மக்களவை தேர்தல்களும் ஹரியானா, மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்களும் ஆறு மாத இடைவெளியில் நடைபெற்றன. இந்த இரு தேர்தல் முடிவுகளுக்கும் இடையே இருந்த பாரதூரமான மாற்றம், தேர்தல் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை குறித்த பல்வேறு அவசரக் கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசாங்கத்தின் எதிர்வினை என்ற கோணத்திலும், பிப்ரவரி ஐந்தில் தேர்தல்கள் நடக்க உள்ள டெல்லியில் வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்படும் செயல்முறை குறித்த தொந்தரவுக்குள்ளாக்கும் வெளிப்பாடுகளாலும் இந்தக் கேள்விகள் அதிகளவு கவனத்தை ஈர்க்கும் விகிதங்களை எட்டியுள்ளது. நியூஸ்லாண்ட்ரி, ஸ்க்ரோல் போன்ற நம்பகமான மாற்று ஊடகங்கள் உத்தரப் பிரதேசத்தின் ஒரு சில தொகுதிகளில் மக்களவைத் தேர்தல்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து துப்பறியும் ஆய்வுகள் மேற்கொண்டன. மோடியின் இந்தியாவில் தேர்தல்கள் நடத்தப்படும் செயல்முறையில் வெளிப்படைத்தன்மையும் நிறுவன பொறுப்பேற்பும் கிஞ்சித்துமற்ற தன்மை குறித்து அதிகரிக்கும் புகார்களுக்கு இந்த ஆய்வுகள் கூடுதல் வலு சேர்த்துள்ளன.  மின்னணு வாக்கு எந்திரங்களைத் தாண்டி, தேர்தல் எந்திரம், தேர்தல் பணிசெய்யும் பொறியமைவு குறித்தும் கேள்விகள் சுற்றிச் சுழலுகின்றன.

மக்களவைத் தேர்தல்களுக்கு பிறகு, வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட விவரிக்க முடியாத திடீர் அதிகரிப்பும், வாக்கு எண்ணிக்கை முடிந்த போது வெளியிடப்பட்ட தற்காலிக எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது வாக்களித்தவர்களின் எண்ணிக்கை குறித்த இறுதி தரவுகளில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பும் என மகாராஷ்டிராவில் இருந்து எழும் கேள்விகள் முதன்மையாக இருவகை தன்மையனவாகும். இதற்குப் பிறகும் கூட 'வாக்களிக்கப்பட்ட வாக்கு'களின் இறுதி எண்ணிக்கைக்கும் 'எண்ணப்பட்ட வாக்கு'களின் எண்ணிக்கைக்கும் இடையே பரவலாக காணப்படுகிற பொருத்தமின்மையும் இருந்தது. எப்போதாவது சில நம்பத்தகாத நடைமுறை சாக்குபோக்குகளை வழங்கியதைத் தவிர, இந்த அனைத்து கேள்விகளையும் இந்திய தேர்தல் ஆணையம் அலட்சியம் செய்தது. ஹரியானாவிலுள்ள ஒரு குறிப்பிட்ட வாக்குச்சாவடியின் தொடர்புடைய ஆவணங்களையும், காணொளி, சிசிடிவி காட்சிப் பதிவுகளையும் மனுதாரர், வழக்கறிஞர் மெஹ்மூத் பிரசாவிற்கு வழங்க பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. அவ்வேளையில் தேர்தல் தொடர்பான ஆவணங்களை பொதுமக்கள் ஆய்வு செய்வதற்கான வாய்ப்புகளை கட்டுப்படுத்த 1961 இன் தேர்தல் நடத்தை விதிகளை மோடி அரசாங்கம் அடுத்த நாளே மாற்றியது. 10.5 லட்சம் வாக்கு சாவடிகளின் பதிவுகள் முழுவதையும் ஆய்வு செய்ய ஒரு நபருக்கு 3,600 ஆண்டுகள் தேவைப்படும் என கூறியதன் மூலம் ததேஆ ராஜிவ் குமார் பொது மக்கள் சரிபார்ப்புக்கான கோரிக்கையை கேலி செய்தார்!

உபி-யில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு வகை குறிவைக்கப்பட்ட முஸ்லீம் எதிர்ப்பு வாக்காளர் தணிக்கை குறித்து இம்மாநிலத்திலிருந்து வரும் செய்திகள் சில காலமாகவே நம்மை எச்சரித்துக் கொண்டிருக்கின்றன. வாக்காளர் பட்டியலை தயாரிப்பது, வாக்குப்பதிவு அன்று அவர்களது வாக்களிக்கும் உரிமையை செயல்படுத்துவதிலிருந்து முஸ்லிம்களை விலக்கி வைப்பது என இரு வகையிலும் இத்தணிக்கை முறை மேற்கொள்ளப்படுகிறது. முஸ்லிம்களும், யாதவர்கள், ஜாதவர்கள் போன்ற பிற சமூகக் குழுக்களும் கணிசமாக உள்ள வாக்குச் சாவடிகளில், அவர்கள் பாஜகவிற்கு எதிராக வாக்களிப்பார்கள் என்ற அனுமானத்தில்/எதிர்பார்ப்பில் வாக்காளர்களின் பெயர்களை திட்டமிட்ட வகையில் நீக்குகிற கருத்தை நமக்கு வழங்குகிற, இம்மாநிலத்திலிருந்து வரும் விரிவான புலனாய்வு அறிக்கைகள் தற்போது நம்மிடம் உள்ளன. சந்தேகத்திற்கிடமான, சுருக்கமான முகவரிகளுடன் பொய் வாக்காளர்கள் என நினைக்கத் தோன்றுகிற பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது இந்த நாணயத்தின் மறுபக்கமாகும். 2024 இல் குறைந்தபட்சம் உபியின் இரண்டு மக்களவை தொகுதிகளில் (ஃபருக்காபாத், மீரட்) பாஜகவின் குறுகிய வெற்றியை உறுதி செய்ய வாக்காளர் பெயர்களின் அத்தகைய நீக்கமும் சேர்ப்பும் குறிப்பிடத்தக்க அளவு போதுமானது என தோன்றுகிறது. 

டெல்லி தேர்தல்களுக்கு முன்னதாக ஆபத்தான காட்சிகள் தற்போது நம்மிடம் உள்ளன. புதிய பெயர்களை சேர்ப்பதற்கான அவசரம் முன்னெப்போதும் கண்டிராத அளவிற்கு உள்ளது என முதன்மை தேர்தல் அதிகாரி ஆர் ஆலிஸ் வாஸ் கூறுகிறார். விரிவான பரிசோதனைக்கு அவை உட்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் அழுத்தம் தருகிறார். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து 20 நாட்களுக்குள்ளேயே புதிய பெயர்களை சேர்ப்பதற்காக கிட்டத்தட்ட 5.1 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பெரும் எண்ணிக்கையிலான வாக்காளர்களின் பெயர்களை நீக்கக்கோரி, சரி பார்க்கப்படாத மறுப்புகள்/எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ள பாணியை அம்பலப்படுத்தி ஆம் ஆத்மி கட்சி விரிவான புகார்களை முன் வைத்துள்ளது. டெல்லி சட்டமன்றத்தில் ஆஆக-யை அரவிந்த கேஜ்ரிவால் பிரதிநிதித்துவப்படுத்துகிற புதுடெல்லி சட்டமன்ற தொகுதியில் பத்து விழுக்காட்டிற்கும் அதிகமான புதிய வாக்காளர்களை இணைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதேவேளையில் 2020 சட்டமன்றத் தேர்தலில் ஆஆக குறுகிய வெற்றியைப் பெற்ற ஷாதரா போன்ற தொகுதியில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் ஒட்டுமொத்தமான நீக்கத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். 

செயல்பட்டுக் கொண்டிருக்கிற எந்தவொரு ஜனநாயகத்தின் அடிக்கல்லாகவும் வாக்களிக்கும் உரிமை விளங்குகிறது. அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு நீண்ட நாட்களுக்குப் பிறகும் அனைவருக்குமான வாக்குரிமையை பெறுவதற்கு (அமெரிக்காவில் கருப்பின வாக்காளர்கள் விஷயத்தில் நடந்தது போல) நீண்ட நெடிய போராட்டத்தை மக்கள் தொடர்ந்து நடத்த வேண்டி இருக்கிற பல நாடுகளைப் போலல்லாது, இந்தியாவில் காலனிய எதிர்ப்புப் போராட்டத்தின் உச்சத்தில் 75 ஆண்டுகளுக்கு முன்பு அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட போதே அனைவருக்குமான வாக்குரிமை அதில் பொறிக்கப்பட்டு விட்டது. வலுவான நிலப்பிரத்துவ அதிகாரம் கோலோச்சிய பகுதிகளில் ஒடுக்கப்பட்ட சாதிகளும் வர்க்கங்களும் தங்களது வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்த எதார்த்த வாழ்வில் நிச்சயமாக கடுமையான போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. முஸ்லிம் சமூகமும் பாஜக-தேஜகூ முகாமிற்கு எதிராக வாக்களிப்பதற்கான சாத்தியமுள்ள, சமூகத்தின் பிற பிரிவினரும் தற்போது எதிர்கொள்ளும் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்படுவதற்கான அச்சுறுத்தலால், இந்தியாவின் தேர்தல் முறை முழுவதுமாக கேலிக்குள்ளாகும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது. இன்றைக்கு அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலான இந்திய குடியரசு தனது 75 ஆவது ஆண்டை எட்டும் போது, குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக குணாம்சமும், அவர்களது வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்துகிற ஒவ்வொரு குடிமக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையும் - மாற்றுக் கருத்துக்களை வெளிப்படுத்தும் பிற வாய்ப்புக்கான வழிகளை விட்டுவிடலாம் - இருத்தலுக்கான அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன. இன்றைக்கு சுதந்திரமான, நியாயமான தேர்தல்களுக்கான போராட்டம் என்பது ஊர்ந்துவரும் பாசிச அபாயத்தின் பிடியிலிருந்து இந்திய ஜனநாயகத்தை விடுவிப்பது தொடர்பானதாகும்.