கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், 1) கோவை மாவட்ட ஆட்சியர் 22.07.2024 தேதி அறிவித்த தூய்மைப் பணியாளர்களுக்கான குறைந்த பட்ச கூலி ரூ770ம், ஓட்டுனர்களுக்கு ரூ.803ம் உடனே வழங்கப்படவேண்டும், 2) 2023-2024 க்கான போனஸ் குறைந்தபட்சமாக 8.33%ம், 11.67 விழுக்காடு கருனைத்தொகையும் சேர்த்து 20 % வழங்கவேண்டும், 3)தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியைச் செலுத்தி முறையாக ரசீது வழங்கப்பட வேண்டும். 4)இஎஸ்ஐ அடையாள அட்டை வழங்கப்படவேண்டும், 5)கோவை மாநகராட்சியில் ஒப்பந்த முறையை ரத்து செய்து விட்டு மாநகராட்சியே நேரடியாக  தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கவேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை அமல்படுத்தக் கோரி மாநகராட்சி ஆணையருக்கு ஏற்கனவே மனு அளித்திருந்தார்கள். ஆனால் அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் ஏஐசிசிடியு தமிழ்நாடு சனநாயக பொது தொழிலாளர் சங்கம், தூய்மைப்  பணியாளர்கள் நலச் சங்கம், தமிழ்ப்புலிகள் தூய்மைப் பணியாளர்கள்  சங்கம்  உள்ளிட்ட அதிகாரக் குரல் கூட்டமைப்பு சார்பில் 16.10.2024 அன்று மாலையிலிருந்து மாநகராட்சி தலைமை அலுவலக வளாகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டத்தை தொழிலாளர்கள் நடத்தினார்கள், போராட்டமானது 18.10.2024 வரை தொடர்ந்தது. தொழிலாளர்களை கைது செய்து சமூக நலக் கூடத்தில் அடைத்து வைத்தார்கள். அதேவேளை மாநகராட்சி ஆணையர் தொழிற்சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பேச்சுவார்த்தையில்  ஒப்பந்தக்காரர் கலந்து கொண்டு 2000 ரூபாய் தருவதாகக் கூறினார். தொழிலாளர் தரப்பில் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் முதற்கட்டமாக ரூபாய் 4000 அன்பளிப்பாக தரப்படும் என்றார்கள். தொழிலாளர்  தரப்பில் 8.33% அல்லது ஒரு மாதச் சம்பளம் மற்றும் கருணை தொகை 11.67% கண்டிப்பாகத் தரப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 21ம் தேதி மீண்டும் அது பற்றிபேசலாம்என்று முடிவு எடுக்கப்பட்டது. கடந்த டிசம்பரில் இருந்து கட்டப்படாமல் உள்ள தொழிலாளர்களின் பி.எப் பணம் உடனடியாகக் கட்டப்படும் என்றும் ஒப்பந்த முறையை மாற்றி மாநகராட்சியின் தொழிலாளர்களாக ஆக்குவதற்கும் மாநகராட்சியே நேரடியாகச் சம்பளம் வழங்கிடவும் கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்,  கோவை மாவட்ட ஆட்சியர் 22.07.2024 தேதி அறிவித்த சம்பளம் தொடர்பாக தீபாவளிக்குப் பின்னர் பேசி முடிவு செய்வது எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டு 19.10.2024 அன்று தொழிலாளர்கள்  வேலைக்குத் திரும்பினர். போராட்டத்தை தோழர்கள் சந்தனக்குமார், சாமுவேல், மகேஷ் வள்ளி ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினார்கள். போராட்டத்தை வாழ்த்தி இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநிலக்குழு உறுப்பினர் தோழர் பிலோமினா, வழக்கறிஞர் லூயிஸ் உரையாற்றினார்கள். 

அதன் பின்னர் 21.10.2024 அன்று மூன்றாவது முறையாக ஆணையர் அவர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது.  மாநகராட்சி ஆணைய‌ர், போராட்டம் நடக்காமல் இருக்கவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு தொழிலாளர்களுக்கு பல  விசயங்களை நான் செய்து தருகிறேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு, ஒப்பந்ததாரர் பிரதிநிதியை பார்த்து போனஸ் சம்பந்தமாக என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார், ஒப்பந்ததாரர் தரப்பில் இறுதியாக  குறைந்த பட்ச போனஸாக ரூ3500ம், அதிக பட்சமாக ரூ 4700 ம் வழங்குவதாகவும் அக்டோபர் மாதத்திற்கான சம்பளத்தை இந்த மாதம் 30 ம்தேதியே தொழிலாளர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறினார். தொழிலாளர் தரப்பில்  கூட்டமைப்பு சார்பாக அன்பளிப்பு தொகையை ஏற்றுக் கொள்ள மாட்டோம், சட்டப்படியான குறைந்த பட்ச போனஸ் 8.33 சதம் அல்லது ஒருமாத சம்பளம் போனஸாக வழங்கவேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டது. காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளாத சங்கங்கள், இதன்மீது கருத்து சொல்லாமல் வேறு விசயங்களை பேசி, பேச்சுவார்த்தையின் நோக்கத்தை திசைதிருப்பினார்கள், அதை பயன்படுத்திக்கொண்ட ஆணையர்  பேச்சுவா்ர்த்தையை முடித்துக்கொண்டு எழுந்து சென்றுவிட்டார். ஆணையர் அலுவலகத்துக்கு வெளியே காத்திருந்த தொழிலாளர்களிடம் நடந்தது பற்றி கூறப்பட்டது. தீபாவளிக்குப் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.