அதானி குழுமம் பல பில்லியன் டாலர் லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நீதித்துறையால் கௌதம் அதானி மீதும் அவரது மருமகன் சாகர் அதானி மீதும் கைது பிடி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இது அதானியின் ஊழல் தொழில் நிறுவன பேரரசின் மீது இதுவரை தொடுக்கப்படாத மிகப்பெரிய தாக்குதலாகும்.
2023 ஜனவரியில், ஹிண்டன்பர்க் வெளியிட்ட தகவல்கள், மோடி ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த அதானி குழுமத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்த மிகப்பெரிய தொழில் நிறுவன மோசடியை வெளிப்படுத்தி, முழு வணிக உலகையும் அதிர்ச்சியடையச் செய்தன. தொடர்ந்து ஹிண்டன்பர்க் அறிக்கைகளும், அமைப்பாக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்டத்தின் ( OCCRP) விசாரணையால் வெளிப்பட்ட தகவல்களும், குழுமத்தின் வெளிநாட்டு போலி நிறுவனங்களின் சிக்கலான வலைப்பின்னலையும், அந்த வலைப்பின்னல் அமைப்புக்கு இந்திய கட்டுப்பாட்டு அமைப்புகளின் ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தின. 'இந்தியாவுக்கு எதிரான முழுமையான சதி' என இதனை மோடி அரசு நிராகரித்தது. மேலும், செபியின் (SEBI) தலைவர் அதானியின் ஊழல் சங்கிலியுடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் செயலற்ற செபி மீது நம்பிக்கை வைத்தது. ஹிண்டன்பர்க்கின் அம்பலப்படுத்தும் நடவடிக்கைகளின் காரணமாக, அதானியின் பங்குகள் பாதிக்கப்பட்டாலும், உலகளாவிய அளவில் அதானி குழுமத்தின் செயல்பாடுகளில் பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டாலும், இந்தியாவில் அதானி தண்டனை கிடைக்கும் என்ற கவலையே இல்லாதவராக இருக்கிறார்.
இந்த முறை, குற்றச்சாட்டுகள் அமெரிக்க நீதித்துறையிலிருந்து வந்துள்ளன. அதுமட்டுமல்ல, அமெரிக்க புலனாய்வு அமைப்புகளும் அமெரிக்க பங்கு பத்திரங்கள் & பங்கு பரிமாற்ற ஆணையம் (SEC) சேகரித்த உறுதியான விசாரணையாலும் ஆதாரங்களாலும் உருவாக்கப்பட்ட ஆவணங்களில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் வலுவானவையாக இருக்கின்றன. அதானி குழுமம் லஞ்சம் அளிக்கும் குற்றத்தை இந்தியாவில் செய்திருக்கலாம், ஆனால், இப்படிச் செயல்பட்டதால், அதானி குழுமம் அமெரிக்காவில் நடைமுறையிலுள்ள கடுமையான லஞ்ச தடுப்புச் சட்டங்களை மீறியுள்ளது. முதலீடு செய்யும் அமெரிக்க பொதுமக்களை ஏமாற்றியது, உலகளாவிய நிதி நிறுவனங்களை ஏமாற்றும் நோக்கத்தில் பல மோசடிகள் செய்தது, தகவல்களை மறைப்பது ஆகியவை மட்டுமின்றி, நீதி நிர்வாகமுறை செயல்பட விடாமல் தடுத்தல் ஆகியவையும் குற்றச்சாட்டுகளில் அடங்கும். அதானி குழுமத்தின் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளை விசாரிக்கவும், குற்றம் சாட்டவும் இந்திய புலனாய்வு அமைப்பு (CBI), செபி (SEBI) மற்றும் இந்திய நீதித்துறை அமைப்புகள் செய்ய வேண்டியதை அமெரிக்க அமைப்புகள் (FBI, SEC மற்றும் அமெரிக்க நீதித்துறை) செய்துள்ளன.
அதானி குழுமத்தின் மீதான குற்றவியல் வழக்குகள் எதிர்காலத்தில் என்னவாகும் என்பதைக் கணிக்க முடியாத நிலையிருக்கிறது. ஆனாலும் நாம் சிலவற்றைக் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது: டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அதானி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கிறார்; அமெரிக்க ஆற்றல் (மின் சக்தி) உற்பத்தியில் $10 பில்லியன் முதலீடு செய்வதாகவும், 15,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதாகவும் வாக்குறுதி அளித்திருக்கிறார். இவற்றுக்கெல்லாம் என்ன பொருள் என்பது உலகம் அறிந்ததுதான்.
இருந்தபோதும், அதானி குழுமம் தனது $600 மில்லியன் பத்திர வெளியீட்டை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது; அதானியின் பங்குகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன; முக்கியமாக, இரண்டு நீண்டகால மற்றும் பரவலாக எதிர்க்கப்பட்ட அதானி ஒப்பந்தங்களை (விமான நிலையங்களை மேம்படுத்துவதையும் மின்சார வழித்தடங்கள் அமைத்தலையும்) கென்யா ரத்து செய்தது. இவை போன்ற விளைவுகளை நாம் ஏற்கனவே கண்டுவருகிறோம். பங்களாதேஷுடன் உள்ள அனல் மின் ஒப்பந்தமும் இலங்கையில் உள்ள காற்றாலைத் திட்டமும் கென்யாவின் பாதையில் பயணிக்கலாம்.
கவுதம் அதானிக்கு நரேந்திர மோடியுடன் உள்ள நெருங்கிய உறவையும், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே உள்ள முக்கியத்துவமிக்க ராஜதந்திர உறவுகளையும் பயன்படுத்தித்தான் கடந்த பத்தாண்டுகளில் அதானி குழுமத்தின் மிகப்பெரிய வளர்ச்சி, பெரும்பாலும் கட்டமைப்புத் துறையிலும் மின் சக்தி/ எரிசக்தி துறையிலும் நடந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள சர்ச்சைக்குரிய கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கம், இஸ்ரேலில் உள்ள ஹைஃபா துறைமுகம் முதல், இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகம், பங்களாதேஷுடன் உள்ள மின் ஒப்பந்தம் வரை, உலகின் ஒவ்வொரு அதானி ஒப்பந்தமும் அதானி-மோடி கூட்டணி நீடிப்பதால்தான் சாத்தியமாகிறது. உண்மையில், அதானி பேரரசை உருவாக்குவதுதான் மோடி ஆட்சிக் காலத்திய இந்திய வெளிநாட்டு கொள்கையின் முக்கியமான நோக்கமாக மாறியிருக்கிறது. அதானியின் நிலக்கரி சுரங்கத் தொழில், அனல் மின்சாரம், கட்டுமான திட்டங்களில் உள்ள பெரும் ஈடுபாடு, அக்குழுமத்தை சுற்றுச்சூழல் மாசு, காடுகள், உயிரினங்கள், பூர்வீக சமூகங்களை அழிப்பதில் முக்கிய பங்காளியாக ஆக்கியிருக்கிறது; பாலஸ்தீனியர்களின் தொடர்ச்சியான இனப்படுகொலையில் அவரது ஒத்துழைப்பை மறைத்துக்கொண்டு, அதானி தன்னை புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வெற்றிவீரனாக காட்டுவதற்கு தீவிரமாக முயற்சிக்கிறார்; லண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தில் கிரீன் எனர்ஜி கேலரியைக் கட்டமைப்பதற்கு தன் பணத்தைச் செலவிடுகிறார். இது குழுமத்தின் மீது படிந்துள்ள 'மாசு அழுக்கை பச்சை ரத்தம் தடவி சுத்தம் செய்வதை' நோக்கமாக மட்டும் கொண்டதல்ல: சூரிய சக்தி துறையில் அதிக மதிப்புள்ள மின் விற்பனை ஒப்பந்தங்களைப் பெற லஞ்சம் கொடுத்து பெரும் லாபத்தைப் பெறவும் அதானி திட்டமிட்டுள்ளார். இந்த அம்சங்கள் (அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட) குற்றச்சாட்டு ஆவணத்தில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில், மோடி அரசு திட்டமிட்ட முறையில் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலைகள், மின் நிலையங்கள், காடுகள், சுரங்கங்கள் மற்றும் நிலத்தை அதானி குழுமத்திற்கு ஒப்படைத்து வருகிறது, பாஜக அல்லாத மாநில அரசுகளும் அதானி குழுமத்தை ஈர்க்கும் போட்டியில் ஈடுபட்டு வருகின்றன.
உண்மையில், இந்தியாவில் அதானி லஞ்ச ஊழலிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள பாஜக முயற்சிக்கிறது, குற்றச்சாட்டு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அய்ந்து மாநிலங்களில் நான்கு - சத்தீஸ்கர், தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா - அப்போது பாஜக அல்லாத அரசுகளின் கீழ் இருந்தன என்பதைக் குறிப்பிடுகிறது. ஆனால் மின் விற்பனை ஒப்பந்தங்கள் மத்திய பொது துறையால் (SECI) வழிநடத்தப்பட்டன என்பதையும், இன்று ஆந்திர பிரதேசம், ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் போன்ற மாநிலங்கள் அனைத்தும் பாஜக மற்றும் அதன் கூட்டணியினரால் ஆளப்படுகின்றன என்பதையும் மறைக்க முடியாது. (கௌதம்) அதானி மாமா- (சாகர்) அதானி மருமகன் கூட்டணி முறையாக கணக்கிட்ட, ஜிகா வாட் கணக்கில் அதிர்ச்சி அளிக்கும் லஞ்சக் குறிப்புகளை முழுமையாகக் கொண்ட லஞ்ச ஊழலை விசாரிக்க நம்பகமான, விரிவான விசாரணையை அறிவிக்க மோடி அரசை எது தடுக்கிறது?
யாருக்கு பணம் கொடுத்தால் காரியம் ஆகும் என்பதை ஆராய்ந்து சரியான அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளது அதானி குழுமம். இவ்வாறு உத்திரவாதம் செய்யப்பட்ட அதானி குழுமத்தின் மிகப்பெரிய லாபங்கள், மக்கள் மீது அதிக கட்டணங்களை விதிப்பதன் மூலமும் வரிகளை வசூலிப்பதன் மூலமும் பெறப்படுகின்றன. உலகின் அனைத்துப் பகுதியிலும் ஹிண்டன்பர்க் அறிக்கை அல்லது குற்றவியல் வழக்கு அதானி குழும பங்குகளில் சரிவை ஏற்படுத்தும் போது, இழப்பு முதன்மையாக இந்தியாவின் சில்லறை முதலீட்டாளர்களால் (அதாவது, சாதாரண மக்களால்) தாங்கப்படுகிறது.
அமெரிக்கச் சட்டங்களை (வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டம்) மீறியதாலோ அல்லது அதானி குழுமம் அமெரிக்காவையும் அமெரிக்க முதலீட்டாளர்களையும் பாதிக்கும் பல மோசடிகள் செய்ததாலும் அமெரிக்க நீதித்துறையால் அதானி குழுமம் குற்றம் சாட்டப்பட்டிருக்கலாம். ஆனால், இந்தியாவில் நடந்த ஊழலை விசாரிக்காதிருப்பதும், மறுப்பதும் சட்டத்தின்படி இயங்கும் குடியரசாகவும் பொருளாதாரமாகவும் இருக்கும் இந்தியாவைப் பற்றிய நம்பிக்கையைக் கடுமையாகப் பாதிக்கும். மோடி-அதானி கூட்டணி இந்தியாவின் தற்போதைய பொருளாதார அமைப்பின் மீதும் அரசியல் ஒழுங்கின் மீதும் செலுத்தும் கட்டுப்பாட்டை வைத்துப் பார்த்தால், அதானி குழுமமும் மோடி அரசும் மறுப்பு அறிக்கைகளை அளிக்கும் என்று மட்டுமே எதிர்பார்க்க முடியும். மோடியின் செல்வாக்கில் இயங்கும் ஊடகங்கள் மோடியின் - அதானியின் அறிக்கைகளை பெரிய அளவில் வெளியிட்டு மகிழலாம். அதேசமயம், வலுவான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழும் கோரிக்கைகளை அடக்குவதற்கான நடவடிக்கைகளை மட்டுமே மோடி அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியும். ஆனால், இந்தியாவில் ஜனநாயகம் வாழ வேண்டும் என்றால், மோடி-அதானி கூட்டணியை அனைத்து சாத்தியமான வழிகளிலும் வீழ்த்தியாக வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)