அகில இந்திய விவசாயிகள் மகாசபை - AIKM, இகக(மா லெ) சேர்ந்து, 2025 , சனவரி 23 அன்று மதுரை கிருஷ்ணய்யர் சமூகக் கூடத்தில் பொது விசாரணை ஒன்றை நடத்தியது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக, சுற்றுப்புற சூழல் களப்பணியாளர், கிரானைட் கொள்ளை எதிர்ப்பாளர் அரிட்டாபட்டி ரவிச்சந்திரன், கனிமவளக் கொள்ளையை எதிர்த்ததற்காக கனிமவளக் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட புதுக்கோட்டை, திருமயம் ஜகபர் அலி, தமிழ்நாட்டு விவசாயம், இயற்கை வளம், கனிமங்கள், அரியவகை தாதுக்கள், ஈதேன், மீதேன் அணுமின் நிலையங்கள் உள்ளிட்ட கார்ப்பரேட் கொள்ளை எதிர்ப்பு போராட்டங்களில் உயிரிழந்தவர்களுக்கும் மவுனஅஞ்சலி செலுத்தப்பட்டது.
பொது விசாரணையில், மேலூர் வட்ட டங்ஸ்டன் எதிர்ப்பு போராளிகள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
“மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் மொத்த டங்ஸ்டன் திட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாட்டில் அமைக்கத் திட்டமிட்டுள்ள அனைத்து கனிம வளக் கொள்ளைத் திட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்; கனிமவளங்கள், சுரங்கங்கள் திருத்தச் சட்டம் 2023 ரத்து செய்ய வேண்டும்; திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக தமிழ்நாட்டின் கனிம வளங்களை அரசு ஏற்று நடத்திட வேண்டும். மேலூர் வட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், இங்குள்ள பல்லுயிர்ச்சூழல், ஆயிரக்கணக்கான ஆண்டுகளான பண்பாட்டுச் சின்னங்களை பாதுகாக்க சிறப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும்” என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை, நீதிக்கான மக்கள் இயக்க மாநில அமைப்பாளர் அ. சிம்சன் முன்மொழிய பொதுவிசாரணை ஒருமனதாக நிறைவேற்றியது.
பொது விசாரணையில் பேசியவர்களின் கருத்துகள்
விமலா: சுற்றுச் சூழல் போராளி அரிட்டாபட்டி ரவிச்சந்திரனின் சகோதரி
ரவிச்சந்திரனை இந்த அளவுக்கு வெளிக்கொண்டு வருவீர்கள் என எதிர்பார்க்கவில்லை. நன்றி. என் தம்பி உயிரோடு இருக்கும் வரை இந்த மண்ணைப் பாதுகாக்கப் போராடினான். இன்று ஒரு ரவிச்சந்திரன் மட்டுமல்ல, எண்ணற்ற ரவிச்சந்திரன்கள் இங்கு இருப்பதைப் பார்க்கிறேன்.
பக்ருதீன்: டங்ஸ்டன் எதிர்ப்புக் கூட்டமைப்பு
டங்ஸ்டன் பிரச்சனை 1996இல் துவங்கிவிட்டது. 2018இல் ஆய்வைத் துவங்கும்போதுதான் நமக்குத் தெரியவருகிறது. அப்போதே உடனடியாக டங்ஸ்டன் எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பாக கம்பூர் செல்வராஜ் எதிர்ப்புத் தெரிவித்தார். ஆய்வு தொடர்பாக உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு எதுவும் தெரியவில்லை.
திட்டத்தை எதிர்த்து மாவட்ட ஆட்சியருக்கு மனுக் கொடுத்தோம். இது தொடர்பாக அவருக்கும் தெரியவில்லை. அரிட்டாபட்டி பகுதியில் உள்ள தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை, வேளாண்மையை அழிக்கும், புற்றுநோயை உருவாக்கும் இந்த டங்ஸ்டன் சுரங்கம் வேண்டாம் என்று கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றினோம். அகர்வால் லாபம் சம்பாதிக்க மக்கள் ஏன் பலியாக வேண்டும்? கேரள அரசைப் போல தமிழக அரசும் கனிமவளம் தொடர்பாக கொள்கை முடிவு எடுக்க வேண்டும். பகாசுர நிறுவனங்கள் எங்கள் மண்ணைச் சூறையாட அனுமதிக்க மாட்டோம்.
அரிட்டாபட்டி பார்த்திபன் :
15 வருடங்களாக இந்தப் பகுதியைப் பாதுகாக்கப் போராடி வருகிறோம். முதலில் இந்தத் திட்டத்தை வதந்தி என்றார்கள். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. முதலில் கம்யூனிஸ்ட் தோழர்கள்தான் இதைக் கவனத்திற்கு கொண்டு வந்தார்கள். மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் பேசினார். மக்களைப் பற்றி ஆட்சியாளர்கள் கவலை கொள்ளவில்லை. மாவட்டத்திற்கு வெளியில் இருந்தும், கடல் கடந்தும் ஆதரவு கொடுக்கிறார்கள். போராட்டத்திற்கு காவல்துறையின் அச்சுறுத்தல் இருந்தது. நக்சலைட்டுகள், தீவிரவாதிகள் என்று எங்களை அச்சுறுத்தினார்கள்.
அரிட்டாபட்டி கருப்பண்ணன் :
அரிட்டாபட்டிக்கு அரணாக நிற்கும் உங்களுக்கு எங்கள் நன்றி. அரசியல்வாதிகள் பின்னே நாம் செல்லக்கூடாது. ஒவ்வொருவரும் தன்னார்வத்துடன் இந்த மண்ணைப் பாதுகாக்க வேண்டும். அரசாங்கம்தான் அமைதியாக வாழ்ந்த எங்களைப் போராளிகளாக மாற்றியிருக்கிறது. எங்களைத் தலைநிமிரச் செய்தவர்கள் செங்கொடிக்காரர்கள்.
வழக்கறிஞர் ஸ்டாலின் (முல்லைப் பெரியாறு ஒரு போக விவசாயிகள் சங்கம்) :
தோழர் நல்லக்கண்ணு முயற்சியால் மணற்கொள்ளை தடுக்கப்பட்டது. இந்தப் பிரச்சனையில் ஒருவர் கொல்லப்பட்டார். அடுத்து கிரானைட் பிரச்சனை. அடுத்து முல்லைப் பெரியாறு பிரச்சனை. இப்போது டங்ஸ்டன் பிரச்சனை. மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்தோம். அவர் வதந்தி என்று சொல்லிவிட்டார். இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். இந்தப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
இகக (மாலெ) மதுரை மாவட்டச் செயலாளர் சி.மதிவாணன் வரவேற்புரை ஆற்றினார். பழ.ஆசைத்தம்பி, மாநில செயலாளர், இகக (மாலெ) துவக்க உரை ஆற்றினார்.
பொதுவிசாரணை நடுவர்களாக அ. சந்திரமோகன், அகில இந்திய விவசாயிகள் மகாசபை, பெ. சண்முகம், மாநில தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் - சிபிஎம், இந்திரஜித், மாநில துணைச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் - சிபிஐ, பேரா. முரளி, தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம், வீ. பிரபாகரன், பூவுலகின் நண்பர்கள், பாலசுந்தரம், தேசிய துணைத் தலைவர், அவிகிதொச ஆகியோர் இருந்தனர்.
தீப்பொறி நிதி: இகக (மாலெ) மாதமிருமுறை அரசியல் ஏட்டிற்கு பொதுவிசாரணை சார்பாக ரூ10,000/ நிதி அளிக்கப்பட்டது.
டங்ஸ்டன் திட்டம் ரத்து மக்கள் போராட்டத்தின் வெற்றி
டங்ஸ்டன் திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பாக ஜனவரி 23 அன்று மதுரையில் பொதுவிசாரணை நடந்த அன்று மாலையே டெல்லியில் ஒன்றிய அரசு டங்ஸ்டன் திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. பாஜக இதற்குக் காரணம் நாங்கள்தான் என்றது. தமிழ்நாட்டில் ஆளும் திமுகவோ சட்டமன்றத்தில் நாங்கள் டங்ஸ்டன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றியதால்தான் ஒன்றிய அரசு இவ்வாறு அறிவித்துள்ளது அதனால் நாங்கள்தான் இதற்கு காரணம் என்றது. ஒன்றுபட்ட மக்கள் போராட்டம்தான் இதற்குக் காரணம் என்றாலும், அதனைத் தங்கள் பிடிக்குள் நிறுத்த பாஜகவும் திமுகவும் கடினப்பட்டு உழைத்தன. ஜனவரி 21,22 தேதிகளில் டெல்லி சென்று ஒன்றிய துணை அமைச்சரைச் சந்தித்தார். முதல் நாளில் அமைச்சர் அளித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு திரும்பிச் செல்ல மறுத்த குழுவினர், உறுதியான தகவல் கிடத்த பின்னர்தான் திரும்புவோம் என்று அறிவித்து டெல்லியில் தங்கிவிட்டனர். ஜனவரி 23 மாலை 5 மணி அளவில் ஒன்றிய அரசின் செய்தி வெளியானது.
டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் அறிவிக்கப்பட்டவுடனேயே அப்பகுதி மக்கள் போராட்டத்தையும் தொடங்கி விட்டார்கள். ஆரம்பத்தில் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் இந்தத் திட்டம் நாட்டிற்கு நல்லது. அதற்கு எதிராகப் போராடுவது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்றெல்லாம் பேசினார்கள். மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி, முற்போக்கு, ஜனநாயக சக்திகள் மக்களோடு போராட்டக் களத்தில் நின்றன. தொடர் பரப்புரை இயக்கத்தையும் போராட்டங்களையும் நடத்தின. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் ஆளும் கட்சிகள் போட்டி போட்டும் மக்களோடு நிற்பதாகக் காட்டிக் கொள்கிறார்கள். தமிழ்நாடு அரசு அதன் செலவிலேயே முதல்வரை அழைத்து நன்றி தெரிவிக்கும் கூட்டத்தையும் நடத்திக் கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியும் சென்று வந்துள்ளார். எதிர்பார்த்தபடியே அமைச்சர் கிஷன்ரெட்டியும் அண்ணாமலையும் கடைசியாக சென்று வந்துள்ளனர்.
கட்சிகளை தள்ளிவைத்துவிட்டு சமூகம் போராடியது, சமூகமாக போராடியது. இதை பாஜக பயன்படுத்திக் கொண்டது. மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்; அந்த மகிழ்ச்சியில் நாமும் பங்கு கொள்கிறோம். இப்போது தேர்தலை நோக்கி, சமூகத்துக்கு மேலாக பாஜக, திமுக, அதிமுக அரசியல் கட்சிகள் முன்வந்துள்ளன. ஆனால், கார்ப்பரேட் எதிர்ப்பு விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. அவிமச, இகக(மாலெ) உள்ளிட்ட இடது, முற்போக்கு ஜனநாயக சக்திகள் எப்போதும் முன்னணியில் இருக்க வேண்டும்; இருக்கும்.
—--------------------------------------------------------
*அகில இந்திய விவசாயிகள் மகாசபை தேசிய செயற்குழு கூட்டம்*
—-------------------------------------------------------
ஒடிசா மாநிலம் கோனார்க்கில், 2025 சன.28, 29 ஆகிய தேதிகளில், அகில இந்திய விவசாயிகள் மகாசபை தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுசெயலாளர் ராஜாராம் சிங் எம்.பி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கெடுத்துக் கொண்டனர்.
தேசிய செயற்குழு கூட்டமானது, தேசிய அரசியல் சூழ்நிலை மற்றும் மோடி அரசின் புதிய சட்டங்கள், கொள்கைகள் வழியாக இந்திய விவசாயம் - விவசாயிகள், பழங்குடியினர் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள், நாடு தழுவிய விவசாயிகள் போராட்டங்களில் குறிப்பாக எஸ்கேஎம் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் செயற்பாடுகளில் நமது பங்கு ஆகியவை பற்றி விவாதித்தது.
இந்திய விவசாயிகளின் வேளாண் சந்தையை கார்ப்பரேட் கம்பெனிகள், பெரிய வியாபாரிகளுக்கு தாரை வார்க்க வழிவகுக்கும், மோடி அரசின் புதிய சட்டமான "வேளாண்மை சந்தைப்படுத்துதலுக்கான தேசிய கொள்கை கட்டமைப்பு - NPFAM" யையும், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்த கனிம வளங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்க கொண்டு வரப்பட்ட "சுரங்கம் - கனிமங்கள் திருத்த சட்டம் 2023 " யையும் ரத்து செய்யக் கோருவது, இவற்றுக்கு எதிராக போராட்ட இயக்கங்கள் கட்டமைப்பது, அவிமச வில் 15 இலட்சம் உறுப்பினர் சேர்ப்பது, மாவட்ட, மாநில மாநாடுகள் மற்றும் 2025 ஆண்டு இறுதியில் தேசிய மாநாடு நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள், முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
¶ கார்ப்பரேட் சூறையாடலுக்கு எதிராக, நீர், வனம், நிலம் மீதான இந்திய விவசாயிகள் - பழங்குடியினர் உரிமைகளை பாதுகாக்க - வென்றெடுக்க போராட்ட இயக்கங்களை கட்டமைப்போம் ; அகில இந்திய விவசாயிகள் மகாசபை அமைப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவோம் !
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)