அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை நாடுகடத்துவதாகச் சொல்லி அவர்களின் கைகளில் கால்களில் விலங்கு போட்டு அனுப்பி வைக்கிறது ட்ரம்ப் அரசு. கடந்த பிப்.5ம் தேதி 104 இந்தியர்கள் கைதிகள் போல் விலங்கிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்கள். இவ்வாறு இந்திய மக்களை அவமானப்படுத்தியதை மோடி அரசு கண்டிக்கவும் இல்லை, கண்டு கொள்ளவும் இல்லை. இந்த நிலையில் மோடி அமெரிக்கா சென்று ட்ரம்பை சந்திந்துப் பேசி விட்டு வந்த பின்பும் கூட 117 இந்தியர்கள் கை,கால்களில் விலங்கு போடப்பட்டு அமெரிக்காவில் இருந்து குற்றவாளிகளைப் போல சி-17 ராணுவ விமானத்தில் அழைத்து வரப்பட்டு அமிர்தசரஸ் விமான நிலையத்தில் பிப்.14 அன்று நள்ளிரவில் இறக்கி விடப்பட்டனர். இவ்வாறு இந்தியர்களை குற்றவாளிகள் போல் விலங்கு போட்டு அவமதிப்பதை கண்டுகொள்ளாத மோடி அரசு, ட்ரம்ப் அரசுடன் போணியாகாத அமெரிக்கப் போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. மோடி அரசின் அமெரிக்க அடிமைத்தனத்தை விமர்சிக்கும் விதத்தில் ஆனந்த விகடன் பத்திரிகை தனது இணையதளத்தில் கேலிச்சித்திரம் வெளியிட்டிருந்தது. மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் இருந்து கொண்டிருக்கும் போதே தன் நாட்டு மக்களை விலங்குகளைப் போல் ட்ரம்ப் அரசு நடத்தியதை தட்டிக் கேட்கத் திராணியற்ற நிலையில் இருந்ததை சுட்டிக்காட்டும் விதமாகவும் இந்திய மக்களின் உணர்வைப் பிரதிபலிப்பதாகவும் ஆனந்த விகடனின் கருத்துப் படம் இருந்தது. அந்தக் கருத்துப் படம் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதைப் பொறுக்க முடியாத பாஜகவினர் குறிப்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மோடி அரசுக்குப் புகார் அனுப்பினார். தற்போது ஆனந்த விகடனின் இணையதளத்தை முடக்கி வைத்துள்ளது மோடி அரசு. இது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரத்தை, கருத்துரிமையை முடக்கும் செயலாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அனுமதிக்கவே முடியாதது. ஆனந்த விகடன் கேலிச் சித்திரம் வெளிப்படுத்தியதைப் போலவே, அமெரிக்காவிற்குச் சென்றிருந்த மோடியின் நடவடிக்கையும் இருந்தது. ட்ரம்ப்பின் முன் மோடி கை கட்டி மவுனியாகவே இருந்தார். இந்தியர்களை நாடு கடத்துவதாகச் சொல்லி கை, கால்களில் விலங்கு போட்டு அனுப்புவதற்கு இந்திய அரசின் சார்பாக குறைந்தபட்ச ஆட்சேபணையைக் கூட அவர் தெரிவிக்கவில்லை. மாறாக, அமெரிக்காவின் விலைபோகாத எப் 35 ரக போர் விமானங்களை இந்தியா தலையில் கொட்டுவதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளார் மோடி. அமெரிக்காவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்போவது மட்டுமின்றி இந்தியா-அமெரிக்காவிற்கு இடையே வர்த்தகம் 2030க்குள் 500 பில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டும் என, தன் நாட்டு மக்களை அநாகரிகமாக, அவமரியாதையாக நடத்தும் ஒரு நாட்டுடன் ஒப்பந்தம் போட்டு பெருமை பேசுகிறார் மோடி. இந்திய இறையாளுமையை அமெரிக்காவிடம் அடமானம் வைத்துவிட்ட மோடிக்கும் பாஜகவினருக்கும் இந்தியர்களை விலங்குகள் போல் அமெரிக்கா நடத்தியது அவமானமாகத் தெரியவில்லை. மாறாக, அதைச் சுட்டிக்காட்டியதுதான் அவமானமாகத் தெரிகிறது. அமெரிக்காவின் ஆதரவு வேண்டுமென்றால், உக்ரைனின் கனிம வளத்தில் 50 சதவீதத்தை அமெரிக்காவிற்குத் தரவேண்டும் என்று ட்ரம்ப் கேட்டதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்துவிட்டார். ருஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் நடத்தும் போருக்கு அமெரிக்காவின் ஆதரவைப் பெற்று வந்த நிலையில் இப்போது தன் நாட்டு வளத்தைத் தர முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ஜெலன்ஸ்கி. ஆனால், மோடியோ இந்தியாவை அமெரிக்காவிடம் அடமானம் வைத்து அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்து வருகிறார். அதைச் சுட்டிக்காட்டும் ஆனந்த விகடனை முடக்குகிறார். தமிழ்நாட்டு அரசு உட்பட அனைத்தையும் முடக்க எண்ணும் மோடி- அமித்ஷா கூட்டம் பத்திரிகை சுதந்திரத்தை, ஜனநாயகத்தை ஒட்டுமொத்தமாக முடக்க நினைக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)