்களுக்காக போராடுபவர்கள்கூட பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு, பொதுப் புத்தியின் வரவேற்பில் படுகொலை செய்யப்படலாம். உடனடி தண்டனை என்ற பெயரில் மரண தண்டனை தீர்வாகாது. இன்றும்கூட பல நூற்றுக்கணக்கான ஏதுமறியா பழங்குடி, இஸ்லாமிய மக்களை பத்தாண்டுகளுக்கும் மேலாக விசாரணையே இன்றி சிறையில் வைத்துக் கொண்டிருக்கும்போது, எதற்காக இந்த என்கவுண்டர்கள்? யாரைக் காப்பற்ற? யாரைப் பலிகடாவாக்க?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)