முன்மொழியப்பட்டுள்ள வக்ஃப் (திருத்த) மசோதா 2024 சம்பந்தமாக, இகக(மாலெ) மக்களவை உறுப்பினர்கள் தோழர் ராஜாராம் சிங், தோழர் சுதாமா பிரசாத் ஆகியோர் கூட்டு நாடாளுமன்ற கமிட்டிக்கு செப்டம்பர் 12, 2024 அன்று சமர்ப்பித்த கடிதத்தில் பின்வருவனவற்றை வலியுறுத்தியுள்ளனர்.
முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டம், முஸ்லிம் சமூகத்தினர் மீது அப்பட்டமான தப்பெண்ணம் கொண்டதாகவும், அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் அனுபவிக்கிற மதச் சுதந்திரம், நம்பிக்கையின் மீது நேரடியாக தாக்குதல் தொடுப்பதாகவும் அமைந்துள்ளது. இந்த வக்ஃப் (திருத்த) மசோதா 2024 அய் நெருக்கமாக ஆராய்ந்தால் நாம் பெறக்கூடிய மறுக்க முடியாத முடிவு இதுவேயாகும். முன்மொழியப்பட்டுள்ள வக்ஃப் திருத்தம், இஸ்லாமிய நிறுவனமான வக்ஃப்-களையும் அதன் ஆட்சி நிர்வாகத்தையும் கலைப்பதற்கு ஒப்பானதாகும். மேலும் காழ்ப்புணர்வு கொண்ட ஒரு சட்டத்தை உருவாக்கும் அப்பட்டமான நடவடிக்கையாகும்.
விரிவான கலந்தாலோசனை செயல்முறைக்குப் பிறகு வக்ஃப் சட்டத்திற்கு 2013 ல் கொண்டுவரப்பட்ட திறன்மிக்க திருத்தங்களை முழுவதுமாக ஒழித்துக் கட்டும் முயற்சியுமாகும். தெருக்களில் அல்லது நாடாளுமன்றத்தில் பலதரப்பட்ட சிறுபான்மையினரின் உரிமைகளையும் விருப்பங்களையும் இடித்துத் தள்ளுகிற பெரும்பான்மைவாதத்துக்கு எங்கும் இடமிருக்க முடியாது.
நீதிபதி ராஜிந்தர் சச்சார் கமிட்டியின் 2006 ஆம் ஆண்டு அறிக்கை, சமூகநல நடவடிக்கைகளில் ஈடுபடுகிற சமூக-மத நிறுவனமாக வக்ஃப்-களை அங்கீகரித்தது. மேலும் தேவையான நிதி, சட்ட ஆதரவுடன் நிர்வாக ரீதியாக வக்ஃப் வாரியங்கள் வலுப்படுத்தப்பட வேண்டிய அவசியத்தையும் அங்கீகரித்தது. இதற்கு மாறாக, இப்போது முன்மொழியப்பட்டுள்ள இந்த திருத்த மசோதா இந்துத்துவாவின் அரசியல் கருத்தியலை சங்கேத மொழியில் சட்டமாக்கும் முயற்சியாகும்.
வக்ஃப்பின் சொத்துகள் மத, சமூக நோக்கங்களுக்காக முஸ்லிம் சமூக தனிநபர்கள் அறச்செயல்களுக்காக வழங்கிய நன்கொடைகளாகும். இதனை மதிக்காமல் அவற்றின் மீது பெரும் கட்டுப்பாட்டை கொண்டு வரும் ஒன்றிய அரசின் நோக்கம், முன்மொழியப்பட்டுள்ள இந்த மசோதாவின் எளிய வாசிப்பிலேயே அப்பட்டமாக தெரிந்து விடுகிறது.
வக்ஃப் வாரியங்களின் அதிகாரங்கள், பாத்திரம், சட்ட உரிமை ஆகியவற்றில் அடிப்படை மாற்றத்தை, இந்த மசோதா வெளிப்படுத்துகிறது. ஒரு குறிப்பிட்ட சொத்து, வக்ஃப் வாரியத்தின் சொத்தா இல்லையா என முடிவெடுப்பதற்கு அதிகாரமற்றவர்களாக அவர்களை ஆக்குவதன் மூலமும், முஸ்லிம் அல்லாதவர்களையும் நியமிக்கக் கூடிய நியமன நிறுவனங்களாக அவற்றின் முக்கியத்துவத்தைக் குறைப்பதன் மூலமும் வக்ஃப்களின் தன்னாட்சியை வலுவிழக்கச் செய்வதன் மூலம் இது செய்யப்படுகிறது. உண்மையில் சச்சார் கமிட்டி அறிக்கை வக்ஃப்பின் சொத்துகளை திறன்மிகு விதத்தில் மேலாண்மை செய்வதற்காக இந்த வாரியங்களை கூடுதல் அதிகாரமுடையதாக்குவதை முன்மொழிந்தது. மாறாக இந்த மசோதா, (வக்ஃப்) வாரியங்களை வெறும் பார்வையாளர்களாக்கி விடுகிறது; இவ்வாறு இவற்றின் முக்கியத்துவத்தைக் குறைப்பதன் மூலம் வக்ஃப்-களின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறது. அதேவேளையில் அவற்றின் அதிகாரங்களை வருவாய் அதிகாரிகளின் கைகளுக்கு மாற்றுவதன் மூலம் வெறுமனே கட்டுப்படுத்துபவர் என்பதாக உள்ள அரசின் பாத்திரத்தை அடிப்படையிலேயே மாற்றி அமைக்கிறது.
வக்ஃப் உருவாக்கத்தை தடுக்கிற வரையறைகள், நிபந்தனைகளில் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களை மொத்தமாக வாசிக்கும் போது, வக்ஃப்-ஆக பயன்படுத்தப்படும் நிலத்தை அங்கீகாரமற்றதாக்கும் முயற்சியைக் காணலாம். மேலும் வக்ஃப்-களை உருவாக்குகிற நபரின் உரிமையையும் இது தடுக்கிறது. "வக்ஃப் பயன்பாட்டாளர்" என்ற கூற்றை நீக்கியிருப்பதன் மூலம் அதுபோன்று பயன்படுத்தப்படும் வக்ஃப்-களையும், ஆவணங்கள் இல்லாமல் இருக்க வாய்ப்புள்ள ஆனால் வக்ஃப்பின் சொத்துகள் என்ற தன்மையைத் தக்கவைத்துக்கொள்ளும் நிலங்களையும் இழக்கும் ஆபத்தில் தள்ளுகிறது. வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாதவர்களையும் இணைக்கலாம் எனவும், கூடுதலாக தற்போதிருக்கும் சட்டம் முஸ்லிம் அல்லாதவர்கள் வக்ஃப்களை உருவாக்க அனுமதிப்பதையும் தடை செய்கிறது.
முன்மொழியப்பட்டுள்ள இந்த மசோதா, வாரியங்கள், வக்ஃப் கவுன்சில், பிற அதுபோன்ற வக்ஃப்பின் பங்குதாரர்கள் ஆகியோரிடம் கவனிக்கத்தக்க விதத்தில் எவ்வித அர்த்தமுள்ள கலந்தாலோசனையையும் செய்யாமல் அதனை சிதைக்கிறது. அதேவேளையில் கூட்டு நாடாளுமன்ற கமிட்டி நடத்தப்பட்ட விதத்தில் இந்த திருத்தங்களின் வாயிலாக (வக்ஃப் வாரியங்களை) இடித்து தள்ளும் மதவெறி திட்டத்தில் துரோகம் நிறைந்துள்ளது. தெரிந்தவரையில் பொதுமக்கள், அரசு அதிகாரிகளின் சமர்ப்பித்தல்களை உறுப்பினர்கள் ஆராய்வதற்குரிய போதுமான கால அவகாசம் வழங்காமல் இருக்க, இந்தக் கூட்டு நாடாளுமன்ற கமிட்டி வாரத்திற்கு இருமுறை மட்டுமே கூட்டப்படுகிறது.
இந்தக் கூட்டு நாடாளுமன்ற கமிட்டி பங்குதாரர்கள், சம்பந்தப்பட்ட குடிமக்களின் பதிலை தெரிந்து கொள்ள அதிக நேரம் கொடுக்க வேண்டும். திருத்த மசோதா 2024 அதன் தற்போதைய வடிவத்திலிருந்து திரும்பப் பெறப்பட வேண்டும். தற்போதைய சட்டத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு திருத்தமும் பரந்த கலந்தாலோசனையின் அடிப்படையில் சச்சார் கமிட்டி விரும்பியது போல, வக்ஃப் சொத்துகள் நிர்வகிக்கப்படுவதை வலுப்படுத்துவதாகவும் மேம்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என நாங்கள் உறுதியாக எண்ணுகிறோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)