2024, டிசம்பர் 17 அன்று மோடி அரசாங்கம், ஜனநாயக விரோதமானதும், அரசமைப்புச்சட்ட விரோதமானதுமான ஒரேசமயத்தில் தேர்தல் என்பதை குறிவைத்து இரண்டு மசோதாக்களை முன்மொழிந்திருக்கிறது. 129 வது அரசமைப்புச் சட்ட மசோதா, 2024, யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதா 2024, மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. 

இகக(மாலெ) மக்களவை உறுப்பினர்கள் ராஜாராம் சிங், சுதாமா பிரசாத் இருவரும் கூறியிருப்பதாவது: ‘ஒரு நாடு, ஒரு தேர்தல் அல்லது ஒரே சமயத்தில் தேர்தல், ஜனநாயக விரோதமானது, பாஜகவுக்கே உரிய ஆசை ஆசையான இந்த கருத்து, அரசமைப்புச் சட்டத்தின் ரத்தஓட்டமான ஜனநாயகம், கூட்டாட்சிமுறை ஆகியவற்றின் அடிப்படை உணர்வையே வேரறுக்கும் திட்டமாகும். ‘ஒரு நாடு, ஒரு தேர்தல்’ என்ற பேரால், அரசியல் கடிகாரத்தை பாஜக பின்னோக்கி திருப்ப முயற்சிக்கிறது; அரசமைப்புச்சட்ட திருத்தங்கள் வாயிலாக அரசியலில் மத்தியத்துவ ராணுவக் கட்டுப்பாட்டைத் திணிக்க முயற்சிக்கிறது.

 ’ஒரு நாடு, ஒரு தேர்தல்’ குறித்து கருத்து தெரிவித்த இகக(மாலெ) பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, இந்த திட்டத்தை முன்செலுத்திவரும் சங்-பாஜக உண்மையில், அதிகாரத்தை அதீதமாக மய்யப்படுத்தவும் இந்தியாவின் பலதரப்பட்ட பண்பாடு, பன்மைத்துவ அரசியல், கூட்டாட்சி அமைப்புமுறையை வலுவிழக்கச்செய்யவும்  முயற்சிக்கிறது என்றார். எல்லா தேர்தல்களையும் ஒன்றாக இணைப்பதன்மூலம் மோடி அரசாங்கம், அந்தந்த தேர்தல்களுக்கே உரிய தனித்துவமான சூழல்பொருத்தத்தைக் களவாடவும் மக்களது அரசியல் தேர்வைக் கட்டுப்படுத்தவும் விரும்புகிறது. மோடி அரசாங்கத்தின் இந்தி-இந்து-இந்துஸ்தான் கொள்கைக்கு,  கூட்டாட்சி இந்தியா துடிப்பான எதிர்ப்பையும் தீர்மானகரமான போராட்டத்தையும்  நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த பண்பாட்டு, அரசியல் கடைசலை, இந்தி இதயப்பகுதிக்கு அப்பாலுள்ள மாநிலங்களில் (அதிகரித்த அளவில் இந்தி இதயப்பகுதிக்குள்ளும்) காணமுடிகிறது. இந்தக் கடைசலை அடக்கவும் ஜனநாயக இந்தியாவை பாசிச ஆட்சியின் பேரரசு சதித்திட்டத்துக்கு அடிபணியச் செய்வதற்குமான வாய்ப்பாடே’ஒரு நாடு, ஒரு தேர்தல்’ என்றும் கூறினார். “இந்த சதித்திட்டம், அதிகாரம் பெற்ற குடிமக்களை விசுவாசமான குடிபடையாக கீழ்ப்படுத்தவும் இறுக்கமான பாசிச சட்டகத்துக்குள் இந்தியாவை அடிமைப்படுத்தவும் சட்டம், ஆட்சிமுறை, அரசமைப்புச்சட்ட கட்டமைப்பு இவற்றில் நடந்துவரும் முயற்சிகளை முழுவதுமாகக் கொண்ட ஒரு சட்டமாகும். எல்லா வழிகளிலும் இந்த சதித்திட்டத்தை இந்தியா தோற்கடித்தாக வேண்டுமென திபங்கர் வலியுறுத்திக்கூறினார். 

ஊராட்சி, நகராட்சி தேர்தல்கள் போலவே சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களுக்கும் அவற்றுக்கே உரிய குறிப்பான சூழல் பொருத்தங்கள் உண்டு என இகக(மாலெ) வெளியிட்ட செய்திக்குறிப்பொன்று வலியுறுத்திக் கூறியுள்ளது. தளவாட ஏற்பாடுகளுக்காக வேண்டி அனைத்து தேர்தல்களையும் ஒன்றாக இணைப்பது, சட்டப்பேரவை தேர்தல்களுக்கே உரிய தன்னாட்சி அதிகார வரம்பை பறிப்பதும் மய்யப்படுத்தப்பட்ட நிலமைகளுக்கு கீழ்ப்படுத்துவதுமாகும். ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவதன்மூலம் தளவாட ஏற்பாடுகளை எளிமைப்படுத்தாலம் நிதியை சேமிக்கலாம் என்ற அனுமானத்துக்கு எவ்விதமான நம்பத்தகுந்த ஆய்வோ, பகுப்பாய்வு ஆதாரமோ இல்லை. மேலும் ஒரே சமயத்தில் தேர்தல் குறித்த சட்ட ஆணையத்தின் 2018 நகலறிக்கையின்படி, 2014 தேர்தல்களுக்காக இந்திய தேர்தல் ஆணையம் ரூ 3586 கோடி செலவு செய்துள்ளது (பத்தி 2.10). இதை மிகச்சரியான கண்ணோட்டத்தில் சொல்லவேண்டுமாயின், பாஜக 2014ல் மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரசாங்கம் மின்னணு ஊடகங்களுக்காக ரூ3,260.79 கோடி செலவு செய்துள்ளது; அச்சு ஊடகங்களுக்காக ரூ 3,230.77 கோடி செலவு செய்துள்ளது. உண்மையாகவே பணம் மிச்சப்படுத்த வேண்டுமானால் அதற்கான வாய்ப்பு வேறிடத்தில் உள்ளது. ஜனநாயகத்தின் கருவான கோட்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு செலவினத்தை முதன்மையான காரணமாக காட்டமுடியாது. ஒரே சமயத்தில் தேர்தல்களை நடத்துவதற்கு வழியேற்படுத்தும்விதமாக அரசமைப்புச் சட்டத்தில் விரிவான திருத்தங்களை நியாயப்படுத்தும் முயற்சி, ஒரு நாடு, ஒரு தேர்தல் என்ற இந்த முன்மொழிதல், இந்திய சட்டக்கோட்பாடுகளின்படி, மக்களின் வாக்களிக்கும் உரிமையையும் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் கீழேதள்ளும் முன்மொழிதலே தவிர வேறல்ல. நாடாளுமன்ற ஜனநாயகம், பல கட்சி ஆட்சிமுறை, சுதந்திரமான நியாயமான தேர்தல் இவை அனைத்தும் அரசமைப்பு சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பாகும்.