வழக்கமான சினிமான்னு தான் போய்ப்பார்த்தேன். பார்த்த பின்புதான் மோசமான சினிமாவைப் பார்த்து விட்டேன் என்ற அதிர்ச்சி ஏற்பட்டு விட்டது. இந்தப்படம் சிறப்பாக இருந்தது, லட்சோப லட்சம் காஷ்மீர் மக்களின் கண்ணீரோடு என்று சொல்கிறேன்.

அமரன் படம்  முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சினிமா என்று சொல்கிறார்கள். இந்த படத்துக்காக அவரது குடும்பத்தினரை சந்தித்து பேசியதாக கூறூகிறார்கள். நல்லது. காஷ்மீர் மக்களை சந்தித்தீர்களா? காஷ்மீர் வெறும் நிலமட்டுமா? அங்குள்ள மக்களுக்கு கண்ணீரும் வாழ்க்கையும் இருக்கிறதல்லவா? அவர்கள் தரப்பு நியாயம் சொல்லப்பட்டிருக்கிறதா?

வீரப்பனைப் பற்றி ஒரு படம் எடுக்க விரும்புகிறேன். அந்த பகுதிக்குச் சென்று அந்த மக்களை சந்திக்கிறேன். அங்குள்ள மக்கள் அவர்கள் அனுபவித்த கண்ணீர்கதைகளை கூறுகிறார்கள். பெண்கள் பாலியல் வன்முறை பற்றி சொல்கிறார்கள். இவற்றைக் கேட்டு என் மனம் மாற்றமடையுமல்லவா? ஒரு உண்மை பிரச்சனையில் எப்போதும் இரண்டு தரப்பு இருக்கும். நான் ஒரு தரப்பை மட்டும் கூறமுடியுமா? வீரப்பனைப் பற்றிய அரசு சொல்லும் தகவல்களே திரைப் படமாக மாறும் என்றால் அது நியாயமா? அது ஒரு கலைஞன் சொந்த மக்களுக்கு செய்யும் துரோகம். 

படைப்பு சுதந்திரம் என்று கூறுகிறார்கள். படைப்பு சுதந்திரம் என்றால் நாம் என்னவேண்டுமானாலும் பேசலாம் என்ன வேண்டுமானாலும் எடுக்கலாமா? படைப்புசுதந்திரம் வரையறைக்கு உட்பட்டது.

உங்கள் மாட்டை விற்கிறீர்கள் அது வியாபாரம். பக்கத்து வீட்டு மாட்டை விற்கின்றீர்கள் என்றால் அதன் பெயர் என்ன? குற்றம். நீங்கள் உங்கள் கதையை படமாக எடுங்கள் அது உங்கள் சுதந்திரம். அடுத்தவர் கதையை எடுக்கும் போது அது உண்மையாக இருக்க வேண்டும். உண்மையை மட்டும்தான் எடுக்க வேண்டும். அதுதான் பொறுப்புள்ள ஒரு கலைஞனின் வேலை. இந்தப் படம் உண்மையை பேசவில்லை. காஷ்மீர் பற்றி அரசு உருவாக்கிவைத்துள்ள அரசியலையே இந்தப் படம் பேசுகிறது.

நான் இந்த படத்தை எடுத்திருந்தால் எப்படி எடுத்திருப்பேன் என்று கேட்கிறீர்கள். நான் இந்த படத்தை எடுத்திருக்க மாட்டேன். ஏனெனில் உண்மையை பேசமுடியாது. அரசியலை அறிவியல் பூர்வமாக பேசும் போது இந்த நாடு கண்காணிக்கிறது. பின் எப்படி உண்மையை பேசமுடியும்? 

பொழுதுபோக்கு என்கிறார்கள். எது பொழுது போக்கு? ஆபாசம் பொழுதுபோக்கா? வன்முறை பொழுதுபோக்கா? சமூகத்தைப் பற்றிய பொய்களை படமாக எடுக்கலாமா? ஆபாசம், வன்முறை சமூகத்தின் தேவையா? மதம், சாதி பற்றி அதிலுள்ள முரண்பாடுகளைப் பற்றி படம் எடுக்காதே என்கிறார்கள். ஆனால் ஆபாசம், வன்முறை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எடுக்கலாமென்கிறார்கள். இங்கு குழந்தைகளுக்கான படங்கள் வருகிறதா? பெண்களை மதிக்கும் படங்கள் வருகிறதா?

(முகுந்த் வரதராஜனை) ஏன் பிராமணராகக் காட்டவில்லை என்று சிலர் கேட்கிறார்கள்? அவர் பிராமணரா? ராணுவ வீரரா? இந்தியரா?  என்ற கேள்வி எழுகிறது. அவரை இந்தியராக காட்டவிரும்புகிறோம் என்று படக்குழுவினர் சொல்கின்றனர். அதுவல்ல உண்மை. பொதுச்சமூகத்திடம் ஒரு படத்தை கொண்டு செல்லும்போது, குறிப்பிட்ட ஒரு அடையாளத்தைக் காட்டினால் மற்றவர்கள் “நாம் ஏன் அதை பார்க்க வேண்டும்” என்று தோன்றுமல்லவா? எனவே ‘தேச பக்தி’ வணிகமாக்கப் பட்டிருக்கிறது. அதனால்தான் தேசபக்தி என்றாலே அச்சமாக இருக்கிறது.

இந்தப்படம் குறித்து மாரிசெல்வராஜ் பாராட்டியிருப்பது வருத்தமளிக்கிறது. தலித்துகள் ஒடுக்கப்படுவதை பேசுவதுபோல் இஸ்லாமியர்கள், பெண்கள் ஒடுக்கப்படுவதையும் பேசவேண்டும். அதுதான் ஜனநாயகம்…..

இந்த படம் குறித்த எனது பதிவு பற்றி படக்குழுவினர் எவரும் என்னிடம் பேசவில்லை. ஆனால் பல ஜனநாயக சக்திகள் எனது பதிவை ஆதரித்துப் பேசினர். “சாய்பல்லவி, சிவகார்த்திகேயன் நடிப்பையே கவனித்தோம்; இந்த படத்தில் உள்ள அரசியலை கவனிக்க வில்லை” என்று கூறினர்.

கல்வி நிறுவனத்தின் நோக்கம் அறிவியலை உருவாக்குவது தான். மதப் பிரச்சாரங்களை உருவாக்க அல்ல; மூட நம்பிக்கைகளை உருவாக்க அல்ல;  பிற்போக்குத் தனமான கருத்துக்களை உருவாக்க அல்ல பெண்களை அடிமைப்படுத்த அல்ல; ஒரு சமூகத்தை இன்னொரு சமூகம் அடிமைப்படுத்த அல்ல;  உழைப்புச் சுரண்டலை அனுமதிக்க அல்ல; மனிதனின் ஜனநாயகத் தன்மையை மேன்மைப்படுத்துவதுதான் கல்வியின் அடிப்படை  நோக்கம். ஜனநாயகப் பூர்வமான கல்வியை அரசு தராது என்றால் அது அறிவியலுக்கு எதிரானதாகத்தான் இருக்கும்.  பிற்போக்காகத்தான் இருக்கும்.

(இயக்குநர் கோபி நயினாரின் புதிய தலைமுறை தொலைக்காட்சி பேட்டியிலிருந்து – முருகன்)