எளிய, கிராமப்புர பின்புலத்தைக் கொண்ட இளைஞர் குமரேசன். காவல்துறையின் கடைநிலை ஊழியர். ரயில்வண்டிக்கு குண்டு வைத்தவர்களாக அறியப்படும் தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியார். 'கோஸ்ட்' எனப்படும் பெருமாள் வாத்தியாரை பிடிக்க காவல்துறையினர் முகாமிட்டுள்ள மலைப்பகுதிக்கு மாற்றலாகி பணியாற்ற வருகிறார் குமரேசன். மலைவாழ் மக்களோடு எளிதாகப் பழகுகிறார். மலைவாழ் மக்களின் துன்பங்களில் உதவி செய்யும் மனித நேயமிக்கவராகவும் உள்ளார். அதனால் உயரதிகாரியிடம் பகை ஏற்படுகிறது. கடும் தண்டனைக்கு ஆளாகிறார். ஆனாலும் தான் தவறு செய்யவில்லை எனக்கூறி மன்னிப்பு கேட்க மறுக்கிறார்.
விடுதலை 1 திரைப்படம் முழுவதும், அழுகி சீழ் பிடித்த காயம் போல சீரழிந்து போயுள்ள காவல்துறை அம்பலமாகியுள்ளது. மனிதநேயமேயற்ற காவல்துறையின் அதிகாரப் படி நிலையின் பல அடுக்குகளில் சதியும், பழிவாங்குவதும் அன்றாட நடைமுறையாக நிலவுகிறது. ஏழை, எளிய மக்கள் மீது வரைமுறையற்ற வன்முறையை, கண்மூடித்தனமாக கட்டவிழ்த்து விடுகிறது காவல்துறை. மலைவாழ் மக்களை, பெண்கள் உட்பட, அடித்து, உதைத்து நிர்வாணமாக்கி அவர்கள் மீது ஈவிறக்கமற்ற ஒடுக்குமுறையை ஏவுகிறது காவல்துறை. எளிய மக்களைக் கொன்று அவர்களது சடலத்தை தீயிட்டுக் கொளுத்துகிறது காவல்துறை. அதனை வெளி உலகத்துக்கு தெரியாமல் மறைக்கிறது. காவல்துறைக்குள்ளும் அரசு அதிகாரத்தின் உயர்ந்த மட்டத்திலும் நிலவுகிற அதிகாரப் போட்டியும் அம்பலமாகிறது.
குமரேசனுக்கும் மலைக்கிராமத்தின் தமிழரசி என்ற பாப்பாவிற்கும் இடையே வெகு இயல்பாக காதல் மலர்கிறது. இருவரும் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழலாம் என நினைக்கிறார்கள். இப்பகுதி திரைப்படத்தின் படமாக்கம் கவித்துவ தன்மையால் மிளிருகிறது. தமிழரசி குடியிருக்கும் மலைக்கிராமத்தின் பகுதியில் பெருமாள் வாத்தியார் மறைந்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கிறது. அதனால் அந்த கிராமத்து மக்களை இழுத்துக் கொண்டு வந்து சித்திரவதை செய்கிறது காவல்துறை. தனது காதலியை காப்பாற்ற அதிகாரிகளிடம் கெஞ்சி, கதறி முறையிடுகிறார் குமரேசன். அதிகாரிகளின் கல் நெஞ்சம் அதற்கு இளக மறுக்கிறது.
அந்த மலைப்பகுதியில் உள்ள கனிம வளங்களை எடுக்க தனியார் பன்னாட்டு நிறுவனம் விரும்புகிறது. அதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்க துணை போகிறது அரசு. அதனால் அந்தப் பகுதிக்கும் மக்களுக்கும் ஏற்படப் போகும் சீரழிவை தடுக்க நினைக்கிறது தமிழர் மக்கள் படை. பெருமாள் வாத்தியாரை தீவிரவாதியாக சித்தரிக்கிறது அரசு. இப்படியாக, இயற்கை வளங்களை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடித்து, கொள்ளை லாபமீட்டத் துணை போகும் அரசு. ஏழை, எளிய மலைவாழ் மக்களின் நிலங்களை, வாழ்வாதாரங்களை ஒழித்து கட்டப் பாடுபடும் அரசு. மக்களுக்கு ஆதரவாகப் போராடும் இயக்கங்களை, அதன் தலைவர்களை தீவிரவாதிகளாக, பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் அரசு. தனது காவல்துறையின் பலத்தை கொண்டு அவர்களை வேட்டையாடும் அரசு. இவையனைத்தையும் தெள்ளத் தெளிவாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.
விடுதலை 2 திரைப்படம், சாணிப்பால், சவுக்கடி போன்ற சாதிய ஒடுக்குமுறைகள், கூலி உள்ளிட்ட பொருளாதார ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், தொழிலாளர் உரிமைகளுக்காக, அவர்களது கண்ணியத்திற்காக, கம்யூனிஸ்டுகள் முன்னின்று எதிர்த்து போராடிய வரலாற்றை சிறப்பாக பதிவு செய்துள்ளது. ஒடுக்கப்பட்ட சாதியினர், விவசாயக் கூலிகள் மீது பண்ணையார்களின் ஒடுக்குமுறை காட்சியாக்கப்பட்டுள்ள விதம் மனதைக் கலங்கச் செய்யும் படி உள்ளது. விவசாய தொழிலாளர்களையும் ஆலை தொழிலாளர்களையும் அமைப்பாக்க கம்யூனிஸ்டுகள் தங்கள் உயிரைத் துச்சமென நினைத்து, அனேக இன்னல்களை எதிர்கொண்டு, உடைமைகளையும் உயிரையும் தியாகம் செய்ததும் சிறப்பான முறையில் காட்சியாக்கப்பட்டுள்ளது.
அதனை கேகே என்ற பாத்திரம் மூலம் இயக்குனர் கூறியுள்ளார். கேகே ஒரு முழு நேர கம்யூனிஸ்ட் செயல்பாட்டாளர். "நல்லவங்களா இருந்தா மட்டும் இந்த சமூகத்துல எந்த மாற்றத்தையும் நிகழ்த்திட முடியாது அதுக்கு கோட்பாடும் அமைப்பும் தேவை." என பெருமாள் வாத்தியாருக்கு அரசியல் கல்வி கற்பிக்கிறார். ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் மத்தியில் செங்கொடியேற்றி விட்டு உரையாற்றும் போது "யாராவது உங்களை டேய்னு கூப்பிட்டா, என்னடான்னு கேளுங்க" என உத்வேகம் ஊட்டுகிறார். எளிமையானவராகவும் கொள்கையில் பற்றுறுதி கொண்டவராகவும் மன உறுதி மிக்கவராகவும் சிறந்த கம்யூனிஸ்டுக்கான உருவகமாக கேகேயின் பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்தின் ஆரம்ப காட்சிகளில் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் இளம் பெண்கள் மீது பண்ணையார்கள் நிகழ்த்திய பின்வாசல் முறை என்ற கொடுமையின் கொடூரம் கண்முன்னே விரிகிறது. கருப்பனாக கென் கருணாஸும் பண்ணையாராக போஸ் வெங்கட்டும் இக்காட்சிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கம்யூனிச தத்துவம் வருவதற்கு முன்பே சாதிய கொடுமைகளுக்கு எதிராக சமூகத்தில் எதிர்ப்புணர்வு இருந்திருக்கிறது. இந்தியாவில் கம்யூனிச தத்துவம் எழுச்சி பெறுவதற்கு பிற காரணிகளோடு இணைந்து இதுவும் உத்வேகம் கொடுத்துள்ளது. பெருமாள் வாத்தியார் கம்யூனிஸ்ட்டாக உருமாறுவதற்கான உந்துதல் இதுவே எனக் காட்சியாக்கப்பட்டுள்ளது. அவரை சிறந்த கம்யூனிஸ்ட்டாக கேகே வளர்த்தெடுக்கிறார்.
விடுதலை 2 திரைப்படத்தில் பெருமாள் வாத்தியாருக்கும் பண்ணையாரின் மகள் மகாலட்சுமிக்கும் இடையே காதல் மலர்கிறது. மகாலட்சுமியின் பாத்திரம் புரட்சிகரமாக படைக்கப்பட்டுள்ளது. வழக்கமான தமிழ் திரைப்படங்களில் காட்டப்படுவது போல, பெண்களை காட்சிப் பொருளாக காண்பிப்பதற்கு மாறாக, பாரதி கண்ட நிமிர்ந்த நடையும் நேர் பார்வையும் கொண்ட புதுமைப் பெண்ணாக, பெரியார் அறிவுறுத்திய படி ஆண்கள் போல உடையணிந்து, தலைமுடியை வெட்டிக்கொண்ட, புரட்சிகர சிந்தனை கொண்ட பெண்ணாக மகாலட்சுமி வலம் வருகிறார். தன்னைப் பார்க்கும் ஒவ்வொருவரும் தன்னிடம் கேட்கும் முதல் கேள்வி ஆண்கள் போல தலைமுடியை வெட்டியிருப்பதன் காரணத்தையே என பெருமாள் வாத்தியாரிடம் மகாலட்சுமி கூறும்போது, "ஒங்க முடி, நீங்க வெட்டியிருக்கீங்க. இதுல நான் கேக்குறதுக்க என்ன இருக்கு" என்ற வசனத்தின் மூலம் கம்யூனிஸ்டுகள் பெண்களின் சுதந்திரத்தை எந்தளவு மதிக்கிறார்கள் என வெளிப்படுகிறது.
இந்திய கம்யூனிச இயக்கத்திற்குள் செயல்தந்திர வழியில், அதிலும் குறிப்பாக, நக்சல்பாரி எழுச்சியை ஒட்டி தமிழக கம்யூனிச இயக்கத்திற்குள் எழுந்து வந்த முரண்களை பற்றிப் பேசுவதே இத்திரைப்படத்தின் கதைக்கருவாக உள்ளது. கேகேவிற்கும் பெருமாள் வாத்தியாருக்குமான முரண்பாட்டின் வழியாக அதைக் கூற முயற்சிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நக்சல்பாரி இயக்கங்களுக்குள் நிலவிய குழப்பங்களை விவாதிப்பதாக உள்ளது. "மக்களே போராட்டக் களத்துக்கு ஏற்ப ஆயுதங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அது அவர்கள் செலுத்தும் வாக்குச் சீட்டாகவும் இருக்கலாம்" என பெருமாள் வாத்தியார் கூறுகிறார்.
கதிரேசனாக சூரி, பெருமாள் வாத்தியாராக விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் தங்கள் நடிப்பால் திரைப்படத்தை மெருகேற்றியுள்ளனர். இளையராஜாவின் இசையும் வேல்ராஜின் கேமராவும் மனதை மயக்குகின்றன. விடுதலை 1 இன் வழிநெடுக காட்டுமல்லி, விடுதலை 2 இன் மனசுல பாடல்கள் மனதைக் கொள்ளை கொள்கின்றன. ஒட்டு மொத்தத்தில் பார்த்தால் அண்மைய கால தமிழ் திரைப்பட வரலாற்றில் கம்யூனிச இயக்கம் குறித்த ஒரு குறிப்பிடத்தக்க பதிவை விடுதலை திரைப்படம் செய்துள்ளது. திராவிட 'அற்புத' நிலத்தில் தியாகச் செங்கொடியை ஓங்கிப் பறக்க விட்டுள்ளது இத்திரைப்படக் குழு. இது பாராட்டத்தக்கதும் மெச்சப்பட வேண்டியதுமாகும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)