அகழாய்வுகள் வழியாக, சிந்துவெளி பகுதியில் நகரங்கள் - நாகரிகம் கண்டறியப்பட்டதை அறிவித்த  நூறாண்டு நிறைவடைந்தது. அதாவது, ஹரப்பா, மொஹஞ்சதரோ ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின்  முடிவுகள், தி இல்லஸ்ட்ரேட்டட் இலண்டன் நியூஸ் - The Illustrated London News பத்திரிக்கையில், கடந்த 1924 ம் ஆண்டு  செப்டம்பர் 20ம் தேதி வெளியிடப்பட்டு  நூறு ஆண்டுகள்  நிறைவடைந்துள்ளது.

சிந்துவெளி நாகரிகம் - Indus civilization என அறியப்படுவது, சிந்து நதிக் கரையில் உருவான ஆற்றங்கரை நாகரிகம் அல்ல! ஹரப்பா, மொஹஞ்சதரோ ஆகிய இடங்களில் கண்டறியப்பட்ட நகர நாகரிகம் ஆகும். மானுட சமூகம் முதல் கட்டத்தில்  கட்டமைத்த அனைத்து நாகரிகங்களும் (தொன்மையான தமிழர் நாகரிகம் உட்பட), வணிகர்கள் கட்டமைத்த நகர நாகரிகங்களே! இத்தகைய நகர நாகரிகங்களில், வணிகர்கள், பல்வேறு தொழிற்சாதிகள், படைவீரர்கள்  என வர்க்கங்கள் இருந்தன.

அய்ரோப்பாவில் ஆரிய இனப்பெருமை மற்றும் இனவெறி கோலோச்சிய போது, பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில், இந்தியாவிலும் சில மேற்கத்திய அறிஞர்கள் மற்றும் இந்திய பிராமணர்கள் ஆரிய மேன்மை பாராட்டினர்; ஆரியர்கள் -  உலகிற்கு நாகரிகம் வழங்கியவர்களாக  சித்தரிக்கப்பட்டனர். ‘வேதநாகரிகமே முதல் இந்திய நாகரிகம்’ என்ற புனைகதைகளும் உருவாக்கப்பட்டன. இத்தகைய காலகட்டத்தில், பத்தாண்டுகளாக இந்தியாவில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்ட சர் ஜான் மார்ஷல் என்ற பிரிட்டிஷ் அகழாய்வு நிபுணர், அன்றைய இந்திய தொல்லியல் கழகத்தின் தலைமை  இயக்குநர், 1924, செப்டம்பர் 20ம் தேதியில்,  ‘இந்தியாவின் முதல் நகரமயமாக்கம் சிந்து சமவெளி நாகரிகம், அந்தப்  பண்பாடு  ஆரியர் நுழைவுக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் நிலவியது’ என்பதை முதன்முதலாக  அறிவித்தார். இந்த அறிவிப்பு,  ஆரிய இனவெறி புனைவு கருதுகோளுக்கு முடிவு கட்டியது. மேலும் கூடுதலாக, ‘சிந்துவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் ஆகவும் இருக்கலாம்’ என அவர் அறிவித்தது, திராவிட நாகரிகம்  கருதுகோளுக்கு வலுசேர்த்தது.

சிந்துவெளி நாகரிகம் வேதகால ஆரியர் நாகரிகமா, தமிழர் - திராவிட நாகரிகமா?

“சிந்துவெளி நாகரிகம், முதல் இந்திய நாகரிகம் - வேதகால ஆரியர் நாகரிகம்- சரஸ்வதி நதி நாகரிகம்” என்ற கருதுகோள் பல்லாண்டுகளாக சங்கப் பரிவாரங்களால் கட்டமைக்கப்படுகிறது. சிந்துவெளி நாகரிகத்தை அவர்கள், சிந்து - சரஸ்வதி நாகரிகம் எனத் திரும்பத்திரும்ப கூறி வருகின்றனர். ஹரப்பா அருகில் சரஸ்வதி நதி இருந்ததாக ஒரு புனைவை ஆர்எஸ்எஸ் தொடர்ந்து கட்டமைத்து வருகிறது; இத்திசையில் கட்டுரைகள், வரலாறுகள் எழுதப்படுகின்றன. இல்லாத சரஸ்வதி நதியை கண்டுபிடிக்க பாஜக அரசுகளால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆய்வுகளும் நடைபெறுகின்றன.

மற்றொரு புறம், சிந்துவெளி நாகரிகப் பகுதிகளில் நிலவும் ஊர் பெயர்கள் தமிழ்நாட்டுடன் ஒப்புமை உள்ளதாகக் கருதும் தமிழ் ஆர்வலர்கள், கோட்பாட்டாளர்கள், ‘தமிழர் நாகரிகம்  சிந்துவெளி  நாகரிகம் தான்’ என வாதிடுகின்றனர். சிந்துவெளி நாகரிகம் அறிவிக்கப்பட்டு நூறாண்டு நிறைவான பின்னரும் இந்த விவாதங்கள் தொடர்கிறது.

சிந்துவெளி நாகரிகத்தை வேதகால ஆரியர்கள் உருவாக்கவில்லை :-

‘ஆரியர்கள் அல்லது பிராமணர்கள்,  இந்தியாவின் பூர்வீக மக்கள், அவர்கள் தான் சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கியவர்கள், அவர்கள் தமிழர்களுக்கும் மூத்தவர்கள்’ என்ற  கட்டுக்கதைகளை ஆரிய - பிராமணிய சார்பு வரலாற்று எழுத்தாளர்கள்  கட்டமைக்கிறார்கள்.

உண்மை என்ன?

1) சிந்துவெளி நாகரிகம், ஆரியர் வருகைக்கு முன்பே நிலவியதாகும். சிந்துவெளி நாகரிகம் அழிந்த பிறகு அல்லது அழியும் கட்டத்தில்தான், வடமேற்கிலிருந்து ஆரியர்கள் கால்நடை மேய்ச்சல் குடிகளாக இந்தியாவிற்குள் வந்தனர். ஆரிய பிராமணர்களுக்கு அல்லது வட இந்திய  உயர்சாதியினருக்கு உரிய மரபணு DNA R1a1 வும், இதனுடன் உறவுடைய மரபணு தொகுப்புகளும் கிமு 2000 காலத்தில் தான் இந்தியாவிற்குள் நுழைந்தது, பரவியது என மரபணு ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. ஆனால், ஆரியர் வருகைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னரே, இந்திய நிலப்பரப்பில் சிந்துவெளி நாகரிகம் சிறப்பாக நிலவியிருந்தது.

2) ஆரிய பிராமணியம் உயர்த்தி பிடிக்கும் வேதகால மக்கள் பயன்படுத்தியதாக குறிப்பிடப்படும் பொருட்கள் எதுவும், இதுவரையில் எந்தவொரு சிந்துவெளி நகரங்களின் ஹரப்பா, மொகஞ்சதாரோ  அகழாய்வுகளிலும்  கிட்டவில்லை. கிடைத்துள்ள குதிரை எலும்புகள் போன்றவையும் இந்த  நகரப்பகுதிகளில் அல்லாமல், புறப்பகுதிகளில்தான் கிடைத்துள்ளது.

3) சிந்துவெளி நகர வீடுகளில் உள்ள அடுப்புகளுக்கும் ரிக் வேதம் குறிப்பிடுகிற வனத்தில் உருவாக்கப்பட்ட  யாக குண்டங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. 

ஆரியர்கள் இந்திய நிலப்பரப்புக்கு வெளியிலிருந்து வந்தவர்களே !

இந்திய வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர் அவர்கள், ‘ஆரியர்கள்: சிந்துவெளி - ஹரப்பா நகர நாகரிகத்திற்கு வெளியே இருந்த புறக்குடிகள், கால்நடைகளை மேய்க்க, மேய்ச்சல் நிலங்கள் தேடி அவ்வப்போது இடம்பெயரும் ஒரு நாடோடி கூட்டம்’ என விவரிக்கிறார். இத்தகைய கருதுகோளை உறுதி செய்யும் வகையில், பல்வேறு வெளிநாட்டு,  இந்திய, தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வாளர்கள் விரிவாக ஆரியர் வரலாற்றை எழுதியுள்ளனர். 

ஆரிய இனக்குழுக்கள் சிந்துவெளி நாகரிகத்தை உருவாக்கினார்களா? 

ஆரியர்கள் தான் சிந்துவெளி நாகரிகம் உருவாக்கினார்கள் அல்லது ஆரியர்கள் தான் திராவிட சிந்துவெளி நாகரிகத்தை அழித்தார்கள் என்ற கருதுகோள்கள் பல்லாண்டுகளாக வரலாறு, அரசியல் தளங்களில் விவாதிக்கப்படுகிறது.

பழைய ரஷ்யாவின் ஸ்டெப்பி புல்வெளிதான் ஆரியர்கள் பூர்வீகம் ஆகும்.  இந்தியாவுக்குள் பரவிய ஆரியர்கள் நகர நாகரிகம் எதையும் உருவாக்கவில்லை; கால்நடை வளர்ப்பு குடிகளான ஆரியர்கள் விவசாய நாகரிகம் சார்ந்த ஒருசில ஜனபதங்களின் ஆட்சியை மட்டுமே உருவாக்கினார்கள் .

தமிழ் வரலாற்று ஆய்வாளர்  த.தங்கவேல் அவர்கள் ஆரியர்கள் வருகை பற்றியும் சிந்துவெளி பண்பாட்டுடன் தமிழர் நாகரிகத்துக்கு உள்ள வேறுபாடுகள் பற்றியும், ‘தமிழரைத் தேடி’ என்ற நூலில் விவரிப்பதும்  குறிப்பிடத்தக்கதாகும். 

“கிழக்கு ஐரோப்பாவின் ‘பாண்டிக்’ புல்வெளி’ப் பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்த ஆரிய இனக்குழுக்கள் கி.மு. 2000 .. 1500 காலகட்டத்தில் பல வழிகளில் இந்தியாவிற்குள் குடியேறினர். மத்திய ஆசியா வழியாக நடைபெற்ற இக்குடியேற்றத்தையும் அதன் காலகட்டத்தையும் மரபணு ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. 

கி.மு. 1700 லிருந்து சிந்துவெளி நகரங்களுக்கும் சுமேரியா, எகிப்து, கிழக்கு மத்தியதரைக் கடலோர வணிக அரசுகள் போன்ற அரசுகளுக்கும் நடைபெற்று வந்த வணிக நடவடிக்கைகள் முடிவிற்கு வந்திருந்தன. பருவமழை பொய்த்தது மட்டுமல்லாமல் இதே காலகட்டத்தில் மேற்காசிய அரசியலிலும் அதிக மாற்றங்கள் நிகழ்ந்து மெசொப்பொட்டாமிய பகுதியின் பெரும்பாலான அரசுகள் வெள்ளையினக் குடிகளின் ஆளுமையின் கீழ் சென்றது. இத்தகைய  அரசியல் மாற்றம் வணிகத்தைப் பாதித்ததும் சிந்துவெளி நகரங்களின் அழிவிற்குக் காரணமாகியிருக்கலாம். இவையல்லாமல் பஞ்சம் பிழைப்பதற்காக இடம்பெயர்ந்த ஆரிய இனக்குழுக்கள், சிந்துவெளி நகரங்களை அடுத்து அதிக எண்ணிக்கையில் குடியேறியது சிந்துவெளி நகரங்களின் மாந்தர்கள் இப்பகுதியில் தொடர்ந்து வாழமுடியாத நெருக்கடியை ஏற்படுத்தியது எனலாம்்.

இத்தகைய நெருக்கடிச் சூழலில் சிந்துவெளி நகரங்களைக் காலிசெய்துவிட்ட குடிகள் என்ன ஆனார்கள் என்ற வினா உள்ளது. ஊர்ப் பெயர் ஒப்புமைகளைக் கூறும் சில ஆய்வாளர்கள் சிந்துவெளி நாகரிகத்தின் அழிவிற்குப் பின் அப்பண்பாட்டு மக்கள் தென்னகம் குடியேறிவிட்டனர் என்று கருதுகின்றனர். தமிழ்நாட்டில் கிடைத்த பெருங்கற்காலப் பானை ஓடுகளில் காணப்படும் குறியீடுகள் சிந்துவெளி முத்திரைகளில் காணப்படும் குறியீடுகளுடன் ஒப்புமையுடைதாக இருப்பதும் இக்கருத்தாக்கத்திற்குத் துணையாக உள்ளது. அண்மைக் காலங்களில் நடைபெற்ற மரபணு ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு சிந்துவெளி மக்கள் கிழக்கு நோக்கியும் தெற்கு நோக்கியும் குடிபெயர்ந்துள்ளதாக ‘டோனி ஜோசப்’  என்ற ஆய்வாளர் குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் வாழ்கின்ற ‘இருளர்’ பழங்குடியினரின் மரபணுக்கூறுகள் சிந்துவெளிப் பண்பாட்டு மக்களின் மரபணுக்கூறுடன் அதிக ஒப்புமையுடன் உள்ளதை மரபணு ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. மேலே விவாதித்த தரவுகளை சுட்டிக் காட்டி, சிந்துவெளி மக்கள் தென்னகம் குடியேறியிருக்கலாம் என இந்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.