புது தில்லி, 21 நவம்பர் 2024
அதானி குழுமம் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அதிக விலையுள்ள சோலார் சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு முயற்சித்ததாகவும், அமெரிக்க சட்டங்களை மீறி அமெரிக்க முதலீட்டுச் சந்தையில் நிதி திரட்டியதாகவும் அமெரிக்க குற்றவியல் நீதித்துறையால் குற்றம் சாட்டப்பட்டது. இது அதானி குழுமத்தின் குற்றவியல் தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டவில்லை. இந்திய அரசின் கட்டுப்பாட்டு அமைப்புகளும், மோடி அரசும் அதானி குழுமத்தைப் பாதுகாக்கவும், அதானி குழுமத்தின் நலன்களை மேம்படுத்தவும் கைகோர்த்து செயல்பட்டுள்ளதை வெளிப்படுத்துகிறது.
ஒரு வருடத்திற்கு முன்பு, அதானி குழுமத்தின் மிகப்பெரிய நிறுவன மோசடி குறித்து ஹிண்டன்பர்க் வெளிப்படுத்திய தகவலால் உலகம் அதிர்ச்சியடைந்தபோது, மோடி அரசு அதானி குழுமத்தைப் பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் செய்தது. மோடி அரசையும் செபி (SEBI)யையும் பொறுப்பேற்கச் செய்ய உச்ச நீதிமன்றமும் கூட தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. தற்போதைய குற்றச்சாட்டுகள் நிறுவன மோசடிகள் பற்றியவை மட்டுமல்ல, லஞ்சம் போன்ற தீவிர ஊழல் செயல்களைப் பற்றியவையாகும். இந்தக் குற்றச்சாட்டுகள் வெளிநாட்டு நீதித்துறையில் எழுப்பப்பட்டுள்ளதால், இந்தியாவில் நடந்த இந்த மிகப்பெரிய ஊழலை மோடி அரசு புறக்கணிப்பதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது.
மோடி அரசு உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால், இந்தியாவின் மீதான சர்வதேச பார்வைக்கும் உள்நாட்டு பொருளாதாரத்திற்கும் நுகர்வோரின் நலன்களுக்கும் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்தக் குற்றச்சாட்டுகளை இந்திய உச்சநீதிமன்றம் தானே முன்வந்து விசாரிக்க வேண்டும். 2,029 கோடி ரூபாய் (265 மில்லியன் அமெரிக்க டாலர்) லஞ்ச மோசடி குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் மத்திய புலனாய்வு துறை (CBI) விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இந்திய முதலீட்டு கட்டுப்பாட்டு அமைப்பின் செயல் திறனை மேம்படுத்துவதற்காக செபி தலைவரையும் அந்த பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்.