இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கப்பட்டு நூறாண்டுகள் ஆகின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட நாள்  குறித்து பல்வேறு கருத்துகள் இருந்தாலும், சிபிஐ மற்றும் சிபிஐ(எம்எல்) கட்சிகள், 1925 டிசம்பர் 26 அன்று சிபிஐ ஒரு கட்சியாக தொடங்கப்பட்டதாக அங்கீகரிக்கின்றன. எப்படிப் பார்த்தாலும், 1920 களின் முற்பகுதியை இந்தியாவில் கம்யூனிச கருத்துகள் மற்றும் செயல்பாடுகள் வடிவம் பெறத் தொடங்கிய காலகட்டமாக நாம் அடையாளம் காணலாம், எனவே, கம்யூனிச இயக்கம் இந்தியாவில் ஒரு நூற்றாண்டு பழமையானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த உரையின் நோக்கம் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றை மறுபரிசீலனை செய்வது அல்ல. கடந்த கால அனுபவங்களிலிருந்து படிப்பினைகளும், உத்வேகமும் பெற்று நிகழ்கால சவால்களை எதிர்கொள்ள கவனம் குவிப்பதே நமது நோக்கம். இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதல் நூற்றாண்டை நான்கு கட்டங்களாகப் பிரிக்கலாம் - 1. காலனிய சகாப்தம், 2. சுதந்திரத்திற்குப் பின்னும் அவசரநிலை மற்றும் அதை ஒட்டிய காலகட்டமும் 3. புதிய தாராளவாதக் கொள்கைகளும், தீவிர வலதுசாரி  இந்துத்துவாவும் மேலாதிக்கம் பெற்ற 1990களின் காலகட்டம் 4. அப்பட்டமான பாசிச தாக்குதலின் தற்போதைய காலம்.

அதேபோல், சர்வதேச அளவிலும், இந்தக் காலகட்டத்தை பிரித்துப் பார்க்கலாம்.  1917 ல் நடந்த ரஷ்ய புரட்சி  மற்றும் 1949 ல் நடந்த சீனப்  புரட்சியின் காலம். ரஷ்ய மற்றும் சீனப் புரட்சிகள்,  பல  நாடுகளில் வெற்றிகரமான புரட்சிகளுக்கும்  கம்யூனிஸ்ட் இயக்கத்தின்  உலகளாவிய எழுச்சிக்கும் வழிகோலின.   இரண்டாம் உலகப் போரில், பாசிச கூட்டணி அரசியல்ரீதியாகவும் -இராணுவரீதியாகவும் படுதோல்வியைக் கண்டது. 1959 ல் கியூபாவில்  புரட்சி வெற்றி  பெற்றது. 1975 ல் வியட்நாம் போரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் படுதோல்வியடைந்தது. இந்த நிகழ்வுகள் எல்லாம் சர்வதேச  கம்யூனிச இயக்கத்தின் எழுச்சியின் குறியீடுகள்.

சோவியத் யூனியனின் சரிவு, பனிப்போர் கால கட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.  உலகை, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு மற்றும் கார்ப்பரேட் கொள்ளையின் புதிய கட்டத்திற்கு தள்ளியது. கம்யூனிஸ்ட் இயக்கம் பழைய சோவியத் சார்ந்த நாடுகளில் இன்னும் இழந்த இடத்தைப் பெறவில்லை. இருந்தபோதிலும், இந்த காலகட்டத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகள்  மற்றும் ஆசியாவில் சில நாடுகளில் இடதுசாரி இயக்கங்கள் மக்களிடையே செல்வாக்கு பெற்று வளர்ந்துள்ளன. இருந்தபோதிலும்,  உலகின் பெரும் பகுதிகளில் தற்போது பாசிச தீவிர வலதுசாரிகளின் புதுப்பிக்கப்பட்ட எழுச்சியை நாம் காண்கிறோம்.

இந்தியாவில், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆரம்ப உத்வேகத் திற்கும், புறத் தூண்டுதலுக்குமான காரணங்கள்: 1. ரஷ்யப் புரட்சியின் வெற்றி 2. காலனிய ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் 3. இந்தியாவில் உள்ள நிலப்பிரபுத்துவ அடக்குமுறை மற்றும் சமூக அடிமைத்தனத்திற்கு எதிரான உணர்வுகள்.

ரஷ்ய புரட்சியின் தாக்கத்தை, கம்யூனிஸ்டுகளைத் தாண்டி, இந்தியாவின் காலனிய  எதிர்ப்பு உணர்வு மற்றும் சமூக சமத்துவம் மற்றும் விடுதலைக்கான தேடலில் காணமுடிந்தது.  பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் முதல் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் வரையிலும், அம்பேத்கர் முதல் பெரியார் வரையிலும், இந்தியாவின் சுதந்திர இயக்கம், சமூக நீதி இயக்கம், இலக்கியம் மற்றும் மக்கள் கலாச்சாரத்தின் பிற துறைகளில்  ரஷ்ய புரட்சியின் தாக்கத்தை நாம் காணலாம்.

சில நாடுகளில், கம்யூனிஸ்டுகள் காலனிய  எதிர்ப்புப் போராட்டங்களின் முன்னணி அரசியல் சக்தியாக உருவெடுத்தனர். தேசிய விடுதலை போராட்டங்களினூடே சோசலிசத்தைக் கட்டியெழுப்பவதில் வெற்றி பெற்றனர். அதே காலகட்டத்தில், இந்தியாவில், கம்யூனிச இயக்கம் கணிசமாக வளர்ந்தது. ஆனால், இந்திய அரசியலில், முன்னணி நீரோட்டமாக வளர்வதில்  கம்யூனிஸ்டுகள் வெற்றிபெறவில்லை. ஆயினும்கூட, கம்யூனிஸ்ட் சித்தாந்தம் மற்றும் இயக்கத்தின் வினையூக்கி, இவற்றின் தாக்கம், கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மையான அமைப்பு பலத்தை விட அதிகமாக இருந்தது. இந்திய சுதந்திர இயக்கத்தின் மிகப்பெரிய இளைஞர் ஆதர்ஷம், அழியாத தியாகி பகத்சிங், கம்யூனிஸ்ட் முன்னோடியாக இருந்தார். நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான இயக்கங்களைக் கட்டியெழுப்புவதிலும், தொழிலாளர் வர்க்கத்தை ஒன்று திரட்டுவதிலும், சமூக சமத்துவம் மற்றும் மத  நல்லிணக்கத்துக்கு போராடுவதிலும்  கம்யூனிஸ்ட் தலைமை பரந்த தாக்கத்தை உருவாக்கியது. சுதந்திர போராட்டத்திற்கு பரந்த முற்போக்கான திசைவழியை  கம்யூனிஸ்ட் தலைமை வழங்கியது.

நாட்டுப் பிரிவினை,  அதுவரை கண்டிராத  வகுப்புவாத படுகொலைகள் மற்றும் எல்லையைத் தாண்டி லட்சக்கணக்கான குடும்பங்களின் புலம்பெயர்வு ஆகியவற்றின் அதிர்ச்சியுடன் வெள்ளையர்களிடமிருந்து இந்திய விடுதலை வந்தது, இருந்தபோதிலும், சுதந்திரத்திற்கு பிறகு எழுதப்பட்ட இந்திய அரசியலமைப்புச்  சட்டம், இந்தியாவை ஒரு இந்து நாடாக மாற்றும் யோசனையை நிராகரித்தது. அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமையுடன் கூடிய மதச்சார்பற்ற ஜனநாயகத் தன்மையைத் தேர்ந்தெடுத்தது.  இந்து ராஷ்டிரத்தை விரும்பி அன்றைய அரசியல் சட்டத்தை கடுமையாக எதிர்த்த ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகாசபை தனிமைப்படுத்தப்பட்டு பலவீனமாகவே இருந்தன. 1951 அக்டோபர் 25 முதல் 1952 பிப்ரவரி 21 வரை நடைபெற்ற முதல் நாடாளுமன்றத் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சி 16 எம்.பி.க்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆர்.எஸ்.பி., பி.டபிள்யூ.பி, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுடன் இணைந்து இடதுசாரிகள் 22 இடங்களையும், சோசலிஸ்டுகள் 12 இடங்களையும் வென்றனர், இந்து மகாசபை மற்றும் ஜனசங்கம் முறையே 4 மற்றும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றன.

புதிதாக உருவாக்கப்பட்ட கேரள மாநிலத்தில் முதல் சட்டமன்றத் தேர்தலில் தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையில் கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்றனர். மாநில ஆட்சிக்கு தலைமை தாங்கும் முதல் காங்கிரஸ் அல்லாத கட்சியாக கம்யூனிஸ்டுகள் உருவெடுத்தனர்.  இதன் மூலம் இந்தியாவின் தேர்தல் வரைபடத்தில் கம்யூனிஸ்ட் செல்வாக்கு விரிவடைந்தது. ஈ.எம்.எஸ் அரசாங்கம் தனது முழு பதவிக்காலத்தை முடிக்க அனுமதிக்கப்படவில்லை. எதிர்க்கட்சி அரசாங்கத்தை கவிழ்த்ததில் ஈ.எம்.எஸ் அரசாங்கம் முதல் பலியாகியது. தற்போதைய மோடி காலத்தில் இந்தப் போக்கு சர்வ சாதாரணமாக நடப்பதை காணமுடிகிறது.

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் புரட்சிகர போக்கு, வங்கத்தின் தேபாகா மற்றும் தெலுங்கானா போராட்டங்களின் புரட்சிகரச் சுடரை மீண்டும் பற்றவைக்க முயன்றது. அப்படித்தான் 1967 மே மாதம் நக்சல்பாரி நிகழ்ந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிபிஐ(எம்எல்) உருவானது. நக்சல்பாரி விவசாயிகளின் எழுச்சி, நாடு முழுவதும் ஒரு புரட்சிகரப் பாதைக்கு ஒளியூட்டியது. மிகக் கொடூரமான அரசு அடக்குமுறைக்கு மத்தியிலும் நக்சல்பாரியின் உணர்வுகள்  நிலைத்திருக்கின்றன. 1970களை மக்கள் விடுதலைக்கான  பத்தாண்டுகளாக மாற்றும் இலக்கை  நக்சல்பாரியின் எழுச்சி அடையத் தவறியது என்பது உண்மையாக இருக்கலாம். இருப்பினும், அந்த போர்க்குணமிக்க எழுச்சி, கம்யூனிஸ்ட் இயக்கத்தை இந்தியாவின் மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகள் மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கு கொண்டு சென்றது.

தேர்தல் களத்திலும், 1967க்குப் பிந்தைய காலகட்டத்தில்தான் கம்யூனிஸ்ட் செல்வாக்கு  விரிவடைந்தது. 1960களின் பிற்பகுதியில் காங்கிரஸின் வரலாற்றுச் சரிவு மற்றும் பிளவுகள் தொடங்கின. இந்தப் போக்கு அவசரநிலைக்குப் பிறகு இன்னும் அதிகமானது. நிலச் சீர்திருத்தங்கள், ஊதிய உயர்வுக்கான போராட்டங்கள் மற்றும் உள்ளூர் சுய-நிர்வாகம் மூலம் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதும், விரிவுபடுத்துவதும்  கம்யூனிச செல்வாக்கு நிலைநிறுத்தப்பட்டு  விரிவுபடுத்தப்படுத்தப்படுவதற்கானமுக்கிய கூறுகளாக இருந்தன. இருபதாண்டுகளுக்கு முன்பு இடதுசாரிகள் மூன்று மாநில அரசாங்கங்களை வழிநடத்தியதையும்  அறுபது பேர் கொண்ட குழுவை பாராளுமன்றத்திற்கு அனுப்பியதையும் நாம் அறிவோம்.

கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் இடதுசாரிகளின் தேர்தல் பலம் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. மக்கள் நலத் திட்டங்களை விலையாகக் கொடுத்து,  கார்ப்பரேட்-சார்பு வளர்ச்சி மாடலுடன்  கொள்கை சமரசம் செய்து கொள்ள முயற்சித்ததானது, மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் சரிவைத் தூண்டியது. வங்கத்தில் வலதுசாரிகள் காலூன்ற இது வழி வகுத்தது. அனைத்திந்திய சூழலில் வேகமாக வளர்ந்து வந்த பாசிச ஒருங்கிணைப்பும்  வங்க மாநிலத்திற்குள் ஏற்பட்ட வலதுசாரி மாற்றத்தை   வலுப்படுத்தியது.

இன்று இந்தியாவில் பாசிசத்தின் எழுச்சி மற்றும் ஒருங்கிணைப்பு கம்யூனிஸ்டுகளுக்கு மட்டும் மிகப்பெரிய சவாலாக இல்லை.   ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக, வெளிப்படைத்தன்மையும், பன்முகத்தன்மையும் கொண்ட சமூகமாக, நவீன இந்தியா பற்றிய அரசமைப்புச்சட்டப் பார்வைக்கே பாசிசம் சவாலாக உள்ளது. ஜனநாயகத்திற்கான மிகவும் துணிவுமிக்க, முரணற்றப் போராளியாக, இந்திய பாசிசத்தின் தாக்குதலுக்கு எதிர்ப்பு அரணாகச் செயல்படுவதற்கும் கம்யூனிஸ்டுகள் தங்கள் தலைமைப் பாத்திரத்தை மீண்டும் நிலைநாட்டியாக வேண்டும்.

இன்றைய இந்தியாவில், பாசிசத்தின் தேசிய மற்றும் வரலாற்றுத் தனித்தன்மைகளை கவனத்தில் கொண்டு, இந்தியாவில் பாசிசம் என்பதை விட இந்திய பாசிசம் என்ற சொற்களை நான் தேர்வு செய்யவே  விரும்புகிறேன். இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஜெர்மனியில் பாசிசத்தின் எழுச்சியின் ஆரம்ப காலத்தில்,  பாசிசத்தை தேசிய தனித்தன்மைகள் கொண்ட ஒரு சர்வதேச அரசியல் போக்காக  சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம் சரியாக அடையாளம் காட்டியது. இன்று இந்தியாவில் பாசிசத்தின் வளர்ச்சியை  உலகளாவிய தீவிர வலதுசாரிகளின் புதுப்பிக்கப்பட்ட வளர்ச்சியின்  பின்னணியில் பார்க்க வேண்டும். இந்த நிகழ்வின் குறிப்பிட்ட இந்திய பரிமாணத்தில்  ஆர்எஸ்எஸ் முக்கிய வரலாற்றுப் பங்கு வகிக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் அய்ரோப்பிய பாசிசத்தின் பல்வேறு நிகழ்வுகள் எழுச்சியையும்  வீழ்ச்சியையும்  கொண்டிருந்தன. இதற்கு நேர்மாறாக, இந்திய பாசிசம் மெதுவாக வளர்ந்து  கடந்த முப்பதாண்டுகளில் நிலையான வளர்ச்சியை   கண்டிருக்கிறது. 2014 இல் மோடி ஆட்சிக்கு வந்தபின்  இந்திய பாசிசம் உச்சத்தை எட்டியுள்ளது. இந்திய பாசிசம், இந்திய சமூகத்தின் பிற்போக்கு அம்சங்களிலிருந்து, குறிப்பாக சாதி அமைப்பு, ஆணாதிக்க அமைப்பு, நிலப்பிரபுத்துவ எச்சங்கள் ஆகியவற்றிலிருந்து அதன் வலிமையைப் பெறுகிறது. வெற்றிகரமான ஜனநாயகப் புரட்சியின் மூலம் மட்டுமே நிறைவேற்றப்படக்கூடிய தீர்க்கமான அடி எதுவும் விழாததால், இந்த அம்சங்கள் நீண்ட நாள் நிலைத்து நிற்கின்றன. இது தவிர, இந்திய பாசிசம் பாராளுமன்ற ஜனநாயகத்தின் நிறுவன பொறிமுறையையும் ஆழமாக ஊடுருவி, இந்தியாவின் சலுகைசார் முதலாளித்துவத்துடன் ஒரு சிக்கலான தொடர்பையும் உருவாக்கியுள்ளது. அமெரிக்க-இஸ்ரேல் அச்சுடன் இந்திய அரசின் போர்த்தந்திர கூட்டு,  இந்திய சந்தை  மற்றும் இந்தியாவின் வளங்கள் மீதான உலகளாவிய ஈர்ப்பு  மற்றும் சர்வதேச அரங்கில் புலம்பெயர்ந்த இந்தியர்களின் வளர்ந்து வரும் செல்வாக்கு ஆகியவற்றை இந்திய பாசிசம் பயன்படுத்துகிறது. (சியோனிசத்துடன்) யூத தேசியவாதத்துடன்  இந்துத்துவாவின் நெருங்கிய கருத்தியல் உறவுகள் மற்றும் சர்வதேச அளவில்  தேசிய பழமைவாதத்தின் பெயரால் வளர்ந்து வரும் வலதுசாரி சித்தாந்தங்களின் தாக்கமும் இந்திய பாசிசத்தின் மேல் படர்வதை நினைவில் கொள்ள வேண்டும்.

உழைக்கும் மக்களின் கார்ப்பரேட் எதிர்ப்பு அணிதிரட்டலுடன் சாதி எதிர்ப்பு மற்றும் ஆணாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களைக் கூர்மைப்படுத்தி, பாசிசத் தாக்குதலுக்கு எதிராக சக்திவாய்ந்த எதிர்ப்பைக் கம்யூனிஸ்ட் இயக்கம் கட்டியெழுப்ப வேண்டும். அரசு அதிகாரத்தில் வேரூன்றியிருக்கும் பாசிச சக்திகளை தேர்தல் களத்திலும்  சந்திக்கவேண்டும். தேர்தல் களத்தில் பாசிச முகாமை பலவீனப்படுத்தவும் தனிமைப்படுத்தவும் அரசியலமைப்பையும் குடியரசையும் அவர்களின் பிடியில் இருந்து மீட்கவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். அய்க்கிய முன்னணி போர்த்தந்திரத்தை  முழுமையாகப் பயன்படுத்துவது, பாசிச ஆட்சிக்கு எதிராக  அனைத்து சக்திகளை அணிதிரட்டுவது, வெறுப்பு, பொய்கள், வன்முறையின் பாசிச பிரச்சாரத்தை எதிர்த்துப் போராடுவது, மக்களின் உரிமைகள், நலன்களைப் பாதுகாப்பது போன்ற அனைத்து முன்முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்.

நாம் இந்தியக் குடியரசின் எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்ட போதே, குடியரசின் பயணத்தைத் தடுக்கக்கூடிய, தடம் புரளச் செய்யக்கூடிய இடர்பாடுகள் குறித்து அதன் சிற்பிகள் அன்றே கணித்தனர். 1949 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்ட தினத்தன்று, டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்கள் அரசியல் நிர்ணய சபையில் ஆற்றிய உரையில் மிகவும் நுண்ணறிவுமிக்க கருத்துகள் இருந்தன. “எவ்வளவு நல்ல அரசியலமைப்பாக இருந்தாலும், அதை நடைமுறைப் படுத்துபவர்கள் மோசமாக இருந்தால்  அது கெட்டதாக மாறுவது உறுதி” என்று எச்சரித்தார். அரசமைப்புச் சட்டம் உருவான ஆண்டுகளில் அதை வெளிப்படையாக எதிர்த்த ஆர்.எஸ்.எஸ்., இன்று அரசு அதிகாரத்தின் கடிவாளத்தைக்  கட்டுப்படுத்துகிறது.  இந்த முரண்பாட்டின் விளைவை  நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். பெரும்பான்மை(பெரும்பான்மை மக்களின்)வாதமே சட்டம்  என்று கூறும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் இப்போது நம்மிடையே உள்ளனர். பாஜக அல்லாத மாநில அரசுகளை இடையூறு செய்வதிலும், கவிழ்ப்பதிலும் சிறப்பு அக்கறை காட்டும் ஆளுநர்கள் நம்மிடையே உள்ளனர். அரசியலமைப்பிற்கு முரணானச் சட்டங்களை இயற்றுவதற்கும் ஜனநாயக விவாதங்களை  படுகொலை செய்ய மட்டுமே நாடாளுமன்ற அமர்வுகள் பயன்படுத்தப்படுவதை நாம் காண்கிறோம்.

அதே உரையில்,  அரசியலில் தனிநபர் வழிபாடு பற்றியும் அம்பேத்கர் பேசியுள்ளார்.  அரசியலில் தனிநபர் வழிபாடு  "அரசியல் விழுமியங்களை அழித்து சர்வாதிகாரத்திற்கு இட்டுச்செல்லும்" என்று கணித்தார். சமூக ஜனநாயகத்துடன் அரசியல் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும்  வலியுறுத்தினார். அரசமைப்புச்சட்டத்தின்  வரைவை அறிமுகப்படுத்தியபோது, ​​"இந்திய அரசமைப்புச்சட்டம் என்ற மேல்கட்டுமானம் ஜனநாயகமற்ற சமூக அடித்தளத்தின் மேல் நிற்கிறது" என்று அம்பேத்கர் சொன்னார். இந்திய அரசியல் அரசமைப்புச் சட்டத்தை வலுப்படுத்த இந்திய சமூகத்தின் ஜனநாயக அடித்தளத்தை வலுப்படுத்தவேண்டும் என்றார் அம்பேத்கர்.

மிகவும் சிலாகிக்கப்பட்ட  பாரம்பரிய கிராம சமூகங்களுக்குப் பதிலாக, தனிப்பட்ட குடிமக்களை குடியரசின் அங்கத்தினர்களாக, இந்திய அரசமைப்புச் சட்டம் நிலைநிறுத்தியுள்ளது. இந்தியா ஏற்கனவே ஒரு தேசமாகிவிட்டது என்ற மாயையான எண்ணத்திற்கு மாறாக  'இந்திய மக்களாகிய நாம்' என்ற வெளிப்பாட்டின் மூலம்  அனைத்து பன்முகத்தன்மையையும்  கூட்டு ஜனநாயக அடையாளத்தையும் அரசமைப்புச்  சட்டம் முன்னிறுத்தியுள்ளது. தேச வளர்ச்சியில் சாதி மிகப்பெரிய தடை என்று  அம்பேத்கர் கருதினார். சமூக ஜனநாயகம் மற்றும் தேசிய ஒற்றுமையின் அடித்தளமாக சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய பிரிக்க முடியாத  மும்மையை (மூன்று தத்துவத்தை) அம்பேத்கர் வலியுறுத்தினார். பெரும்பான்மைவாதம் மற்றும் அதிகப்படியான மையப்படுத்துதலின் அபாயங்களை அரசமைப்புச் சட்டம் உணர்ந்தே இருந்தது. மேலும் இந்த அபாயகரமான அச்சுறுத்தல்களிலிருந்து சிறுபான்மை உரிமைகள் மற்றும் கூட்டாட்சி நலன்களைப் பாதுகாப்பதில் கவனமாக இருந்தது. "இந்து ராஜ்ஜியம்" உருவாக்கப்பட்டால் அது  இந்தியாவிற்கு மிகப்பெரிய பேரழிவாக இருக்கும், எந்த விலை கொடுத்தேனும், அது தடுக்கப்பட வேண்டும் என்ற அம்பேத்கரின் மிகத் திட்டவட்டமான எச்சரிக்கையையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தியாவை இந்தப் பேரிடர் கட்டத்தில் இருந்து மீட்டெடுப்பது இன்று கம்யூனிஸ்ட்டுகளின் தலையாய கடமை. அரசு இயந்திரத்தைப்  பயன்படுத்தி இந்தியாவை பேரிடருக்கு இட்டுச் செல்வதை எதிர்த்துப் போராட வேண்டும். தட்டுத் தடுமாறும்  ஜனநாயகத்தையும் வலுவான அடித்தளத்தில் நிறுத்த வேண்டும். சமூகத்தையும் அரசையும் முழுவதுமாக ஜனநாயகமயமாக்குவதன் மூலம் பாசிசத்தின் தீர்க்கமான தோல்வியை உறுதிசெய்ய வேண்டும். இது கம்யூனிஸ்ட்டுகளின் வரலாற்றுக் கடமை.

சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின்  தீர்க்கப்படாத சவால்களுக்கு தீர்வு காணும் பொறுப்பும் இந்திய கம்யூனிஸ்டுகளின் முன் உள்ளது. சோவியத் யூனியனின் சரிவிற்கான காரணங்கள்  பற்றிய புரிதல்,  கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, குறிப்பாக  ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, புரட்சிக்குப் பிந்தைய அல்லது வேறெந்த நிலையில் இருந்தாலும்  தேவை.  சோவியத் யூனியனில், கம்யூனிஸ்ட் கட்சி மக்களிடமிருந்து மிகவும் துண்டிக்கப்பட்டு, அரசின் அதிகாரத்துவ எந்திரத்தில் முழுமையாக மூழ்கியது, எழுபதாண்டுகளுக்குப் பிறகு வெளியில் இருந்தோ அல்லது உள்ளே இருந்தோ  எந்த பெரிய இராணுவத் தலையீடும் இல்லாமல் முழுக் கட்டமைப்பும் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது.

பொருளாதார தேக்க நிலை, வெளியுறவுக் கொள்கையில்  திரிபுகள், நலிந்த உள்நாட்டு ஜனநாயகம் மாறிவரும் சூழலுக்கு ஈடுகொடுக்கமுடியாத கொள்கை அளவிலான தேக்கநிலை ஆகியவை மக்கள் ஆதரவை கம்யூனிஸ்டுகள் பெருமளவில் இழக்க வழிவகுத்தது. அதுமட்டுமல்லாமல், கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் பாத்திரத்தின் நியாயத்தன்மையையும் கூட இழந்தது. 'மக்களிடம் இருந்து மக்களுக்கு' என்ற அடிப்படையிலான தகவல் தொடர்பு குறைந்து கட்சிக்கும் மக்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகமானது, அதனால் மக்கள், கட்சி மற்றும் அரசு இடையேயான சமநிலை சீர்குலைந்தது. முதலாளித்துவ அமைப்புகளுடன்  ஒப்பிடுகையில் ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பேற்றல் ஆகிய எல்லா விசயங்களிலும் அதிகாரத்தில் இருக்கும் கம்யூனிஸ்டுகள் உயர்ந்தவர்களாகக் காணப்பட வேண்டும். எல்லா இடங்களிலும் உள்ள கம்யூனிஸ்டுகள் சோவியத் தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு முக்கிய பாடம் இது.

சோஷலிச புரட்சி நடந்த நாடுகளில் சமத்துவம், வறுமையின்மை, எல்லோருக்கும் கவுரவமான வேலை மற்றும் உழைக்கும் மக்களின்  வாழ்நிலை-வேலை நிலைகளில் அடிப்படை முன்னேற்றங்களை நன்கு காணமுடிந்தது. ஆனால் உற்பத்தி செயல்முறைகள், இயந்திரங்கள் பயன்பாடு, தொழில்நுட்பத்தின் பயன்பாடு இவற்றினால் உருவாகும் சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் மானுடம் அந்நியப்படுதல்  ஆகியவற்றின் அடிப்படையில் முதலாளித்துவத்திலிருந்து நடப்பில் உள்ள சோசலிசத்தை வேறுபடுத்திக் காணும் வாய்ப்பு மிகக் குறைவே. காலநிலை நெருக்கடி, சுற்றுச்சூழல் சீரழிவு, வளர்ந்து வரும் வேலையின்மை மற்றும் தொழிலாளரை வெளியேற்றும்  தொழில்நுட்பங்களின் கண்மூடித்தனமான பயன்பாட்டால் ஏற்படும் பணிநீக்கங்கள் ஆகிய விஷயங்களில் சோசலிச மாதிரிகள் முதலாளித்துவத்தின் நாசகரமான, தோற்றுப் போன பாதைகளுக்கு தரமான மாற்றாக நிற்க வேண்டும்.

முடிக்கும் முன், நாம் உடனடியாக கவனிக்க வேண்டிய தேசிய சூழலுக்கு திரும்புகிறேன். வரலாற்றின் இயக்கப் போக்கில்,  கடந்த சில பத்தாண்டுகளாக சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் பல்வேறு நீரோட்டங்களாக, அமைப்புகளாக பிரிந்து நிற்கின்றன. இன்று நமது குடியரசும், அரசியலமைப்புச் சட்ட ஆட்சியும்  முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியில் உள்ளன. கம்யூனிஸ்ட்டுகள், இன்றைய அவசரத் தேவையை உணர்ந்து முன் எப்போதையும் விட கூடுதலாக நெருங்கி வர வேண்டும்.  போராடும் அணிகளின் ஒற்றுமை எவ்வளவுக்கு எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு பாசிச எதிர்ப்பு வலுப்பெறும்; இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் ஒளிமிக்கதாக இருக்கும். கம்யூனிஸ்ட் அறிக்கையை பொழிப்புரையாகக் கூறுவதாயின் (வேறு சொற்களில்  கூறுவதாயின்),  சுதந்திரத்தின் வாக்குறுதிகள் மீட்டெடுக்கப்பட காத்திருக்கும் வேளையில், பாசிசத்தின் சங்கிலிகளைத் தவிர நாம் இழப்பதற்கு வேறெதுவும் இல்லை.