கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக, இந்திய வெளியுறவுக் கொள்கை அமெரிக்க முன்னுரிமைகளோடு ஒன்றிப்போகிறது. இது பொதுவாக, இந்திய-அமெரிக்க நீண்டகால ஒத்துழைப்பு என சித்தரிக்கப்படுகிறது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி, நேருவிய அணிசேரா சகாப்தத்தின் முடிவிற்கு சமிக்ஞையாகியது. அது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான கூட்டணியில் புதிய கட்டத்தை முன்னறிவித்தது. தாராளமயமாக்க, தனியார்மயமாக்க, உலகமயமாக்க கொள்கைகளை புதுதில்லி ஏற்றுக்கொண்டதன் மூலம் பொருளாதார தளத்தில் இந்திய-அமெரிக்க உறவுகள் உறுதி பெற்றன. அதேவேளையில் இஸ்லாமிய வெறுப்பு 'பயங்கரவாதத்தின் மீதான போரில்' வாஷிங்டன் ஈடுபட்டதும், சீனாவை கட்டுப்படுத்துவது என்ற அது புதிதாக அடையாளம் கண்ட அதன் நீண்டகால மிக முக்கிய இலக்கும், அமெரிக்க வெளியுறவுக் கொள்கை கணக்கீடுகளில், மண்டல அளவிலும் உலகளாவிய அளவிலும் அமெரிக்காவின் கூட்டாளி எனும் இந்தியாவின் பொருத்தப்பாட்டை அதிகரிக்கச் செய்தது. இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மிகவும் கவனிக்கத்தக்க இராணுவ பரிமாணத்தைக் கொண்டு வந்தது. அண்மைய ஆண்டுகளில் இஸ்ரேலுடன் அதிகரித்துவரும் இந்தியாவின் நெருக்கம், அமெரிக்க தலைமையிலான உலக ஒழுங்குடன் எப்போதும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நாட்டின் ஒன்றிணைப்பை வலுவூட்டி வருகிறது; விரைவு படுத்தியும் வருகிறது.
2014 இல் இந்தியாவில் நரேந்திர மோடி அதிகாரத்திற்கு வந்ததும் அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப்பின் எழுச்சியும், இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பைச் செலுத்துவதற்கான அரசியல்-பொருளாதார இயங்காற்றலுக்கு கூடுதலான கருத்தியல் உந்துதலையும் வழங்கியது. டிரம்ப்பும், மோடியும் அவர்களுக்கு முன்பிருந்தவர்களைக் காட்டிலும் கூடுதல் ஒத்தத் தன்மையைக் கொண்டுள்ளனர். மேலும் மோடி-டிரம்ப் நட்புறவு குறித்த களிப்புணர்வு வழக்கமான சர்வதேச ராஜதந்திர எல்லைகளையும் தாண்டி, உள்நாட்டு அரசியல் பரப்புகளிலும் சிந்தி சிதறியது. ஹவ்டி மோடி (எப்படி இருக்கிறீர்கள் மோடி), நமஸ்தே டிரம்ப் (வணக்கம் டிரம்ப்) போன்ற கண்காட்சிகள் வழக்கமான நடைமுறைகளாக மாறிவிட்டன. 2020 அமெரிக்க குடியரசுத் தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவாக இந்தியப் பிரதமர், பரப்புரை செய்யுமளவுக்குச் சென்றார். இருப்பினும் எதிர்பார்த்த மாதிரி டிரம்ப் வெற்றி பெற முடியவில்லை. அடுத்த நான்காண்டுகளுக்கு அதிபர் பைடனுடன் மோடி செயல்பட வேண்டி வந்தது. 20,000 டாலர் ( சுமார் ரூ 17 லட்சம்) மதிப்பு கொண்ட விலை உயர்ந்த வைர பரிசை பைடன் குடும்பம் பெற்றுள்ளது. இதை வழங்கியது, வேறு யாருமல்ல, மோடி தான் என்பது அமெரிக்க பதிவுகளில் இருந்து நமக்கு தெரிய வருகிறது.
அமெரிக்காவில் அரசியல் தற்போது ஒரு முழுச் சுற்றை எட்டி விட்டது. டிரம்ப் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழுக்காக நரேந்திர மோடி தீவிரமாக காத்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது. டிரம்ப், மோடிக்கு அழைப்பு விடுக்கலாம், விடுக்காமலும் போகலாம். ஆனால், இந்திய-அமெரிக்க இருதரப்பு உறவுகளில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு பல்வேறு முக்கிய விசயங்கள் உள்ளன. தடுமாறிக் கொண்டிருக்கும் மோடி அரசாங்கம் வம்புச் சண்டைக்கு போகும் அதிபர் டிரம்ப்பை இந்த விசயங்களில் சமாளித்தாக வேண்டும். ஆனால் மோடி, டிரம்ப் இருவருமே தங்களது அரசியல் வாழ்வை அதிதீவிர தேசியவாத தளங்களிலேயே கட்டியுள்ளனர். எவ்வாறாயினும் அமெரிக்காவுக்கு நீண்டகாலக் கூட்டாளியாக இந்தியா தேவைப்படலாம். ஆயினும் நலன்கள் மோதும் போது அமெரிக்க அதிதீவிர தேசியவாதம் தனக்கான பங்கைப் பெற நிச்சயமாக வலியுறுத்தும். அமெரிக்காவுடன் இந்தியாவின் தொடரும் வர்த்தக உபரி முதல், அமெரிக்க திறன்மிகு வேலைகளுக்கான சந்தையில் அந்நிய விண்ணப்பதாரர்களில் இந்தியர்கள் முன்னுரிமை பெறுவது வரை, மோதலின் ஒவ்வொரு விஷயத்திலும் மோடி அரசாங்கத்திடமிருந்து ட்ரம்ப் அரசாங்கம் பெரும் சலுகைகளை நிச்சயமாகக் கேட்கும்.
அண்மைய ஆண்டுகளில், அமெரிக்கா, சீனாவுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் வர்த்தக உறவுகள் மிகவும் சமச்சீரற்றதாக மாறியுள்ளது. மிகவும் அண்மைய தகவல்களை எடுத்துக் கொண்டால் 2024 இல் இந்தியா அமெரிக்காவுடன் $3,530 கோடி வர்த்தக உபரியைக் கொண்டிருந்தது. அதேவேளையில் சீனாவுடன் $8,510 கோடி வர்த்தக பற்றாக்குறையைக் கொண்டிருந்தது. அமெரிக்க பொருள்கள் மீது ‘அதிகப்படியான வரி’ சுமத்துவதாக டிரம்ப் அணியினர் ஏற்கனவே இந்தியாவை குற்றம் சாட்டி வருகின்றனர். ஆகையால் அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் இந்திய பொருள்கள் மீது அதற்கீடான வரி சுமத்தப்படும் எனவும் அச்சுறுத்துகின்றனர். வர்த்தக வரிகளுக்கும் கூடுதலாக மகா (மீண்டும் மாபெரும்அமெரிக்கா ) எனப்படும் டிரம்ப் கதையாடல், புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான தீய வாய்ச்சவடாலைச் சுற்றிச் சுழலுகிறது. முந்தைய நிகழ்வுகளில் மெக்சிகர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக தனித்துவமாக மேற்கொள்ளப்பட்ட புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான இயக்கம், இந்தமுறை அமெரிக்காவில் ஹெச்-1பி விசா வைத்திருக்கும் திறன்மிகு இந்தியர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விசயத்திலும் கூட ஒரு முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது.
1990 இல், அமெரிக்க முதலாளிகள் திறன்மிகு வேலைகளுக்கு அந்நிய நாட்டவரை வேலைக்கமர்த்த வகைசெய்யும் ஹெச்-1பி விசா திட்டத்தை அமெரிக்க காங்கிரஸ் உருவாக்கியது. 2004 லிருந்து ஒவ்வொரு ஆண்டும் 85,000 புதிய ஹெச்-1பி விசாக்கள் மட்டுமே வழங்கப்படும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனால் விசாக்களை நீட்டிப்பது உள்ளிட்ட, விசாக்களை வைத்திருப்பவர்களுடைய மொத்த எண்ணிக்கை 2022 இல் 4,74,000 ஆகவும் 2023இல் 3,86,000 ஆகவும் சென்றது. இந்த விசாக்களை வைத்திருப்பவர்களில் 70% பேர் இந்தியர்களாக உள்ளனர். சீனத் தொழிலாளர்கள் கிட்டத்தட்ட 12 சதவீதம் என தூரமான இரண்டாவது இடத்தில் உள்ளனர். இந்த திறன்மிகு அந்நிய தொழில்முறையாளர்களுக்கு அமெரிக்க தொழில்முறையாளர்களை விட வழக்கமாகவே குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது. ஆகவே இது அமெரிக்க முதலாளிகளுக்கு ஆதாயம் அளிப்பதாக உள்ளது. என்றபோதிலும் அமெரிக்காவில், பல்வேறு தொழில்களிலும் ஏற்படும் உண்மையான அல்லது உணரப்படுகிற வேலை இழப்புகள், ஊதியக் குறைவு குறித்து அமெரிக்க தொழிலாளர் மத்தியில் விரக்தி வளர்ந்து வருகிறது. இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள மத்தியிலுள்ள பெரும் எண்ணிக்கையிலான பாஜக ஆதரவாளர்கள், டிரம்ப் ஆதரவு நிலைப்பாடு எடுத்தாலும் கூட, வர இருக்கும் நாட்களில், ஏற்கனவே அமெரிக்காவில் குடியேறி இருக்கும் அல்லது அங்கு சென்று குடியேறலாம் என எண்ணம் கொண்டுள்ள இந்திய தொழிலாளர்கள் அமெரிக்காவில் அதிகரித்த அளவிலான பாதகமான சூழலை எதிர்கொள்ள நேரிடும்.
ஆவணங்களற்ற புலம்பெயர்ந்த இந்தியர்கள், இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவதும் கூட பெரிய அளவில் அதிகரித்துள்ளது. ஏற்கனவே, கிட்டத்தட்ட 18,000 இந்தியர்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாடுதிருப்பும் செயல்முறையில் ‘ஒத்துழையாமை’ இருப்பதாக இந்திய அரசாங்கம் மீது குற்றம் சாட்டப்படுகிறது. டிரம்ப் அவரது முதல் பதவி காலத்தில் 15 லட்சம் பேரை அவர்களது நாட்டிற்கு திரும்பவும் அனுப்பி வைத்தார். அவரது இரண்டாவது பதவி காலத்தில் ஓராண்டுக்கு 10 லட்சம் பேர் வீதம் என்ற பெரும் எண்ணிக்கையில் அந்நிய நாட்டினரை திருப்பிஅனுப்பப் போவதாக பரப்புரையின் போது வாக்களித்துள்ளார். பெரும் எண்ணிக்கையில் புலம் பெயர்ந்தவர்களை கொடூரமாக அவர்கள் நாட்டுக்கு திருப்பியனுப்பும் இயக்கத்தை திட்டமிட, நீதிமன்றத்தின் உதவியை நாடவழிவகை இல்லாத கமுக்கமான, அந்நிய எதிரிகள் சட்டம் 1798 போன்ற போர்க்கால நாடு கடத்தல் சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதிபர் டிரம்ப்பின் முதல் பதவிக் காலத்தின் முத்திரையாக விளங்கிய இனவெறிவாத சூழ்நிலையில், அரசின் இந்தச் செயல்பாடு சந்தேகத்திற்கிடமின்றி முழுமையடையும், அதிகரிக்கும். டிரம்ப்பின் கீழ் தீவிர வலதுசாரி குடியரசு கட்சியினுடைய நிகழ்ச்சி நிரலின் கருவான அடிப்படையாக இருக்கும்.
அமெரிக்க நீதிமன்றத்தில் உள்ள அதானி வழக்கின் எதிர்காலம், டிரம்ப் நிர்வாகத்துக்கும் மோடி அரசாங்கத்துக்கும் இடையேயான உரசலின் மற்றொரு முக்கிய புள்ளியாக வளர இருக்கிறது. இந்தியாவில் $25 கோடி லஞ்ச முறைகேடு தொடர்பாக கவுதம் அதானி, அவரது கூட்டாளிகளுக்கு எதிரான குற்ற, சிவில் சட்ட நடவடிக்கைகளும், அது தொடர்புடைய அமெரிக்க ஊழல் தடுப்பு சட்டங்களை மீறியதும் ஒன்றாக இணைக்கப்பட்டு அமெரிக்க மாவட்ட நீதிபதி நிக்கோலஸ் கராஃபிசின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம், நீதிமன்ற நடைமுறையில் எவ்வித தளர்ச்சியும் இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என்பது தெரிய வருகிறது. பல்வேறு நாடுகளில் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. அதானி குழுமத்தின் சர்வதேச தர அளவீடுகளின் வீழ்ச்சியும் உலகச் சந்தையில் நிதிகள் வற்றிப்போனதும் 200 கோடி அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான மதிப்பு கொண்ட அதனுடைய ஒட்டுமொத்த 44% பங்குகளையும் இழந்து, வில்மர் குழுமத்திலிருந்து அதானி குழுமம் ஏற்கனவே விலக வேண்டியதாயிற்று .. இருப்பினும் அதானிக்கு அதிபரின் மன்னிப்பு வழங்கும் அதிகாரம் ட்ரம்ப்பிடம் இருக்கிறது. ஆனால் மோடிக்கு காட்டும் அத்தகைய கருணைக்கு மோடி மிகப்பெரிய விலையை நிச்சயமாக கொடுத்தேயாக வேண்டும்.
டிரம்ப்-மோடி நட்புரிமை அல்லது நட்புரிமையின்மை அல்லது அதானி குழுமத்தின் எதிர்காலம் இவற்றைத் தாண்டி ட்ரம்பின் இரண்டாவது பதவிக்கால நகர்வுகள் குறித்து இந்திய மக்கள் நிச்சயமாக கவனமுடன் இருந்தேயாக வேண்டும். இந்தியாவின் பொருளாதார இறையாண்மை, பாதுகாப்பு, உலகின் எந்தப் பகுதியிலும் உள்ள இந்தியர்களின் கவுரவம் தொடர்பான உண்மையான பிரச்சனைகள் ஒருபோதும் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. நிச்சயமாக இந்தியாவின் உடனடி, நேரடி நலன்களைத் தாண்டியும் உலக அமைதியை, நீதியை கட்டிக் காப்பதற்கும் நம்முடைய பூமி உயிர்த்திருப்பதற்கும் எப்போதுமே அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவது அடிப்படையானதாகும். டிரம்ப் ஆட்சியதிகாரத்தில் இருக்கும்போது இது மட்டுமே மிகவும் அவசர அவசியமாக முன்வந்திருக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)