இந்திய இரயில்வே துறையில் 2019 லேயே நடைபெற்றிருக்க வேண்டிய தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலை இரயில்வே துறை தள்ளிப்போட்டே வந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத் தலையீடு காரணமாக சென்ற டிசம்பர் 4,5,6 தேதிகளில் நாட்டின் 17 மண்டலங்களிலும் 2 உற்பத்தித் தொழிற்சாலைகளிலும் அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது.
கிழக்கு மத்திய இரயில்வே மண்டலத்தில் IREF / AICCTU உடன் இணைக்கப்பட்ட. கிழக்கு மத்திய இரயில்வே எம்பிளாயீஸ் யூனியன் 20,924 வாக்குகள் (33.53%) பெற்று ஒரே அங்கீகரிக்கப்பட்ட சங்கமாகவும், சில காலம் முன்பு IREFல் இணைக்கப்பட்ட வடகிழக்கு இரயில்வேயின் வடகிழக்கு இரயில்வே தொழிலாளர் காங்கிரஸ் 17,388 வாக்குகள் (49%) பெற்று ஒரே அங்கீகரிக்கப்பட்ட சங்கமாகவும் தொழிலாளர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதுவல்லாமல் சமீபத்தில் IREF ல் இணைந்த அகண்ட் இரயில்வே கர்மாச்சாரி சங் என்ற சங்கம் தெற்கு மத்திய இரயில்வே மண்டலத்தில் 10,819 வாக்குகள் (27.9%) பெற்று இரண்டாம் இடம் பிடித்தது. மேற்கு மத்திய இரயில்வேயில், மேற்கு மத்திய இரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் 7,402 வாக்குகள் (16.47%) பெற்று மூன்றாம் இடம் பிடித்தது. மொத்தமுள்ள 17 மண்டலங்களில் 9 மண்டலங்களிலும், 2 உற்பத்தி தொழிற்சாலைகளிலும் IREF போட்டியிட்டது.
AIRF என்ற அகில இந்திய ரயில்வே தொழிலாளர் கூட்டமைப்பில் இணைக்கப்பட்ட சங்கங்கள் 13 மண்டலங்களிலும் NFIR என்ற இந்திய தொழிற்சங்கங்களின் தேசிய கூட்டமைப்பில் இணைக்கப்பட்ட சங்கங்கள் 12 மண்டலங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. CITU தென்னக ரயில்வேயிலும் சித்தரஞ்சன் லோகோ ஒர்க்ஸ்ஸிலும் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக வெற்றி பெற்றுள்ளது.
(பெற்ற வாக்குகளின் அடிப்படையில் சில மண்டலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட சங்கங்கள் அங்கீகரிக்கபட்ட சங்கங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன)
தொழிற்சங்க நடத்தை விதிகள் மூலம் தொழிற்சங்கங்கள் மீதான தாக்குதல்.
அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கான நடத்தை விதிகள் மிகக் கடுமையானதாக, ஒருதலைப்பட்சமானதாக உருவாக்கப்பட்டுள்ளன. விதி 5.8 ஆனது கூட்டுப் பேர உரிமையை பெருமளவுக்கு வெட்டிக் குறைப்பதாக உள்ளது. விதிப்படி வேலை, ஒட்டுமொத்த மருத்துவ விடுப்பு, சில வகை வேலை நிறுத்தங்களில் தொழிற்சங்கங்கள் ஈடுபட்டால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்கிறது. ஒன்றிய அரசு நிறைவேற்றி வைத்துள்ள தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் அமல்படுத்தப்படுமானால் இந்த படுமோசமான கருப்பு விதி இன்னும் கடுமையானதாக உருவெடுக்கும்.
IREF ன் எழுச்சி!
2014இல் உருவாக்கப்பட்ட இந்திய ரயில்வே தொழிலாளர் கூட்டமைப்பு என்ற IREF, 2019 ல் AICCTU உடன் இணைக்கப்பட்டது. மொத்தமுள்ள 17 மண்டலங்களில் 11 மண்டலங்களிலும், 5 உற்பத்தித் தொழிற்சாலைகளிலும் என மொத்தம் 16 இரயில்வே சங்கங்கள் இணைந்துள்ள IREFன் நோக்கமானது, இரயில்வே துறையில் ஒரு இடது தொழிற்சங்க கூட்டமைப்பை உருவாக்குவதாகும்.
மோடி அரசாங்கம் இரயில்வே தொழிலாளர்கள் மீது கடும் தாக்குதலை தொடுத்து வரும் போது, ஏற்கனவே செயல்பட்டு வருகின்ற AIRF ,NFIR கூட்டமைப்புகள் செயலற்றுப் போயும் சமரசம் செய்தும் கொண்டிருந்த பின்னணியில் IREF உதயமானது. தேசிய ஓய்வூதியத் திட்டம்/ புதிய ஓய்வூதியத் திட்டம், காண்ட்ராக்ட்மயம், தனியார்மயம், அவுட்சோர்சிங், பணிகளை ஒப்படைத்தல், காலிப் பணியிடங்கள் நிரப்பாமை ஆகியவற்றிற்கு எதிராகவும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யவும் IREF தொடர்ந்து போராடி வருகிறது.
இரயில் பாதை பராமரிப்பு பணியாளர்களின் மோசமான பணி நிலைமைகள் (கேங்மேன் என்று அழைக்கப்பட்டவர்கள்) குறித்து இரயில்வேக்கான நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர் தோழர்.சுதாமா பிரசாத் எம்.பி மூலம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கேங்மேன், லோகோ ஓட்டுனர்கள், கார்டுகள் என்று பலதரப்பட்ட ரயில்வே தொழிலாளர்களின் ஆதரவினால் தான் IREF வெற்றி பெற முடிந்தது.
இரயில்வே ஊழியர்கள் கொண்டுள்ள நம்பிக்கை, ஆதரவின் மூலம் கிடைத்துள்ள இந்த குறிப்பிடத்தக்க வெற்றியானது AICCTU - IREF ஐ நன்கு வலுப்படுத்தியுள்ளது. இன்னும் கூடுதல் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் இரயில்வே ஊழியர் நலன் காக்கும் போராட்டங்களை மேற்கொண்டு தீவிரமாக முன்னெடுத்துச் செல்ல AICCTU - IREF உறுதியளிக்கிறது.
இரயில்வேயில் ஒரு, போராடும் மாற்று இடதுசாரி சம்மேளனமாக IREF அய் வளர்த்தெடுக்க நாம் அனைத்து முயற்சிகளையும் செய்வோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)