அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கத்தின் (AILAJ) 2வது அகில இந்திய மாநாடு, 2024 டிசம்பர் 21, 22 தேதிகளில் ஒடிஷா மாநிலம், கட்டாக்கில் நடைபெற்றது. 16 மாநிலங்களில் இருந்து 150 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முதல் அகில இந்திய மாநாடு 2022 ஆம் ஆண்டு மே மாதம் பெங்களூருவில் நடைபெற்றது.
டிசம்பர் 21, மாநாட்டின் முதல் நாளில், 'நீதித்துறையின் சுதந்திரம்' என்ற பெயரில் பொதுக் கருத்தரங்கம் நடைபெற்றது. அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்கத்தின் தேசியத் தலைவர் மைத்ரி கிருஷ்ணன் துவக்கவுரையாற்றினார். உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.கே.பட்நாயக் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். தனது உரையில், அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கமானது மக்களுக்குச் சேவை செய்வதையும் அரசமைப்புச்சட்டத்தின் மதிப்புகளை முன்னெடுத்துச் செல்வதையும் அடிப்படை நோக்கமாகக் கொண்டுள்ளதை பாராட்டிய அவர், நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட பின்னணியில், நீதிமன்றம் தன்னுடைய அறநெறிக் கடமைகளைத் துறந்து விட்டிருந்த சூழ்நிலையில் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் கொலீஜியம் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை நினைவு கூர்ந்தார். மேலும், வழக்கறிஞர்கள் ஜனநாயகத்தின்பாதுகாவலர்களாக இருக்க வேண்டும் எனவும் அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகளை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லக் கூடிய முன்னணி படை வீரர்களாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், ஜனநாயகம் என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்களிப்பது மட்டும் அல்ல. அன்றாட நடவடிக்கைகளில் அதை அமல்படுத்திட அரசைப் பொறுப்பாக்குவது தான் மிகவும் முக்கியமானது எனக் குறிப்பிட்டார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) சந்துரு கருத்தரங்கத்தில் சிறப்புரையாற்றினார். ஜெய்பீம் முழக்கத்துடன் தனது உரையைத் துவக்கிய அவர், அம்பேத்கரைப் பற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சமீபத்திய பேச்சுக்கு கண்டனத்தைத் தெரிவித்தார். தொடர்ந்து அவர், “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற இடங்கள் குறைந்துள்ளதானது அரசமைப்புச் சட்டத்தை மீட்டெடுப்பதற்கான மக்களின் வெளிப்பாடாகும். பாஜக எண்ணிக்கை குறைந்ததால் தான், அதனால் வஃக்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியவில்லை எனக் குறிப்பிட்டார். அரசமைப்புச்சட்டம் ஒரு புனித நூலோ அல்லது வேதமோ அல்ல. அது மக்கள் அதிகாரத்தைச் செயல்படுத்துவதற்கானது. உண்மையில், நமது நீதித்துறை சுதந்திரமானதாக இருக்க வேண்டும் என்றால், அரசமைப்புச் சட்டத்தின் படி உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ள நீதிபதிகள், அரசமைப்புச் சட்டத்திற்கு விசுவாசத்துடன் இருப்பதுடன், அதை தங்கள் தீர்ப்பு மற்றும் நடத்தையிலும் காட்ட வேண்டும். ஆனால், துரதிஷ்டவசமாக, நீதித்துறையானது அதில் மீண்டும் மீண்டும் தோல்வியடைந்து வருகிறது. உதாரணத்திற்கு, சிறுபான்மை சமூகத்தினர் மீது வெறுப்பைக் கக்கிய ஒருவர், வழக்கறிஞர்கள் பலரின் எதிர்ப்பையும் மீறி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதே போல இன்னொரு நிகழ்ச்சி சமீபத்தில் அலிகாபாத் நீதிபதி ஒருவர் பெரும்பான்மை சமூகத்தினரால்தான் இந்த நாடு நடத்தப்படுகிறது என்று பேசினார். இந்த இரண்டு நிகழ்வுகளுமே நீதித்துறையே அரசமைப்புச் சட்டத்தை அவமதிப்புக்குள்ளாக்குவதை வெளிக்காட்டுகிறது. கொலீஜியம் முறை கூட எந்த அளவிற்கு சுதந்திரமாகவும் நீதியின்படியும் வெளிப்படையாகவும் செயல்படுகிறது என்பது கேள்விக்குறிதான். கொலீஜியம் பாரபட்சமாகச் செயல்படுகிறது என்பதற்கு சமீபத்திய உதாரணமானது மூத்த வழக்கறிஞர் சவுரவ் கிருபால், ஒரு தன் பாலின உணர்வாளர் என்பதற்காக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டது ஆகும். கொலீஜியம் நாக்பூரில் உள்ள அரசியல் தலைமையகத்தின் உத்தரவுகளுக்கு அடிபணிந்து சமரசம் செய்து கொண்டு அரசியல் சார்புள்ள நீதிபதிகளை நியமிக்கின்றது. ஏராளமான வழக்குகள் தேங்கிப் போய், நீதிக்காக காத்துக் கிடக்கின்றன. அவற்றில் ஒன்றான சபரிமலை கோயிலுக்குள் எல்லாப் பெண்களும் செல்வது தொடர்பான சீராய்வு மனுவும் நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்திலேயே இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாமல் உள்ளது. பெண்கள் அனைவரையும் சபரிமலை கோயிலுக்குள் செல்லவிடாமல் தடுப்பது என்பது அரசமைப்புச்சட்டம் பிரிவு 17ன்படி தீண்டாமைக்கு சமமாகும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்ட பின்னரும் கூட பெண்கள் கோயிலுக்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. அரசின் நடவடிக்கைளும் கூட அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானதாக உள்ளன. கல்வி நிறுவனங்களில் இளம் இஸ்லாமியப் பெண்கள் பர்தா அணியக் கூடாது என்று தடை செய்து அரசே அவர்களுக்கு இன்னல்களை ஏற்படுத்தியது. பள்ளிவாசலுக்குள் சென்று ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடுவது எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என்று சமீபத்தில் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி கூறினார். அரசமைப்புச் சட்டம் என்பது வழக்கறிஞர்களுக்கானது என்பதுபோல் பாவிக்கக் கூடாது. அது மக்களுக்கானது என்றும் அதைப் பாதுகாத்து உயிர்ப்புடன் வைத்திருக்க மக்கள் போராட முன்வரவேண்டும் என்றும் பொது மக்களிடம் நாம் அறிவுறுத்த வேண்டும். நாம் ஒரு சமூகமாக ஒன்றுபட்டு விழிப்புடன் நிற்போமானால், நீதிபதிகள் எதுவும் செய்யமுடியாது.” என்று கூறினார்.
முதல் நாள் மதிய உணவிற்குப் பின்னர், பிரதிநிதிகள் மாநாடு தொடங்கியது. மறைந்த பல்வேறு தலைவர்கள், மனித உரிமைப் போராளிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநாட்டு அறிக்கையை பொதுச் செயலாளர் கிளிஃப்டன் ரொசாரியோ முன்வைத்தார். அன்று மாலை அம்பேத்காரைப் பற்றி அவதூறாகப் பேசிய அமித்ஷாவைக் கண்டித்தும் பதவி விலகக் கோரியும் மெழுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அறிக்கையின் மீது பிரதிநிதி வழக்கறிஞர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்தார்கள். பின்னர் அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர் மாநிலங்களின் வேலையறிக்கையை அந்தந்த மாநிலப் பிரதிநிதிகள் முன்வைத்தனர். 43 பேர் கொண்ட தேசியக்குழு தேர்வு செய்யப்பட்டது. அதிலிருந்து 11 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். அகில இந்திய தலைவராக மைத்ரி கிருஷ்ணன், பொதுச் செயலாளராக கிளிஃப்டன் ரொசாரியோ, துணைத் தலைவர்களாக ஜி.ரமேஷ், திவாகர், மஞ்சு சர்மா ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்கள். தமிழ்நாட்டில் இருந்து தேசியக்குழுவில் அதியமான், ரவிக்குமார், கென்னடி ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். ராஜ்குமார் தேசியக்குழுவின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்வார்.
மாநாட்டில் கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. மக்களுக்காகவும் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்காகவும் நீதித்துறை சார்ந்த சகோதரர்களுக்காகவும் ஒன்றுபட்டு நிற்க மாநாடு உறுதியேற்றுக் கொண்டது.
2. வழக்கறிஞர்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்களுக்கு முடிவுகட்ட மத்திய, மாநில அரசுகள் உடன் நடவடிக்கைகள் மேற்கோள்ள வேண்டும். ராஜஸ்தான், கர்நாடகா, கேரள மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்கள் வழக்கறிஞர்களைப் பாதுகாக்க சட்டம் இயற்றவில்லை. இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. அனைத்து மாநிலங்களும் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம் முன்வைத்துள்ள வழக்கறிஞர்கள் பாதுகாப்பு வரைவுச் சட்டத்தை அனைவரிடமும் கொண்டு செல்லவும் பரப்புரை இயக்கம் மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
3. இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை, வழக்கறிஞர்களுக்கு மருத்துவக் காப்பீடு, 65 வயதிற்கு மேற்பட்ட வழக்கறிஞர்களுக்கு ஓய்வூதியம், வழக்கறிஞர் எழுத்தர்கள் உள்ளிட்டவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை அரசாங்கமும் பார் கவுன்சில்களும் உத்தரவாதப்படுத்திட வேண்டும் என மாநாடு தீர்மானம் நிறைவேற்றியது.
4. ஒன்றிய அரசால் இயற்றப்படும் சட்டங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும் என்ற இந்திய அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 348 க்கு எதிராக புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. இது இந்திய நாட்டின் கூட்டாட்சிக்கு எதிரானதாகும். புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாட்டின் ஜாக் அமைப்பு மேற்கொண்ட போராட்ட முயற்சிகளில் அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கமும் குறிப்பிடத்தக்க பங்காற்றியதற்கு மாநாடு பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)